மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், முந்தைய தேர்தல்களை விஞ்சும் மட்டத்திற்கு, இரண்டு அரசியல் கட்சிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்கள் மற்றும் முதலாளித்துவ நிதிய தன்னலக் குழுக்களின் பாரியளவிலான நேரடி தலையீட்டால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது.
இந்த உண்மை கடந்த வாரயிறுதியில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், அமெரிக்க அரசியலமைப்பில் முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்களை நிலைநிறுத்த, வலதுசாரி மனுவில் கையொப்பமிடும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஒரு நபருக்கு தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் $1 மில்லியன் டாலர் காசோலையை வழங்குவதாக அறிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் டுவிட்டர் X முதலாளி எலன் மஸ்க் (நிகர மதிப்பு 250 பில்லியன் டாலர்) சனிக்கிழமையன்று, பாசிசவாத குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக பென்சில்வேனியாவில் அவர் நடத்திய ஒரு பேரணியில் இந்த ஊதிய தொகையை அறிவித்தார்.
75 மில்லியன் டாலர் நன்கொடையுடன், மஸ்க் அமைத்த ட்ரம்ப் சார்பு அரசியல் நடவடிக்கைக் குழுவான அமெரிக்கா PAC (political action committee) அமைப்பிடம் இருந்து இந்தப் பணம் கொடுக்கப்படும். தீவிர வலதுசாரி உச்ச நீதிமன்றத்தால் விளக்கப்பட்டதுபோல், அமெரிக்கா PAC ஆனது, இணையவழி மனுவை அமைத்துள்ளது. இந்த அமைப்பு, “பேச்சு சுதந்திரம்” (சமூக ஊடகங்களில் பாசிசவாத பதிவுகளைத் தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக) மற்றும் தனிப்பட்ட “துப்பாக்கி உரிமைகளுக்கு” ஆதரவாக இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
வெற்றியாளர்களுக்கான ஒரே தேவை என்னவென்றால், அவர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஜனாதிபதி போட்டியில் மிக நெருக்கமாக போட்டியிடும் ஏழு “போர்க்கள” மாநிலங்களில் ஒன்றில் வசிக்க வேண்டும்.
ட்ரம்புக்கு அரசியல் ஆதரவை உருவாக்க மஸ்க் இணையவழி அமெரிக்கா PAC அமைப்பின் மனுவைப் பயன்படுத்துகிறார். அவர் முதலில் கையெழுத்திடும் ஒவ்வொரு பரிந்துரைக்கும் 47 டாலர் வழங்கினார் (அடுத்த மாதம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, ட்ரம்ப் அல்லது ஹாரிஸ் ஆக இருந்தாலும், அமெரிக்க வரலாற்றில் 47 வது ஜனாதிபதியாக இருப்பார்). பின்னர் அவர் சமீபத்திய விளம்பர ஸ்டண்டை முடிவு செய்வதற்கு முன், ஊக்கத்தொகையை $100 டாலர்களாக ஆக உயர்த்தினார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ட்ரம்ப்பினுடைய பிரச்சாரத்துடன் அவர் முழுமையாக இணைந்ததிலிருந்து, மஸ்க் பாசிசவாத குடியரசுக் கட்சியின் முதல் நான்கு நிதி ஆதரவாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு (MAGA) சூப்பர் PAC க்கு $150 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கிய வங்கிச் செல்வத்தின் வாரிசான திமோதி மெல்லனுடன் (குடும்பச் சொத்து மதிப்பு $14 பில்லியன்), மிரியம் அடெல்சன் (நிகர மதிப்பு $35 பில்லியன்), ப்ரிசர்வ் அமெரிக்கா சூப்பர் PAC $95 மில்லியன் டாலர் கொடுத்தார்; மற்றும் ரிச்சர்ட் உய்ஹ்லீன் (நிகர மதிப்பு $6 பில்லியன்), அவர் $49 மில்லியனை மறுசீரமைப்பு PACக்கு செலுத்தினார்.
ட்ரம்புக்குப் பின்னால் உள்ள ஆளும் வர்க்கத்தின் பிரிவு, அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களுடன் பகிரங்கமாக முறித்துக் கொண்டு, “நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரி” மீதான ட்ரம்பின் பாசிசவாத தாக்குதலை ஆதரிக்கிறது. இதன் அர்த்தம் நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் கொள்கைகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
ஆனால், கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் பிரசுரித்த ஒரு கட்டுரை, “கமலா ஹாரிஸ் ட்ரம்பை விட அதிகமான பில்லியனர்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்” என்று அதன் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் கணக்கின்படி, 79 பில்லியனர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கின்றனர், குடியரசுக் கட்சிக்கு 50 பேர் பின்தங்கி உள்ளனர்.
ஹாரிஸை ஆதரிக்கும் குழுக்களுக்கு குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த 28 பில்லியனர்களில் முன்னாள் கூகுள் தலைமை செயலதிகாரி எரிக் ஷ்மித் (நிகர மதிப்பு 38 பில்லியன் டாலர்); மைக்கேல் ப்ளூம்பெர்க் (நிகர மதிப்பு $105 பில்லியன்); ஹோம் டிப்போ இணை நிறுவனர் ஆர்தர் பிளாங்க் (நிகர மதிப்பு $9.5 பில்லியன்); மற்றும் கார்கில் உணவுப் பேரரசின் வாரிசு குவெண்டலின் சோந்தெய்ம் மேயர் (நிகர மதிப்பு $5.1 பில்லியன்), என்று பலர் உள்ளனர்.
முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஜனநாயகக் கட்சி பிரிவின் முன்னணியான Future Forward என்ற அரசியல் நடவடிக்கைக் குழு, 700 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. இது முக்கியமாக கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள ஜனநாயக-சார்பு தகவல் தொழில்நுட்ப அதிபர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ளது. பேஸ்புக் இணை நிறுவனர் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் 2020 முதல் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைக் குழுவினது பணமானது, வேட்பாளர்கள் மற்றும் இரண்டு பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளால் நேரடியாக திரட்டப்பட்ட பெரும் தொகைகளுக்கு கூடுதலாக உள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் தாக்கல் செய்த தகவல்களின்படி, ஹாரிஸ் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டும் குழுக்கள், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு மற்றும் மாநில ஜனநாயகக் கட்சி குழுக்கள் இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் 652 மில்லியன் டாலர் திரட்டியுள்ளன. இது செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த அதே மூன்று மாதங்களில் ட்ரம்ப்பின் பிரச்சாரம் மற்றும் குடியரசுக் கட்சி திரட்டிய 340 மில்லியன் டாலரை விட அண்மித்து இரு மடங்காகும்.
இந்த பாரிய நிதி ஆதாரங்கள் கிட்டத்தட்ட ஏழு போர்க்கள மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக “நீலச் சுவர்” என்று அழைக்கப்படும் வடக்கு தொழில்துறை மாநிலங்களான பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில், ட்ரம்ப் 2016 இல் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து வென்றார் மற்றும் 2020 இல் ஜோ பைடெனிடம் தோற்றார்.
19 தேர்தல் குழு வாக்குகளைக் கொண்ட போர்க்கள மாநிலமான பென்சில்வேனியாவில் மட்டும், இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் விளம்பரங்களுக்காக அண்மித்து அரை பில்லியன் டாலர்களையும், ஜனநாயகக் கட்சியினருக்கு 275.1 மில்லியன் டாலரையும், குடியரசுக் கட்சிக்கு 222.5 மில்லியன் டாலரையும் செலவிட்டுள்ளன என்று அட்இம்பாக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிச்சிகன் அந்த மொத்தத்தை நெருங்குகிறது, அதைத் தொடர்ந்து ஜோர்ஜியா மற்றும் விஸ்கான்சின் உள்ளன.
ஒரு போர்க்கள மாநிலத்தில் தொலைக்காட்சியைப் பார்க்கும் அல்லது இணையத்தை பாவிக்கும் எவரொருவரும் உடனடியாக பிரச்சார விளம்பர அழைப்புக்களால் தாக்கப்படுகின்றனர். இது பொதுவாக ட்ரம்பிடம் இருந்து (பொதுவாக புலம்பெயர்ந்தவர்களை அரக்கத்தனமாக சித்தரிப்பது) அல்லது ஹாரிஸிடம் இருந்து (முதலாளித்துவத்தின் மில்லியனர் பாதுகாவலரை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அக்கறை கொண்டவராக சித்தரிப்பது) வரும்.
முதலாளித்துவ தன்னலக் குழுக்களின் தீவிரமான பாத்திரம், அரசின் யதார்த்தத்தின் ஒரு பிரதிபலிப்பாகும். அது ஒரு நடுநிலையான நடுவர் அல்ல, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாகும்.
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, மத்திய கிழக்கிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் போர் விரிவாக்கம், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு மற்றும் சமூக சமத்துவமின்மையின் பிரம்மாண்டமான வளர்ச்சி உட்பட அமெரிக்காவிலும் உலகிலும் மக்கள் முகங்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகளில் மௌனத்தின் சதித்திட்டத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
பில்லியனர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதற்கு போட்டியிடுகின்ற அதேவேளையில், எந்தவொரு உண்மையான எதிர்ப்பும் விலக்கப்படுகிறது. மஸ்க்கின் 1 மில்லியன் டாலர் தொகை குறித்து கருத்துரைக்கையில், ஜனாதிபதி பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோசப் கிஷோர் குறிப்பிடுகையில், “அமெரிக்காவில் மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் ஒவ்வொரு திருப்பத்திலும் வாக்குப்பதிவு அனுமதி சட்டங்களில் இருந்து, செய்தி சேகரிப்பு மீதான கட்டுப்பாடுகள் வரையில், ஊடகங்களின் தணிக்கை வரையில், பரந்த அளவிலான ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் தடுக்கப்படுகின்றனர்,” என்றார்.
உலக சோசலிச வலைத் தளம் அதன் 2024 புத்தாண்டு தலையங்க அறிக்கையில் இந்த பரந்த சமூக இடைவெளியின் வரலாற்று முக்கியத்துவம் மீது கவனத்தை ஒருங்குவித்தது. நாங்கள் எழுதினோம்:
வர்க்க மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படைப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது பற்றி விவாதிப்பது — இதன் விளைவாக, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய அணிதிரட்டலுக்கான கட்டாயத்தை புறக்கணிப்பது — சிடுமூஞ்சித்தனமான மற்றும் அரசியல்ரீதியாக கையாலாகாத வாய்வீச்சுகளாகும்.
பில்லியனர்களின் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் பிரமாண்டமான பெருநிறுவனங்கள், பெரிய பங்குதாரர்களுக்கு இழப்பீடு வழங்காமல், தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல், சமூகத் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் பொது கட்டுப்பாட்டிலுள்ள பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும். முதலாளித்துவ அரசின் ஜனநாயக-விரோத நிறுவனங்கள் மற்றும் ஒடுக்குமுறை அமைப்புகள் (தொழில்முறை இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள்) ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் உலக அளவில் ஒரு ஜனநாயக மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஸ்தாபிக்க, தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் அமைப்புகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.
2024 தேர்தல் பிரச்சாரத்தின் அனுபவம் இந்த மதிப்பீட்டின் உண்மையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதையும், செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான அரசியல் போராட்டத்துடன் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை தொழிலாள வர்க்கம் இணைக்க வேண்டிய அவசர அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.