மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இன்றுவரை, ரஷ்யாவுக்கு எதிரான போரின் மிகப்பெரிய விரிவாக்கத்தில், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும், நேட்டோ ஆயுதங்களை உக்ரேன் பாவித்து, ரஷ்ய பிராந்தியத்திற்குள் ஆழமாக ஏவுவதற்கு உதவி செய்வதை அறிவிக்கத் தயாராகி வருகின்றன.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில நாட்களுக்குள், நேட்டோ சக்திகளால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகள், நேட்டோ நாடுகளின் இலக்கு தரவுகளுடன், ரஷ்ய நகரங்கள் மீது மழையாக பெய்யக்கூடும். இது, அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்பதற்காக ரஷ்ய இராணுவக் கோட்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தெளிவாகக் கடந்து வருவதை காட்டுகிறது.
இந்த வார தொடக்கத்தில், ரஷ்ய நிலப்பகுதிக்குள் உக்ரேன் அதன் மிகப்பெரியளவிலான வெடி குண்டுகள் நிரப்பிய டிரோன்களை சரமாரியாக ஏவியது. இதன் விளைவாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது மற்றும் டசின் கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன.
நேட்டோ அதிகாரிகளின் எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்புகள் குறித்து கருத்துரைக்கையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், “இந்த முடிவு எடுக்கப்பட்டால், உக்ரேனில் நடக்கும் மோதலில் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர வேறெதையும் அர்த்தப்படுத்தாது,” என்று தெரிவித்தார்.
மேலும், “அவர்களின் நேரடி பங்கேற்பு, நிச்சயமாக, மோதலின் சாராம்சத்தை, இயல்பையே கணிசமாக மாற்றுகிறது,” என்பதையும் புட்டின் சேர்த்துக் கொண்டார்.
ரஷ்ய அரசியல் ஸ்தாபகத்திற்குள், அணு ஆயுதங்கள் உட்பட, நேட்டோ சக்திகளுக்கு எதிராக ரஷ்யா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
புதனன்று முன்னாள் கிரெம்ளின் ஆலோசகர் செர்ஜி கரகனோவ் (Sergey Karaganov) Kommersant நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் நேட்டோ தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் அணுவாயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “எங்கள் பிராந்தியத்திற்கு எதிரான எந்தவொரு பாரிய தாக்குதலும், அணு ஆயுத தாக்குதலின் மூலம் பதிலடி கொடுக்கும் உரிமையை எங்களுக்கு அளிக்கிறது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் திகைப்பூட்டும் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்படுகின்றன. நேட்டோ சக்திகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு புட்டின் பதிலடி கொடுக்க மாட்டார் என்று மொட்டையாக வலியுறுத்தி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றன.
திங்களன்று, பிரதிநிதிகள் சபையின் முன்னணி குடியரசுக் கட்சியினரின் ஒரு குழு, நேட்டோவால் வழங்கப்பட்ட ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்துவதற்கு மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க அழைப்பு விடுத்து ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியது. அக்கடிதம், “போரின் முதல் நாளிலிருந்து தீவிரம் பற்றிய கவலைகள் தொடர்ச்சியாக செல்லுபடியற்றதாக” இருந்து வந்துள்ளன என்று அறிவித்தது. “ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்துவது அல்லது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதன் இராணுவ ஊடுருவல் (இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்ய நிலப்பகுதியில் முதல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆகும்) ஆகிய இரண்டும் ரஷ்யாவின் தீவிரமான பதிலடியைத் தூண்டவில்லை” என்று அது வலியுறுத்தியது.
இந்த வாதங்கள் மிக அடிப்படையான ஆய்வுக்கு நிற்கவில்லை. ரஷ்யா கடந்த காலத்தில் சிறிய ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கவில்லை என்ற உண்மை, எதிர்காலத்தில் பெரிய ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளிக்காது என்று அர்த்தமாகுமா? உண்மையில், கடந்த காலத்தில் பதிலடி கொடுக்கத் தவறியதால், புட்டின் மீது பதிலடி கொடுப்பதற்கான அழுத்தம் அதிகரிக்கலாம்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு “கொலைகார பைத்தியம்” என்று பைடென் அழைத்தார். ஆனால், ஒரு “பைத்தியம் பிடித்த” ஜனாதிபதி தனது நகரங்கள் மீதான தாக்குதல்களுக்கு கட்டுப்பாடு மற்றும் நிதானத்துடன் பதிலடி கொடுப்பார் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
1962 அக்டோபரில் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது சோவியத் ஒன்றியம் கியூபா தீவில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி, “மேற்கு அரைக்கோளத்தில் உள்ள எந்தவொரு நாட்டிற்கும் எதிராக கியூபாவிலிருந்து ஏவப்படும் எந்தவொரு அணு ஆயுத ஏவுகணையும் அமெரிக்கா மீதான சோவியத் யூனியனின் தாக்குதலாக கருதி, சோவியத் யூனியனுக்கு முழு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்த நாட்டின் கொள்கையாக இருக்கும்” என்று அறிவித்தார்.
கென்னடியின் வார்த்தைகளை பைடெனுக்கு மீண்டும் சொல்வதிலிருந்து புட்டினை தடுப்பது எது? “கிழக்கு அரைக்கோளத்தில் உள்ள எந்தவொரு நாட்டிற்கும் எதிராக உக்ரேனில் இருந்து ஏவப்படும் எந்தவொரு ஏவுகணையையும் அமெரிக்காவின் தாக்குதலாகக் கருதுவதும், நேட்டோ கூட்டணிக்கு முழு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் இந்த நாட்டின் கொள்கையாக இருக்கும்”.
உண்மையில், நேட்டோ சக்திகளின் நடவடிக்கைகளில் நனவுபூர்வமான, திட்டமிட்ட ஆத்திரமூட்டலின் கூறுபாடு உள்ளது.
ரஷ்யா டொன்பாஸ் பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ முன்னேற்றத்தின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுகிறது மற்றும் கார்கிவில் உள்ள உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளது. உக்ரேனில் போருக்கு உள்நாட்டு எதிர்ப்பு அதிகரித்து வருவதால், நேட்டோவின் கணிசமான தலையீடு இல்லாமல் கிழக்குப் போர்முனை முழுவதும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளது.
ஒரு முக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும், தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும் போரை விரிவாக்க நிர்பந்திக்கக் கூடிய “கள உண்மைகளை” உருவாக்க முனைந்து வருகின்றன.
அமெரிக்க இராணுவவாதத்தின் தீவிரமான வெடிப்பு அமெரிக்க உலகப் பொருளாதார மேலாதிக்கத்தின் ஆழ்ந்த மற்றும் நீடித்த நெருக்கடியால் கட்டாயப்படுத்தப்படுகிறது. டாலரின் எதிர்காலம் குறித்த கவலைகளின் பிரதிபலனாக, அமெரிக்க டாலருக்கு நிகரான தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் 3 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் 15 சதவீதமும், கடந்த ஆண்டில் 30 சதவீதமும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் மத்தியிலுள்ள கூட்டாட்சியின் கடன் தொடர்ந்து பெருகி, 35.3 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அமெரிக்கா, இப்போது கூட்டாட்சிக் கடனுக்கு ஒரு நாளைக்கு 3 பில்லியன் டாலர் வட்டியாக மட்டுமே செலுத்துகிறது.
டாலரின் கணிசமான மதிப்பிழப்பு இந்த பாரிய கடனையும், முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து திருப்பிச் செலுத்த முடியாததாகிவிடும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவசியமான அனைத்து வழிகளிலும் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவநம்பிக்கையான மற்றும் உயிர்வாழ்வதற்கான கேள்வியாகும். மேலும், வாஷிங்டன் அதைப் பாதுகாக்க எந்த வழிமுறையிலும் செல்லும்.
இந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி விவாதத்தின் போது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கூறியது போல், “உலகில் அமெரிக்காவின் நிலையை தக்கவைப்பது” என்பது, “உலகிலேயே மிகவும் கொடிய போர்ப் படையை நாம் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்”.
ரஷ்யாவுக்கு எதிரான போர் உலகை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மறுஒழுங்கு செய்வதற்கான உலகளாவிய உந்துதலின் ஒரு பாகமாகும். இதில், காஸா இனப்படுகொலை, மத்திய கிழக்கில் ஈரானுடனான போர், சீனாவுக்கு எதிரான போர்த் தயாரிப்புகள் ஆகியவை அடங்கும். உலக மேலாதிக்கத்திற்கான இந்த ஏகபோக உந்துதலைப் பின்தொடர்வதில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை தியாகம் செய்ய தயாராக உள்ளது.
தீவிரமடைந்து வரும் இந்த உலகளாவிய போர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட 20 ஆம் நூற்றாண்டின் கொடூரங்கள் மீண்டும் நிகழக்கூடாது!
இந்தப் போரானது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான உக்கிரமான தாக்குதலுடன் கைகோர்த்து வருகின்றது. தொழிலாளர்கள் போர் உந்துதலுக்கு விலை கொடுக்க வைப்பதற்கான உந்துதலை எதிர்க்க வேண்டும் என்பதோடு, வேலைகள் மற்றும் ஊதியங்களுக்கான போராட்டத்தை உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்த போராட வேண்டும்.