இலங்கை தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயல்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஏப்ரல் 3 அன்று, இலங்கையில் உள்ள பல தொழிற்சங்கங்கள், தேசிய வளங்கள் பாதுகாப்பு இயக்கம் (NRPM) என்ற தேசியவாத பதாகையின் கீழ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொழும்பு ஹைட் பார்க்கில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. 'அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOEs) மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்வதை' எதிர்ப்பதற்காக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

மத்திய வங்கி ஊழியர் சங்கம் (CBEU), தபால் தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி (PTUJF), அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் (ATEU), இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலின் ஒரு பகுதியாக இருக்கும் அரசாங்கத்தின் 'மறுசீரமைப்பு திட்டத்திற்கு' அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலைமையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த மறுசீரமைப்பானது சில அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதையும் வணிகமயமாக்குவதையும் மற்றும் ஏனயவற்றை  இலாபமற்றவை என ஒதுக்கி இழுத்து மூடிவிடுவதையும் உள்ளடக்கியது ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியப்பட்ட நடவடிக்கையையும் முன்னெடுப்பதை அடிப்படையில் எதிர்க்கும் இந்த தொழிற்சங்கங்கள், சிதறிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, தனியார்மயமாக்கல் செயல்முறையை நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை பரப்பின. இந்த மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளை புறக்கணித்த அரசாங்கம், கடந்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் அதே நேரம், கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் கடந்த ஆண்டு இழுத்து மூடப்பட்டது.

பரந்த மறுசீரமைப்புத் திட்டங்களை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழிற்சங்கத் தலைவர்கள் இப்போது எதிர்க்கட்சிகளுடன் ஒரு பரந்த முன்னணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொழிலாளர்களை முதலாளித்துவக் கட்சிகளுக்கு அடிபணிய வைக்கும் அரசியல் பொறி என்று நாம் எச்சரிக்கிறோம். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளன. இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தைப் போன்று ஈவிரக்கமின்றி இந்த நடவடிக்கைகளை அமுல்படுத்தும்.

முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணிக்கான தொழிற்சங்கங்களின் அழைப்பை நிராகரிக்குமாறும், தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் போன்ற அடிப்படை சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்கவின் தாக்குதலை தோற்கடிக்க, தங்களது சுயாதீனமான தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டுமாறும் தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

ஐ.ம.ச., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னிணியில் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இருந்து பிரிந்த குழுவான சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் சிங்கள பேரினவாத ஐக்கிய குடியரசு முன்னணி (URF) அனைத்தும் கூட்டத்திற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் பங்குபற்றியிருந்தன.

ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி ஒரு பிரதிநிதியை அனுப்பவில்லை. ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை மின்சார ஊழியர் சங்கம் (ACEEU) இ.மி.ச. கட்டிடத்திற்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்ததுடன் ஹைட் பார்க் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

ஜே.வி.பி/தே.ம.ச. தனது தேர்தல் போட்டியாளரான ஐ.ம.ச.யின் வேட்பாளருடன் அதே மேடையில் தோன்றுவது பாதகமாக இருப்பதாகக் கருதியதாக தெரிகிறது. இன்னும் அடிப்படையில், அது அதிகாரத்திற்காக போட்டியிடும் நிலையில், ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அதன் அனைத்து தொழிற்சங்கப் போராட்டங்களையும் தடுத்து வைத்துள்ளது. இது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தில் இந்தச் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை நிரூபிப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

ஹைட் பார்க் கூட்டத்தில், மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க, அரச நிறுவனங்கள் 'பணத்தை கொள்ளையடிப்பதற்காக' விற்கப்படுகின்றன என்று வாய்க்கு வந்தபடி அறிவித்தார். இதைத் தவிர்க்க, 'அனைத்து எதிர்க்கட்சிகளும் அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும்' என்று அவர் அழைப்பு விடுத்தார்.

என்ன ஒரு மோசடி! 2022 ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கையைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி, பாரிய எழுச்சியைத் தூண்டிய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை வலியுறுத்திய தொழிற்சங்கத் தலைவர்களில் திஸாநாயக்கவும் ஒருவர் ஆவார்.

3 மே 2022 அன்று மோர்னிங் பத்திரிகையுடன் பேசிய அவர், 'இந்த வரவிருக்கும் நெருக்கடிக்கு எங்கள் எல்லைக்குள் எந்த தீர்வும் இல்லை' என்று கூறி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தார். அனைத்து வங்கிகளும் 'விளிம்பில் உள்ளன' என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார்.

தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார, 'இந்த தேசிய சொத்து விற்பனை தொடர்பாக நாட்டுக்கு கருத்து தெரிவிக்க அரசியல் கட்சி தலைவர்களை மேடைக்கு கொண்டு வர விரும்புவதாக' அறிவித்தார்.

தேசியவாத வெறியை வெளிப்படுத்திய பண்டார, 'வெளிநாட்டுப் படைகளே' அரச நிறுவனங்களை வாங்குவதற்கு 'இன்று வரிசையில் உள்ளன', 'இலங்கையர்கள் அல்ல' என்று புலம்பினார். இலங்கையில் உள்ளுர் முதலீட்டாளர்கள் சொத்துக்களை இழக்கின்றனர் என அவர் வருத்தம் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்ளூர் முதலீட்டாளர்கள் அவற்றை வாங்கினால், அரச நிறுவனங்களை 'மறுசீரமைப்தையும்' தொழிலாளர்கள் வேலை இழப்பதையும் அவர் ஆதரிக்கிறார்.

அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத் தலைவர் ஜகத் குருசிங்க, விக்கிரமசிங்க முழு நாட்டினதும் சொத்துக்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்: 'அவர் எந்த வேலையும் செய்யாமல் எல்லாவற்றையும் விற்று வரிகளை மட்டும் வசூலித்து அரியணையில் அமர விரும்புகிறார்,' என குருசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் கல்வியை சந்தை சக்திகளுக்கு உட்படுத்துவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சமாசத்தின் (FUTA) செயலாளர் அதுலசிறி சமரக்கோன் தெரிவித்தார். “1947க்குப் பிறகு கிடைத்த இலவசக் கல்வி முறையைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கையை அரசு கடைப்பிடிக்கின்றது” எனத் தெரிவித்த அவர், “கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களின் அடிப்படையிலான பிளவுகளை தூக்கி எறிந்துவிட்டு, இலவசக் கல்வியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் எவருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஐக்கியத்திற்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோள், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் கோபம் மற்றும் அமைதியின்மையை திசைதிருப்புவதையும் அடக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் மீது பெருவணிகத்தின் கோரிக்கைகளை திணிப்பதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவை ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் மேடையில் இருந்தார் ஆனால் அவர் பேசவில்லை. விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த அவரது கட்சி, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. முந்தைய இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் உடனான கலந்துரையாடல்களை விரைவில் தொடங்கவில்லை என்று அது விமர்சித்தது.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, தனது கட்சி 'அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதில்' சாதனை படைத்துள்ளதாக பெருமையாகக் கூறினார். கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாதவர்களை துரோகிகளாக கருத வேண்டும் என்று அவர் அறிவித்தார். உண்மையில், அவரது கட்சியின் உண்மையான சாதனை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சிகளுடன் இணைந்திருப்பதும் அவற்றின் சிக்கன திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நவகமுவ, தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அவர்களின் அவப்பேறு சாதனைகளை மூடிமறைக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் மேடையில் தோன்றி இருந்தார். வலதுசாரி தாய்நாட்டு மக்கள் கட்சியின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறி சிறிது நேரத்தில் மேடையில் இருந்து அவர் காணாமல் போனார். ஆயினும், ஏனைய முதலாளித்துவக் கட்சிகளான ஐ.ம.ச., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் சிங்களப் பேரினவாத ஐக்கிய குடியரசு முன்னணி உறுப்பினர்களுடன் கூட சேர்ந்து அமர்ந்திருப்பதையிட்டு அவரது அரசியல் மனசாட்சி கவலைப்படவில்லை.

2022 இல், முன்னிலை சோசலிசக் கட்சியானது முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. முன்வைத்த இடைக்கால நிர்வாகத்திற்கான அழைப்புகளை ஆதரித்தது. இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்த போதிலும், இந்த அரசியல் துரோகம், மதிப்பிழந்த பாராளுமன்றம் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்த வழிவகுத்தது.

இந்த முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க-கட்சி முகாமை நம்பியிருந்தால் தொழிலாள வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. தொழிலாளர்கள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கட்டியெழுப்ப வேண்டும்.

இது விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் அதன் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்திற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்தை தயாரிப்பது உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அடிப்படையாகும்.

தொழில்களை அழிக்கவும், ஊதியங்களை குறைக்கவும், வேலைச்சுமைகளை தீவிரப்படுத்தவும் மற்றும் பெருவணிகத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்குமான, முதலாளித்துவ மறுசீரமைப்புக்கு எதிராக, அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த போராட்டம் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான மற்றும் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு, இலாப முறையைத் தூக்கியெறிவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கும், ஒரு சில செல்வந்தர்களின் நலன்களுக்காக அன்றி மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் ஒரு அரசியல் போராட்டம் அவசியம் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

Loading