மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளுக்கு மத்தியில், 1945 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மோதல்களுக்கு இராஜாங்கரீதியில் தீர்வு காண்பதன் மூலமாக, அது “நமது வாழ்நாளில் இரண்டு முறை மனிதகுலத்திற்கு சொல்லொணா துயரத்தைக் ஏற்படுத்திய போரின் கொடுமையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளைக் காப்பாற்றும்” என்று கூறியது.
உண்மையில், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், உலகப் போர்களுக்கு வழிவகுத்த அத்தியாவசிய முரண்பாடுகள் எதையும் ஐ.நா.வின் ஸ்தாபகம் தீர்த்து வைக்கவில்லை. ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்தப் புதிய அமைப்பை ஒரு “புதிய திருடர்களின் சமையலறை” என்று குறிப்பிட்டது. அதற்கு முன்பு, நாடுகளின் லீக் என்றிருந்த இந்த அமைப்பை பற்றி லெனின் குணாம்சப்படுத்தியதை இது குறிப்பிடுகிறது. இந்த வாரம் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா கூட்டத்திற்கு இது பொருத்தமான விளக்கமாகும்.
அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஐ.நா. பொதுச் சபையை ஒரு போர் உச்சிமாநாடாக மாற்ற முனைந்து வருகின்றன. இது உலகெங்கிலும் இரத்தந்தோய்ந்த இராணுவ மோதல்களைத் தூண்டி எரியூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில், இஸ்ரேலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும், ஏற்கனவே உத்தியோகபூர்வமாக 40,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ள காஸா இனப்படுகொலையை ஒரு பிராந்தியந் தழுவிய போராக விரிவுபடுத்தி வருகின்றன. ஏகாதிபத்திய சக்திகளானது போர் “விரிவாக்கத்தை குறைப்பதற்கு” வெகுதூரம் விலகி, லெபனானுடன் மட்டுமல்ல, மாறாக ஈரானுடனும் வேண்டுமென்றே முழு அளவிலான போரைத் தூண்டிவிட முயன்று வருகின்றன.
கிழக்கு ஐரோப்பாவில், அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் இருந்து ரஷ்ய பிராந்தியத்திற்குள் நேட்டோ ஆயுதங்களை ஏவுவதற்கான விளிம்பில் உள்ளன. இது இன்றுவரையிலான போரின் மிக தீவிரமான நடவடிக்கையாகும்.
கூட்டத்திற்கு முன்னதாக, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “கட்டுப்பாடற்ற புவிசார் அரசியல் பிளவுகளையும் மோதல்களையும் நாங்கள் காண்கிறோம்” என்று கூறினார். ஐ.நா. பொதுச் சபை ஆவணத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையைப் பற்றி குடெரெஸ் பேசுகையில், “அதிகரித்து வரும் பேரழிவு மற்றும் இருத்தலியல் அபாயங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம், அவற்றில் பல நாம் செய்யும் தேர்வுகளால் ஏற்படுகின்றன. சக மனிதர்கள் பயங்கரமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், தொடர்ச்சியான நெருக்கடி மற்றும் முறிவின் எதிர்காலத்திற்குள் நாம் தள்ளப்படும் அபாயத்துக்கு உள்ளாவோம்,” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், ஐ.நா. கூட்டமானது, இந்த “பேரழிவுகரமான மற்றும் உயிர்பிழைப்பு அபாயங்களில்” இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைக் காண முடியும் என்ற யோசனையை ஒரு பகல் கனவாக்குகிறது.
அதற்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், ஆகியோர்களிடம் இருந்து பணம் பெறும் தாக்குதல் நாய்களான, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்ஜமின் நெதன்யாகு மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட போர் குற்றவாளிகளின் ஒரு வகைப்படுத்தப்பட்ட உரைகளை பொதுச் சபை கேட்கும்.
லெபனானில் இரத்தக்களரி பயங்கரவாத தாக்குதலை நடத்தி, ஆயிரக்கணக்கான அன்றாட தகவல் தொடர்பு சாதனங்களை கட்டளையின் பேரில் வெடிக்கும் வெடிகுண்டுகளாக மாற்றிய நெதன்யாகு, ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற இருக்கிறார். காஸாவில் இனப்படுகொலை என்று ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் கூறியதற்கும், உணவு உரிமை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான மைக்கேல் ஃபக்ரி பாலஸ்தீன மக்கள் வேண்டுமென்றே பஞ்சத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியதற்கும் அவர் பதிலளிப்பார்.
இனப்படுகொலை, படுகொலை மற்றும் உலகளாவிய குற்றங்களை நெதன்யாகு பாதுகாப்பார். வெளிப்படையான இரத்தவெறிக்கு நெதன்யாகுவுக்கு நிகராக யாராலும் போட்டியிட முடியாது என்றாலும், உக்ரேனிய மக்கள் மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சர்வாதிகாரத்தில், அவரது அரசியலமைப்பு பதவிக்காலத்திற்கு அப்பால் அவசரகால நிலையின் கீழ் ஆட்சி செய்யும் உக்ரேனிய “ஜனாதிபதி” வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போட்டியை அவர் முகங்கொடுப்பார்.
ஐ.நா. பொதுச் சபைக்கு ஜெலென்ஸ்கியின் வருகையானது, ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் நேட்டோ சக்திகள் கைவிடுமாறு அழைப்பு விடுக்கும் அமெரிக்க-அணி சேர்ந்த ஊடகங்களின் ஒரு தாக்குதலுடன் கவனமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் மிகவும் உரத்த குரலில் பேசியது முன்னாள் பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஆவார். அவர் “உக்ரேனை நேட்டோவில் இணைவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று The Spectator இல் அறிவித்தார்.
பிரித்தானியாவில் 232,112 பேரைக் கொன்ற கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் குறித்து “சடலங்கள் குவியட்டும்” என்று கூறிய ஜோன்சன், போரிலும் அதே கொள்கையைக் கோருகிறார்.
ஜோன்சன் பின்வருமாறு எழுதினார், “Storm Shadow (புயல் நிழல்) ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் புட்டினின் தளங்களுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரங்களில் என்ன பிரச்சனை? போர் விரிவாக்கம் மற்றும் புட்டினைத் தூண்டிவிடலாம் என்ற பயம் பற்றிய இந்த பழைய முட்டாள்தனத்தை நாம் அனைவரும் தயவுசெய்து நிறுத்த முடியுமா? இந்த வாதமானது கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது, ஒவ்வொரு கட்டத்திலும் அது சம்பவங்களால் நிரூபணமாகி வந்திருக்கிறது.”
நேட்டோவில் உக்ரேன் இணைய வேண்டும் என்று அவர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். “போர் முடிவதற்கு முன்னரே எங்களுடன் சேர உக்ரேனை நாங்கள் அழைக்கலாம்,” என்று கூறிய அவர், “ஷரத்து 5 பாதுகாப்பு உத்தரவாதம்” மற்றும் “1991 தேசம் முழுவதற்கும் உக்ரேனியர்களின் முழு உரிமையையும்” வலியுறுத்தினார்.
உக்ரேன் ரஷ்யாவுடன் தீவிரமாக போரில் ஈடுபட்டுவரும் வேளையில் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு, நேட்டோ ரஷ்யா மீது போரை அறிவிக்க மற்றும் நேட்டோ போர் இலக்காக கிரிமியாவை கைப்பற்றுவதை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு அணு ஆயுத அரசுகளுக்கு இடையே முறையான போர் பிரகடனம் ஒருபோதும் இருந்ததில்லை. பனிப்போர் முழுவதும், அத்தகைய காட்சி ஒரு “பிரளயம்” என்று கருதப்பட்டது, இது அணு ஆயுத போரில் மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கிறது.
ஆனால் ஜோன்சனின் கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் கிட்டத்தட்ட அதே பேசும் புள்ளிகளைப் பயன்படுத்தி மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. “அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவில் உள்ள இராணுவ இலக்குகளை உக்ரேன் தாக்கட்டும்” என்று தி எகனாமிஸ்ட் (The Economist) ஒரு தலையங்கத்தில் அறிவித்தது, அதேவேளையில் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) “பைடென் உக்ரேனுக்காக நீண்ட தூர ஏவுகணைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று கோரியது.
ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பு என்பது, ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் தலைமை வகிக்கும் புவிசார் அரசியல் ஒழுங்கமைப்பின் ஆழமடைந்து வரும் நெருக்கடியாக அவர்கள் கருதுவதுக்கான பதிலளிப்பாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பற்றிய ஒரு கட்டுரையில், புளூம்பேர்க், “மேலாதிக்கத்திற்கு சவால் விட எதிரிகள் அணிதிரண்டு வருகையில், அமெரிக்காவின் கவலைகள் ஆழமடைகின்றன” என்று எச்சரித்தது.
ஐ.நா.வுக்கான முன்னாள் கென்ய தூதரும் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனருமான மார்ட்டின் கிமானி “அமெரிக்க செல்வாக்கு குறைந்து வருகிறது, அது துரிதமாக தேய்ந்து வருகிறது,” என்று அறிவித்ததாக புளூம்பேர்க் மேற்கோளிட்டது. மேலும் புளூம்பேர்க் “மற்ற சக்திகள் செல்வாக்கு பெறுகையில், அமெரிக்கா எவ்வாறு அடிக்கடி பின்வாங்குகிறது என்பதை இந்தச் சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டும்” என்று குறிப்பிட்டது.
அந்தக் கட்டுரையானது, “சில அமெரிக்க கூட்டாளிகள் உட்பட ஒன்பது உறுப்பினர்களாக வளர்ந்துள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் அதிகாரிகளும் இந்த வாரம் நியூ யோர்க்கில் ஒன்றுகூடுவார்கள். அத்துடன் ஈரான் மற்றும் அதன் ஸ்தாபகர்களான ரஷ்யா மற்றும் சீனா உட்பட ஒன்பது உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது. அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்திற்கு போட்டியாளர்கள் உட்பட, உலகளாவிய செல்வாக்கின் ஒரு மாற்று மையத்தை உருவாக்க வெளிப்படையாக அழைப்பு விடுத்த ஒரு குழுவில் சேர இன்னும் பல நாடுகள் விண்ணப்பித்து வருகின்றன” என்று குறிப்பிட்டது.
அமெரிக்க டாலரின் நெருக்கடி ஆழமடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் முறையாக தங்கத்தின் விலை டாலரின் நிச்சயமற்ற தன்மையின் குறியீடாகக் கருதப்பட்டு $2,600 ஆக உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தங்கம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அவுன்சுக்கு 2,000 டாலர் என்ற முந்தைய உயர்வை எட்டியது. வரலாற்று ரீதியாக, டாலர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது, வீழ்ச்சியடைந்த டாலருக்கு எதிராக அதன் விலையை உயர்த்துகிறது.
தங்கத்தின் விலை வானளாவ உயர்ந்துள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள போர்களுக்கு அமெரிக்கா நிதியளித்ததால் கணிசமாக உயர்ந்துள்ள அமெரிக்க கூட்டாட்சி கடன் 35 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. அமெரிக்க செய்தித்தாள்கள் “ஒரு அமெரிக்க தேசிய கடன் நெருக்கடி வருகிறது” (வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்) மற்றும் “டாலர் இறந்த நாள் வருகிறது. என்ன திட்டம்?” (வாஷிங்டன் போஸ்ட்). போன்ற தலைப்புகளை வெளியிடுகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளின் “திட்டம்” உலகளாவிய போராகும். ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியானது, அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளின் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான உலகந்தழுவிய வெற்றி போருக்கு உந்துதல் கொடுக்கிறது. அவர்களின் சூறையாடும் போர் நோக்கங்களை அடைவதற்காக, அவர்கள் இனப்படுகொலை, அப்பாவி மக்களுக்கு எதிரான பாரிய பயங்கரவாதம் மற்றும் அணுஆயுதப் போர் அச்சுறுத்தல் தொடங்கி அனைத்து வடிவிலான சமூக காட்டுமிராண்டித்தனத்தையும் இயல்பாக்கி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நீதிமன்றங்கள் உட்பட முதலாளித்துவ ஆட்சியின் எந்தவொரு அமைப்பும் இந்த காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு இலாயக்கற்றவையாக இருக்கின்றன.
ஆனால், ஏகாதிபத்திய போரின் வெடிப்பை உருவாக்கும் அதே நெருக்கடியானது, உலகெங்கிலுமான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலைக்கு எரியூட்டுகிறது. இம்முறை அணுஆயுதங்களுடன் இணைந்து, மீண்டும் 20 ஆம் நூற்றாண்டில் நடந்த காட்டுமிராண்டித்தனத்திற்குள் செல்வதைத் தடுக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே இது நிறைவேற்றப்பட முடியும். ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கி, போருக்கு எதிரான போராட்டத்துடன் போராட தொழிலாளர்களை உந்துகின்ற சமூக கோரிக்கைகளில், அவர்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாகும்.