மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. இந்தப் போட்டி அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஆழத்தை மேலும் ஆழமாக்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில், ட்ரம்ப் முற்றிலும் பாசிசவாத அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கொலொராடோவின் அரோராவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, ட்ரம்ப், 'அந்நாட்டிற்குள் படையெடுத்து வெற்றி கொண்ட' புலம்பெயர்ந்தவர்களைக் கைது செய்து வெளியேற்ற அவர் '1798 அன்னிய எதிரிகள் சட்டத்தை கையிலெடுக்க' இருப்பதாக அறிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த ஞாயிறன்று, FOX நியூஸ் இன் மரியா பார்ட்டிரோமோ உடனான ஒரு நேர்காணலில், ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைக் காட்டிலும், 'உள்ளே இருந்து வரும் எதிரி தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது... நோய்வாய்ப்பட்ட மக்கள், தீவிர இடதுசாரி பைத்தியங்கள்' என்று அறிவித்தார். இந்த 'எதிரி' 'தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்புப் படையால், அல்லது உண்மையிலேயே அவசியமானால், இராணுவத்தால் எளிதாகக் கையாளப்பட வேண்டும்' என்று அவர் அறிவித்தார். அதாவது, அவர் ஒரு இராணுவ சர்வாதிகார அச்சுறுத்தலை மேற்கொண்டிருக்கிறார்.
ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவு சர்வாதிகாரத்தை விரும்புகிறது என்ற உண்மையை ட்ரம்பின் பாசிசவாத வெறித்தனங்கள் வெளிப்படுத்துகின்றன. இது உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் தேர்தலுக்கான பொதுப் பிரச்சாரத்தில் மிகவும் வெளிப்படையான வடிவத்தைக் காண்கிறது. இந்த தாக்குதல்கள், இடதுசாரிகள் மீதும், சோசலிசத்தின் மீதும், ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகள் மீதும் ட்ரம்பின் முன்பினும் அதிக பகிரங்கமான மற்றும் மனநிலை பிறழ்ந்த தாக்குதல்களுடன் அணி சேர்ந்துள்ளன.
இந்த நிலைமைகளின் கீழ், மற்றும் ஜனவரி 6, 2021 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட சமமான போட்டியைக் காட்டுகின்ற நிலையில், ட்ரம்ப் தேர்தல்களில் நன்கு வெற்றி பெறக்கூடும். இது பாசிசவாத சர்வாதிகாரத்திற்கு அங்கே ஒரு பாரிய தளம் இருக்கிறது என்பதாலோ அல்லது ட்ரம்புக்கு பெரும் உற்சாகம் இருக்கிறது என்பதாலோ அல்ல. மாறாக, அது முழு அரசியல் அமைப்புமுறையில் இருந்தும் பரந்த வெகுஜனங்களின் ஆழமான அந்நியப்படலையே வெளிப்படுத்திக் காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக, இது ஜனநாயகக் கட்சி மீதான ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டாகும்.
அமெரிக்காவில் நிலவும் ஆழ்ந்த சமூக விரக்திக்கு ஜனநாயகக் கட்சியால் விடையிறுக்க முடியாது. மாறாக, ட்ரம்பின் பாசிசவாத கிளர்ச்சிக்கு பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் விடையிறுப்பு இன்னும் கூடுதலாக வலதை நோக்கி நகர்வதாகும். தனது அமைச்சரவையில் குடியரசுக் கட்சியினரைச் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதாக ஹாரிஸ் பலமுறை கூறியுள்ளார். மேலும், அவர் டிக் செனி மற்றும் ஆல்பர்டோ கோன்சாலஸ் போன்ற போர்க் குற்றவாளிகளிடம் இருந்து ஒப்புதல்களைப் பெற்றுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினரின் மைய அக்கறை இதுதான்: 1) செல்வந்தர்களின் செல்வவளம் மற்றும் தனிச் சலுகைகளைப் பாதுகாப்பது, 2) அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, பைடென் நிர்வாகத்தின் கவனம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரைத் தூண்டிவிட்டு இப்போது போரை நடத்துவதிலும், மேலும், அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் பாரிய எதிர்ப்புகளைத் தூண்டியுள்ள, ஒராண்டுகளுக்கு மேலாக காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை நடத்துவதிலும் உள்ளது.
இஸ்ரேல் காஸாவில் அதன் இனப்படுகொலையையும், லெபனான் மீதான குண்டுவீச்சையும் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், (இது ஒவ்வொரு நாளும் புதிய பயங்கரங்களைக் கொண்டு வருகிறது) தேர்தலுக்கு முன்னதாகவே, போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மீதான அதன் அவமதிப்பை வெளிப்படுத்தி, ஈரானை இலக்கு வைத்து ஏவுகணை அமைப்பை இயக்குவதற்கு 100 துருப்புக்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஓராண்டிற்கு முன்பு இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவம் நேரடியாக அனுப்பப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த குறிப்பிடத்தக்க கருத்துக்கணிப்பு, லத்தீன் மற்றும் கறுப்பின வாக்காளர்களிடையே கமலா ஹாரிஸ் குறிப்பிடத்தக்க செல்வாக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. ஜனநாயகக் கட்சியினர் இன்னமும் கணிசமான பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், கறுப்பின வாக்காளர்களிடையே 78 முதல் 15 சதவிகிதம், ஹிஸ்பானிய வாக்காளர்களிடையே 56 சதவிகிதத்தில் இருந்து 37 சதவிகிதம் என்று குறைந்திருந்தாலும், இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
பல தசாப்தங்களாக, ஜனநாயகக் கட்சியினர், பிரதானமாக இனம் மற்றும் பாலின வழிகளில் நடுத்தர வர்க்கத்தின் அதிக தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுக்கு முறையீடு செய்வதன் மூலமாக, வெவ்வேறு அடையாள குழுக்களின் அடிப்படையில் ஒரு 'கூட்டணியை' கட்டியெழுப்புவதைச் சுற்றி அவர்களின் தேர்தல் மூலோபாயத்தை கட்டமைத்து வந்துள்ளனர். இது, வெள்ளையின தொழிலாளர்கள் உட்பட, அனைத்து தொழிலாளர்களின் சமூக கோபத்தை ட்ரம்ப் சுரண்டக் கூடிய நிலைமைகளை உருவாக்கி உள்ளது.
கடந்த வாரம், ஜனநாயகக் கட்சியினர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெளியில் கொண்டு வந்து, ஹாரிஸை ஆதரிக்காததற்காக கறுப்பின ஆண்களைத் துன்புறுத்தி, ஜனநாயகக் கட்சியினரை தங்கள் பொருளாதார நலன்களின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்களின் இன அடையாளத்தின் அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் வாக்குகளில் வீழ்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவில் நிலவும் சமூக அவலத்தைக் குறித்து முற்றிலும் அலட்சியமாக உள்ளனர் என்ற தோற்றத்தை கொடுக்கின்றனர். பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது, ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன, பாரிய பணிநீக்கங்கள் தொழில்துறைகள் முழுவதிலும் பெருகிக் கொண்டிருக்கின்றன. போயிங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு, நிறுவனத்தின் விடையிறுப்பாக 17,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டங்களை போயிங் சமீபத்தில் அறிவித்தது. Stellantis வாரன் டிரக் அசெம்பிளி ஆலையில் 2,000க்கும் மேற்பட்ட வேலைகளை வெட்டித் தள்ளியது, ஜெனரல் மோட்டார்ஸ் கன்சாஸ் நகரத்தில் உள்ள அதன் Fairfax அசெம்பிளி ஆலையில் நூற்றுக்கணக்கான பணிநீக்கங்களை அறிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி சமூக நெருக்கடிக்கு சீர்திருத்தக் கொள்கைகளுடன் கூட பதிலளிக்காது மற்றும் பதிலளிக்க முடியாது. இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியாகும். இது ஒரு வசதியான உயர்-நடுத்தர வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகிறது, இது இனம் மற்றும் பாலின பிரச்சினைகளில் வெறித்தனமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நீட்டிக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் விளைவும் உச்சக்கட்டமும் ஆகும். ஜனநாயகக் கட்சி எந்தவொரு குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டு அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் 'புதிய ஒப்பந்தம்', ஜோன் எஃப். கென்னடியின் 'புதிய எல்லை' மற்றும் லிண்டன் பி. ஜோன்சனின் 'மாபெரும் சமூகம்' ஆகியவற்றின் காலகட்டம், கடந்த தொலைதூர காலத்துக்கு உரியதாக ஆகியுள்ளது.
'நம்பிக்கை மற்றும் மாற்றத்தின்' வேட்பாளரான ஒபாமாவைப் பொறுத்த வரையில், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளையும் வேலைகளையும் இழந்த அதேவேளையில், வோல் ஸ்ட்ரீட்டுக்கு ட்ரில்லியன் கணக்கான பணத்தை வழங்கிய, 2008 நிதியியல் நெருக்கடியைத் தொடர்ந்து வங்கிகளுக்கு பிணையெடுப்பு வழங்குவதே அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்திய கொள்கையாக இருந்தது. ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகள், இது அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் சமூக அழிவு நிதியாக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது, மேலும் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான தன்மை (தொழிலாளர்களை 'இழிவானவர்களின் கூடை' என்று கண்டனம் செய்தார்) 2016 இல் ட்ரம்பின் வெற்றிக்கான நிலைமைகளை உருவாக்கியது.
பைடென் நிர்வாகத்தின் மற்றும் எதிர்கால ஹாரிஸ் நிர்வாகத்தின் முக்கிய முன்னுரிமை என்பது போரின் ஒரு பாரிய விரிவாக்கமாகும். ஜனவரி 6 இல், ட்ரம்ப் முயற்சித்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் போரை தொடுப்பதற்கு ஒரு 'வலுவான' குடியரசுக் கட்சிக்கான தனது விருப்பத்தை பைடென் வெளிப்படுத்தினார்.
ஜனநாயகக் கட்சியினரின் முற்றிலும் பிற்போக்குத்தனமான, வலதுசாரி வேலைத்திட்டம் தான், முதலாளித்துவ ஆட்சியின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்குள் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பற்றிய உண்மையான வெளிப்பாடு இல்லாத சூழ்நிலையில், சமூக ஏமாற்றங்களையும் கோபங்களையும் சுரண்டிக் கொள்ள ட்ரம்ப்பை அனுமதிக்கிறது.
குடியரசுக் கட்சியினரை எதிர்க்க தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியினரை ஆதரிக்க வேண்டும் என்ற வாதமான 'குறைந்த தீமைவாதம்' என்ற அரசியல், பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகாரத்தின் அபாயத்தை மட்டுமே ஆழப்படுத்த செய்துள்ளது. காஸா இனப்படுகொலைக்கான எதிர்ப்பை ஒடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், அணுஆயுத அழிவை அச்சுறுத்தும் ஒரு போரை வெளிநாட்டில் ஜனநாயகக் கட்சி தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், ஹாரிஸ் நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடரும் என்பதை நிரூபிக்கிறது.
மிகவும் கொழுத்த-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நோயுற்ற அரசியல் அமைப்பு முறையை, இந்த தேர்தல் செயல்முறை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கம் முழுவதிலும் வளர்ந்து வரும் ஆழ்ந்த சமூகக் கோபமும், எதிர்ப்பும் தற்போதைய நிறுவனமயப்படுத்தப்பட்ட இரு கட்சி முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையில் உண்மையான மற்றும் சாத்தியமான வெளிப்பாட்டைக் காணவில்லை.
போயிங் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், தொழிலாள வர்க்கத்தின் இதர பிரிவுகள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியின் தெளிவான அறிகுறிகளாகும். இது, தொழிலாள வர்க்கமானது, தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட பாடுபடுகிறது என்பதைக் குறிக்கிறது.
முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடிக்கான மூல காரணத்தைத் தீர்க்காத அரைகுறை நடவடிக்கைகள் மற்றும் தவறான தீர்வுகளைத் தேடுவதை, ஒதுக்கி வைப்பது அவசியமாகும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ தன்னலக்குழுவிடம் இருந்து அதிகாரத்தை எடுக்க, புதிய பாதையை வகுப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த தேர்தல்களிலும் அதைத் தொடர்ந்து வரும் காலகட்டத்திலும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வரலாற்றுப் பணி இதுவாகும்.