மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு, 66 பேர் காயமடைந்தனர். இது மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரில் ஒரு பாரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் மட்டுமே இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை, மில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளுடன் ஈரானைக் குறிவைக்கும் ஒரு பிராந்திய அளவிலான போராக உருமாறி வருகிறது என்பதை இது நிரூபிக்கிறது.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு பாசிச குண்டர் போல, கொடிய குண்டுவீச்சுக்குப் பிறகு ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். “எங்கள் இலக்குகள் தெளிவாக உள்ளன, எங்கள் செயல்கள் அவர்களுக்காகவே பேசுகின்றன” என்று அவர் கூறினார். உண்மையில், நெதன்யாகுவும் அவரது இரத்தம் தோய்ந்த ஆட்சியும், காஸாவில் 200,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் உயிர்களை ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் கொன்று குவித்துள்ள நிலையில், இப்போது முழு மத்திய கிழக்கையும் காட்டுமிராண்டித்தனமான இரத்தக்களரிக்குள் மூழ்கடித்து வருகிறது. இதில் ஒன்று, பொதுமக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படுவது உட்பட, போரை நடத்துவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், வெள்ளிக்கிழமை நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “எதை வேண்டுமானாலும் செய்யும்” என்றும், அதற்கு “எந்த வழியையும் பயன்படுத்தும்” என்றும் கூறியபோது, இந்தக் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான இப்ராஹிம் அகில், அந்த அமைப்பின் உயரடுக்கு ரத்வான் படையின் தளபதிகளுடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், அவரை இலக்கு வைத்து படுகொலை செய்தன. அகில் மற்றும் பல தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இந்த விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் லெபனான் முழுவதும் பேஜர்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் வெடித்தபோது, டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமுற்றனர். இஸ்ரேல் நடத்திய இந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்தே பெய்ரூட் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், இஸ்ரேலிய அமைச்சரவை அதன் போர் நோக்கங்களில் சுமார் 60,000ம் வடக்கு குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளுக்கு “திரும்புவதற்கு” ஒப்புக்கொண்டது. இது, லெபனான் மீது நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட போரை நடத்துவதற்கான ஒரு பயனுள்ள சாக்குப்போக்காகும்.
லெபனான் குடிமக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய கிரிமினல் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய தலைநகரங்களில் பெரும்பாலும் அமைதி நிலவுகிறது. ஐ.நா.வுக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ரொபர்ட் வுட் வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை ஆதரித்து, “ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” என்று அறிவித்தார்.
மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலின் தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்று வழக்கத்திற்கு மாறாக கூர்மையான மொழியில் வகைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், அதே ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்த தாக்குதல்களால் தான் “திகைப்படைந்துள்ளதாக” கூறினார். மேலும், இது “போரில் ஒரு புதிய வளர்ச்சி, தகவல் தொடர்பு கருவிகள் ஆயுதங்களாக மாறி, ஒரே நேரத்தில் சந்தைகளிலும், தெரு முனைகளிலும், வீடுகளிலும் அன்றாட வாழ்க்கையில் வெடித்து சிதறுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இத்தகைய மிருகத்தனமான வழிமுறைகளை அனுமதிக்கக்கூடியவை மட்டுமல்ல, உலகப் போரின் மூலம் தங்கள் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்கு இவை அவசியமானவை என்றும் கருதுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான இரத்தக்களரிப் போரைத் தூண்டி, ஆயுதங்களை வழங்கி, மேலும் நிதியளித்துவரும் அதே அரசாங்கங்கள்தான், குறைந்தது 500,000 உக்ரேனியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களின் உயிர்களை பலி எடுத்துள்ளன.
இதே சக்திகள், கடந்த 11 மாதங்களில் 2,000-பவுண்டு குண்டுகள் உட்பட, காஸாவை ஒரு பாழடைந்த நிலமாக மாற்றுவதற்கும், அதன் மக்களை அழித்தொழிப்பதற்கும், அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை தடையின்றி வழங்கியுள்ளன. லெபனான் முழுவதும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பொதுமக்களை கொன்று துண்டு துண்டாக்குவதை ஆதரித்துவரும் ஏகாதிபத்திய சக்திகள், உக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் ஆழமாக செலுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கவும் தயாராகி வருகின்றன. இது தொழிலாள வர்க்கத்தால் நிறுத்தப்படாவிட்டால், தவிர்க்க முடியாமல் அணு ஆயுத பரிமாற்றத்திற்கு வழிவகுக்குக்கூடிய ஒரு சுழற்சியான மோதலை மேலும் தூண்டிவிடும்.
முதலாம் உலகப் போரின் போது பெரும் வல்லரசுகளின் காட்டுமிராண்டித்தனத்தை விவரிக்கும் ரோசா லக்சம்பேர்க் பின்வருமாறு எழுதுகிறார்:
அத்துமீறும், அவமானப்படுத்தப்பட்டு, இரத்தத்தில் தத்தளித்து, அழுக்காறு வடியும் முதலாளித்துவ சமூகம் அங்கே நிற்கிறது. இதுதான் நிஜமாகும். கலாச்சாரம், தத்துவம், நெறிமுறைகள், ஒழுங்கு, அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற பாசாங்குகளுடன், அனைத்திலும் இது சுத்தமாகவும் தார்மீகமாகவும் இல்லை, ஆனால் கொடூரமான மிருகம், அராஜகத்தின் சூனியத்தின் கொண்டாட்டம், கலாச்சாரத்திற்கும் மனித குலத்திற்கும் ஒரு கொள்ளை நோய்.
லக்சம்பேர்க்கின் இந்த விவரிப்பு, இன்றைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சற்றும் குறையாமல் வலுவுடன் பொருந்துகிறது. ஏனென்றால், 20 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தை இரண்டு உலகப் போர்களில் மூழ்கடித்த அதே முதலாளித்துவ முரண்பாடுகளால், அவர்கள் தங்கள் நலன்களுக்காக உலகத்தை மறுபங்கீடு செய்யத் தூண்டப்படுகிறார்கள்.
பொருளாதார வாழ்வின் முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய ஒருங்கிணைப்பின் நிலைமைகளின் கீழ், உலகத்தை தேசிய அரசுகளாகப் பிரித்தல், உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களை இணைக்கும் உற்பத்தி செயல்முறையின் சமூகமயமாக்கலின் மத்தியில், சமூகத்தின் உற்பத்தி சக்திகள் ஒரு சில தனியார் கைகளில் குவிந்திருப்பது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை உருவாக்குகிறது. தங்கள் போட்டியாளர்களின் இழப்பிலும், கொள்ளையிலும் தங்களின் பங்கைப் பெறுவதற்கு, ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்களுக்கு இந்த நெருக்கடிக்கான ஒரே சாத்தியமான பதில், மூன்றாம் உலகப் போர் ஆகும்.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவுடனான போருக்கான தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்த மோதலில், மத்திய கிழக்கு முக்கிய போர் முனைகளில் ஒன்றாக உள்ளது. வாஷிங்டனும், அதன் தாக்குதல் நாயான இஸ்ரேலும், தங்கள் திட்டங்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவே உள்ளனர். ஜூலை 24 அன்று, காஸா இனப்படுகொலையை பாதுகாத்து அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் நெதன்யாகு உரையாற்றியபோது, ஈரானுக்கும் மற்றும் லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அதன் நட்புப் படைகளுக்கும் எதிராக, அமெரிக்காவுடன் இணைந்து பிராந்தியம் தழுவிய போரை நடத்துவதற்கான உறுதிமொழிகளுக்காக இரு கட்சிகளின் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) ஆதரவைப் அவர் பெற்றார்.
துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், பின்னர் இஸ்ரேலிய பிரதமரைச் சந்தித்து, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உட்பட தெஹ்ரானின் அனைத்து நட்பு படைகளுக்கு எதிராக, சியோனிச ஆட்சிக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதியளித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் போரின் மூலம் அதன் போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவின் இழப்பில், எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மீதான தனது போட்டியற்ற மேலாதிக்கத்தை பலப்படுத்தும் என்று நம்புகிறது.
உலகப் போரை நோக்கி ஆளும் வர்க்கத்தை உந்தித் தள்ளும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள்தான், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர தாக்கங்களுடன் கூடிய வெகுஜனப் போராட்டங்களுக்குள் உந்தித் தள்ளுகின்றன. இஸ்ரேலிய ஆட்சி அதன் ஏகாதிபத்திய ஊதியம் வழங்கும் எஜமானர்களின் ஆதரவுடன் மத்திய கிழக்கில் போரை விரிவாக்கிய அதே வாரத்தில், அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவ ஒப்பந்தக்காரர்களில் ஒன்றான போயிங்கில் 33,000 இயந்திர வல்லுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் ஆடி (Audi) கார் ஆலையை திட்டமிட்டு மூடுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், உலோகம், உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்து வரும் போர் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் மூன்றாம் உலகப் போருக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை இந்த முன்னேற்றங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனால், அவ்வாறு செய்வதற்கு, அதன் பொருளாதாரப் போராட்டங்கள் விரிவடைந்து, போருக்கு மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். காஸா இனப்படுகொலைக்கு எதிரான ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் விளக்கியது போல்:
ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக அணிதிரட்டுவது அவசியமாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வதும் அவசியமாகும். இதற்கு, முதலாளித்துவவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையோ, ஒரு அமைதியான கொள்கையை ஏற்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதையோ நோக்கமாக கொண்டிருக்காமல், தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், அவர்கள் தமது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் ஒரு முன்னோக்கு தேவைப்படுகிறது.
இந்த போராட்டத்தை நடத்துவதற்கு தேவையான சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்கும் போராட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் போரை எதிர்க்கத் தயாராக உள்ள அனைவரின் அவசரப் பணியானது, இந்த முன்னோக்கை கட்டியெழுப்ப இணைந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.