இஸ்ரேலின் பட்டினிக் கொள்கையை கண்டித்து, காஸாவில் பஞ்சம் இருப்பதை ஐநா நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இஸ்ரேலிய அரசாங்கத்தின் வேண்டுமென்றே பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பாரிய பட்டினி நிலையால் வறுமை நிலைக்குத் தள்ளும் கொள்கையின் விளைவாக, காஸா பகுதி முழுவதும் பஞ்சம் பரவியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று செவ்வாயன்று ஒரு அறிக்கையில் உயர் தகுதி வாய்ந்த, சுயாதீன ஐ.நா நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.

நவம்பர் 8, 2023 புதன்கிழமை, தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபாவில் உணவு விநியோகம் செய்யும் இடத்தில் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் ஒன்றாகக் குவிந்தனர். அக்டோபர் 7, 2023 முதல், எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரின் அளவைக் இஸ்ரேல் கட்டுப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக காஸா முழுவதிலும் பரவலான பட்டினி நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. [AP Photo/Hatem Ali]

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதுமான சுகாதார வசதி இல்லாததால் இறந்த மூன்று குழந்தைகளை நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்: “ஆறு மாதங்களே ஆன ஃபயேஸ் அடயா 30 மே 2024 அன்று இறந்தார் மற்றும் 13 வயதான அப்துல்காதர் அல்-செர்ஹி 1 ஜூன் 2024 அன்று டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இறந்தார். ஒன்பது வயதான அஹ்மத் அபு ரெய்டா 3 ஜூன் 2024 அன்று அல்-மவாசி, கான் யூனிஸில் உள்ள தனது இடம்பெயர்ந்த குடும்பம் தங்குமிடத்தின் கூடாரத்தில் இறந்தார்.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக ஒரு குழந்தையின் மரணம், உடல்நலம் மற்றும் சமூக கட்டமைப்புகள் தாக்கப்பட்டு மிகவும் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது என்று அவர்களின் அறிக்கை விளக்கியுள்ளது. “முதல் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக இறக்கும் போது, ​​பஞ்சம் வாட்டி வதைத்தது மறுக்க முடியாததாகிறது,” என்று அவர்கள் கூறினர்.

வல்லுநர்கள் இஸ்ரேலின் இனப்படுகொலையை வெளிப்படையாகக் கண்டித்தனர். “பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வேண்டுமென்றே மற்றும் இலக்கு வைக்கப்பட்டு பட்டினியை உருவாக்கி வறுமையை ஏற்படுத்தும் இனப்படுகொலை வன்முறையின் ஒரு வடிவமாகும் மற்றும் காஸா முழுவதும் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நாங்கள் அறிவிக்கிறோம். தரைவழி மூலம், தேவையான எந்த வகையிலும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் இஸ்ரேலின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வந்து, போர்நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள்” என்று அவர்கள் கூறினர்.

வடக்கு காஸாவில் பஞ்சத்தை உறுதிப்படுத்தும் முந்தைய குழந்தை இறப்புகளை சுட்டிக்காட்டிய பிறகு, அந்தக் குழு மறைமுகமாக அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவைக் கண்டித்திருக்கிறது. அது காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆதரவாக அதன் கட்டிடங்களை இடிபாடுகளாகவும், அதன் மக்களை பட்டினி, நோய் மற்றும் குண்டுவீச்சு ஆகியவற்றால் தொடர்ந்து மரணத்தை எதிர்கொள்ளும் அகதிகளாகவும் ஆக்கியுள்ளது.

“இஸ்ரேல், வறுமையைப் பயன்படுத்தி நடத்தும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கு முழு உலகமும் முன்னதாகவே தலையிட்டு இந்த மரணங்களைத் தடுத்திருக்க வேண்டும்” என்று நிபுணர்கள் அறிவித்தனர். “அக்டோபர் 7 முதல் முப்பத்து நான்கு பாலஸ்தீனியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் ஆவர். இதற்கு செயலற்ற தன்மை உடந்தையாக இருக்கிறது.”

10 பேர் கொண்ட குழுவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு நடைமுறைகளின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் உள்ளனர்.

அவர்களின் அறிக்கையைப் பின்தொடர்ந்து, புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான்செட்டில் (The Lancet) இந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அக்டோபர் 7 முதல் காஸாவில் இறப்பு எண்ணிக்கை காஸா சுகாதார அமைச்சகத்தால் பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது என்று நிரூபிக்கிறது – தற்போது, இறந்தவர்கள் 38,000 க்கும் அதிகமாக உள்ளது,

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையில் இப்போது காஸாவின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட ஆயிரக்கணக்கானோர் அல்லது உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவம் இல்லாததால் இறந்தவர்கள் உள்ளடங்கவில்லை என்று ஆய்வு குறிப்பிடுகிறது. இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரின் விளைவாக 186,000 பேர் இறந்தனர் அல்லது மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் இறந்தனர் என்பது அதன் முந்தைய மதிப்பீடாகும், ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

லான்செட்டின் ஆய்வுகள் அமெரிக்க மற்றும் மேற்கத்திய முக்கிய ஊடகங்களில் அரிதாகவே பதிவாகியுள்ளது. இது காஸாவில் நடைபெறும் ஏகாதிபத்திய ஆதரவுடனான இஸ்ரேலிய படுகொலைகளுக்கு அவர்களின் ஆதரவின் (அவ்வப்போது பாசாங்குத்தனமான கையை பிசைந்தாலும்) மற்றொரு அறிகுறியாகும்.

ஐ.நா நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு இஸ்ரேல் அவதூறு மற்றும் பொய்களுடன் பதிலளித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான அதன் பணியகம், “திரு. ஃபக்ரி (Fakhri) [உணவுக்கான உரிமைக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்] மற்றும் அவரது அறிக்கையுடன் இணைந்த ‘நிபுணர்கள்’ என்று அழைக்கப்படும் பலர், தவறான தகவல்களைப் பரப்புவதற்கு மிகவும் பழக்கமானவர்கள், அவர்கள் ஹமாஸ் பிரச்சாரத்தை ஆதரிப்பதோடு, பயங்கரவாத அமைப்பை சோதனையிலிருந்து பாதுகாக்கின்றனர்” என்று அறிவித்தது.

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (Integrated Food Security Phase Classification - IPC) கூட்டாண்மையின் சமீபத்திய மதிப்பீடு, காஸாவில் உதவி அணுகல் ஓரளவு மேம்பட்டுள்ளதால் பஞ்சம் உருவாகவில்லை என்பதைக் காட்டுகிறது என்று இஸ்ரேலிய பணியகம் கூறுகிறது.

உண்மையில், ஜூன் 1 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூன் 25 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய IPC மதிப்பீடு, காஸாவில் பஞ்சம் இருப்பதாக முறையாக அறிவிக்காத நிலையில், காஸாவின் வாழ்க்கையின் கொடூரமான விரைவாக எடுக்கப்பட்ட படமும், மக்கள் எதிர்கொள்ளும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பற்றாக்குறைகளையும் அறிவிக்கிறது. “மோதல் தொடரும் வரை மற்றும் மனிதாபிமான அணுகல் தடைசெய்யப்படும் வரை, காஸா பகுதி முழுவதும் பஞ்சத்தின் அதிக ஆபத்து நீடிக்கிறது” என்று அது முடிவு செய்தது.

வடக்கு காஸாவைக் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உணவு விநியோகம் “தற்போது பஞ்சம் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கும்” அளவுக்கு நெருக்கடியைத் தணித்ததாக IPC குறிப்பிட்டது. எவ்வாறாயினும், “ஜபாலியா நகரம் மற்றும் அகதி முகாம், ஜெய்டவுன் பகுதி மற்றும் பெய்ட் ஹனூன் ஆகிய இடங்களில் அதிக தீவிர தாக்குதல்களுடன் தரை நடவடிக்கைகள் தொடர்ந்தன, மற்றும் வடக்கு நிர்வாகப் பிரிவின் கட்டுப்பாட்டு பகுதியில் மீதமுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சுமார் 100,000 பேர் இடம்பெயர்ந்தனர்” என்று அது குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், காஸாவின் தெற்கில், இரண்டு மில்லியன் மக்கள் குவிந்துள்ள நிலையில், ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் “கணிசமான அளவு குறைக்கப்பட்ட” மனிதாபிமான அணுகலுடன் ரஃபா எல்லைக் கடவையை மூடியதன் மூலம் நிலைமை தெளிவாக மோசமடைந்துள்ளது.

“சமீபத்திய தரவுகளின்படி, உணவை வாங்குவதற்கு, பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் ஆடைகளை பணத்திற்காக மாற்ற வேண்டியிருந்தது மற்றும் மூன்றில் ஒரு பகுதியினர் குப்பைகளை விற்க முயன்றனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும், வீட்டில் சாப்பிட உணவு இல்லை என்றும், 20 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இரவும் பகலும் சாப்பிடாமலேயே செல்கின்றனர்” என்று IPC கூறியுள்ளது.

“மே மாத இறுதிக்குள், குடியிருப்புகள், கடைகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற உள்கட்டமைப்புகள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் சுமார் 60 சதவீதம்; காஸா பகுதி முழுவதும் கிட்டத்தட்ட 70 சதவீத WASH என்று கூறப்படும் தண்ணீர், கழிவு அகற்றல், சுகாதாரம் போன்று வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ள்ளன. உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்திற்குத் தேவையான சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளும் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மே மாத இறுதிக்குள், 57 சதவீத விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன.

மே மாத இறுதி வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், காஸா முழுவதும் அவசரநிலை (IPC கட்டம் 4) காணப்படுகிறது என்று IPC வகைப்படுத்தியது, இது உணவுப் பற்றாக்குறையின் ஐந்து கட்ட வகைப்பாட்டில் இரண்டாவது மிக உயர்ந்த வகையாகும். 495,000 க்கும் அதிகமான மக்கள் அல்லது 22 சதவிகித மக்கள் மிக உயர்ந்த பிரிவில் (IPC கட்டம் 5) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்வதாக அது மேலும் அறிவித்துள்ளது. “இந்த கட்டத்தில், குடும்பங்கள் உணவு பற்றாக்குறை, பட்டினி மற்றும் சமாளிக்கும் திறன்களின் சோர்வு ஆகியவற்றை அனுபவிக்கின்றன,” என்று அது கூறியது.

காஸாவின் மக்கள்தொகையில் சுமார் 96 சதவீதம் அல்லது 2.15 மில்லியன் மக்கள் செப்டம்பர் 2024 வரை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள் என்று IPC கணித்துள்ளது. ஐ.நா நிபுணர்களின் செவ்வாய்க் கிழமை அறிக்கையை மறுப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா மற்றும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் காஸாவில் இஸ்ரேலால் நடத்தப்படும் போரின் இனப்படுகொலை தன்மைக்கு IPC மேலும் ஆதாரங்களை வழங்குகிறது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் ஆசியாவில் போரை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் சீனாவுடன் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு மோதலுடன் இஸ்ரேலின் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான, ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதுடன், மேலும் உலகை அதன் திவாலான நிலையில் போட்டி தேசமாக பிரித்து போரின் மூலகாரணத்தை உருவாக்குகின்ற இலாப அமைப்பு முறையை ஒழிக்க வேண்டும்.

ஜூலை 24 அன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்து, அங்கு இந்த போர்க்குற்றவாளி தனது ஏகாதிபத்திய ஊதியம் வழங்குபவர்களைச் சந்திப்பார். போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியாக சோசலிச சமத்துவக் கட்சி அந்நாளில் அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க தலைநகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Loading