முன்னோக்கு

ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர நேட்டோ ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் உலகளாவிய போரின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்தை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள், உக்ரேன் ரஷ்யாவிற்குள் உள்ளே ஆழமாக தாக்குவதற்கு நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்யாவின் அணு ஆயுத கொள்கைக்கு ஒரு முன்மொழியப்பட்ட புதுப்பிப்பை முறையாக முன்வைத்தார். இது மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைமைகளை விரிவுபடுத்தும்.

இங்கிலாந்தின் Storm Shadow நீண்ட தூர ஏவுகணை  [Photo by Rept0n1x / CC BY-SA 3.0]

கடந்த புதன்கிழமை, ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புட்டின், “ஒரு அணுஆயுத அரசின் பங்களிப்புடன் அல்லது அதன் ஆதரவுடன் கூடிய, ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு அணுஆயுதமற்ற நாட்டினதும் தாக்குதலானது, ரஷ்ய கூட்டமைப்பு மீதான ஒரு கூட்டுத் தாக்குதலாக கருதப்படும்” என்று அறிவித்தார்.

“ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது தாக்குதல் இடம்பெற்றால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம்,” என்பதையும் புட்டின் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்ய நகரங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்பின் மீது, நேட்டோ சக்திகளின் ஆதரவுடன், உக்ரேன் நடத்தி வரும் மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் தாக்குதல்களுக்கு விடையிறுக்க, உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுதங்களைக் கொண்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றான ரஷ்யா, அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு புட்டின் இதுவரையில் விடுத்துள்ள மிகவும் அப்பட்டமான மற்றும் உறுதியான அச்சுறுத்தல் இதுவாகும்.

இந்த மாத தொடக்கத்தில், கியேவுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் திட்டத்துடன் அமெரிக்கா முன்னேறும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “போர்க்களம் மாறியுள்ளதால், தேவைகள் மாறுவதைப் போல, அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டுள்ளோம்,” என்று இத்திட்டம் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மேலும், “நாங்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று பிளிங்கன் குறிப்பிட்டார்.

கியேவ்வில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, தி கார்டியன் பத்திரிகையானது, “ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீது Storm Shadow குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்க ஏற்கனவே ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் அரசாங்க ஆதாரங்கள் சுட்டிக்காட்டின,” என்று அறிவித்தது. தி எகானாமிஸ்ட் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா மீதான தாக்குதல்களை ஆதரித்து ஆசிரியர் தலையங்கங்களை வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஸ்பெக்டேட்டர் பத்திரிகையில் இந்த நடவடிக்கையை விளம்பரப்படுத்தியுள்ளார்.

நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய நகரங்களைத் தாக்குமாறு உக்ரேனுக்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான பிரச்சாரம், அதன் பிராந்தியத்தைப் பாதுகாக்க அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை ஒரு மாயை என்ற வாதத்தின் மீது மையம் கொண்டுள்ளது.

இந்த முன்மொழிவு, ஒவ்வொரு அமெரிக்க பத்திரிகைகளிலும் திரும்பத் திரும்ப கூறப்பட்டு, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தால் பகிரங்கமாக நற்செய்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது, ஒரு அபத்தமாகும். யதார்த்தத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளேயே இந்தக் கூற்றை முன்வைப்பவர்களுக்கு இது பொய் என்று தெரிந்தும், அவர்கள் பொதுமக்களிடம் வெறுமனே பொய் சொல்கிறார்கள். புட்டின் உளறவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸில் “உக்ரேனின் நீண்ட தூர தாக்குதல்களை அனுமதிப்பதில் உள்ள அபாயங்களை அமெரிக்க உளவுத்துறை வலியுறுத்துகிறது” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் இது தெளிவாக்கப்பட்டது.

“ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனியர்களுக்கு அனுமதி வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டால், ஒருவேளை மரண தாக்குதல்களுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிக் பங்காளிகளுக்கு எதிராக, ரஷ்யா அதிக பலத்துடன் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புவதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

“அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவத் தளங்கள் மீதான சாத்தியமான மரணகரமான தாக்குதல்கள்” உட்பட, “அமெரிக்க மற்றும் ஐரோப்பா வினியோகித்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி நீண்டதூர தாக்குதல்களை அனுமதிக்கும் ஒரு முடிவுக்கு சாத்தியமான ரஷ்ய பதிலடிகளின் ஒரு தொகையை” உளவுத்துறை மதிப்பீடு விவரிப்பதாக அக்கட்டுரை தொடர்கிறது.

அமெரிக்க ஜனாதிபதிகள் மீண்டும் மீண்டும் அறிவித்ததைப் போல, கிழக்கு ஐரோப்பாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டையும் உள்ளடக்கி நேட்டோ விரிவடைந்து கொண்டிருந்த அதேவேளையில், எந்தவொரு அங்கத்துவ நாட்டின் பிராந்தியத்திற்கு எதிரான எந்தவொரு ரஷ்ய தாக்குதலும் ஒட்டுமொத்த நேட்டோ மீதான ஒரு தாக்குதலாக கருதப்படும். நேட்டோ சாசனத்தின் ஷரத்து ஐந்தின் கீழ், கூட்டணியின் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல கடமைப்பட்டிருக்கும்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் கணிசமான பிரிவுகள் பாரிய ரஷ்ய இராணுவ பதிலடிக்கான சாத்தியத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், உண்மையில் இந்த நடவடிக்கையை எடுக்க ரஷ்யாவை தூண்டிவிட முயல்கின்றன.

இந்த முடிவுக்கு ரஷ்யாவின் பிரதிபலிப்பு எதுவாக இருந்தாலும், அதன் பதிலடியானது போரில் அமெரிக்க ஈடுபாட்டை பாரியளவில் அதிகரிக்க பயன்படுத்தப்படும். ரஷ்யாவின் பதிலடியானது, தேதி மாறிய நாள் என்றும், புட்டின் தனது தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதலைத் தொடங்கிய அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை புட்டின் என்றென்றும் உடைத்த நாள் என்று அழைக்கப்படும்.

உலகெங்கிலும் போரை விரிவாக்க முனையும் அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யா, மத்திய கிழக்கு, அல்லது பசிபிக் என்று ஆகட்டும், ஆத்திரமூட்டல் வழிவகைகளைக் கொண்டே செயல்பட்டு வருகிறது. 2018 அமெரிக்க தேசிய பாதுகாப்பு வியூகத்தின் ஆசிரியரான எல்பிரிட்ஜ் கோல்பி தனது 2021 புத்தகத்தில், மறுப்பின் மூலோபாயம் (The Strategy of Denial), அமெரிக்க இராணுவத்தின் இலக்குகளை “முதல் குண்டை சுடுவதற்கு” கட்டாயப்படுத்துவது மற்றும் அதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்களாக அவற்றை கருதுவது, அமெரிக்க பிரச்சாரத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குகிறது:

ஒருவேளை, இந்த வழியில் பார்க்கப்படுவதை உறுதிசெய்வதற்கான மிகத் தெளிவான மற்றும் சில நேரங்களில் மிக முக்கியமான வழி, முதலில் [ஒரு எதிரி] தாக்குதல் செய்வதை உறுதி செய்வதாகும். அதைத் தொடங்கியவர் ஆக்கிரமிப்பாளர், அதன்படி தார்மீகப் பொறுப்பின் பெரும் பங்கை வைத்திருப்பவர் என்பதை விட சில மனித தார்மீக உள்ளுணர்வுகள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்யாவிடம் இருந்து வரும் எந்தவொரு பதிலடியும் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஒத்ததாக, ஆனால் இன்னும் பெரியளவில், ஜனநாயக உரிமைகள் மீதான மிகப்பெரும் தாக்குதல்களுடன் சேர்ந்து, போரின் பாரிய விரிவாக்கத்துக்கு முடுக்கி விடுவதற்கான வழிவகையாக இருக்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக ஒரு பெரும் போர் விரிவாக்கத்துக்கு அழுத்தமளித்து வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள், இதற்கான கால அவகாசம் கடந்து கொண்டிருப்பதாக அஞ்சுகின்றன.

முதலாவதாக, “கடைசி உக்ரேனியர் வரை” போரில் இருக்கின்ற உக்ரேனிய இராணுவம் பேரழிவை முகங்கொடுத்து வருகிறது. டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ முன்னேற்றத்தின் விளிம்பில் இருப்பதாகத் தெரிகிறது. உக்ரேனுக்குள் போருக்கு பெருகும் உள்நாட்டு எதிர்ப்பிற்கு இடையே, முழு கிழக்கு முன்னணியும் நேட்டோவின் கணிசமான தலையீடு இல்லாவிட்டால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளது.

உக்ரேனில் ஏற்படும் ஒரு தோல்வி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டிற்கு பேரழிவை விளைவிப்பதாக இருக்கும். வெறுமனே இராணுவ விளைவுகள் மட்டுமல்ல, மாறாக பொருளாதார விளைவுகளும் ஏற்படும். இது உலகின் கையிருப்பு நாணயமாக டாலரின் பாத்திரத்தை கணிசமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவை அஞ்சுகின்றன.

இரண்டாவதாக, இந்த தேர்தல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும், அவருடன் சேர்ந்து உக்ரேன் போரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக அவர்கள் கருதும் சீனாவுடனான போரில் இருந்து கவனச் சிதறலாக பார்க்கும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரிவையும் அதிகாரத்திற்குக் கொண்டு வரக்கூடும். உக்ரேனிய பேரழிவுகரமான போரை துணை ஜனாதிபதி ஹாரிஸுக்கு ஒரு சுமையாக பார்க்கும் ட்ரம்ப், 2019 இல் உக்ரேனுக்கு மரணகரமான ஆயுதங்களை வழங்குவதில் அவரது நிர்வாகம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த போதிலும், அவரது பாசிசவாத இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழிவகையாக போர் மீதான மக்களின் அதிருப்திக்கு வாய்வீச்சுடன் முறையிட்டு வருகிறார். ட்ரம்ப் வெற்றியின் சாத்தியமான வெளியுறவுக் கொள்கை, பின்விளைவுகளை முன்கூட்டியே தவிர்ப்பதற்காக, வெள்ளை மாளிகை போரைத் தீவிரப்படுத்துவதை தவிர்க்கவியலாததாக்கும் “கள உண்மைகளை” உருவாக்க நகர்ந்து வருகிறது.

புறநிலை நிலைமையின் இந்த இரண்டு கூறுபாடுகளும், மனிதகுலம் முழுவதற்கும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்ட, அடுத்த இரண்டு மாதங்களில் போரை பெரியளவிலும் விரைவாகவும் தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மேலாதிக்கம் செலுத்தும் பிரிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

இந்தக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள்ளும் அரசுக்குள்ளும் கணிசமான பிளவுகள் உள்ளன என்பது வெளிப்படை. ஆனால், போருக்கு எதிரான போராட்டம் ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் பிளவுகள் பற்றிய ஊகத்தின் அடிப்படையில் இருக்க முடியாது, மேலும் ஆளும் வர்க்கத்தின் ஏதாவது ஒரு பிரிவினரின் எதிர்ப்பை அதிகரிப்பதற்கான நம்பிக்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கையை அடிபணிய வைக்க முடியாது.

தற்போதைய சூழ்நிலையில் நிலவும் பாரிய அபாயங்கள் குறித்து மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினருக்கு எதுவும் தெரியாது என்பதே மிகப்பெரிய அபாயமாகும். அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் நீண்டகால போர் திட்டங்கள் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்து, எச்சரிக்கை ஒலி எழுப்புவது அவசர அவசியமாகும்.

உலகெங்கிலும், அமெரிக்கா எங்கிலும், தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமும் ஒரு பிரதான பாதுகாப்பு ஒப்பந்ததாரருமான போயிங் நிறுவனத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், அவர்களின் வேலையிட நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்களைப் பாதுகாக்க ஒரு தீர்மானகரமான வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். இது, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒரு பரந்த அலையின் பாகமாக இருக்கிறது. இது, போரைத் தீவிரப்படுத்துவதை நோக்கி செல்லும் பாரிய ஆதாரவளங்களால் தீவிரப்படுத்தப்படுகிறது.

உள்நாட்டில் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் போருக்கு எதிரான போராட்டம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், இவை இரண்டும் முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன என்ற புரிதலை, தொழிலாள வர்க்கத்திற்குள் நனவாக வளர்ப்பதே மைய மூலோபாய பணியாகும்

Loading