டெலிகொம், காப்புறுதி மற்றும் மின்சார நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை அமைத்திடுங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டானது (CWAC), ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் (இ.கா.கூ.), இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஆகியவற்றில் உள்ள ஊழியர்களை, அவர்களின் தொழில், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்காக முன்முயற்சி எடுக்கவும் நடவடிக்கை குழுக்களை அமைக்கவும் அழைப்பு விடுக்கிறது.

இந்தப் போராட்டத்துக்கான அரசியல் வேலைத்திட்டம் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 14 அன்று கொழும்பில் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு ஏற்பாடு செய்துள்ள பகிரங்க கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த இரண்டு மாதங்களில் அரசாங்கம் டெலிகொம் மற்றும் இ.மி.ச.யை மறுசீரமைப்பதற்கான சட்டங்களை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னகர்த்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் நடவடிக்கைகளைத் தயாரித்து வருகின்றன. தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்கலை இலக்காகக் கொண்ட இந்த மறுசீரமைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் பாரதூரமான சிக்கன திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

தொழிற்சங்கத் தலைமைத்துவங்கள், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் தடுப்பதன் மூலம், இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதை முன்னெடுக்க அரசாங்கத்துக்கு உதவியுள்ளன. அரசாங்கக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறி, பயனற்ற போராட்டங்களுக்கு இவை அழைப்பு விடுத்தன. இப்போது அவர்கள் மறுசீரமைப்பு செயல்பாட்டில் நிர்வாகங்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளனர்.

* டெலிகொம் திருத்த மசோதா ஜூலை 23 அன்று சட்டமாக மாறியது. இது செயற்கைக்கோள் இணைப்புகளை நிர்வகிக்கவும் மற்றும் இலங்கைக்கான சர்வதேச தொலைத்தொடர்பு கம்பி இணைப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களாக உரிமம் பெறுவதற்கு அனுமதிக்கிறது.

டெலிகாமின் தனியார்மயமாக்கல் செயல்முறை பல தசாப்தங்களுக்கு முன்பு 45 சதவீத பங்குகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றதுடன் மேலும் 6 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் விற்றதுடன் தொடக்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள 49 சதவீத பங்குகளை விற்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய நிறுவனமும், சீன நிறுவனமும் பங்குகளை வாங்க போட்டி போடுகின்றன.

பல்வேறு மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகு, தொழிற்சங்கத் தலைவர்கள் எஞ்சிய பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த போதிலும், ஜூலை 15 அன்று நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. தொலைத்தொடர்பு தொழிற்சங்க கூட்டின் தலைவர் ஜகத் குருசிங்க, ஜூலை 26 அன்று ஒரு போராட்டத்தின் போது, “நிறுவனம் விற்கப்பட்டால், அவர்களின் [ஜனாதிபதி] தேர்தல் திட்டத்தை நாங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்துவோம்,” என மற்றொரு வெற்று அச்சுறுத்தலை விடுத்தார்.

இதற்கிடையில், அரசாங்கம் டெலிகொம் ஊழியர்களை சுயவிருப்பு ஓய்வு திட்டத்தின் (VRS) மூலம் சொற்ப இழப்பீட்டுடன் குறைக்க முடிவு செய்துள்ளது. நிதியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சுயவிருப்பு ஓய்வை தேர்வு செய்பவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடாக 1.5 மில்லியன் ரூபாயும் ($US4,956) குறைந்தபட்ச இழப்பீடாக அரை மில்லியன் ரூபாயும் கிடைக்கும்.

* மின்சார சபை மறுசரீமைப்புச் சட்டம் ஜூன் 28 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இது 12 புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கும், இ.மி.ச. பிரிக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. தனியார்மயமாக்கல் பாதையில் இது முதல் நகர்வு ஆகும்.

அதே நாளில், தனியார்மயமாக்கலை தோற்கடிப்பதாக முழங்கிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைமையிலான இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டு, அதனது உறுப்பினர்களுக்குத் தெரியாமல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை சந்தித்து மறுசீரமைப்பு பற்றி கலந்துரையாடியுள்ளது.

எகோனொமி நெக்ஸ்ட் ஊடகத்தின் படி, இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ​​ 'மறுசீரமைப்பு கட்டமைப்பு, பல்வேறு பணிகளைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு, பொறுப்பேற்கும் நிறுவனங்களுக்கான நியமனங்கள், மனித வள முகாமைத்துவம், சம்பள கட்டமைப்புகள், கொள்கை மற்றும் எடுக்கப்பட்டுள்ள முகாமைத்துவ முடிவுகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.' மேலும், தொழிலாளர் எண்ணிக்கையை கடுமையாக குறைப்பது குறித்தும் அவர் கலந்துரையாடியுள்ளார். மறுசீரமைப்பை முடித்த பிறகு, சுமார் 5,000 ஊழியர்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அமைச்சர் விளக்கியுள்ளார். சுமார் 20,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சுயவிருப்பு ஓய்வு முறைமை உருவாக்கப்படும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களிடம் இந்த கலந்துரையாடல் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

* இ.கா.கூ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்ரீலங்கா காப்புறுதி, ஆயுள் காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் ரகசிய கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளதுடன் நிர்வாகத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்த நிறுவனங்களை உருவாக்குவதற்கு எதிராக இலங்கை காப்புறுதித் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்த போதிலும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுயவிருப்பு ஓய்வூதியத் திட்டமும் கூட தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடனேயே பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓய்வுபெறுவதற்கு விண்ணப்பிக்காமல் காப்புறுதி ஊழியர்கள் திட்டத்தை நிராகரித்துள்ளனர். இருப்பினும், ஆட்குறைப்பு தாமதமின்றி விரைவில் அமுல்படுத்தப்படும்.

தனியார்மயமாக்கலும் வணிகமயமாக்கலும் சர்வதேச நாணய நிதியத்தின் பரந்த சிக்கன திட்ட நிரலின் ஒரு பகுதியாகும். இதில் வரி மற்றும் கட்டண அதிகரிப்பு மற்றும் நலத்திட்டங்கள், பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்குமான நிதியை வெட்டிக் குறைப்பதும் அடங்கும். இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் சமூக நெருக்கடியை நிவர்த்தி செய்வதல்ல மாறாக வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும் பெருவணிக இலாபங்களை அதிகரிப்பதற்கும் அரச திறைசேரிக்கு வருவாயைப் பெறுவதே ஆகும்.

சகோதர சகோதரிகளே! இந்த தொழிற்சங்கங்களின் கீழ் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது ஒருபுறம் இருக்க, நமது தொழில்களையும் ஊதியங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்திற்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதை இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. எத்தகைய எதிர்ப்புகளும் அழுத்தங்களும் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றாது. தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்க மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட, சிதறிய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தொழிற்சங்க மையம், எந்தவொரு வேலைநிறுத்தத்தையும் ஒழுங்கமைப்பதையோ அல்லது அதில் சேருவதையோ எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன் அனைத்து தொழிலாளர்களும் தனது ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியும் தனது தொழிற்சங்கங்களை ஜனாதிபதி தேர்தலுக்கு தயார்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆதரவுக்கான அவர்களின் அழைப்பு ஒரு பெரிய பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சியைப் போலவே இந்த எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன. இந்த அரசியல் பொறியை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும். அரசாங்கம் அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை தோற்கடிப்பதற்கு, தொழிலாளர்கள் தங்கள் ஒன்றுபட்ட சுயாதீன பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

நாம், படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலும் முக்கியமுமான படிப்பினை என்னவெனில்: முதலாளித்துவ அமைப்பு மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களை நாம் நம்ப முடியாது. அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கின்றன. கடந்த காலத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இதுவே ஆகும்.

அதனால்தான் நாம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை டெலிகாம், இ.மி.ச. மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். தொழிற்சங்க அதிகாரவர்க்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

இத்தகைய குழுக்களின் மூலமே, அரசாங்கத்தின் கத்தி முனையில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களிலும் ஏனைய துறைகளிலும் உள்ள நமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து போராட்டங்களை ஒருங்கிணைக்க முடியும்.

நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

  • அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க அல்லது வணிகமயமாக்க வேண்டாம்! அவற்றை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்!
  • அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்!
  • வெட்டிச் சரிக்கப்பட்டுள்ள உண்மையான ஊதிய மதிப்பை ஈடுசெய்கின்ற, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கும் உடனடி ஊதிய உயர்வு, வேண்டும்!

இந்த பிரச்சாரத்தை நாங்கள் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஆரம்பித்துள்ளோம். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டானது துறைமுகம், பெருந்தோட்டம், சுகாதாரம், புகையிரதம், ஆசிரியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உள்ளடக்கியதாகும். தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு அனைத்து அரசியல் உதவிகளை வழங்கவும் கலந்துரையாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்துக்காகவும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். அதில், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உலகளாவிய கூட்டு நிறுவனங்களின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இன்றியமையாததாக இருக்கின்ற தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

டெலிகொம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.மி.ச. மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது பற்றி கலந்துரையாட நடவடிக்கை குழுக்களின் கூட்டு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 14 புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 02 ஜயசேகர முகாமைத்துவ நிலையத்தில் (JMC) நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading