இலங்கை முதலாளித்துவ வேட்பாளர்கள் போலி வேலைத் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 40 வேட்பாளர்களில் 39 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஆகஸ்ட் 15 அன்று அறிவித்தது.

அன்றைய தினம், வேட்பாளர்களின் 'பாதுகாப்புக்காக” என்ற பெயரில், தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களில், ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் உட்பட, தேர்தல் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வீதிகளில் ஆயிரக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இது அரசாங்கத்தின் அடக்குமுறை ஆயுதத்தை காட்சிப்படுத்துவதற்கே ஆகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), தேசிய மக்கள் சக்தி / மக்கள் விடுதலை முன்னணி (தே.ம.ச./ஜே.வி.பி.) உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும், 'சுயேச்சையாக' இருப்பதாகக் கூறிக் கொண்டவர்களும், ஒருவருக்கொருவர் கைகொடுத்து, கட்டியணைத்து, முதுகில் தட்டி மகிழ்ந்து, தாங்கள் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டினார்கள்.

தே.ம.ச./ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளர் நாமல் இராஜபக்ஷவுடன் கைகுலுக்கிக்கொண்டதை, அவரது அமைப்பின் தார்மீகத் தன்மையைக் காட்டுவதாக நியாயப்படுத்தினார்.

ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய

ஐக்கிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமசிங்கவுடன் கைகுலுக்கி நீண்ட நேரம் உரையாடினார், இருவருக்கும் இடையிலான கடந்த கால நெருங்கிய அரசியல் உறவுகளை நினைவு கூர்ந்தார். வேட்புமனு தாக்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு பேரணிகள் நடத்தக்கூடாது, அரசாங்க சொத்துக்களை ஆளும் கட்சி 'துஷ்பிரயோகம்' செய்யக் கூடாது உட்பட தேர்தல் சட்டங்களை பாதுகாக்குமாறு வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தேர்தல் ஆணையாளர், ஊடகங்களில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார். அவரது உரையின் சூடு குறைவதற்கு முன்பே, 'பிரதான' வேட்பாளர்கள் எனப்படுவோர் அறிவுறுத்தல்களை மீறி, அவர்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்டினர்.

முதலாளித்துவக் கட்சிகளின் ஊதுகுழல் ஊடகங்கள், அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூறும் அனைத்தையும் செய்தியாக்க உறுதிபூண்டிருந்ததுடன், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் உட்பட பல வேட்பாளர்கள் சொல்ல முனைந்த விடயங்களைப் பற்றி தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படையாகக் கூற அந்த ஊடகங்கள் வெட்கப்படவில்லை.

பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வீதியின் இருபுறங்களிலும் அணிதிரட்டப்பட்டிருந்தனர். வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகு, சில ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர்கள், பேன்ட் வாத்தியங்கள் இசைத்து, கோஷங்களை எழுப்பி, வேட்பாளரைச் சூழ நடத்திய ஆரவாரங்கள், வறுமை உட்பட மக்களின் மிக அவசரமான அவசியங்களில் இருந்து அவர்கள் எந்தளவு தொலைவில் இருக்கின்றார்கள் என்பதை காட்டியது.

பல தசாப்தங்களாக முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரியக் கட்சியாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சி, மதிப்பிழந்து, பொது மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சுயாதீன வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி., போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும், 2022 வெகுஜனப் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளின் விளைவாகவே, விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார்.

மில்லியன் கணக்கான மக்கள் வீதியில் இறங்கி நடத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு ஓடி இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் எஞ்சிய இரண்டு ஆண்டு பதவிக் காலத்துக்கு, பாராளுமன்றத்தால் ஜனநாயகமற்ற முறையில் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட விக்கிரமசிங்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகர் ஆவார்.

அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மீது வழக்குத் தொடுத்து, நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்வதன் மூலம் வேலையை ஆரம்பித்த விக்கிரமசிங்க, அதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன வெட்டுக்களை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தினார். இதன் விளைவாக கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், வறுமை மற்றும் வேலையின்மை அதிகரிப்பு உட்பட சொல்லொனாத் துன்பத்தில் தள்ளப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்க

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விக்ரமசிங்க, 'இலங்கை மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க மக்கள் ஆணையை எதிர்பார்க்கிறேன்' என்றார். “நாங்கள் நாட்டைக் கைப்பற்றி ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளோம். எங்களிடம் இப்போது உணவு, எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. இது ஆரம்பம்தான்” என்று கூறி, விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் தனது நிர்வாகம் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தியதை நியாயப்படுத்தினார்.

விக்கிரமசிங்க குறிப்பிடும் இந்த 'ஸ்திரத்தன்மை' என்பது, முதலாளித்துவ ஆட்சியை வெகுஜன எதிர்ப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றுவதாகும். 'இலங்கையை ஒரு நிலையான தேசமாக மாற்றுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது' என்று கூறிய அவர், அதற்காக தன்னை ஜனாதிபதியாக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். 'அதிகமாக' என்று விக்கிரமசிங்க கூறுவதன் அர்த்தம், நிச்சயமாக, இன்னும் கொடூரமான சர்வதேச நாணய நிதிய வெட்டுக்களையும் அடக்குமுறைச் சட்டங்களையும் அமுல்படுத்துவதோடு அவற்றுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களை அடக்குவதற்கு பொலிஸ்-இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதுமாகும்.

பல தசாப்த காலங்களாக முன்னெடுத்த ஜனநாயக விரோத, முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தின் காரணமாக, அதன் முழு பொதுஜன ஆதரவுத் தளத்தையும் இழந்த விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து, தந்திரோபாய ரீதியாக பிளவடைந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, அதன் தாய் கட்சியில் இருந்து வேறுபட்ட வேலைத்திட்டம் கிடையாது. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, 'பொது மக்களின் சகாப்தத்தை உருவாக்குவதாக உறுதியளிக்கிறேன்' என்றார். நாட்டில் உள்ள அனைவரும் அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கும் சூழலை உருவாக்குவேன், என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, அதன் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என்று பெரு வணிகர்களுக்கு உறுதியளித்துள்ளனர். 2022 ஏப்ரலில், ப்ளூம்பெர்க் டிவிக்கு பிரேமதாசா கூறியதாவது: “நாம் அனைவரும் இந்த கசப்பான மாத்திரையை அல்லது பல மாத்திரைகளை கூட விழுங்க வேண்டும்... இது மிகவும் கடினமான நேரமாக இருக்கும். இந்த யதார்த்தத்தை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

இந்நாட்டில் முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரியக் கட்சி என்ற வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சாதனைகளானவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து செயற்படுதல், முடிவில்லாத சிக்கன வெட்டுக்கள், சர்வாதிகாரம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் போரை உத்தியோகபூர்வமாக துவக்கி வைத்தமை உட்பட பிற்போக்கானவை ஆகும். அந்த இழிவான வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பங்கு இருக்கின்றது.. 2022 வெகுஜனப் போராட்டங்களுக்கு மத்தியில், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் அதிகாரத்தை தங்கள் கைக்கு மாற்றிக்கொள்வதன் பேரில், பொதுமக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக கலந்துரையாடியமை, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் அம்பலத்துக்கு வந்தது.

தே.ம.ச/ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க

தே.ம.ச/ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஊழலை ஒழிப்பதற்காக அவர் குரல் கொடுப்பதால் மட்டுமே ஏனைய முதலாளித்துவ வேட்பாளர்களிடமிருந்து வேறுபட்டவராக காட்டிக்கொள்கிறார். உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாக இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியில் இருப்பதை மூடிமறைப்பதன் ஒரு அங்கமாகவே திசாநாயக்க உட்பட தே.ம.ச. இந்த மோசடி, ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

இப்போது, ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவக் கட்சியாக முற்றிலுமாக மாற்றமடைந்துள்ள ஜே.வி.பி., 1970களில் இருந்து ஒரு குட்டி முதலாளித்துவ மாவோயிஸ்ட்-காஸ்ட்ரோயிசக் கட்சியாக உருவாகி, பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து, இனவாதப் போரின் ஊதுகுழலாக செயற்பட்டு அபகீர்த்திக்கு உள்ளானதால், கலைந்து போன வெகுஜன ஆதரவுத் தளத்தை மீண்டும் தக்க வைக்கும் நம்பிக்கையுடனேயே தே.ம.ச.யை உருவாக்கியுள்ளது.

பெரும் வர்த்தகர்களின் நம்பிக்கைய வெல்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உடன்பாட்டை திசாநாயக்க வெளிப்படுத்துகிறார். ஆகஸ்ட் 8 அன்று டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்... சர்வதேச நாணய நிதியத்தின் அணுகுமுறை, நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு உதவுவதாகும்,' என திசாநாயக்க கூறினார்.

2022 வெகுஜனப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமைக்கு அடிப்படையில் பொறுப்பு கூறவேண்டிய, முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடது கட்சிகள் மற்றும் குழுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையும் அணிதிரட்டிக்கொண்ட, 'மக்கள் போராட்ட இயக்கம்' எனப்படுவதனால் களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளரான நுவன் போபகே, இந்த ஜனாதிபதி தேர்தலில். மிகவும் நயவஞ்சகமான பாத்திரத்தை வகிக்கின்றார்.

அந்தக் குழுக்களையும் சேர்த்துக்கொண்டு நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய போபகே, 'முழு அரசு கட்டமைப்பின் மாற்றத்தையும்' 'சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு அமைப்பை நோக்கி நகரும் திட்டத்தையும்' தாம் முன்மொழிவதாக கூறினார். இது ஒரு மோசடி ஆகும். முன்னிலை சோசலிசக் கட்சியால் முன்மொழியப்பட்ட 'மக்கள் சபைகளின்' நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஓரங்கட்டிவிட்டு, முதலாளித்துவ அமைப்பின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மோசடி வலைக்குள் அவர்களை சிக்க வைப்பதே ஆகும். முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்கள், சோசலிசத்திற்கான போராட்டமானது ஒரு தொலைதூர எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணி என மீண்டும் மீண்டும் அறிவிக்கின்றனர்.

தேர்தலில், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களை சுயாதீனமாக ஆயுதபாணியாக்கும் நோக்கில் போட்டியிடுபவர், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தன மட்டுமே

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன

வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியின் ஊடகமான உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய, சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர், ஏனைய அனைத்து முதலாளித்துவ வேட்பாளர்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை எதிர்த்து, வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை நிராகரிக்க கோரியும், பெரிய வங்கிகள் உட்பட பெரும் நிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கி, அதன் அடிப்படையில் ஒரு சோசலிச உற்பத்தி பொருளாதார அமைப்பின் கீழ் பொருளாதார முறைமையை மறுசீரமைக்கும் கோரிக்கையை முன்வைத்தும் இந்த தேர்தலில் போட்டியிடும் என்று குறிப்பிட்டார்.

அதே போல், ஏகாதிபத்திய போருக்கு எதிராக உலக சோசலிச போர் எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பாகமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி பயன்படுத்தும் என்று விஜேசிறிவர்தன குறிப்பிட்டார். உலகப் போர் ஆபத்தைப் பற்றி வேறு எந்த வேட்பாளரும் பேசுவதில்லை. மேலும், பதவிக்கு வரும் எந்த ஆட்சியாளரும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு, கொடூரமான சர்வாதிகார வழிமுறைக்கு மாறுவார் என்று தொழிலாள வர்க்கத்தை எச்சரித்த விஜேசிறிவர்தன, முதலாளித்துவத்திற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை வலியுறுத்தினார்.

1968ல், ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பு.க.க. /சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் இந்தக் கொள்கைகளுக்காக பிடிப்புடன் போராடியது. சோசலிச சமத்துவக் கட்சியைத் தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் இத்தகைய சரியான சாதனையை கொண்டிருக்கவில்லை. அதனால்தான் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஏனைய மக்களும், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராட, இந்த தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவை ஆதரிக்க வேண்டும்.

Loading