முன்னோக்கு

"நாட்டுக்குள் இருக்கும் எதிரி" மீதான இராணுவ ஒடுக்குமுறை, ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியான நேர்காணல்கள் மற்றும் பொது அறிக்கைகளில், வன்முறை அடக்குமுறையின் அச்சுறுத்தல்களை விரிவுபடுத்தியுள்ள குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோர் மீது கவனம் செலுத்தி, தொழிலாள வர்க்கம், இளைஞர்களின் பரந்த பிரிவுகள், ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது பாசிசக் கொள்கைகளை எதிர்க்கும் எவரையும் தனது அச்சுறுத்தலுக்கு உள்ளடக்கியிருந்தார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2024 அன்று அட்லாண்டாவில் உள்ள கோப் எனர்ஜி பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் ஒரு பிரச்சார நிகழ்வில் பேசுகிறார்.  [AP Photo/Alex Brandon]

சமீபத்திய அச்சுறுத்தல்கள், Fox ன் நிகழ்ச்சியான “சண்டே மோர்னிங் ஃபியூச்சர்ஸ்” இல் ட்ரம்ப் தோன்றியதில் இருந்து தொடங்கின. அங்கு அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மரியா பார்ட்டிரோமோவிடம், எந்தவொரு வெளி சக்தியையும் விட “தீவிர-இடதுசாரி பைத்தியங்கள்” அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அவர்களுக்கு எதிராக நகர்வதற்கு தேசிய பாதுகாப்புப் படை அல்லது வழமையான இராணுவம் அவசியப்படும் என்றும் தெரிவித்தார்.

“நான் எப்போதும் சொல்வேன், எங்களுக்கு இரண்டு எதிரிகள் உள்ளனர்,” என்று அவர் கூறினார். மேலும், “நமக்கு வெளிப்புற எதிரி இருக்கிறார், அதே நேரம் நமக்கு உள்ளிருந்து எதிரி இருக்கிறார், உள்ளிருந்து வரும் எதிரி, எனது கருத்துப்படி, சீனா, ரஷ்யா மற்றும் இந்த நாடுகள் அனைத்தையும் விட மிகவும் அபாயகரமானவர்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, டவுன்ஹால் தேர்தல் கூட்டத்தில் கலிபோர்னியாவின் பிரதிநிதி ஆடம் ஸ்கிஃப் மற்றும் முன்னாள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரை “தீயவர்கள்” மற்றும் “ஆபத்தானவர்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டு அவர்களை தனிமைப்படுத்தினார். “அவர்கள் மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் பாசிஸ்டுகள், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு எதிரிகளைக் கையாள்வது முக்கியமானது என்று அறிவித்த அவர், உங்களுக்கு தெரியும், “பெலோசிஸ் மிகவும் கடினமானவர், இவர்கள், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள், அவர்கள் மிகவும் தீயவர்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஷிஃப், பெலோசி, கமலா ஹாரிஸ் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடென் போன்ற வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகளை, சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தின் வக்கீல்கள் என்று கூறுவது, 78 வயதான ட்ரம்பின் தற்போதைய மனநல வீழ்ச்சிக்கு சான்றாக தோன்றலாம். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிசப் பிரிவிற்கு பிரதானமானவையாகும். அவர்கள், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு பாசாங்குத்தனமான அனுதாபம் கூட புரட்சிக்கு தூண்டுதலாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப், செவ்வாயன்று சிக்காகோ பொருளாதார மன்றத்தில் பெருநிறுவன பார்வையாளர்கள் முன் தன் அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினார். அங்கு அவர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க உறுதியளிக்க மறுத்து, தன்னுடைய எதிரிகளுக்கு எதிராக இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் தன் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். ப்ளூம்பெர்க் நியூஸ் மதிப்பீட்டாளர் ஜோன் மிக்லெத்வைட், ட்ரம்பிடம் அமைதியான அதிகார மாற்றத்தை ஆதரிப்பீர்களா என்று கேட்டபோது, 2020 இல், “நீங்கள் அமைதியான அதிகார பரிமாற்றத்தைக் கொண்டிருந்தீர்கள்” என்று இதற்கு ட்ரம்ப் பதிலளித்தார். ஜனவரி 6 அன்று அவரது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததால், பைடென் பதவியேற்பு நடந்து கொண்டிருந்தபோது, அவர் வாஷிங்டனை விட்டு வெளியேறினார் என்ற உண்மையை அவர் குறிப்பிடுகிறார்.

முன்னதாக, கலிபோர்னியாவின் கோச்செல்லாவில் சனிக்கிழமை மாலை பேரணி ஒன்றில், ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களை பாரியளவில் நாடுகடத்துவதற்கான அவரின் “ஆபரேஷன் அரோரா” திட்டத்தை விவரித்தார். “நாங்கள் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் இருப்பது போல் இருக்கிறோம்” என்று கூறிய அவர், தேர்தல் நாளான நவம்பர் 5 “விடுதலைக்கான நாள்” என்று கூறினார். ட்ரம்பிடம் இருந்து வரும் இத்தகைய மொழி ஏற்கனவே வன்முறையின் முன்னோடியாக இருந்து வருகிறது. கோவிட்-19 ஊரடங்கின் போது “மிச்சிகன் மற்றும் பல மாநிலங்களை விடுவிக்க” ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த போது, பாசிசவாதிகள் அரை-தானியங்கி ஆயுதங்களுடன் லான்சிங் மற்றும் பிற இடங்களிலுள்ள மாநில தலைநகர்களில் அணிதிரண்டனர்.

நியூ யோர்க் டைம்ஸ், வெளிப்படையான எச்சரிக்கையுடன் இதனை பின்வருமாறு குறிப்பிட்டது, “அமெரிக்கக் குடிமக்கள் அவரது தேர்வை எதிர்த்ததால், இராணுவத்தை அவர்கள் மீது திருப்புவதற்கு முன்னெப்போதும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் —ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒருபுறம் இருக்கட்டும்— வெளிப்படையாகப் பரிந்துரைத்ததில்லை. ட்ரம்ப் அவரது அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், வாக்காளர்களுக்கு மிகவும் வித்தியாசமான, மற்றும் மிகவும் குறைந்த ஜனநாயக வடிவிலான அமெரிக்க அரசாங்கத்திற்கான தெரிவை வழங்கி வருகிறார்.”

டைம்ஸ் குறிப்பிட்டதுக்கு மாறாக, ட்ரம்ப் இதை ஒரு “தெரிவாக” வாக்காளர்களுக்கு வழங்கவில்லை. மாறாக, இராணுவ-உளவுத்துறை எந்திரம், உச்ச நீதிமன்றம், பாசிசவாதிகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் வட்டாரங்களில் உள்ள அவரது கூட்டாளிகளுக்கு, தேர்தலைக் கடத்துவதற்கும் வாக்காளர்களுக்கு எந்த விருப்பத்தேர்வையும் மறுப்பதற்கும், தேர்தலின் போதோ அல்லது உடனடியாகவோ அதில் தலையீடு செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர் சமிக்ஞை செய்து கொண்டிருக்கிறார்.

ட்ரம்பின் கருத்துக்கள், நீண்டகால வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் பாப் வூட்வார்ட் எழுதிய போர் என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்ட சிறிது காலத்துக்கு பின்னர் வந்துள்ளன. இதில் ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டங்கள் குறித்து அமெரிக்க தலைநகரில் பல முன்னணி பிரமுகர்களுடனான நேர்காணல்களும் உள்ளடங்கும். 2019 இல் முப்படைகளின் கூட்டுத் தளபதியாக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட ஜெனரல் மார்க் மில்லி, வூட்வார்ட்டிடம் கூறுகையில், முன்னாள் தலைமைத் தளபதி “மையத்தில் இருக்கும் பாசிசவாதி” என்று கூறினார்.

எதேச்சதிகார வன்முறையை பகிரங்கமாக அரவணைப்பதில் ட்ரம்ப், அவரது முக்கிய பில்லியனர் ஆதரவாளர்களின் வலியுறுத்தல்களுக்கு விடையிறுத்து வருகிறார். அவர்கள் சமீபத்தில் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு 220 மில்லியன் டாலரை பாய்ச்சினர். இது நிதி திரட்டும் துறையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹாரிஸை விட கணிசமாக பின்தங்கியுள்ளது. ட்ரம்புக்காக தொடர்ச்சியான பொது பிரச்சார நிகழ்வுகளைத் தொடங்கியுள்ள எலோன் மஸ்க், அத்துடன் லாஸ் வேகாஸ் சூதாட்ட அதிபரின் விதவை மனைவியான பில்லியனர் சியோனிஸ்ட் மிரியம் அடெல்சன் மற்றும் அதிவலது பொட்டலமிடல் பில்லியனர் ரிச்சர்ட் உஹ்லைன் ஆகியோரிடம் இருந்து வந்த 75 மில்லியன் டாலரும் இதில் உள்ளடங்கும்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இப்பிரிவு, ஏகாதிபத்தியப் போர், பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் இயக்கம் குறித்து தெளிவாகப் பீதியடைந்துள்ளது. காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான போயிங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் மாணவர் போராட்டங்கள் போன்ற நிகழ்வுகளை அவர்கள் பார்க்கிறார்கள். மேலும் சமூகப் புரட்சி குறித்த கொடுங் கனவுகளையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

பெயரளவிலான எதிர் தரப்பான ஹாரிஸ், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போலவே முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் வேலைத்திட்டத்திற்கு மூர்க்கமாக பொறுப்பேற்றுள்ளனர். வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்களையும், ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களைத் தவறாக வழிநடத்தவும், நோக்குநிலை பிறழச் செய்யவும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற போலி-இடது குழுக்கள் மற்றும் பிரமுகர்களை நம்பி, வேறுபட்ட தந்திரோபாயத்தை மட்டுமே அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ட்ரம்பின் வன்முறை மற்றும் பாரிய ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு ஜனநாயகக் கட்சியினரின் அரைகுறை மற்றும் முதுகெலும்பற்ற விடையிறுப்பை இந்த அடிப்படை வர்க்க உடன்பாடு விளக்குகிறது. 2024 தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மாட்டார் என்று வெளியேறவிருக்கும் ஜனாதிபதி பைடென், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் எச்சரித்த பல வாரங்களுக்குப் பின்னர், ஹாரிஸ்-வால்ஸ் பிரச்சாரம் பாசிசவாத அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இந்த வாரம் தான், திங்களன்று பென்சில்வேனியாவிலுள்ள எரி என்ற இடத்தில் நடந்த ஒரு பேரணியில், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புப் படை அல்லது இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான ட்ரம்பின் அழைப்பின் மீது ஹாரிஸ் கவனத்தை செலுத்தினார். மேலும் அவர் ட்ரம்பை “கட்டுப்பாடற்றவர்” மற்றும் மனநிலை சரியில்லாதவர் என்று விவரிப்பதோடு தனது விமர்சனத்தை மட்டுப்படுத்திக் கொண்டார்.

கறுப்பின பேச்சு வானொலி தொகுப்பாளர் சார்லமேன் தா காட் கூட்டிய நகர அரங்க கூட்டத்தில் செவ்வாயன்று தோன்றிய ஹாரிஸ், ட்ரம்பின் அரசியல் நோக்குநிலையை அதன் சரியான பெயரால் அழைக்க, அவரது விருப்பத்திற்கு எதிராக தூண்டப்பட வேண்டியிருந்தது. “மற்றொன்று பாசிசம் பற்றியது” என்று சார்லமேன் கூறினார். மேலும், “ஏன் நாம் அதை சொல்ல முடியாது?” என்று அவர் கேட்டபோது, மறைக்க முடியாத தயக்கத்துடன் “ஆம், நாங்கள் அதைச் சொல்ல முடியும்” என்று ஹாரிஸ் பதிலளித்தார்.

உத்தியோகபூர்வ அரசியலில் ஏகபோக உரிமை கொண்டுள்ள இரு முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு சமமான விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. சிக்காகோ வணிக பார்வையாளர்களுக்கு முன்னால் தோன்றிய ட்ரம்ப், வாகனத்துறை தொழிலாளர்களின் வேலை மிகவும் எளிமையாக இருப்பதாகவும், எந்தக் குழந்தையும் இதைச் செய்ய முடியும் என்றும் கூறி கேலி செய்தார். ஹாரிஸ் அவரது பங்கிற்கு, ஆலைகளுக்குள் வாகனத்துறை முதலாளிகளின் போலிஸ் படையாக சேவையாற்றிவரும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அரவணைக்கிறார்.

நவம்பர் 5 தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்தில், பல மாநிலங்களில் ஏற்கனவே முன்கூட்டிய வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கையில், அமெரிக்காவிற்குள் அரசியல் பதட்டங்கள் ஒரு வெடிக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கமானது, அதன் செல்வவளத்தையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான உறுதியை, ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் மிகவும் கொடூரமான மொழியில் வெளிப்படுத்துகின்றனர். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரைத் தூண்டிவிட்டு, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை செயல்படுத்தி, இப்போது மத்திய கிழக்கில் ஒரு பொதுப் போராக உருமாறிக்கொண்டிருக்கும் அதே மிருகத்தனத்தை ஜனநாயகக் கட்சியினர் செயல்பாட்டில் காட்டுகின்றனர்.

நவம்பர் 5 அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்டப் போவதில்லை. மாறாக அது ஒரு புதிய கட்டத்தை மட்டுமே குறிக்கும். ஹாரிஸ் வெற்றி பெறக்கூடும் என்றால், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் வாக்கு எண்ணிக்கையை இழுத்தடிக்க தயாரிப்பு செய்து வருகின்றனர். மாநிலங்களின் சான்றிதழ் மற்றும் தேர்தல் கல்லூரியின் டிசம்பர் 17 வாக்களிப்பை தாமதப்படுத்த வன்முறை மற்றும் நீதிமன்ற சவால்களைப் பயன்படுத்த இருக்கின்றனர். 2000 இல் செய்ததைப் போல, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடிய நிலைமைகளை உருவாக்குவதோ அல்லது இப்போது குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் பிரதிநிதிகள் சபைக்குள் தேர்தலைத் தூக்கி எறிவதோ அல்லது 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு புதிய வடிவத்தை, இந்த முறை வெற்றிகரமாக நடத்தக்கூடிய அத்தகைய ஸ்திரமின்மையை உருவாக்குவதோ அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

வாக்கெடுப்பின் தெளிவான முடிவு எதையும் தீர்த்து விடப் போவதில்லை. வேட்பாளர் வாக்குறுதியளித்ததைப் போல, மீட்கப்பட்ட ட்ரம்ப் நிர்வாகம் முதல் நாளில் இருந்தே ஜனாதிபதியை ஒரு “சர்வாதிகாரியாக” கொண்டு செயல்படும். ஒரு ஹாரிஸ் நிர்வாகம், ரஷ்யா, ஈரான் மற்றும் இறுதியில் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர் என ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்சி பிரிவின் திட்டநிரலை முன்னெடுக்க உறுதிபூண்டிருக்கும்.

முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை அணித்திரட்டுவதே அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முன்னிருக்கும் ஒரே பாதையாகும். இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக கட்டியெழுப்புவதாகும்.

Loading