நேட்டோ அணு ஆயுத பயிற்சிகளை நடத்துகையில், பேர்லினில் பைடெனின் உக்ரேன் உச்சிமாநாட்டை மௌனத்தின் சதி மூடிமறைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பதவியிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடென், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், இங்கிலாந்து பிரதம மந்திரி சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் உக்ரேன் போர் குறித்த அவசர உச்சிமாநாட்டிற்காக இன்று பேர்லினில் சந்திக்க உள்ளனர். இன்றுவரை, பேர்லின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் உச்சிமாநாட்டின் திட்டநிரல் என்னவாக இருக்கும் என்பது குறித்து எந்த உறுதியான தகவலையும் வழங்கவில்லை.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுவதை ஜனாதிபதி ஜோ பைடென் கேட்கிறார், மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை. [AP Photo/Susan Walsh]

எவ்வாறிருப்பினும், இந்த நான்கு முன்னணி நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு சர்வதேச இராணுவ விரிவாக்கத்துக்கான திட்டங்களை விவாதிக்க தெளிவாக ஒன்றுகூடி வருகின்றன. காஸாவில் இனப்படுகொலை, லெபனான் மீதான இஸ்ரேலின் படையெடுப்பு மற்றும் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கான அழைப்பு இடம்பெற்றுள்ள நிலையில், பென்டகன் பகிரங்கமாக அமெரிக்க துருப்புக்களை இஸ்ரேலுக்கு அனுப்பிய சில நாட்களுக்குப் பின்னர் இது வந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ரஷ்யா மீது பாரிய நீண்டதூர குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கான ஒரு பிரமாண்டமான பொறுப்பற்ற திட்டம் குறித்து விவாதிக்க பைடென் முதலில் ஜேர்மனிக்கு பயணிப்பதாக இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதியாக பைடெனின் கடைசிப் பயணமான ஐரோப்பாவுக்கான இந்தப் பயணம், ரஷ்யாவிற்குள் ஆழமான அமெரிக்க, ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏவுகணைகள் மூலம் உக்ரேன் தாக்குதல்களை நடத்துவதற்கு, உக்ரேனை அங்கீகரிப்பது பற்றி கலந்துரையாட, ராம்ஸ்டீன் விமான தளத்தில் நேட்டோ உச்சி மாநாடாக முன்னதாக திட்டமிடப்பட்டது. எவ்வாறிருப்பினும், ராம்ஸ்டீன் உச்சிமாநாடு கடந்த வாரம் திடீரென இரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக பேர்லினில் நான்கு நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. இதில், இதர நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு கிடையாது.

பேர்லின் உச்சி மாநாட்டின் திட்டநிரல் குறித்து மௌனம் சாதிப்பது, பிரதான நேட்டோ சக்திகள் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளையும், இன்னும் பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்துக்கான அவற்றின் திட்டத்தையும் மூடிமறைக்கும் ஒரு சூழ்ச்சிக்கு நிகரானதாகும்.

மில்டன் சூறாவளிக்கான அவசரகால விடையிறுப்பின் போது அமெரிக்காவில் தங்குவதற்காக ராம்ஸ்டீன் உச்சிமாநாட்டை பைடென் வெளிப்படையாக இரத்து செய்திருந்தாலும், நேட்டோ ஏவுகணை தாக்குதல்களின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்யாவின் அணு ஆயுத கோட்பாட்டை மாற்றிய சிறிது நேரத்திலேயே இந்த மாநாடு இடம்பெறுகிறது. அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் ரஷ்யா மீது அணு ஆயுதம் இல்லாத ஒரு சக்தி நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்று கிரெம்ளின் அறிவித்தது.

அணுஆயுதப் போர் அச்சுறுத்தலை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், நேட்டோ இப்போது அக்டோபர் 28 இல் முடிவடைய உள்ள Steadfast Noon என்ற குறியீட்டுப் பெயரில் இரண்டு வார கால அணுஆயுத போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. இது, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், பிரிட்டன் மற்றும் வட கடல் மீது தாக்குதல் தந்திரோபாயங்களில் பயிற்சி செய்வதை உள்ளடக்கி 60 அணு ஆயுதமேந்திய விமானங்கள் ஈடுபட்டுள்ளன. Steadfast Noon குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே செய்தியாளர்களிடம், “ஒரு நிச்சயமற்ற உலகில், நாம் நமது பாதுகாப்பை சோதித்துப் பார்ப்பதும் நமது பாதுகாப்பை பலப்படுத்துவதும் இன்றியமையாததாகும், இதனால் நேட்டோ தயாராக உள்ளது என்பதையும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க இயலும் என்பதையும் நமது எதிரிகள் அறிந்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

இங்கிலாந்தின் விமானந்தாங்கி கப்பலான எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தலைமையிலான 20 கப்பல்கள் கொண்ட அதிரடிப்படையுடன், பிரிட்டனின் வடகிழக்கு கடற் பகுதிகளில் இரண்டு வார கால “தாக்குதல் போர்வீரர் பயிற்சி” என்ற பேரிலான கடற்படை போர் பயிற்சிகளையும் நேட்டோ நடத்தி வருகிறது.

நேற்று, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்காக என்று கூறி, கியேவ் நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பற்ற, ஐந்து அம்ச “வெற்றித் திட்டத்தை” முன்வைத்தார். அவரது திட்டம் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கும், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கு நேட்டோ நாடுகளின் ஆயுதங்களை விருப்பப்படி பயன்படுத்துவதற்கும், மற்றும் ஒரு “அணுஆயுதமற்ற தடுப்பு தொகுப்பை” அபிவிருத்தி செய்வதற்கும் அழைப்பு விடுத்தது. ஆனால், அதன் உள்ளடக்கத்தை அவர் குறிப்பிடவில்லை.

அவரது நான்காவது அம்சமாக, ஜெலென்ஸ்கி உக்ரேனின் “டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள முக்கிய கனிமங்கள் உட்பட இயற்கை வளங்கள்” குறித்து பெருமை பேசினார். வெளிப்படையாக இந்த ஆதார வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலமாக, அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ சக்திகளுக்கு “முதலீட்டின் மீதான வருவாயை” வழங்க அவர் மறைமுகமாக சூளுரைத்தார். இது, “ஒரு இரகசிய இணைப்பில், குறிப்பிட்ட பங்காளிகளுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறினார். சுருக்கமாக, ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிலிருந்து உக்ரேனிய சுதந்திரத்திற்காக போராடுவதாக கூறிக்கொண்டாலும், உண்மையில் அதன் வளங்களை நேட்டோ சக்திகளின் முக்கிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுகிறார்.

இறுதியாக, போருக்குப் பின்னர் நேட்டோ படைகளுடன் உக்ரேனிய துருப்புகளை ஒருங்கிணைக்க அவர் அழைப்பு விடுத்தார். இது “போரை ஒரு நியாயமான முடிவுக்கு கொண்டு வர, ஒரு நேர்மையான இராஜதந்திர செயல்முறையில் சேர” ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

சர்வதேச ஊடகங்களில் ஜெலென்ஸ்கியின் முன்மொழிவுகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியூட்டும் வகையில் மேலோட்டமாக உள்ளன. சமீபத்திய மாதங்களில், நேட்டோ அரசுத் தலைவர்களும் நேற்று ஜெலென்ஸ்கி முன்வைத்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் என்பது பதிவு செய்ய வேண்டிய விடயமாகும். நேட்டோ நாடுகளின் ஆளும் உயரடுக்கின் கொள்கை பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக அவை தெளிவாக இருந்தாலும், செய்தி ஊடகமும் அரசியல் ஸ்தாபனமும் ஜெலென்ஸ்கியின் கருத்துக்களில் இருந்து வரும் வெளிப்படையான கேள்விகள் எதையும் கேட்கவில்லை.

ரஷ்யா மீது குண்டுவீச நேட்டோ உக்ரேனை ஒரு ஏவுதளமாக பயன்படுத்தினால் எத்தனை மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்பது குறித்து பைடென், ஷொல்ஸ், ஸ்டார்மர் மற்றும் மக்ரோன் என்ன மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறார்கள்? உக்ரேன் நேட்டோவில் சேர்ந்தால், நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் என்று எவ்வளவு விரைவில் அவர்கள் நம்புகிறார்கள்? நேட்டோவில் உக்ரேன் இணைவதைத் தடுப்பதற்காகவும், ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ துருப்புகளை நிறுத்த அனுமதிப்பதற்காகவும் கிரெம்ளின் போருக்குச் சென்ற நிலையில், இந்த அடிப்படையில் ஜெலென்ஸ்கி எவ்வாறு அமைதியை எட்ட விரும்புகிறார்?

அதே நேரத்தில், முக்கிய நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் எதுவும் உக்ரேனை இப்போது நேட்டோவில் இணைத்துக்கொள்ள அனுமதிக்கவோ அல்லது உக்ரேன் தங்கள் ஏவுகணைகளை ரஷ்யா மீதான நீண்ட தூரத் தாக்குதலுக்குப் பயன்படுத்தவோ குறைந்தபட்சம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை என்ற உண்மையிலிருந்து தொடங்கி, ஜெலென்ஸ்கியின் “வெற்றித் திட்டம்” தெளிவாக பெரும் தடைகளை எதிர்கொள்கிறது.

மேலும், உக்ரேனில் தேர்தல்களை நிறுத்தி வைத்து சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வரும் ஜெலென்ஸ்கிக்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கியேவில் இதுவரையில் நடந்த மிகப்பெரிய போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒன்றில், ஜெலென்ஸ்கிக்கு எதிராக ஆயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்துச் சென்றதாகவும், அவர்களின் உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறியக் கோரியதாகவும் நேற்று ஹ்ரோமட்ஸ்க்க தொலைக்காட்சி அறிவித்தது. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ரஷ்யாவை ஆக்கிரமிக்க முயன்று தோல்வியுற்ற உக்ரேனிய படையினர்களின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள் குர்ஸ்க் அருகே பீரங்கி தாக்குதலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்கள் என்று கூறப்படும் ஒரு அறிக்கை நேற்று டெலிகிராமில் பரவலாக சுற்றுக்கு விடப்பட்டது. இந்தப் போரில், உக்ரேன் அதிர்ச்சியூட்டும் வகையில் 1.8 மில்லியன் இழப்புக்களை சந்தித்துள்ளது, இதில் 700,000 க்கும் அதிகமானவர்கள் போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என்பதைக் காட்டுகிறது. ஜெலென்ஸ்கியின் ஆட்சி போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒழுங்கு முறையாக புதுப்பிக்காததால், இந்த எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவது சாத்தியமில்லை. எவ்வாறாயினும், இது நம்பத்தகுந்ததே: ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர், டக்ளஸ் மெக்கிரிகோர் போன்ற அமெரிக்க இராணுவ பண்டிதர்கள் ஏற்கனவே பென்டகனின் விளக்கங்களை மேற்கோள் காட்டி, உக்ரேன் 300,000 க்கும் அதிகமான இறப்புகளைச் சந்தித்ததாகக் கூறினர்.

உக்ரேனில், ரஷ்யாவுடனான ஒரு நேரடி போருக்கு அமெரிக்க-நேட்டோ துருப்புக்களின் பாரிய தலையீடு இல்லாவிட்டால், அது நேரடியாக அணுவாயுத போருக்கு தீவிரமடையும் அபாயத்தை முன்வைக்கிறது.

உக்ரேன் குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் பாரிய நெருக்கடியும் பீதியும் உள்ளது. கடந்த வாரம், முன்னாள் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உக்ரேன் ரஷ்யாவுடன் ஒரு சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வாதிட்டார். போர் தொடங்கிய சிறிது காலத்திற்குப் பின்னர் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு உடன்பட்ட பின்னர், நேட்டோ சக்திகளே அதை நிராகரிக்க உக்ரேனை நிர்பந்தித்தன. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், போரில் இறந்துகொண்டிருக்கும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் காப்பாற்றியிருக்க கூடிய, இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தார்.

பிரெஞ்சு நாளிதழ் லூ மொன்ட் இல் நேற்று அவர் வழமையாக எழுதி வந்த கட்டுரையில், சில்வி காஃப்மான், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவி மந்தநிலைக்கும், இறுதியில் ஒரு ரஷ்ய வெற்றிக்கும் இட்டுச் செல்லும் சாத்தியக்கூறு குறித்து ஊகித்துள்ளார். “மோசமான விளைவுகளுக்கு தயாராக இருக்க, இன்னமும் மூன்று வாரங்கள் உள்ளன,” என்று அவர் எழுதினார்.

“உக்ரேனின் தோல்வி ஐரோப்பாவின் தோல்வியாகவும் இருக்கும். ஒரு ரஷ்ய வெற்றி ஐரோப்பாவில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் இப்போது கற்பனை செய்து பார்க்க வேண்டும்,” என்று காஃப்மான் தொடர்ந்து கூறினார். அத்தகைய சூழ்நிலையில், “அமெரிக்க உதவி இழப்பை ஐரோப்பியர்களால் ஈடுசெய்ய முடியாது. ரஷ்ய தாக்குதல்களை எதிர்த்து நிற்பது உக்ரேனிய இராணுவத்திற்கு மேலும் மேலும் கடினமாக இருக்கும்.” சில பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் திட்டங்களை கைவிடக்கூடும் என்று அவர் ஊகித்தார். இத்தாலி, ஹங்கேரி அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், உக்ரேன் போரைக் கைவிட்டால் ஐரோப்பிய ஒன்றியமே பிளவுபடக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆளும் வட்டாரங்களில் தோல்வி மற்றும் பேச்சுவார்த்தைகள் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்து வந்தாலும், பிரதான ஏகாதிபத்திய சக்திகள் தீவிரப்படுத்திவரும் கொள்கையில் உறுதியாக உள்ளன. ரஷ்ய துருப்புகள் ஏற்கனவே சிரியா மற்றும் ஈரானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் அல்லது பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட அமெரிக்க-நேட்டோ இராணுவ விரிவாக்கம், மிக விரைவாக ரஷ்யாவுடன் ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும். உண்மையில், உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு இரண்டுமே ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக நேட்டோ நடத்தி வருகின்ற ஓர் உலகளாவிய மோதலின் முன் அரங்குகளாகும்.

உக்ரேனில் போரை விரிவாக்குவதற்கான நேட்டோ திட்டங்களுக்கும் காஸாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற பாரிய எதிர்ப்பை அணித்திரட்டுவதே தீர்மானகரமான பிரச்சினையாகும். இந்தாண்டு தொடக்கத்தில் யூரேசியா குழுவின் கருத்துக்கணிப்பின்படி, 91 சதவீத அமெரிக்கர்களும் மேற்கு ஐரோப்பியர்களில் 89 சதவீதத்தினரும் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ விரிவாக்கத்துக்கான திட்டங்களை எதிர்க்கின்றனர். அமெரிக்காவும் ஐரோப்பாவும் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவிட்ட ஒரு கறைபடிந்த போரில் வீணடித்துள்ளன என்பது தெளிவாகும் போது, சமூக செலவினங்கள் மற்றும் நிஜமான ஊதியங்கள் மீதான தாக்குதல்களைக் கொண்டு இந்த செலவினங்களுக்கு நிதியாதாரம் வழங்குகின்றன என்பது தெளிவாகும் போது மட்டுமே இந்த கோபம் வளரும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தின் முன்னோக்கில், போரை நிறுத்துவதற்கும், அதற்குத் தலைமை தாங்கிவரும் ஊழல்மிக்க மற்றும் பாரிய பொறுப்பற்ற ஆளும் உயரடுக்கின் கைகளில் இருந்து அதிகாரத்தைப் கைப்பற்றுவதற்கும் அழைப்பு விடுத்து, ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கம் தொழிலாள வர்க்கத்திலும், பணியிடங்களிலும் மற்றும் பள்ளிகளிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading