முன்னோக்கு

"அரைகுறை நடவடிக்கைகளுக்கான தேடலை ஒதுக்கி வைப்போம்!"

போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சோசலிசத்துக்கான போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேலிய வெறியாட்டத்தின் வரலாற்று வேர்களை பகுப்பாய்வு செய்து, அதை நிறுத்துவதற்கு ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்மொழிந்துள்ள சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா), காஸாவில் இடம்பெற்றுவரும் படுகொலையின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கடந்த புதனன்று ஒரு நேரடி கலந்துரையாடலை நடத்தியது.

இந்த நிகழ்வில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) 2024 ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர்; சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஓராண்டாக, அமெரிக்க ஊடகங்கள் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையை அக்டோபர் 7, 2023 தாக்குதல்களின் துணை விளைபொருளாக சித்தரிக்க முனைந்துள்ளன. இவை “தூய தீமையின்” விவரிக்கவியலாத வெளிப்பாடாக கூறப்படுகின்றன. மத்திய கிழக்கில் பல நூற்றாண்டுகளாக காலனித்துவ ஆட்சியின் முழு வரலாறும், பாலஸ்தீனத்தின் இனச்சுத்திகரிப்பின் மரபியம், 1967ல் இருந்து பாலஸ்தீனிய பிராந்தியத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மை, மற்றும் 1991ல் இருந்து அப்பகுதி முழுவதும் இடம்பெற்றுவரும் அமெரிக்க போர்கள் ஆகியவை சாதாரணமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கூட்ட நிகழ்வானது, மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெரிய சமூக மற்றும் அரசியல் பிரச்சனையுடன் ஒன்றோடொன்று தொடர்புபட்ட வகையில், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை முதலாளித்துவ சமூக ஒழுங்கின் ஆழமான நெருக்கடியின் விளைவாக வடிவமைத்ததோடு, எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வரலாற்றுப்பூர்வமற்ற அணுகுமுறைக்கு எதிரான துருவத்தை முன்வைத்தது.

இவ்வாறு இருக்கையில், இந்த நிகழ்வு மார்க்சிச அரசியல் வழிமுறை மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் ஆற்றல் மற்றும் எரியும் பொருத்தத்தை நிரூபித்தது.

கிஷோர் தனது ஆரம்பக் கருத்துக்களில், காஸா இனப்படுகொலையை முதலாளித்துவ சமூகத்தால் “காட்டுமிராண்டித்தனத்தை ஒரு பரந்த இயல்பாக்கத்தின்”  பாகமாக ஆக்கப்பட்டுள்ளதை விளங்கப்படுத்தினார். காஸாவில் இறப்பு எண்ணிக்கை 41,000 என்று இருக்கையில், இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்கள் அல்லது பட்டினி மற்றும் நோயால் இறந்தவர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டால், உண்மையான எண்ணிக்கை 200,000 க்கு நெருக்கமாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை அழிப்பதைக் குறிக்கும் “ஸ்காலஸ்கொலை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, காஸாவின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு வருவதை அவர் விவரித்தார்.

முதலாளித்துவம் என்பது வரலாற்று முட்டுச்சந்தை அடைந்த சமூகத்தின் வெளிப்பாடாகும். இதனை வெறுமனே குற்றவாளிகளாக இருக்கும் தனிநபர்களின் வெளிப்பாடாக, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கத் தகுதியானவர்கள். ஆனால், அவர்கள் ஒரு வரலாற்று முட்டுச்சந்தை அடைந்துள்ள மற்றும் தூக்கியெறியப்பட வேண்டிய ஒரு சமூக வர்க்கம் மற்றும் சமூக முறையை வெளிப்படுத்துகின்றனர். காஸாவில் இனப்படுகொலை நடந்து ஓராண்டு காலத்தில் எழும் மையப் பிரச்சினை இதுவேயாகும்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கருத்துக்களில், “இந்த நிகழ்வுகள் அனைத்தும் வரலாற்றில் வேரூன்றியுள்ளன” என்று டேவிட் நோர்த் விளக்கினார்,

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், பிரதான ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா, [ரஷ்யாவில்] [1917] அக்டோபர் புரட்சி இல்லாதிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவ்வாறே ஒவ்வொன்றையும், மீள்ஸ்தாபிதம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டதைக் கண்டது. காலனியாதிக்கத்தை மீண்டும் நிறுவுவது, உலகெங்கும் ஏகாதிபத்திய அமைப்பின் கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை மீட்டெடுப்பது. 

“நாம் இப்போது ஒரு வரலாற்று நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றோம். இது முதலாளித்துவ அமைப்பு முறையின் சாத்தியமற்ற தன்மையின் அடிப்படையில் வேரூன்றி உள்ளது, அதுவே ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது” என்று நோர்த் மேலும் கூறினார். 

“மார்க்ஸ் ஒருமுறை கூறினார், ‘தீவிரவாதமாக இருப்பது என்பது வேருக்குச் செல்வதாகும். இந்த நெருக்கடியின் வேர் என்ன? தற்போதைய அட்டூழியங்களை நாம் புரிந்துகொள்ளவும், அவற்றை எதிர்கொள்வதற்கான பயனுள்ள செயல்களை உருவாக்கவும் அனுமதிக்கும் வகையில் அவற்றை எவ்வாறு கையாள்வது? 

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் காஸா இனப்படுகொலைக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் “இதுவரையில், போராட்டங்கள் தார்மீக சீற்றத்தின் வெளிப்பாட்டின் மட்டத்திலேயே இருந்து வந்துள்ளன என்பதோடு, மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்கு, அதாவது இதை உந்துவது எது என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை,” என்று நோர்த் குறிப்பிட்டார்.

மேலும், மார்க்சிஸ்டுகளால் அடையாளம் காணப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளை, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான, மற்றும் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை நோர்த் மீளாய்வு செய்தார்.

இந்த முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்க முடியும்? இதைச் செய்ய இரண்டு வழிகள் உள்ளன என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. நாம் பார்ப்பதைப் போல, அவை போரின் மூலமாக, உலக மற்றும் தேசிய அளவில், சர்வாதிகார அல்லது பாசிச அரசாங்க அமைப்புமுறைகளால் தீர்க்கப்படுகின்றன. அல்லது அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சி மற்றும் சோசலிசப் புரட்சியின் மூலமாக, எல்லைகளை அழித்து, மனிதகுலத்தின் ஒரு உலக கூட்டமைப்பை ஸ்தாபிப்பதன் மூலமாக தீர்க்கப்படுகின்றன.

இதுதான் நம் காலத்தின் மிகப்பெரிய சவால். எது மேலோங்கும்? அழிவை நோக்கிய போக்குகள் மேலோங்குமா அல்லது சமூக மீளுருவாக்கத்தை நோக்கிய போக்குகள் மேலோங்குமா? அதாவது, ஆளும் வர்க்கங்கள் போர் மற்றும் பாரிய ஒடுக்குமுறை மூலமாக அவற்றின் நோக்கங்களை எட்டுமா அல்லது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசுவதன் மூலமாக அது முகங்கொடுக்கும் வரலாற்று பிரச்சினைகளை தீர்க்குமா?

“நமது காலத்தின் பிரச்சினைகளுக்கு நடுநிலையான சீர்திருத்தவாத பதில் எதுவும் கிடையாது” என்று கூறி நோர்த் நிறைவு செய்தார்.

வெளிநாட்டில் போரை தீவிரப்படுவதற்கும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போருக்கும் இடையிலான உறவு, இவை ஒரே முதலாளித்துவ நெருக்கடியின் இரு பக்கங்கள் என்பதே கூட்டம் முழுவதிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட மையக் கருத்துருவாக இருந்தது.

ஜெர்ரி வைட், இந்த இனப்படுகொலைக்கு டெட்ராயிட்டில் வாகனத்துறை தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பை சுட்டிக்காட்டினார். “தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த வெறுப்புணர்வு உள்ளது. ... வாரன் டிரக் [டெட்ராய்டுக்கு வெளியே உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஒருங்கிணைப்பு ஆலை] தொழிலாளி ஒருவரை எனக்குத் தெரியும், அவர் மதிய உணவு அறையில் தனது சக தொழிலாளர்களிடம், “உங்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பாலஸ்தீனயர்களைக் கொல்வதற்காக ஏவுகணைகளை வாங்கப் போகிறார்கள்.”

ஆளும் உயரடுக்கின் போர் கொள்கைக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யும் முயற்சியில் தொழிற்சங்க எந்திரத்தின் பாத்திரத்தை வைட் சுட்டிக்காட்டினார். “பணவீக்கத்திற்கு எதிரான, ஆலை மூடல்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிரான அவர்களது அன்றாடப் போராட்டம், ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டம், போயிங் போன்று ஓய்வூதியங்களை மீட்சி செய்வதற்கான அவர்களின் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் போருக்கு எதிரான போராட்டத்துடன் அது நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, அதே பெருநிறுவனங்கள் தான் தொழிலாளர்கள் மீது ஒரு போரைத் தொடுத்து வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்ட வேண்டியது தொழிலாள வர்க்கமே தவிர, ஒன்று அல்லது மற்றொரு முதலாளித்துவ அரசு அல்ல என்று பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

“லெபனான், சிரியா, ஜோர்டான், துருக்கி, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிநவீன ஆயுதங்களுடன் ஆதரவளித்து பாலஸ்தீனியர்களின் சார்பாக சீனாவும் ரஷ்யாவும் தலையீடு செய்யுமா?” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் கேட்ட ஒரு கேள்விக்கு நோர்த் பின்வருமாறு பதிலளித்தார்:

உலகப் போருக்கான வேலைத்திட்டம் நம்மிடம் இல்லை. நாங்கள் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவையோ அல்லது அமெரிக்காவுக்கு எதிராக சீனாவையோ ஆதரிக்கவில்லை. இதற்கான பதில் இப்போதிருக்கும் ஆட்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் தங்கியிருக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதன் அடிப்படையில்தான் தங்கியுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் என்ற கருப்பொருளை அபிவிருத்தி செய்த கிஷோர், “ஏகாதிபத்தியத்தை எதிர்க்க தகைமை கொண்ட ஒரு சமூக சக்தி அங்கே இருக்கிறதா?” என்பதே இன்றியமையாத கேள்வி என்று குறிப்பிட்டார். அவர் கூறினார், ஆம், சர்வதேச தொழிலாள வர்க்கமே பதில். “அது புறநிலையாக அந்த சக்தியைக் கொண்டுள்ளது, ஆனால் அந்த சக்தியானது ஒழுங்கமைப்பின் மூலமாகவும், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் மூலமாகவும், அனைத்திற்கும் மேலாக அரசியல் முன்னோக்கு மற்றும் புரிதலின் மூலமாகவும் மட்டுமே அடையப்பட முடியும். அது தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.”

கூட்டத்தின் முடிவில், நோர்த் கூறினார், “ஏதாவதொரு வடிவத்தில் எழுகின்ற அடிப்படை கேள்வி இதுதான்: உங்களால் சற்று எளிமையான பாதையைக் கொண்டு வர முடியாதா? இதைவிட எளிமையான தீர்வு இல்லையா? சரி, நாம் பதிலளிக்கும் கேள்வி என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்தின் உயரத்தில் இருந்து பரந்த மக்களுக்கு பரந்த செல்வத்தை மாற்றாமல் நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் ஏதேனும் தீவிரமான தீர்வை நீங்கள் சிந்திக்க முடியுமா?”

பணக்காரர்கள், அதீத பணக்காரர்கள், தீங்கு விளைவிக்கும் பணக்காரர்கள் ஆகியோர் தங்கள் செல்வக் குவிப்பின் மீது எந்தவொரு தடையையும் ஏற்றுக்கொள்ளப் போகும் சூழ்நிலைகளின் தொகுப்பை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? வர்க்கங்கள் அத்தகைய முடிவுகளை எடுப்பதில்லை. எப்படியிருந்தாலும், இது அவர்களின் தனிப்பட்ட ஆசைகளின் கேள்வி கூட அல்ல. இது ஒரு பொருளாதார அமைப்பின் செயல்பாட்டைப் பற்றிய கேள்வி. முதலாளித்துவம் ஆதிக்கத்துக்காகப் பாடுபடுகிறது.

“மனிதகுல வரலாற்றில் மிக வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான வரலாற்றின் ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான், ஒவ்வொரு பெரிய காலகட்டத்திலும், அது ஒன்று-அல்லது மற்றொன்று. குறிப்பாக, ஒன்று மனிதகுலம் முன்னேறுகிறது அல்லது அழிவை எதிர்கொள்கிறது. சமூகப் புரட்சி சாத்தியமற்றது என்றால், மனிதகுலம் தப்பிப் பிழைப்பது சாத்தியமற்றது என்பதே அதன் பொருளாகும்” என்று நோர்த் குறிப்பிட்டார்.

“யாரிடமிருந்தும் அதிக முயற்சி தேவைப்படாத அரைகுறை நடவடிக்கைகள், தவறான தீர்வுகள் மற்றும் எளிதான பாதைகளுக்கான தேடலை ஒதுக்கி வையுங்கள்” என்று அவர் பார்வையாளர்களை வலியுறுத்தினார்.

காஸா இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது, ஒரு முழுத் தலைமுறைக்கும் ஒரு வரையறுக்கும் சமூக அனுபவமாக இருந்து வருகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும், உண்மையான நேரத்தில், உலக முதலாளித்துவ “ஜனநாயகங்களால்” சிறையில் அடைக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்கள் அழிக்கப்படுவதைக் கண்டு வருகின்றனர். அவர்கள் பார்க்கின்ற கொடூரமான காட்சிகள், 20 ஆம் நூற்றாண்டின் யூத இனப்படுகொலை மீண்டும் மீண்டும் நிகழ முடியாத ஒரு பிறழ்ச்சி என்ற நம்பிக்கை உட்பட, முந்தைய தலைமுறைகள் மீது ஆதிக்கம் செலுத்திய பிரமைகளை உடைக்கத் தொடங்கியுள்ளன.

காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மனிதகுலம் கடந்து வரும் நெருக்கடி குறித்த தீவிரமான மற்றும் வரலாற்று அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் பதிலளிப்பதற்கான தாகம் அதிகரித்து வருகிறது. இந்த கொடூரமான சோகம் மற்றும் கொடூரமான குற்றத்திலிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உருவடிவம் கொடுக்கும் மார்க்சிச பாரம்பரியத்திற்கு ஒரு புதிய வாசகர்கள் வருவார்கள்.

Loading