முன்னோக்கு

திட்டமிட்ட இனப்படுகொலை: காஸா மீதான படுகொலை வாஷிங்டனில் தயார் செய்யப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா இனப்படுகொலைக்கு பயன்படுத்துவதற்காக, கடந்த அக்டோபர் முதல் 2,000ம் இறாத்தல் எடை கொண்ட 14,000ம் குண்டுகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகப்பெரிய குண்டுகளான, இந்த பாரிய குண்டுகள், முழு நகரத் தொகுதிகளையும் அழித்து, 1,200 அடி தொலைவில் உள்ள மக்களையும் கொல்லும் திறன் கொண்டவையாகும்.

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையேயான கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் காஸா இனப்படுகொலையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். அவருக்குப் பின்னால் பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று அழைத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலாண்ட் நடந்து செல்கிறார். [AP Photo]

ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையானது, முதன்முறையாக இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆயுத ஏற்றுமதியை சரியாக உடைத்து வெளிப்படுத்திக் காட்டியதுடன், பைடென் நிர்வாகம், மற்ற அனைத்து வகையான குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை விட 2,000 ம் இறாத்தல் குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா ஏன் இவ்வளவு அழிவுகரமான ஆயுதங்களை அனுப்பியுள்ளது என்பதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் உள்ளது: பைடென் நிர்வாகம் சாத்திமான அளவு, காஸாவை முழுமையாக அழித்தொழித்து, பல பாலஸ்தீனியர்களை படுகொலை செய்ய நனவாக, வேண்டுமென்றே முயன்று வருகிறது.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் “போர்” உண்மையில் வாஷிங்டனில் உள்ள அதன் சூத்திரதாரிகளால் அழித்தொழிப்பு போராக ஆக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை திட்டமிட்டு அழிப்பது ஒரு தற்செயலான விளைவு அல்ல. மாறாக, அமெரிக்க கொள்கையின் திட்டமிட்ட இலக்காகும். இதன் நோக்கம் பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே தவிர, அதனைக் குறைப்பது அல்ல.

இது, வாஷிங்டனில் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலையாகும்.

ஜூலை 24 அன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு சென்று பாலஸ்தீனிய மக்களை அழித்தொழிப்பது குறித்த முன்னேற்ற அறிக்கையை காங்கிரஸின் கூட்டு அமர்வில் சமர்ப்பித்து, இனப்படுகொலையின் அடுத்த கட்டம் குறித்த மேலதிக வழிமுறைகளைப் பெற்றுக் கொள்வார்.

உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, உலக ஏகாதிபத்தியத்தின் தலைநகரில் இனப்படுகொலையை பகிரங்கமாக மகிமைப்படுத்துவதற்கு எதிராக, ஜூலை 24 அன்று வாஷிங்டன் D.C க்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது.

முழு ஆளும் வர்க்கமும் இனப்படுகொலையை ஆதரித்துள்ள நிலையில், சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் சமூக சக்தியான தொழிலாள வர்க்கம், பாலஸ்தீனியர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளை எதிர்த்து அவர்களைப் பாதுகாக்க போராட வேண்டும்.

இழப்பதற்கு நேரமில்லை. நாளுக்கு நாள், காஸாவில் வாழும் மக்கள் பட்டினிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மருத்துவ வசதி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அனைத்து அறிகுறிகளின்படியும், காஸாவின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 37,765 ஆகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு, அரசியல் ஆர்வலர் ரால்ப் நாடர் இதுகுறித்து மதிப்பிடுகையில், “குறைந்தது 200,000 பாலஸ்தீனியர்கள் இப்போது இறந்திருக்க வேண்டும், மேலும் எண்ணிக்கை மணிநேரம் அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டார். அப்போதிருந்து, மக்களை வேண்டுமென்றே பட்டினிக்குள் தள்ளுவது இன்னும் மோசமாகி வருகிறது.

சனிக்கிழமையன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் காஸாவின் மக்களை தொடர்ச்சியான வதை முகாம்களுக்கு மாற்றும் திட்டத்தைப் பற்றி அறிக்கை செய்தது, அங்கு அவர்கள் நிரந்தரமாக இடம்பெயர வைக்கப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்படுவார்கள்.

“காஸா பாதுகாப்பு வலயங்களாக துண்டாடப்பட்டதை பார்க்கும் போருக்குப் பிந்தைய பார்வை” என்ற தலைப்பில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய திட்டம், தங்கள் சுற்றுப்புறங்களுக்கு அருகில் அமைந்துள்ள மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தால் பாதுகாக்கப்படும் “வேலிகளால் மூடப்பட்ட புவியியல் தீவுகளின் வடிவத்தில் தற்காலிக தங்குமிடத்தை” உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.

வாஷிங்டனால் முன்மொழியப்பட்ட “பாலஸ்தீனியப் பிரச்சனைக்கான இறுதித் தீர்வுக்கு” இணங்க, காஸா பகுதியின் ஒட்டுமொத்த மக்களும் கொல்லப்படுவார்கள் அல்லது நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்க-இஸ்ரேல் இனப்படுகொலையின் கொடூரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தன்னை “ஜனநாயகம்” என்று சொல்லிக் கொள்ளும் அரசாங்கம், இரண்டு மில்லியன் மக்கள் தொகை அழித்தொழிக்கப்படுவதையோ அல்லது சிறையில் அடைக்கப்படுவதையோ ஏன் விரும்புகிறது?

இதற்கான பதில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய கொள்கைகளில் உள்ளது. பொருளாதார மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை எதிர்கொண்டுவரும் நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் புவிசார் அரசியல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி, ஒப்பீட்டளவில் இராணுவ ஆதாயத்தைக் காண்கிறது

அமெரிக்க ஏகாதிபத்தியம் உக்ரேனில் ரஷ்யாவுடன் ஒரு போரை திறம்பட தூண்டியுள்ளது. அதே நேரத்தில், சீனாவுடன் போருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. பைடென் நிர்வாகம் ஒரு “தீர்க்கமான தசாப்தத்தை” பிரகடனப்படுத்தியுள்ளது. அதில், அமெரிக்கா ஒரு “புதிய உலக ஒழுங்கை” நிறுவ முற்படுகிறது.

தனது “புதிய உலக ஒழுங்கை” உருவாக்க முற்பட்டுவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அது முற்றிலும் இரக்கமற்றதாக இருக்கும் என்பதையும், அது கொலை செய்யத் தயாராக இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

கடந்த மே மாதம் ஒரு குழு கலந்துரையாடலில், அமெரிக்க கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் மார்க் மில்லி, பொதுமக்கள் மீதான பாரிய படுகொலைகளை வெளிப்படையாகப் பாதுகாத்து அதை சட்டபூர்வமாக்கியதோடு, “அமெரிக்கா நிறைய அப்பாவி மக்களைக் கொன்றுள்ளது” என்று பெருமையுடன் அறிவித்தார். அவரது சக குழு உறுப்பினர், பலன்டிர் தலைமை நிர்வாக அதிகாரியான அலெக்ஸ் கார்ப் என்பவர், “[நீங்கள்] கடுமையாக இருக்க தயாராக இருக்க வேண்டும்,” மற்றும் “உங்கள் எதிரியை நீங்கள் பயமுறுத்த வேண்டும்” என்று அறிவித்தார்.

நனவாகவோ அல்லது இல்லையோ, ஜெனரல் மார்க் மில்லியும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் அவரது ஊழியர்களிடம் அடால்ஃப் ஹிட்லரின் வார்த்தைகளை எதிரொலித்தனர்: அது, “எங்கள் வலிமை எங்கள் வேகத்திலும் எங்கள் மிருகத்தனத்திலும் உள்ளது.”

கால் அழுகி நாற்றம்கண்டு கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், வன்முறை மற்றும் மிருகத்தனம் வெடிப்பதையே தனது வரலாற்று நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி என்று பார்க்கிறது. அது சதி செய்துவரும் மூன்றாம் உலகப் போர், வரம்பற்ற அளவில் வன்முறையைப் பயன்படுத்துவதைக் காணும்.

இந்த உண்மையிலிருந்து இரண்டு முக்கிய முடிவுகள் பின்பற்றப்படுகின்றன:

முதலாவதாக, ஏகாதிபத்திய போரின் உலகளாவிய வெடிப்புக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு வெளியே காஸா இனப்படுகொலையை எதிர்ப்பது என்பது சாத்தியமற்றது.

ஜனநாயகக் கட்சியின் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் காங்கிரஸ் பெண்மணி அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்றவர்கள், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்கான திட்டங்களுக்கு வெளிப்படையான ஆதரவுடன், நெதன்யாகு அரசாங்கத்தின் வாய்மொழி விமர்சனங்களை ஒருங்கிணைத்துள்ளனர். உண்மையில், பைடென் நிர்வாகம் உலகளாவிய அளவில் ஒரு மோதலை நடத்துகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதில், காஸா இனப்படுகொலையில் அது நேரடி உடந்தையாக இருப்பது ஒரு முக்கிய அங்கமாகும்.

இரண்டாவதாக, இனப்படுகொலையை நிறுத்துமாறு பைடென் அல்லது அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவுக்கும் முறையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. இது வரை, இனப்படுகொலைக்கு எதிரான பல போராட்டங்கள் பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு முறையீடு செய்ய அல்லது அதன் போக்கை மாற்ற அழுத்தம் கொடுக்க முயன்றன.

ஆனால், இஸ்ரேலிய ஆட்சியின் “கண்மூடித்தனமான குண்டுவீச்சு” பற்றிய பைடெனின் பகிரங்க விமர்சனம், முடிந்தவரை பல காஸா மக்களைக் படுகொலை செய்வதற்கான அவரது முழு ஆதரவிற்கான ஒரு மறைப்பாகும். உண்மையில், பைடென்தான், கூலிக்கு அமர்த்திய குண்டன் நெதன்யாகுவைக் கொண்டு, இனப்படுகொலையை நடத்திவரும் சூத்திரதாரியும் ஆசிரியரும் ஆவார். பைடென் தனது அரசியல் வாழ்க்கையில் இடைவிடாமல் பலமுறை கூறியது போல், “இஸ்ரேல் இல்லை என்றால், நாம் அதை உருவாக்க வேண்டும்.”

இந்தக் காரணங்களுக்காக, ஜூலை 24 அன்று உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டமும் கூட்டமும் “இனப்படுகொலை” ஜோ பைடெனுக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டமாக இருக்கும். ஆனால், இது அவர்களுக்கு விடுக்கும் ஒரு அழைப்பு அல்ல. இந்தப் பேரணி மற்றும் கூட்டம் ஆகியன, காஸாவில் இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போரின் பரந்த வெடிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் பாதையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு களத்தை வழங்கும்.

காஸாவில் ஒன்பது மாதங்களாக நடந்துவரும் படுகொலைகளுக்குப் பிறகு, தெளிவான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என்பது ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் உலகளாவிய வெடிப்புக்கு எதிரான போராட்டமாகும். அதுவே முதலாளித்துவ அமைப்பின் மிக அத்தியாவசியமான பண்புகளை வெளிப்படுத்துகிறது. எனவே, காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாக இருக்க வேண்டும்.

இந்தக் கொள்கைகளுடன் உடன்படும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 24 அன்று வாஷிங்டனில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading