மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நேட்டோவின் ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவை தாக்குவதற்கு உக்ரேன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவரும் ஊடகங்கள் மற்றும் அரசியல் பிரச்சாரம் அதிகரித்து வரும் பின்னணியில், புதன்கிழமை இரவு, மாஸ்கோவிற்கு வடக்கே அமைந்துள்ள ஒரு பரந்து விரிந்த, மிகவும் வலுவூட்டப்பட்ட ரஷ்ய ஆயுதக் களஞ்சியம் மாபெரும் தீப்பிளம்புடன் வெடித்து சிதறியது.
இந்தக் குண்டு வெடிப்பு, போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்ய ஆயுதக் களஞ்சியத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு தாக்குல்களில் ஒன்றாகும். உக்ரேனுக்கு வடக்கே 480 கிலோமீட்டர் தொலைவிலும், மாஸ்கோவிற்கு மேற்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள டொரோபெட்ஸ் ஆயுதக் களஞ்சியத்தில் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் சறுக்கு குண்டுகள் (glide bombs) இருந்ததாக நம்பப்படுகிறது.
நில அதிர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் நாசாவின் வள மேலாண்மை அமைப்புக்கான தீ தகவல் மையம் ஆகியவற்றால் பதிவு செய்யப்பட்ட இந்த பாரிய குண்டு வெடிப்பு, ஆயுதக் களஞ்சியம் முழுவதும் தீப்பற்றி எரிவதைக் காட்டியுள்ளது.
உக்ரேனிய பாதுகாப்பு சேவையான SBU இன் அதிகாரி ஒருவர், இந்த ஆயுதக் களஞ்சியம் 'உண்மையில் பூமியின் முகத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டதாகவும்' மேலும், இந்த நடவடிக்கையில் '100 க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள்' சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அறிவித்து, அத்தாக்குதலுக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.
இதற்கிடையில், 'வான் பாதுகாப்புப் படைகள் தாக்குதலை முறியடித்ததால் ட்ரோன் சிதறல்கள் விழுந்ததைத் தொடர்ந்து தீ ஏற்பட்டதாக' ட்வெர் பிராந்திய அரசாங்கம் டெலிகிராம் செய்தியில் தெரிவித்துள்ளது.
ஒரு பிரதான ஒருங்கிணைந்த டிரோன் தாக்குதல் குறித்த உக்ரேனிய விளக்கமோ அல்லது டிரோன் சிதறல்கள் நெருப்பைப் பற்ற வைத்தது குறித்த ரஷ்யாவின் விளக்கமோ ஆயுதக் களஞ்சியத்தின் தற்காப்பு திறன்கள் குறித்த முந்தைய ரஷ்ய அறிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை.
2018 ஆம் ஆண்டில் தளம் புதுப்பிக்கப்பட்டபோது, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தளம் 'மிக உயர்ந்த சர்வதேச தரங்களை' கொண்டிருப்பதாகவும், ஏவுகணைகளிலிருந்து வரும் ஆயுதங்கள் மற்றும் 'ஒரு சிறிய அணுவாயுத தாக்குதலுக்கு எதிராக' கூட பாதுகாக்க முடியும் என்றும் அறிவித்தது.
ஒரு அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்து நிற்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கடினப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டிருந்த இந்த களஞ்சியம், அதிகபட்சம் ஒரு சில டசின் கிலோகிராம் வெடிமருந்துகளை சுமந்து வந்த டிரோன்களால் எப்படி முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்க முடியும் என்பது விளக்கப்படவில்லை.
அனைத்திற்கும் மேலாக, அந்நகரம் உக்ரேனைக் காட்டிலும் நேட்டோ அங்கத்துவ நாடான லாட்வியாவுக்கு கணிசமாக நெருக்கமாக உள்ளது. இது லாட்வியாவிலிருந்து தாக்குதல் தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு —இதுவரை எந்த ஆதாரமும் இல்லாமல்— இட்டுச் செல்கிறது.
நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு எதிராக நீண்டதூர தாக்குதல்களை நடத்த உக்ரேனை அனுமதிக்க அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் தீவிரப்படுத்தப்பட்டு வரும் பிரச்சாரத்தின் பின்புலத்தில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது.
உக்ரேனின் தற்கொலை ட்ரோன்களைப் போலல்லாமல், இங்கிலாந்தின் Storm Shadow ஏவுகணையானது, கிட்டத்தட்ட 1,000 பவுண்டுகள் சுமையைக் கொண்டுள்ளதோடு, கடினமான இலக்குகளை ஊடுருவும் திறனையும் கொண்டுள்ளது.
கார்டியன் பத்திரிகையானது, 'ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீது Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்க ஏற்கனவே ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசாங்க ஆதாரங்கள் சுட்டிக்காட்டியதாக' கடந்த வாரம் தெரிவித்தது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நேரத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மாறாக, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து செய்தி ஊடகப் பிரிவுகள் அமெரிக்கா அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாமல், இரகசியமாக தாக்குதல்களுக்கு இசைவு கொடுக்கலாம் என்ற கருத்தை எழுப்பத் தொடங்கின. அந்த நேரத்தில் எகனாமிஸ்ட் பத்திரிகையானது, 'ஒரு பொது அறிவிப்பு இருக்க வாய்ப்பில்லை, மேலும், ஒரு முடிவை அமைதியாக கியேவுக்குத் தெரிவிக்கலாம், அதன் முக்கியத்துவத்தை குறைத்து அதை இரகசியமாக வைத்திருக்கலாம். ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மேற்கத்திய ஏவுகணைகளால் தாக்கப்படும் வரை ஒரு மாற்றத்தை உறுதிப்படுத்த காத்திருக்க வேண்டியிருக்கலாம்' என்று எழுதியுள்ளது.
கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், 'இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது உக்ரேன் மோதலில் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி பங்களிப்புக்கு குறைவாக எதையும் அர்த்தப்படுத்தாது' என்று அறிவித்தார். மேலும், 'அவர்களின் நேரடி பங்கேற்பு, நிச்சயமாக, மோதலின் சாராம்சத்தை, இயல்பையே கணிசமாக மாற்றும்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கும் தண்டனையின் கீழ், கியேவை ஒரு 'பிரம்மாண்டமான உருகிய சாம்பல் நிற உருகிய இடமாக' மாற்றுவதற்கு 'உத்தியோகபூர்வ முன்நிபந்தனைகள்' உள்ளன என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் கூறினார்.
ரஷ்ய அதிகாரிகளின் இந்த எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், நேட்டோ இராணுவ கூட்டணியானது இதுபோன்ற தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அறிவுறுத்தி வருகிறது.
கடந்த வாரயிறுதியில், நேட்டோ இராணுவக் குழுவின் தலைவரான அட்மிரல் ரோப் பௌவர், ரஷ்ய பெருநிலத்திற்கு எதிரான தாக்குதல்களை எளிதாக்குவதற்கு நேட்டோவுக்கு சட்டபூர்வ உரிமை இருப்பதாக வாதிட்டார். மேலும், 'தாக்கப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. அந்த உரிமை உங்கள் சொந்த தேசத்தின் எல்லையுடன் நின்றுவிடாது' என்று பௌவர் கூறினார்.
மேலும் அவர், 'உங்களைத் தாக்கும் எதிரியை நீங்கள் பலவீனப்படுத்த விரும்புகிறீர்கள், இதன்மூலம் உங்களை நோக்கி வரும் அம்புகளை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், நாங்கள் பார்ப்பது போல், ரஷ்யாவிலிருந்து உக்ரேன் வரை அடிக்கடி செயல்படும் வில்லாளரைத் தாக்கவும் முடியும்' என்று குறிப்பிட்டார்.
அத்தோடு, 'எனவே இராணுவரீதியாக, எதிரியைப் பலவீனப்படுத்துவதற்கும், போர்முனைக்கு வரும் அதன் தளவாட பாதைகள், எரிபொருள், வெடிமருந்துகளைப் பலவீனப்படுத்துவதற்கும், அதைச் செய்வதற்கு அங்கே ஒரு நல்ல காரணம் இருக்கிறது. அதைத்தான் நீங்கள் நிறுத்த விரும்புகிறீர்கள்.' என்று சேர்த்துக் கொண்டார்.
செவ்வாயன்று, நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் டைம்ஸ் ஆஃப் இலண்டன் க்கு அளித்த ஒரு நேர்காணலில், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கான அழைப்புகளில் அவரது பெயரையும் சேர்த்துக் கொண்டார். 'இதற்கு முன்னர் அவரால் அறிவிக்கப்பட்ட பல சிவப்புக் கோடுகள் உள்ளன. அவர் தாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. ஆதலால், நேட்டோ நட்பு நாடுகளை நேரடியாக மோதலில் ஈடுபடுத்துகிறது' என்று ஸ்டோல்டென்பேர்க் கூறினார். 'நேட்டோ உலகின் வலிமையான இராணுவக் கூட்டணி என்பதை உணர்ந்ததால் அவர் அவ்வாறு செய்யவில்லை' என்று மேலும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு வழங்கிய ஒரு தனித் தொடரான கருத்துக்களில், ஸ்டொல்டென்பேர்க், 'ஐரோப்பாவில் மாஸ்கோவால் தொடங்கப்பட்ட ஒரு முழு அளவிலான போரை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். போரில் ஆபத்து இல்லாத விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால் உக்ரேனில் அதிபர் புட்டின் வெற்றி பெற்றால் நமக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கும் என்று நான் தொடர்ந்து நம்புகிறேன்' என்று அறிவித்தார்.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றுவார் என்று ஐ.நா அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான 'வெற்றித் திட்டம்' குறித்து விவாதிக்க ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார்.
டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரேன் ராணுவத்துக்கு ராணுவ பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜெலன்ஸ்கியின் அமெரிக்க வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உக்ரேனிய இராணுவத்தின் சாத்தியமான வீழ்ச்சியின் பின்னணியில், அமெரிக்காவுடன் இணைந்த ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், அலையைத் திருப்புவதற்கான வழிமுறையாக போரில் அமெரிக்க ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும் என்று கிளர்ந்தெழுகின்றன.
பொலிட்டிகோவில், புதனன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்க கட்டுரையானது, 'கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தில் நிலத்தை இழந்து வருகின்ற உக்ரேனியர்கள், அவர்களின் மிகப்பெரிய நகரங்கள் மீதான பாரிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு மன உறுதியும் வேகமும் தேவை. அதற்கு, ஏவுகணை பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை குறைப்பது உதவியாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது.