இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஆகஸ்ட் 8 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை கொழும்பில் உள்ள தேசிய நூலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திபப்பை நடத்தியதன் மூலம் ஆரம்பித்து வைத்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன உரையாற்றிய இந்த நிகழ்விற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர தலைமை தாங்கினார். எதிர்வரும் செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் சிரச, அரசுக்கு சொந்தமான ஐரிஎன், ககன மற்றும் தமிழ் மொழி அலைவரிசைகளான ஐபிசி மற்றும் லங்காஸ்ரீ உட்பட பல தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிருபர்கள் மற்றும் இரண்டு முன்னணி தமிழ் செய்தித்தாள்களான வீரகேசரி மற்றும் தமிழன் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். பங்குபற்றிய பெரும்பாலான ஊடகங்கள் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் பங்குபற்றுகின்றமை பற்றி, அன்றைய தினம் பிரதான செய்திகளில் வெளியிட்டன.
விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு நீண்டகால அரசியல் குழு உறுப்பினர் என ஜயசேகர அறிமுகப்படுத்தினார். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திலும் முன்னணி உறுப்பினராக இருந்த அவர், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக, ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் போராடிய அவரது சாதனையைப் பற்றியும் ஜயசேகர குறிப்பிட்டார். விஜேசிறிவர்தன ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். அவர் அவர்களின், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக கொள்கை ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டதனால், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) போன்ற, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராகவும், பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிராகவும், சோசலிச சமத்துவக் கட்சியானது, கிராமப்புற ஏழைகளை தன் பின்னால் ஒன்றுசேர்த்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வுக்காக போராடுகிறது. இந்த அணிதிரட்டலில் எங்களது நோக்கமானது போர், சிக்கன வெட்டுக்கள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகும்' என்று ஜயசேகர கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சியானது, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் அவர்களது தொழிற்சங்க கூட்டுக்கள் போன்ற, ஆளும் வர்க்கத்தின் கொழுவிகளாக செயற்படும் போலி-இடதுகளுக்கு எதிரான அதன் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அதேவேளை, அவர்களின் முதலாளித்துவ சார்பு, தொழிலாள வர்க்க விரோத அரசியலையும் அம்பலப்படுத்தும், என ஜயசேகர விளக்கினார்.
சோசலிச சமத்துவக் கட்சியானது ஏனைய கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து, எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இந்த மாநாட்டில் உரையாற்றிய விஜேசிறிவர்தன விளக்கினார்.
'பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும், அதாவது, 'சுயேச்சை' வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தே.ம.ச./ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க வரை, பெருவணிகத்தின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
'அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்வதும், அதற்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை மிகக் கொடூரமான முறையில் நசுக்குவதுமே அவர்களின் நோக்கமாகும்' என்று விஜேசிறிவர்தன கூறினார்.
முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது கட்சிகள், தற்போதிருக்கும் பாராளுமன்ற கட்டமைப்புக்குள்ளும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தொழிலாளர்களை அடக்கி வைக்க வைக்க எவ்வாறு முயல்கின்றன, என்பதை அவர் விளக்கினார்.
'முன்னிலை சோசலிசக் கட்சி, தேர்தலுக்காக, “மக்கள் போராட்ட முன்னணி” என்ற ஒன்றை தொடங்கியுள்ளது. இதில் சோசலிச மக்கள் மன்றம் எனப்படும் புதிய பப்லோவாதக் குழு மற்றும் மாவோவாத புதிய ஜனநாயக மார்க்சிஸ-லெனினிஸ கட்சி போன்ற ஏனைய போலி-இடது அமைப்புகளும் உள்ளடங்கும். 'மக்கள் சபைகளை’ உருவாக்கி, 'பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம்' தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டுக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று அது கூறுகிறது,'' என்று பாணி விளக்கினார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் மற்றும் போலி-இடது அமைப்புகளும் முதலாளித்துவ அமைப்பை நேரடியாகப் பாதுகாக்கின்றன, எனக் கூறிய விஜேசிறிவர்தன, முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தையும், அதன் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே என்பதை சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வீழ்த்திய 2022 மக்கள் எழுச்சியைப் பற்றி சுட்டிக்காட்டிய விஜேசிறிவர்தன, முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிற்சங்கத் தலைமைகளும் எவ்வாறு வெகுஜன இயக்கத்தை தடம்புரளச் செய்தன என்பதையும், அவை எவ்வாறு ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான கோரிக்கைகளுக்குப் பின்னால் வெகுஜன இயக்கத்தை திசைதிருப்பிவிட்டன என்பதையும் விளக்கினார். 'இதனாலேயே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கைக்கூலியும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை செயல்படுத்துபவருமான விக்கிரமசிங்கவால், ஜனாதிபதி பதவிக்கு ஏற முடிந்தது' என்று அவர் கூறினார்.
வெகுஜன எழுச்சியின் தோல்வியானது, ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று விஜேசிறிவர்தன கூறினார். ஆளும் வர்க்கத்தின் சமூகத் தாக்குதலுக்கு எதிராக எதிர்த் தாக்குதலைத் தயாரிப்பதற்காக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் கிராமப்புற மக்கள் மத்தியிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கிறது.
'இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இதுவே. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும், சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின்” ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும், என்று விஜேசிறிவர்தன கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், இப்போது முழு மத்திய கிழக்கையும் போரில் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலை பற்றி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தேர்தல் பிரச்சாரத்தை கட்சி பயன்படுத்திக்கொள்ளும் என்று கூறினார்,. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போரும், தெற்காசியாவில் அதன் பிரதான இராணுவப் பங்காளியான புது டெல்லியுடன் சேர்ந்து, சீனாவிற்கு எதிராக தீவிரப்படுத்தி வரும் போர் தயாரிப்புகளும், மனிதகுலத்தை ஒரு பூகோள அணு ஆயுதப் போரை நோக்கி இழுத்துச் செல்கின்றன என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது.
“சோசலிச சமத்துவக் கட்சி சோசலிசப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாகும். எங்கள் இயக்கம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தையும் போருக்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்தையும் கட்டியெழுப்ப போராடுகிறது' என்று விஜேசிறிவர்தன கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 'ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு' என்ற அழைப்பில் 'ஈழம்' என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ஒரு ஐடிஎன் செய்தியாளர் கேட்டார். [ஈழம் என்பது இலங்கைக்கான தமிழ் சொல்.]
விஜேசிறிவர்தன விளக்கியதாவது: “ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான எங்கள் அழைப்பு, மார்க்சிச இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. 1948ல் சுதந்திரம் என்று அழைக்கப்பட்டதன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அனைத்து அரசியல் வேலைத்திட்டங்களையும் அமைப்புகளையும் சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலும் எதிர்க்கிறது.
'1917 இல் லெனினுடன் ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி உருவாக்கிய நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள், அடிப்படை ஜனநாயக பிரச்சினைகளை அணுகவோ அல்லது தீர்க்கவோ இலாயக்கற்றவை என்று நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம்..
'இலங்கை ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு, தமிழர் விரோதப் பாகுபாட்டைப் பயன்படுத்தியது. இது 26 ஆண்டுகால இரத்தக் களரி யுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியா முழுவதிலும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் அம்பலமான விடயமாகும். ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியபடி, இந்த நாடுகளில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரே வர்க்கம் தொழிலாள வர்க்கம் மட்டுமே,” என்றார்.
“தமிழ் மேல்தட்டு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பரிந்துரைக்கப்படும் தமிழ் தேசியம் மற்றும் பிரிவினைவாதத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ்க் கட்சிகள் தமது உயரடுக்கினருக்கான சலுகைகளையும் தமது நலன்களை முன்னெடுப்பதற்காகவும் முயற்சிக்கின்றன. ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே வழி சோசலிசத்திற்காகப் போராடுவதற்கு இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைப்பதே ஆகும். இதுவே எங்கள் வேலைத்திட்டமாகும். அதனால்தான் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை கட்டியெழுப்ப நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று விஜேசிறிவர்தன கூறினார்.
அதே செய்தியாளர், பல வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு வாக்குச்சீட்டு நீண்டதாக இருப்பதோடு சில வேட்பாளர்கள் ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெறுவார்களா அல்லது பிரதான கட்சிகளின் துணையாக செயல்படுவார்களா என்று விஜேசிறிவர்தனவிடம் கேட்டார்.
'வாக்குச்சீட்டின் நீளம் குறித்து நீங்கள் கூறும் கருத்து, அரசாங்கம் மற்றும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் கருத்து ஆகும்' என்று விஜேசிறிவர்தன கூறினார். “ஜனாதிபதி தேர்தலிலும் ஏனைய தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத் தொகையில் அபரிமிதமான அதிகரிப்புகளை விதிக்கும் முன்மொழிவை அமைச்சரவை சமீபத்தில் நிறைவேற்றியது.
'இந்த ஜனநாயக விரோதப் பிரேரணையானது, தொழிலாள வர்க்கக் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சி போன்ற சிறு கட்சிகளின் உரிமைகளை, குறிப்பாக, தேர்தல்களில் தங்கள் கொள்கைகளை முன்வைப்பதற்கான உரிமைகளையும், அவற்றைப் பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் உரிமையையும் நசுக்குகின்ற நீண்டகால நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது.
“வாக்குச் சீட்டின் அளவும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் வாக்காளரை குழப்புவதோடு தேர்தலை நடத்துவதற்கான செலவை அதிகரிக்கச் செய்யும் என்று கூறும் பிற்போக்கு வாதங்கள் இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயல்களை மூடி மறைப்பவையாகும். செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல்களை மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்” என விஜேசிறிவர்தன கூறினார்.
“வாக்குச் சீட்டின் அளவும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் வாக்காளரை தொந்தரவு செய்து தேர்தலை நடத்துவதற்கான செலவை அதிகரிக்கும் என்று கூறும் பிற்போக்குத்தனமான வாதங்கள் இந்த அரசாங்கத்தின் ஜனாநாயக விரோதச் செயல்களுக்கு மறைப்பதாகும். செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு தேர்தல்களை மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்” என விஜேசிறிவர்தன கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சி தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தல் கூட்டத்தை கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 16 அன்று நடத்தியது. இரண்டாவது கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் 20ம் திகதி நடத்தியது. அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 25 ஹட்டன் நகரசபை மண்டபத்தில் பி.ப. 2 மணிக்கு நடக்கவுள்ளது. விஜேசிறிவர்தனவும் கட்சியின் ஏனைய பேச்சாளர்களும் இந்த கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை முழுமையாக விவரிப்பதோடு கட்சியின் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.
மேலும் படிக்க
- சோ.ச.க. (இலங்கை) ஜனாதிபதி தேர்தல் கூட்டம்: போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவோம்!
- டெலிகொம், காப்புறுதி மற்றும் மின்சார நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை அமைத்திடுங்கள்!
- இலங்கை தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயல்கின்றன
- சம்பள உயர்வுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!