பார்னியே அரசாங்க அமைச்சர்கள் பிரெஞ்சு தீவிர வலதுசாரிக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புதிய பிரெஞ்சுப் பிரதமர் மிஷெல் பார்னியே, 2024 செப்டம்பர் 5 வியாழக்கிழமையன்று பாரிஸில் நடைபெற்ற பொறுப்பு மாற்ற விழாவின்போது வலது புறம் பார்த்தவாறு நிற்கிறார். [AP Photo/Stephane de Sakutin]

பிரெஞ்சுப் பிரதமர் மிஷெல் பார்னியே, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த அமைச்சரவையும், அதன் ஆரம்ப ஊடக அறிக்கைகளும், அதிவலது தேசிய பேரணி (RN) கட்சியின் வேலைத்திட்டத்தை பிரெஞ்சு அரசு நடைமுறையில் ஏற்றுக்கொண்டதற்கு ஒப்பானதாகும். மக்ரோனின் குழும (Ensemble) இயக்கத்தின் எஞ்சிய பகுதியிலிருந்தும், வலதுசாரி லே ரெபப்லிகன்ஸ் (LR-குடியரசுக் கட்சி) கட்சியிலிருந்தும் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரவையானது, தேசிய நாடாளுமன்றத்தில் சிறுபான்மையைக் கொண்டுள்ளது. அங்கு அதன் நிலைத்திருப்பானது தேசிய பேரணி (RN) கட்சியின் ஆதரவைச் சார்ந்துள்ளது.

ஜூலை 7 தேர்தல்களுக்குப் பின்னர், மூன்று மாத கால திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இந்த அரசாங்கமானது, ஜான்-லூக் மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணியை (NFP) இழிவுபடுத்தும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளது. ஜூலை 7 தேர்தல்களில் NFP, மக்ரோனின் குழுமக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தது. நவ-பாசிசவாதிகளை ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதாகக் கூறி, தனது வேட்பாளர்களை விலக்கிக்கொண்டு மக்ரோனின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. பல வேட்பாளர்களை திரும்பப் பெற்ற பிறகும், NFP முதலிடத்தை வென்றது.

எனினும் மக்ரோன், மெலன்சோனுடன் அல்லாமல், தேசிய பேரணியுடன் (RN) நெருங்கிய தொடர்புடைய வலதுசாரி சக்திகளுடன் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கினார். மக்ரோன் அரசாங்கத்தை அமைக்க பார்னியேவை நியமித்த பின்னர், கருத்துக் கணிப்புகள் பின்வரும் தகவல்களை வெளிப்படுத்தின: பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மக்ரோன் தேர்தல் முடிவுகளை மதிக்கவில்லை என்று கருதினர். மேலும், 56 சதவீத மக்கள் பார்னியேவை நம்பவில்லை. பார்னியே நீண்டகால ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரத்துவவாதியாகவும், புலம்பெயர்ந்தவர்களுக்கு கடுமையான எதிரியாகவும் அறியப்பட்டவர்.

ஒரு சட்டவிரோத அரசாங்கத்தின் இந்த வெளிப்படையான ஜனநாயக விரோத நியமனம், மக்களின் பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளைத் திணிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. கருத்துக் கணிப்புகளின்படி, பிரெஞ்சு மக்களில் 91 சதவீதம் பேர், கடந்த ஆண்டு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் அவசர ஆணை மூலம் திணிக்கப்பட்ட மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை இரத்து செய்ய விரும்புகின்றனர். மேலும், ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்குத் தரைப்படை அனுப்பும் மக்ரோனின் திட்டங்களையும், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு பிரான்ஸ் மற்றும் நேட்டோ வழங்கும் ஆதரவையும் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.

எனினும், இதுவே பார்னியே ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்ஸ்2 (France2) அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுருக்கமான, சடங்குபோன்ற முக்கிய நேர நேர்காணலில் வெளிப்படுத்திய கொள்கையாகும். தேர்தல்களின்றி ஆட்சி செய்யும், மற்றும் அந்நாட்டில் நாஜிக்களுடனான கூட்டுறவுக்கு ஆதரவான அதிவலது படைக்குழுக்களை நம்பியிருக்கும் உக்ரேன் ஆட்சியுடன் தனது அரசாங்கமும் ஒரே “மதிப்புகளைப்” பகிர்ந்து கொள்வதாக அவர் அறிவித்தார். மேலும், இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியிருந்த போதிலும், இஸ்ரேலின் “தற்காப்பு உரிமையை” அவர் ஆதரித்தார்.

பார்னியே, வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரை நடத்த உள்நாட்டில் வர்க்கப் போருக்கான திட்டத்தை முன்வைத்தார். இது “நிறைய செவிமடுக்கவும்” மற்றும் “மதிக்கப்பட வேண்டிய சாதாரண மக்களை” நினைவில் கொள்வது போன்ற சடங்குபோன்ற வாக்குறுதிகளால் மெல்லியதாக மறைக்கப்பட்டது. வங்கிகளை பிணையெடுப்பதற்கும் இராணுவத்திற்கும் மக்ரோன் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை திசைதிருப்பியது குறித்து மௌனம் காத்த அவர், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக “கடுமையாக” நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஆழமான சமூக வெட்டுக்களுக்கான திட்டங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டார். “ஏற்கனவே நமது குழந்தைகளின் தோள்களில் கனமாக அழுத்தும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் கடன்கள் குறித்த உண்மைகளை” வெளிப்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இதேபோல், பார்னியேயின் அமைச்சர் தேர்வுகள் தெளிவான பாசிச இயல்பைக் கொண்டுள்ளன. பார்னியே, உள்துறை அமைச்சராக பிரூனோ ரெடெய்லோவை (Bruno Retailleau) நியமித்தார். இவர் பிலிப் டு வில்லியேயின் முடியாட்சி இயக்கத்தின் (royalist movement) உறுப்பினராக இருந்து, பின்னர் லே ரெபப்லிகன்ஸ் (LR) கட்சியில் சேர்ந்து, செனட்டில் அக்கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். நஹேல் என்ற இளைஞரின் பொலிஸ் படுகொலைக்குப் பின்னர் கடந்த ஆண்டு நடந்த நகர்ப்புறக் கலவரங்களுக்கு, புலம்பெயர்ந்தோர்களின் “இன மூலங்களை நோக்கிய பின்னடைவே” காரணம் என ரெடெய்லோ இழிபுகழ்பெற்ற முறையில் குற்றஞ்சாட்டினார். பார்னியேயின் நுகர்வோர் விவகார அமைச்சர் லாரன்ஸ் கார்னியே, கருக்கலைப்பு மற்றும் ஓரினச் சேர்க்கைத் திருமணத்திற்கான அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட உரிமைகளை எதிர்ப்பதில் பெயர் பெற்றவர் ஆவார்.

நேற்று, ரெடெய்லோ கூறுகையில், “குடிவரவுக் கொள்கையில் மிகுந்த கடுமை இருக்கும், ஒரு முறிவு ஏற்படும்” என்றார். மேலும், “அதிக நாடு கடத்தல்கள், குறைவான சட்டமயமாக்கல்கள்” வேண்டும் எனக் கோரினார். வசதியற்ற அகதிகளுக்கு மருத்துவ சேவை வழங்கும் அரசு மருத்துவ உதவித் திட்டத்தை (AME) நிறுத்த வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்ற காரணத்தால் அரசியலமைப்பு சபையால் முந்தைய குடிவரவுச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று TF1 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், குடிவரவு தொடர்பான புதிய சட்டம் ஒன்றை ரெடெய்லோ வலியுறுத்தினார்.

தற்போது அரசாங்கக் கொள்கையை, குறிப்பாக குடிவரவு விவகாரத்தில், தேசிய பேரணி (RN) கட்சி கட்டுப்படுத்துகிறது என்பது ஆளும் வட்டாரங்களில் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. பிரான்சில் குடிவரவு குறித்த விவாதம் “எல்லா தர்க்க ரீதியான சிந்தனைகளையும் மீறிச் செல்கிறது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு உயர்நிலை அரசு அதிகாரி லு மொண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: “அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அது RN இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். அச்சட்டத்தை நிறைவேற்ற RN இன் ஆதரவை நாட வேண்டியிருக்கும். அரசாங்கம் சட்டத்தை நிறைவேற்றவில்லை எனில், அவ்வாறு செய்யுமாறு RN வலியுறுத்தும்.”

தேர்தலில் வெற்றி பெற்றிருந்த புதிய மக்கள் முன்னணியுடன் (NFP) கூட்டணி அமைக்க மறுத்து, அதற்கு பதிலாக லே ரெபப்லிகன்ஸ் (LR) மற்றும் குறிப்பாக தேசியப் பேரணி (RN) கட்சியுடன் இணைந்ததற்கு மக்ரோனே நேரடியாகப் பொறுப்பாவார். எனினும், மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி மற்றும் பெரு வணிக சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையிலான கட்சிகளின் கூட்டணியான NFP, தேசிய நாடாளுமன்றத்தில் தற்போது RN உடன் கூட்டணி சேர்ந்துள்ள மக்ரோனின் சக்திகளை நிலைநிறுத்த உதவியதன் மூலம், தீவிர வலதுசாரி ஆட்சிக்கு முக்கிய வழிவகுப்பாளர்களாக இருந்தனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் முன்னணித் தலைவர்கள் தற்போது அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், தேசிய நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர உறுதியளித்துள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெரோம் குயெட்ஜ், சுட் வானொலிக்கு (Sud Radio) பின்வருமாறு தெரிவித்தார்: “[பார்னியே அரசாங்கத்திற்கு எதிரான] நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நான் வாக்களிப்பேன். ஏனெனில், அதன் கொள்கை உள்ளடக்கம் குறித்து எனக்கு எந்த மாயையும் இல்லை. அரசாங்கத்தின் அமைப்பையோ அல்லது மிஷெல் பார்னியேயின் முதல் அறிக்கைகளையோ பார்த்தால், ஓய்வூதிய வெட்டுக்களை மாற்றாத ஒரு வலதுசாரி கொள்கையையே நாம் காண்கிறோம். இரண்டாவது காரணம் ஜனநாயகம் சார்ந்தது. இந்தத் திருப்பு நிகழ்வுகளையும், ஜூலை 7 தேர்தல்களின் செய்தியை மதிக்கத் தவறியதையும் நாம் எதிர்க்க வேண்டும்.”

“இந்த அரசாங்கம் தோல்வியுற்றவர்களின் கூட்டணியாகும். சிலர் வெறும் காட்சிப் பொருள்களாகவும், போலித்தனத்திற்காகவும் இருக்க, மற்றவர்கள் உண்மையான எஜமானர்களாக இருப்பார்கள்,” என்று கூறிய மெலன்சோன், பார்னியேவை ஒரு “மாயை” என்று வர்ணித்தார். மெலன்சோன் மேலும் கூறுகையில், “ரெடெய்லோ தான் இந்த நாட்டில் முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பார். ஏனெனில் நாடாளுமன்ற நடைமுறையில் அனைத்து மசோதாக்களும் செனட் வழியாகவே செல்கின்றன. எனவே, நாடாளுமன்றம் எதற்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், ஆனால் இறுதியில் திரு மக்ரோன், திரு ரெடெய்லோவுக்கு எப்போதும் ‘ஆம்’ என்று சொல்ல நிர்ப்பந்திக்கப்படுவார்.”

ஆனால் அரசாங்கம் தோல்வியுற்றவர்களின் கூட்டணி என்ற மெலன்சோனின் கருத்து ஒரு கேள்வியை மட்டுமே எழுப்புகிறது: தோல்வியுற்றவர்கள் எவ்வாறு ஒரு அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கப்பட்டனர்? தொழிலாளர்களும் இளைஞர்களும் புதிய மக்கள் முன்னணியின் (NFP) நயவஞ்சகமான மற்றும் பயனற்ற போலி நடவடிக்கைகளில் மாயை கொள்ளக் கூடாது. மக்கள் விரோத தீவிர வலதுசாரி ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தைத் தயாரிப்பது இதன் நோக்கமல்ல. மாறாக, ஓய்வூதிய வெட்டுக்கள், இனப்படுகொலை மற்றும் போர் தொடரும் வகையில், வர்க்கப் போராட்டத்தின் மீது NFP மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியைப் பேணுவதே இதன் நோக்கமாகும்.

மெலன்சோன் 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். ஆனால் பின்னர், நவ-பாசிசத்தின் எழுச்சியைத் தடுப்பதற்கான ஒரே வழி இது என்று கூறி, மக்ரோனுடன் தேர்தல் உடன்பாடுகளை மேற்கொண்டார். தேர்தல்களுக்குப் பின்னர், மக்ரோன் தேசிய பேரணிக் (RN) கட்சியுடன் விரிவான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவது தெரியவந்த பிறகும், புதிய மக்கள் முன்னணியால் (NFP) தனது மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க வாக்காளர்களை மக்ரோனின் சதிக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ அழைப்புவிடுக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை. இவ்வாறு களத்தைக் கைவிட்டதன் மூலம், சட்டவிரோத தீவிர வலதுசாரி ஆட்சியை எவ்வித இடையூறுமின்றி நிறுவ மக்ரோனுக்கு NFP வழிவகுத்தது.

இந்த சுய-தோல்விக்குரிய கொள்கையானது, அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் வர்க்க அடிப்படை மற்றும் அரசியல் திட்டத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான வசதிபடைத்த கல்வியாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கட்சியானது, மக்ரோனின் திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்கிறது. உண்மையில், புதிய மக்கள் முன்னணியின் (NFP) தேர்தல் திட்டத்தில், உக்ரேனுக்கு பிரெஞ்சுப் படைகளை “அமைதிகாப்பாளர்களாக” அனுப்புவதற்கும், உளவுத்துறை மற்றும் இராணுவ காவல்துறை சேவைகளை வலுப்படுத்துவதற்கும் அழைப்பு விடுக்கும் பகுதிகளுக்கு LFI ஒப்புதல் அளித்தது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் விரைவில் பார்னியே அரசாங்கத்துடன் மோதலுக்குள் நுழைவர். ஆனால், புதிய மக்கள் முன்னணி (NFP) மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டளைகளின் கீழ் அவர்களால் இதற்கு எதிராகப் போராட இயலாது. இச்சக்திகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் மக்ரோன் மீதான தங்கள் வெறுப்பையும் விரக்தியையும் வெளிப்படுத்த தற்போது தேசிய பேரணி (RN) கட்சிக்கு வாக்களிக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்தி, சோசலிசத்திற்கான போராட்டத்தை நடத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், போர், இனப்படுகொலை மற்றும் பாசிச சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான விட்டுக்கொடுக்காத எதிர்ப்பின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

Loading