இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
காங்கிரசின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றவுள்ள உரைக்கு எதிராக வாஷிங்டன் டி.சி.யில் ஜூலை 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பின்வரும் அறிக்கை விநியோகிக்கப்படும்.
ஜூலை 24 அன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் அழைப்பின் பேரில் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அதேநாளில், உண்மையான நேரத்தில் கட்டவிழ்ந்து வருகின்ற வரலாற்று குற்றத்தின் மீது தங்களின் சீற்றத்தை வெளிப்படுத்த பத்தாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டன் டி.சி. இல் ஒன்றுகூடுவார்கள்.
ஒன்பதரை மாதங்களாக, காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மரணத்தையும் அழிவையும் பொழிந்து வருகிறது. நெதன்யாகு திங்களன்று அமெரிக்காவிற்கு வந்தபோது, காஸாவின் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக 39,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். கிட்டத்தட்ட 90,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இது, இஸ்ரேலிய குண்டு வீச்சுக்களால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும். ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலகின் மிகவும் மதிப்பிற்குரிய, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழ்களில் ஒன்றான தி லான்செட், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
அதன் இனப்படுகொலை தாக்குதலில், இஸ்ரேல் திட்டமிட்டு குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், மத நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் காஸா பகுதியின் முழு சமூக உள்கட்டுமானத்தையும் அழித்துள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை மறுப்பதன் மூலமும் பட்டினி மற்றும் நோய்கள் மூலமும் இனப்படுகொலை செய்யும் கொள்கையை அது செயல்படுத்தி வருகிறது.
நெதன்யாகுவும் அவரது அமைச்சர்களும் போர்க் குற்றவாளிகள் என்பது முழு உலகிற்கும் தெளிவாகத் தெரிகிறது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 75 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒடுக்குமுறையின் உச்சநிலையாக இந்த இனப்படுகொலை அமைந்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் “பாலஸ்தீனிய பிரச்சினைக்கு” அதன் “இறுதி தீர்வை” முன்னெடுப்பதற்கு அக்டோபர் 7 நிகழ்வுகளை பற்றிக்கொண்டது.
பாலஸ்தீன பிராந்தியங்கள் மீதான இஸ்ரேலின் அரை நூற்றாண்டு கால ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, நெதன்யாகு வாஷிங்டனுக்கு விஜயம் செய்கிறார். இஸ்ரேலிய அரசின் தலைவர், அவரது பாதுகாப்பு அமைச்சருடன் சேர்ந்து, “படுகொலை” மற்றும் “நிர்மூலமாக்கல்” உட்பட “போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.
மிகப் பெரிய அளவில் போர்க்குற்றங்களை இழைத்து வருகின்ற இஸ்ரேலும் அதன் பாதுகாவலர்களும் பிரமாண்டமான பொய்களை நாடுகின்றனர். இத்தகைய குற்றங்களுக்கு எதிராக போராடுகிற மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக, அவர்கள் “யூத-எதிர்ப்புவாதம்” என்ற குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். என்ன ஒரு மோசடி! இனப்படுகொலையை நடத்துவதன் மூலம், தங்கள் சார்பாக செயல்படுவதாக இஸ்ரேல் கூறுவதால் ஆர்ப்பாட்டக்காரர்களில் செயலூக்கமாக இருக்கும் யூதர்கள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளனர்.
நாஜி இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவரான ரெனே லிச்ட்மன் (Rene Lichtman) தலைமையிலான மிச்சிகனில் இடம்பெற்ற போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதற்கும் சரீரரீதியில் அச்சுறுத்துவதற்குமான ஒரு முயற்சியில் இம்மாத தொடக்கத்தில் “யூத-எதிர்ப்புவாதம்” என்ற குற்றச்சாட்டு அபத்தத்தின் ஒரு மட்டத்தை எட்டியது.
நெத்தென்யாகுவும் இஸ்ரேலிய ஆட்சியும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள், அவற்றிற்கு அவர்கள் பொறுப்புக் கூற வைக்கப்பட வேண்டும். ஆனால் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் நெத்தென்யாகுவை ஒரு கூட்டுக் கூட்டத்தில் பேசுமாறு அழைப்பு விடுத்திருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள உண்மையான உறவை அம்பலப்படுத்துகிறது.
காஸாவில் நடக்கும் இனப்படுகொலை வாஷிங்டனில் தயாரிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு 2,000 பவுண்டு எடையுள்ள 14,000ம் குண்டுகளை வழங்கியுள்ளது. இது, வேறு எந்தவகை வெடிமருந்துகளையும் விட அதிகமாக இருப்பதுடன், இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு அது வழங்கியுள்ள 6.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.
அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் நெருக்கடி நிலைமைகளின் மத்தியில் நெதன்யாகு தனது உரையை வழங்குகிறார். ஆனால், அவர்களது மோதல்கள் மற்றும் பிளவுகள் எதுவாக இருந்தாலும், ஆளும் வர்க்கம் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறது.
குடியரசுக் கட்சியினர் ஒரு தேசிய மாநாட்டின் வடிவத்தில் ஒரு பாசிச பேரணியை இப்போதுதான் முடித்துள்ளனர். அனைத்து அரசியல் பிற்போக்குவாதிகளும் காஸாவில் நடக்கிற கொலைகார படுகொலைகளுக்கு அவற்றின் முழு ஆதரவை அறிவித்துள்ளனர். “இனப்படுகொலை” ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் அதை முழுவதுமாக மேற்பார்வையிட்டு நிதி ரீதியாக ஆதரித்துள்ளது.
ஜோ பைடென் விலகுவதாக அறிவித்த பின்னர் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வரக்கூடிய கமலா ஹாரிஸ், நெதன்யாகுவின் உரையில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருப்பினும், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அவரது ஆதரவையும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவையும் அறிவிக்க அவர் நெத்தன்யாகுவை தனித்தனியாக சந்திப்பார்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் காஸா இனப்படுகொலையை ஆதரிக்கிறது. ஏனென்றால் அது மத்திய கிழக்கையும் ஒட்டுமொத்த உலகையும் மறுவடிவமைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தின் பாகமாக உள்ளது. வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரின் ஒரு பரந்த விரிவிக்கத்துக்கு தயாரிப்பு செய்வதற்காக ஜோ பைடென் நேட்டோ சக்திகளை வாஷிங்டனில் வரவேற்றார். இதுவே சீனாவுடனான ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்வதாக பார்க்கப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி நெதன்யாகுவின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை வரவேற்கிறது. ஜூலை 24 எதிர்ப்புக்களில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் நவீன சகாப்தத்தின் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றின் மீதான சீற்றம் மற்றும் கோபத்தால் உந்துதல் பெற்றவர்கள் ஆவர்.
ஆனால் கோபமும் சீற்றமும் மட்டும் போதாது. இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் அதை இயக்கும் சமூக மற்றும் அரசியல் நலன்கள் பற்றிய ஒரு மூலோபாய புரிதலை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
ஜூலை 24 அன்று பேரணிகளை ஏற்பாடு செய்துள்ள அமைப்புகளில், ANSWER கூட்டணி “ நெதன்யாகுவை கைது செய்!” என்ற முழக்கத்தின் கீழ் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அவரை கைது செய்யப் போவது யார்? பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும், அவர்களிடம் இருந்து ஊதியம் பெற்றுவரும் குண்டன் நெதன்யாகுவை பொறுப்பேற்கச் செய்ய வைப்பார்கள் என்று யாராவது நம்புகிறார்களா?
காங்கிரஸ் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுவது பற்றிய கேள்வி அல்ல. பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதிகள் இதுபோன்ற முறையீடுகளுக்கு அலட்சியமாக உள்ளனர் என்பதை ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போர் எடுத்துக்காட்டியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் ஏற்பாடு செய்துள்ள பேரணியும் கூட்டமும் முற்றிலும் வேறுபட்ட முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டவையாகும். இந்த நிகழ்வுகள், வெறுமனே நெதன்யாகுவின் வருகையை எதிர்ப்பது மட்டுமல்லாமல், மாறாக போர் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் முன்னோக்கையும் முன்னெடுக்கும்.
போருக்கு எதிரான போராட்டத்தை, சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக இயக்கத்துடன் இணைப்பதே மையப் பணியாகும். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தின் பரந்த நெருக்கடியிலிருந்தும், காட்டுமிராண்டித்தனம், சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் உலகளவில் போருக்குள் வீழ்ச்சியடைந்ததில் இருந்து பிரிக்க முடியாது,
இந்தப் பேரணியும் கூட்டமும் மூன்று அடிப்படை கோட்பாடுகளை முன்னெடுக்கும்:
போருக்கான அடிப்படைக் காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையிலும், மிகப்பெரும் பெருநிறுவனங்களின் பூகோள நிதிய நலன்களிலும் மற்றும் பூகோள மேலாதிக்கத்தை அடைவதற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத முனைப்பிலும் தங்கியுள்ளது.
போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சக்தியை அணிதிரட்டுவதும், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்தியப் போரின் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் அவசியமாகும்.
இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான இயக்கம் சர்வதேசரீதியானதாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டும்.
இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரையும் ஜூலை 24 அன்று தேசிய மாலில் (National Mall) சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ள பேரணியில் பங்கேற்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். நெதன்யாகுவின் உரைக்கு எதிரான எதிர்ப்பானது, இனப்படுகொலை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.