முன்னோக்கு

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையின் ஓராண்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட காஸாவில் பாலஸ்தீனிய மக்கள் மீதான இனப்படுகொலையின் முதல் ஆண்டு நிறைவை அக்டோபர் 7 ஆம் தேதி குறிக்கிறது. இது, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள பிராந்தியப் போரின் முதல் கட்டமாக, இப்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போராக உருமாற்றம் அடைந்து வருகிறது.

ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட, இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்களை, கான் யூனிஸ் நகரில் உள்ள பாரிய புதைகுழியில் பாலஸ்தீனியர்கள் புதைக்கின்றனர். தெற்கு காஸா பகுதி, புதன்கிழமை, Nov. 22, 2023. [AP Photo/Mohammed Dahman]

காஸாவிலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிரான அழித்தொழிப்புப் போரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. உத்தியோகபூர்வ மருத்துவ இதழான தி லான்செட் இல் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, இதுவரை 40,000 பேருக்கும் 186,000 பேருக்கும் இடைப்பட்டவர்கள், இஸ்ரேலிய தோட்டாக்கள், குண்டுகள் அல்லது பஞ்சம் அல்லது தடுக்கக்கூடிய நோய்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த மக்கள்தொகையும் இஸ்ரேலால் பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் வார்த்தைகளில், ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்படுத்தல் முறையால் பதிவுசெய்யப்பட்ட மிக அதிகமான மக்கள் பேரழிவுகரமான பட்டினிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் ஒன்றான காஸா, ஒரு தரிசு நிலமாக மாற்றப்பட்டுள்ளதோடு, அதன் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. காஸாவிலுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கலாச்சார மையங்களுடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கணக்கிடப்பட்டு, திட்டமிடப்பட்ட சமூகப் படுகொலையின் ஒரு பகுதியாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இப்போது நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை மற்றும் இன சுத்திகரிப்புக்கான உத்தியோகபூர்வ நியாயப்படுத்தல், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அமெரிக்க செய்தி ஊடகங்கள், அக்டோபர் 7ம் திகதி சம்பவங்களை எதிர்பாராத நேரத்தில், முன்கணிக்க முடியாத ஒரு திடீர் தாக்குதல் என்றும், இதற்கு முன் காரணிகள் எதுவும் இல்லை என்றும் சித்தரிக்க முற்படுகிறது.

ஆனால், இந்தக் கதை சில மாதங்களிலேயே தகர்ந்து போனது. டிசம்பர் 2023 இல், நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த தாக்குதலுக்கான திட்டத்தை “புள்ளி வாரியாக” வகுத்த சரியான ஆவணம் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் உள்ளது என்றும், இது “ஆபத்தான துல்லியத்துடன் செயல்படுத்தப்பட்டது” என்றும் எழுதியது.

அனைத்திற்கும் மேலாக, காஸா எல்லையில் செயல்பட்டுவந்த இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுப் படைகள் வேண்டுமென்றே திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது. மேலும், ஹமாஸின் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் பிற பகுதிகளுக்கு எல்லைப் படைப் பிரிவுகள் திரும்பப் பெறப்பட்டன. அக்டோபர் 7 தாக்குதல்கள் மீதான ஐ.நா.வின் உத்தியோகபூர்வ விசாரணையில், “இஸ்ரேலிய அதிகாரிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை ஏறத்தாழ ஒவ்வொரு முனையில் இருந்தும் பாதுகாக்கத் தவறிவிட்டனர்” என்று அப்பத்திரிகை வலியுறுத்திக் கூறியது.

அதேபோல் இஸ்ரேலிய தரப்பில், கணிசமான பகுதியினர் இஸ்ரேலிய படைகளாலேயே கொல்லப்பட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் செயல்பட்டுக் கொண்டிருந்த குடியிருப்புக்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களை வேண்டுமென்றே இலக்கு வைத்தன. இந்த தாக்குதல் பற்றிய அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையின்படி, இஸ்ரேலியப் படைகள் “ஹன்னிபால் உத்தரவு என்று அழைக்கப்படுவதைப் பிரயோகித்து... இஸ்ரேலிய பொது மக்களைக் கொன்றுள்ளன”.

அக்டோபர் 18, 2023 அன்று, இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அக்டோபர் 7 நிகழ்வுகளை “இஸ்ரேலின் 9/11” என்று அறிவித்தார். உண்மையில், இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் புஷ் நிர்வாகத்தால் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்புக்களை தொடக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. அத்தோடு, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. அதேபோன்று, அக்டோபர் 7 தாக்குதல்கள் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 22, 2023 அன்று, அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் “புதிய மத்திய கிழக்கின்” ஒரு வரைபடத்தைக் காட்சிப்படுத்தினார். இந்த வரைபடம், அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, சூடான், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா உடனான புவிசார் அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனிய பிரதேசங்களையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஒரு வருடம் கழித்து, இஸ்ரேலும் அமெரிக்காவும் அக்டோபர் 7 நிகழ்வுகளைக் கைப்பற்றி, புதிய மத்திய கிழக்கு என்று அவர் அழைத்த இந்த பார்வையை செயல்படுத்துவது தெளிவாகிறது.

அக்டோபர் 7 தாக்குதல்களின் ஓராண்டு நிறைவுக்கு அருகில், செப்டம்பர் 27 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு மீண்டும் உரையாற்றிபோது, அவர் மீண்டும் “கடந்த ஆண்டு நான் இங்கு முன்வைத்த வரைபடத்தை” குறிப்பிட்டு, “அமெரிக்க ஆதரவு மற்றும் தலைமையுடன், இந்த தொலைநோக்கு மக்கள் நினைப்பதை விட மிக விரைவில் நடைமுறைக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அறிவித்தார்.

மத்திய கிழக்கில் இப்போது கட்டவிழ்ந்து வரும் போர், 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, 2003 ஈராக் படையெடுப்பு மற்றும் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் ஒரு தொடர்ச்சியான, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதையும் அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால முயற்சியின் பாகமாக உள்ளது.

இந்த முயற்சியின் மூர்க்கத்தனமும், மனிதப் படுகொலை குணாம்சமும் இன்னும் தீவிரமடைந்திருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் மத்திய கிழக்கிலான அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு —இவ்விரண்டும் அணுஆயுத அரசுகளாகும்— எதிரான ஓர் உலகளாவிய போரின் பாகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. இதில் மத்திய கிழக்கு ஒரேயொரு போர் முன்னரங்கு மட்டுமே ஆகும்.

அக்டோபர் 7, 2023 க்குப் பிந்தைய நிகழ்வுகள், 2023 வசந்த காலத்தில் நேட்டோ-ஆதரவிலான உக்ரேனின் தாக்குதலின் தோல்வியின் பின்னணியில் நடந்தன. அதில் நேட்டோ சக்திகளால் உக்ரேனுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான நவீன யுத்த வாகனங்கள், ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு அவமானகரமான படுதோல்வியில் அழிக்கப்பட்டன.

இப்போது, ஓராண்டிற்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் ஈரான் மீதான ஒரு பெரும் தாக்குதலுக்கு முன்னேறிய தயாரிப்புக்களை செய்து வருகின்றன. கடந்த வாரம், ஈரானின் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா இஸ்ரேலுடன் “விவாதங்களில்” ஈடுபட்டிருப்பதை பைடென் உறுதிப்படுத்தினார். அதேவேளையில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் ஸ்கிஃப் ஞாயிறன்று ஈரானின் ஏவுகணை படைகளுக்கு எதிரான ஒரு இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்தார். இந்த போர் தயாரிப்புகள் டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனுக்கு தொடர்ந்து மோசமடைந்து வரும் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளின் பின்னணியில் நடைபெறுகின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பெரும் பின்னடைவுகளை முகங்கொடுத்துவரும் ஏகாதிபத்திய சக்திகள், ஒரு புதிய மத்திய கிழக்கு போர் முனையை திறக்க முனைந்து வருகின்றன.

காஸா இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது, போருக்கு எதிரான பாரிய போராட்டங்களின் ஓர் அலையைத் தூண்டியுள்ளது, 2003 ஈராக் படையெடுப்புக்குப் பிந்தைய மிகப் பெரிய போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைமுறையளவில் ஒவ்வொரு கண்டத்திலும் நடந்தன. ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களின் தலைவர்கள் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாகக் கருத முற்பட்டு வருவதுடன், ஏகாதிபத்திய சக்திகளை மேலும் மனிதாபிமான கொள்கைகளை ஏற்க அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அணுகுமுறை திவாலாகிவிட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காஸா இனப்படுகொலையானது, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் ஆழமடைந்து வரும் நெருக்கடியில் இருந்து பிரிக்க முடியாத வகையில், உலக ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் உந்தப்பட்டு வரும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும் என்பது ஒரு வருடம் கழித்து தெளிவாகியுள்ளது.

இதற்கு புதிய உத்தி தேவை. காஸா இனப்படுகொலை மற்றும் ஈரானுடனான போருக்கு எதிரான போராட்டமானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். இதனை லெனின் “முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம்” ஏகாதிபத்தியம் என்று அழைத்தார். போருக்கான இன்றியமையாத காரணம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையிலும், மிகப்பெரும் பெருநிறுவனங்களின் உலகளாவிய நிதியியல் நலன்களிலும் மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத முனைப்பிலும் தங்கியுள்ளது.

போருக்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சக்தியை அணிதிரட்டுவதும் மற்றும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் அதன் அரசியல் சுயாதீனமும் அவசியமாகும். போருக்கு எதிரான இயக்கம் சர்வதேச சோசலிச முன்னோக்கினால் கட்டாயம் உயிரூட்டப்பட வேண்டும். அது ஏகாதிபத்தியப் போர், காலனித்துவம் ஆகியவற்றுடன் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள காலாவதியான தேசிய அரசு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்குப் பதிலாக சோசலிசத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading