முன்னோக்கு

காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஜூலை 24 ஆம் தேதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் அரசியல் கேள்விகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 24 அன்று, அமெரிக்க காங்கிரசின் கூட்டு அமர்வில் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கு கூடியிருந்த செனட்டர்கள், பிரதிநிதிகள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கைதட்டலைப் பெற்றார். காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு மத்தியில் நெதன்யாகுவின் பிரசன்னமானது, பாரிய படுகொலையில் அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த உடந்தையும் இருப்பதை நிரூபிக்கின்றது.

​​2024 ஜூலை 24 புதன்கிழமை வாஷிங்டனில் உள்ள கேபிட்டலிலுள்ள காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகிறார். அவரது பேச்சை பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் மற்றும் செனட் வெளியுறவு அதிகாரி பென் கார்டின் கைதட்டியபடி கேட்கின்றனர். [AP Photo/Julia Nikhinson]

கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே, நெதன்யாகுவின் வருகைக்கு எதிராக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒரு ஆர்ப்பாட்டம், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (DSA), CODEPINK, மற்றும் ஜனநாயகக் கட்சியின் சுற்றுப்பாதையில் செயல்படும் பிற அமைப்புகளின் ஆதரவுடன், ANSWER (Act Now to Stop War and End Racism) என்ற அமைப்பின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றொன்று சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ANSWER அமைப்பு ஏற்பாடு செய்த பேரணியில், சோசலிசத்துக்கும் விடுதலைக்குமான (PSL) கட்சியும் இணைந்திருந்தது. கடந்த அக்டோபரில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து இதர குழுக்கள் நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டங்களுடன், சோசலிசத்துக்கும் விடுதலைக்குமான (PSL) கட்சியும் வழக்கமாக ஈடுபட்டு வருகிறது. இவர்களின் பேரணியில், படுகொலையைத் தடுக்க எந்த முன்னோக்கும் இல்லாமல், நடுத்தர வர்க்க அரசியலின் வழக்கமான வெற்று முழக்கமும், வாய்வீச்சுமே நிறைய இருந்தது. அல்லது, அவர்கள் உரத்த ஒலியில் கூச்சலிட்டால், ஜனநாயகக் கட்சி அல்லது அதன் ஒரு பகுதிக்கு கேட்கும் என்ற நம்பிக்கையை அவர்களின் முன்னோக்கு அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்களின் கருத்தாக்கம் என்னவென்றால், அரசியல் என்பது அடிப்படையில் ஒலிபெருக்கி மற்றும் ஒலியியல் பிரச்சினையாகும்.

அவர்களின் பேரணியில், இனப்படுகொலையின் தோற்றம் பற்றிய அரசியல் பகுப்பாய்வின் அணுகுமுறையுடன் பேச்சாளர்கள் யாரும் எதையும் முன்மொழியவில்லை. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைப் பற்றிய எந்தக் குறிப்பும் அவர்களது பேரணியில் இல்லை. மேலும் இந்த கேள்வியில், சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு இடையே எந்த அரசியல் வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பேச்சாளர்கள் யாரும் போருக்கு எதிரான போராட்டத்தை சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்கவும் இல்லை.

PSL கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கிளாடியா டி லா க்ரூஸ் “மிருகத்தின் வயிற்றில் உள்ளவர்கள் விடுதலைக்கான போராளிகளாக மாறுகிறார்கள்” மேலும், “காஸா நம் அனைவரையும் விடுவிக்கும்” என்று கூச்சலிட்டார். “மக்கள்” இனப்படுகொலையை விரும்பவில்லை என்று அறிவித்த பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டீன், “நாங்கள் ஒன்றாக நிற்போம், நாங்கள் அதை நிறுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

இனப்படுகொலையை மக்கள் எவ்வாறு நிறுத்துவார்கள்? எதுவும் சொல்லப்படவில்லை. உண்மையில், கடந்த ஒன்பது மாதங்களில் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் மில்லியன் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கக் கொள்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வரலாற்று ஆளுமைக் கோளாறுவாதிகளுக்குப் பின்னால், மனச்சோர்வின் ஒரு தெளிவான மனநிலை இவர்களின் பேரணியில் நிலவியது.

பல பேச்சாளர்கள் “தொழிற்சங்க இயக்கத்தை” பாராட்டினர். இதன் மூலம் தொழிற்சங்க எந்திரம் என்பது இனப்படுகொலைக்கு எதிராக இருந்ததாகக் கூறினர். இதில் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) பிராந்திய 9 ஏ இயக்குனர், DSA வுடன் இணைந்த பிராண்டன் மான்சில்லா ஆகியோரும் இதில் அடங்கியிருந்தனர். ஒரு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஏழு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கையெழுத்திட்ட “வரலாற்றுக்” கடிதம் என்று அழைக்கப்படுவதை மான்சில்லா மேற்கோள் காட்டினார். இந்தக் கடிதம் பைடெனுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு புகழ்பெற்ற அழைப்பாகும், “காஸாவில் நடந்துவரும் போரில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தைப் பெறுவதற்கான பணிகளின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும்” என்று தனது நிர்வாகத்துக்கு மான்சில்லா அழைப்பு விடுத்தார்.

மான்சில்லாவால் பாராட்டப்பட்ட அதே தொழிற்சங்க அதிகாரிகளும் மற்றவர்களும், ரஷ்யாவுக்கு எதிரான போரை ஆதரித்து, பைடெனுக்கு ஒப்புதல் அளித்ததோடு, ஜனநாயகக் கட்சியை ஆதரித்தனர்.

இந்த அரசியல் போக்குகள் அவர்களது வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றன. ANSWER கூட்டணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர், காஸா இனப்படுகொலை குறித்த திகிலில் நேர்மையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகள், நடுத்தர வர்க்கத்தின் வெவ்வேறு அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின், குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் நோக்குநிலையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அவர்களின் தலைமை, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கு எதிராக இயக்கப்படும் ஏமாற்று அரசியலின் ஒரு வடிவத்தில், நன்கு நடைமுறையில் உள்ள நபர்களைக் கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வு முற்றிலும் இதற்கு மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது. பேரணி மற்றும் அடுத்தடுத்த கூட்டம் என்பன ஒரு தெளிவான வேலைத்திட்டத்தையும், இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பையும் முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தன.

அரசியல் சூழ்நிலையின் வெவ்வேறு அம்சங்களில் கவனத்தை செலுத்தி, அனைத்து உரைகளும் சில அடிப்படை கருப்பொருள்களை வலியுறுத்தின:

  • போருக்கான முக்கிய காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு முறையாகும். இராட்சத நிறுவனங்களின் உலகளாவிய நிதி நலன்களும், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத உந்துதலும் இதில் அடங்கியுள்ளது.

  • போருக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மகத்தான அதிகாரத்தை அணிதிரட்டுவதுக்கு, ஏகாதிபத்திய போரின் ஆளும் வர்க்கக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து அரசியல் சுயாதீனம் தேவைப்படுகிறது.

  • இனப்படுகொலைக்கும், போருக்கும் எதிரான இயக்கம் சர்வதேச இயக்கமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை, அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் உலகளவில் ஐக்கியப்படுத்த வேண்டும்.

கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள், இனப்படுகொலைக்கு நெதன்யாகுவைக் குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல், காஸாவில் உள்ள கொடூரங்களுக்கும் பரந்த ஏகாதிபத்தியப் போருக்கும் இடையிலான தொடர்பை விளக்கியது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பாசிசத்தின் வளர்ச்சியுடன், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி ஆகியவற்றுடன், அதிகரித்து வரும் உலகப் போரை அவர்கள் இணைத்து விளங்கப்படுத்தினர்.

இந்த உரைகள் விமர்சன அரசியல் மற்றும் வரலாற்று கேள்விகளை போருக்கு எதிரான இயக்கத்தின் வளர்ச்சியில் தெளிவுபடுத்தியிருந்தன. சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பிரதிநிதியும், UAW இன் முன்னாள் வேட்பாளருமான வில் லெஹ்மன், தொழிற்சங்க இயந்திரம் போரை எதிர்க்கிறது (ANSWER பதில் கூட்டணி பேரணியால் ஊக்குவிக்கப்பட்டது) என்ற கூற்றுகளின் மோசடியையும், பாசாங்கையும் அம்பலப்படுத்தினார்.

“[UAWயின் தலைவர்] ஷான் ஃபைன் காஸாவில் இனப்படுகொலையை எதிர்ப்பது குறித்து சில அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்,” என்று லெஹ்மன் கூறினார். மேலும், “ஷான் ஃபைன், பைடெனுக்கும், இப்போது ஹாரிஸுக்கும் முழுத் தொண்டையும் கிழியும் அளவிற்கு கத்தி ஆதரவு அளிக்கிறார். இதற்கிடையில், UAW தொழிற்சங்க அதிகாரத்துவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் UAW ஆலைகளில் உற்பத்தியை இயக்குகிறது” என்று தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் முதலாளித்துவ அரசியலின் “அழுகிய களியாட்டம்” என்று அவர் குறிப்பிட்டதை மதிப்பாய்வு செய்தார். ஒரு கட்சி, குடியரசுக் கட்சியினர், பாசிசத்தில் இறங்குகிறார்கள், மற்றவர், ஜனநாயகக் கட்சியினர், போரை விரிவாக்குவதில் முழுமையாக கவனத்தை செலுத்துகின்றனர். “சோசலிச சமத்துவக் கட்சியும் எங்கள் தேர்தல் பிரச்சாரமும்,” போர்க் குற்றவாளிகளிடம் தங்கள் போக்கை மாற்றுமாறு முறையிடுவது ஒரு விஷயமல்ல என்று வலியுறுத்துகிறது. இல்லை, குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை நிறுத்துமாறு நாங்கள் கெஞ்சவில்லை.”

கிஷோர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மீது சிறப்பு கவனம் செலுத்தினார். அவர்கள் “ஜனநாயகக் கட்சிக்கு முழுமையான ஆதரவுடன் நேர்மையற்ற விமர்சனங்களை இணைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், அவர், “அரை உண்மைகள், கால் உண்மைகளின் பாதிரியார்கள் பொய்யுரைகளின் மோசமான வடிவம்” என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.

உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், பேரணியில் அளித்த கருத்துக்களில், 55 ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, ஆளும் உயரடுக்கினரின் நனவுக்கு முறையிடும் முன்னோக்கை முன்வைத்தது தொடர்பான வரலாற்று அனுபவங்களைப் பற்றி குறிப்பிட்டார்.

“இங்கே நாம் அரை நூற்றாண்டு பின்னர் இன்னும் பெரிய குற்றங்களை எதிர்த்து நிற்கிறோம் என்பதிலிருந்து என்ன படிப்பினைகள் பெற வேண்டும்? அப்போது நாங்கள் எதிர்கொண்ட பெரும் சிக்கலானது, வரலாற்று அறிவின் பிரச்சினையும், உலகெங்கிலும் உள்ள புரட்சிகர போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து அரசியல் பாடங்களை எடுக்கும் திறனும் ஆகும்” என்று குறிப்பிட்டார். இதுதான் ட்ரொட்ஸ்கிஸ்ட் இயக்கத்தின் முக்கியத்துவம் ஆகும்.

“மற்ற ஆர்ப்பாட்டங்களில் எதுவும் கூறப்படவில்லை,” என்று குறிப்பிட்ட நோர்த் “நாங்கள், மார்க்சிஸ்டுகள், முன்னோக்கு என்று அழைப்பதை முன்வைக்க முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்தார். அவர்கள் அடிப்படை சிக்கல்களை மறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்ட நோர்த், மேலும் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்:

ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக அணிதிரட்டுவது அவசியமாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வது அவசியமாகும். அதற்கு முதலாளித்துவவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோ, ஒரு அமைதியான கொள்கையை ஏற்குமாறு அவர்களுக்கு முறையிடுவதோ அதன் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கும் ஒரு முன்னோக்கு அவசியப்படுகிறது.

“முதலாளித்துவத்தின் முடிவு குறித்துப் பேசாமல் யுத்தத்தின் முடிவு குறித்துப் பேச விரும்புபவர்கள் மெளனமாக இருப்பதும், உலகின் ஏனைய பகுதிகளுக்கு தமது அறியாமையை விலக்கி வைப்பதுமே சிறந்ததாகும்” என்று நோர்த் மேலும் தெரிவித்தார்.

காஸாவில் இனப்படுகொலை, ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தின் வளர்ச்சி என்பன, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியலுடன் இணைக்கும் அனைத்து அமைப்புகளின் அரசியல் செல்வாக்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போராட்டத்துடன் இணைத்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதன் மூலம், வரலாற்றின் படிப்பினைகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதற்கு முறையான போராட்டம் தேவைப்படுகிறது.

ஜூலை 24 அன்று இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணி, அரசியல் வேறுபாட்டையும், அரசியல் தெளிவுபடுத்தும் செயல்பாட்டிலும் ஒரு முக்கியமான படியைக் குறித்து நிற்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணியில் வழங்கப்பட்ட அனைத்து உரைகளையும் இங்கே காண்க.

Loading