மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜூன் 1941 இல், நாஜி ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பு நடவடிக்கை பார்பரோசாவைத் ( Operation Barbarossa) தொடங்கியது. இது ஒரு “நிர்மூலமாக்கும் போராகவும்,” (Vernichtungskrieg) நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், ஜேர்மன் குடிமக்களை அந்த நிலத்தில் குடியேறுவதற்கான தயாரிப்பில் மக்களை அழிப்பதாகவும் இருந்தது.
நாஜி படையெடுப்பு சோவியத் ஒன்றியத்தில் 27 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றதுடன், ஐரோப்பாவின் 6 மில்லியனுக்கும் அதிகமான யூதர்களை நிர்மூலமாக்கிய யூத இனப்படுகொலையும் அதனுடன் சேர்ந்திருந்தது.
நாஜி கட்டுப்பாட்டின் கீழ் சோவியத் ஒன்றியத்தின் மக்கள் தொகை நிறைந்த பகுதிகள், SS துணைப்படையின் மூத்த குழுத் தலைவர் ஹெர்பர்ட் பேக்கால் (Herbert Backe) வகுக்கப்பட்ட “பட்டினி திட்டத்திற்கு” உட்படுத்தப்பட்டன. இத் திட்டத்தின் விளைவாக “மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறப்பார்கள்” என்று நாஜி அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். மூன்றாம் குடியரசின் விவசாயத்துறை அமைச்சர், “இந்த நாட்டில் பல பத்து மில்லியன் கணக்கான மக்கள் தேவையற்றவர்களாக ஆகிவிடுவார்கள், உயிரிழப்பார்கள் அல்லது சைபீரியாவுக்கு புலம்ப நேரிடும்” என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் விளைவாக, சோவியத் யூனியனில் 3.3 மில்லியன் மக்கள் வேண்டுமென்றே பட்டினிக்கு ஆளாக்கப்பட்டனர்.
இந்த மாதம், இஸ்ரேல் அரசு நாஜி ஜேர்மனியின் “பட்டினி திட்டத்தின்” 21 ஆம் நூற்றாண்டு பதிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. ஹெர்பர்ட் பேக்கின் பாத்திரம் இன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்டால் (Giora Eiland) வகிக்கப்படுகிறது.
ஓராண்டிற்கும் மேலாக, காஸாவின் மக்களை வேண்டுமென்றே பட்டினியால் அழிப்பது மற்றும் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு எய்லாண்ட் பரிந்துரைத்துள்ளார். சமீபத்திய மாதங்களில், எய்லாண்ட் தனது திட்டத்தை வடக்கு காஸாவிற்குள் அனைத்து உணவுப் பொருட்களும் நுழைவதைத் தடுக்கும் ஒரு செயல் திட்டமாக ஒருங்கிணைத்தார். இதனால் அவரது வார்த்தைகளில், “மக்கள் அங்கு வாழ முடியாது. தண்ணீர் வறண்டு போகும்.”
பின்னர் இஸ்ரேல் அப்பகுதி முழுவதையும் ஒரு சுதந்திரமான தாக்குதல் மண்டலமாக மாற்றும். அதில் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதை எதிர்க்கும் அனைவரையும் அழிப்புப் படைகள் (நாஜி ஜேர்மனியின் Einsatzgruppen என்ற பாரிய அழிப்புக் குழுக்களின் நவீன கால பதிப்புகள்) கொன்றுவிடும்.
அக்டோபர் 12 அன்று, CNN பின்வருமாறு அறிவித்தது:
இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைமையின் சிந்தனையை அறிந்த முன்னாள் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் CNN இடம் (முடிவெடுப்பதில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும்), “தளபதியின் திட்டம்” என்று அறியப்படும் முன்மொழிவின் “ஒரு பதிப்பை” அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், இந்தக் கூற்று “முற்றிலும் உண்மை” என்று எய்லாண்ட் CNN இடம் கூறினார்.
இந்த திட்டத்திற்கு இணங்க, இஸ்ரேல் வடக்கு காஸாவிற்குள் அனைத்து உணவுப் பொருட்களும் நுழைவதை நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் அதன் இராணுவத் தாக்குதலை தொடங்கியதில் இருந்து எந்த கட்டத்திலும் இல்லாத அளவிற்கு குறைவான உணவு மட்டுமே காஸா பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் மருத்துவமனைகளைச் சுற்றி வளைத்து, கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அகதிகள் முகாம்களை முற்றுகையிட்டு, அங்கு வசிப்பவர்களை துப்பாக்கி முனையில் தெற்கு நோக்கி நகர நிர்பந்தித்துள்ளன. இந்த நடவடிக்கையின் போக்கில், 700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். கணக்கிலடங்கா இதர மக்கள் பட்டினியால் அல்லது தடுக்கக்கூடிய நோய்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு தனது பதினோராவது பயணத்தை மேற்கொண்டார். கடந்த செவ்வாயன்று, அவர் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். பிரதம மந்திரியின் அலுவலகம், இந்த சந்திப்பை பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போர் குறித்த “நட்பு மற்றும் ஆக்கபூர்வமான” கலந்துரையாடல் என்று அழைத்தது.
இந்த கலந்துரையாடல், பாரிய நிர்மூலமாக்கல் திட்டத்தைச் சுற்றி சுழன்றது என்பதை அடுத்து வந்த ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்தின. வாஷிங்டன் போஸ்ட் படி:
“வடக்கைத் தனிமைப்படுத்தும் ஒரு மூலோபாயத்தை இஸ்ரேல் பின்பற்றுவதுடன், மக்கள் வெளியேறவில்லை என்றால் அவர்கள் திறம்பட இலக்குகளாக்கப்பட்டு, உள்ளே செல்வதற்கு உணவு மறுக்கப்படும்” என்று மக்களுக்குச் சொல்வதாகவும், நெதன்யாகுவிடம் ஒரு “கருத்து” உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக, அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நெதன்யாகு அரசாங்கம், மக்கள் தொடர்பு நோக்கங்களுக்காக, பாரிய நிர்மூலமாக்கும் திட்டத்தை நிராகரிக்குமா என்று அமெரிக்க பிரதிநிதிகள் குழு கேட்டபோது, “இஸ்ரேலியர்கள் அத்தகைய உறுதிப்பாட்டை செய்ய மறுத்துவிட்டனர்,” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.
இந்த அப்பட்டமான அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, பிளின்கன் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.” மேலும், இஸ்ரேலை ஆதரிக்க “அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளின் தொடர்ச்சியான முயற்சிகளை தொடர உறுதியளித்தார்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பிளிங்கனின் வருகை பிரமாண்டமான அரசியல், சட்ட மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவருக்கு பாரிய அழித்தொழிப்புத் திட்டம் பற்றி விளக்கப்பட்டது. இஸ்ரேலிய கொள்கைக்கு நிபந்தனையற்ற மற்றும் முழுமையான ஒப்புதலுக்கு சமமான ஒன்றை பிளிங்கன் வழங்கினார்.
அதாவது, இஸ்ரேலிய “பட்டினி திட்டம்” என்பது நெதன்யாகு அரசாங்கத்தின் கொள்கை மட்டுமல்ல, மாறாக இனப்படுகொலைக்கு நிதியளித்து, ஆயுதம் வழங்கி, அரசியல் ரீதியாக ஆதரித்து வரும் பைடென் நிர்வாகத்தின் கொள்கையும் ஆகும்.
ஆனால் பிளிங்கன் தனது சந்திப்பிலிருந்து வெளிவந்தவுடன், கலந்துரையாடலின் உள்ளடக்கம் குறித்து பொய் சொல்லத் தொடங்கினார். “காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதை” இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரிக்கிறது என்பதை இந்த விஷயங்களில் அதிகாரபூர்வமான வார்த்தையாக நான் பிரதம மந்திரியிடமிருந்து கேள்விப்பட்டேன் என்று பிளிங்கன் கூறினார்.
1967 இல் இருந்து —57 ஆண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியில்— காஸா பகுதியை இஸ்ரேல் சட்டவிரோதமாகவும் நிரந்தரமாகவும் ஆக்கிரமித்துள்ளது அல்லது கட்டுப்படுத்தி வந்துள்ளது என்பதையும், கடந்த ஆண்டில் இஸ்ரேல் அப்பிராந்தியத்தின் பெரும்பான்மையான கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி, அதன் மக்களில் 95 சதவீதத்தினரை இடம்பெயரச் செய்துள்ளது என்பதையும் பிளிங்கனுக்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக எவரும் காணவில்லை. ஆனால் இல்லை, காஸாவை “மீண்டும் ஆக்கிரமிக்க” இஸ்ரேலுக்கு எந்த ஆர்வமும் இல்லை, அதுபோன்றவொரு கொள்கையை அமெரிக்கா ஒருபோதும் ஆதரிக்காது என்று பிளிங்கன் வலியுறுத்துகிறார்.
பிளிங்கனின் இத்தகைய அறிக்கைகள் போர்க்கால தவறான தகவல்களாகும், இது உண்மையான அமெரிக்க அரசாங்கக் கொள்கைக்கு ஒரு புகை திரையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆனால், துருப்புக்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி எதிரி இராணுவத்தை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பாரம்பரிய போர்க்கால தவறான தகவலைப் போலல்லாமல், இந்த ஏமாற்று வேலையின் இலக்கு அமெரிக்க மக்கள் ஆகும். அவர்களிடமிருந்து பைடென் நிர்வாகம் இனப்படுகொலையில் அதன் உடந்தையை மறைக்க முயற்சிக்கிறது.
வெளிப்படையாக இருப்போம். காஸா மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவது, வடக்கு காஸாவில் இனச்சுத்திகரிப்பு மற்றும் எஞ்சியிருக்கும் அனைவரையும் திட்டமிட்டு அழிப்பது ஆகியவற்றில் கையெழுத்திட பிளிங்கன் இஸ்ரேலுக்கு வந்தார். நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தின் முன்னணி வக்கீல் ரோபர்ட் ஜாக்சன், நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டிய ஒவ்வொரு குற்றமும் பைடென் நிர்வாகத்தால் சற்றே சிறிய அளவில் செய்யப்படுகின்றன. நாஜி ஜேர்மனியின் தலைவர்களைக் கண்டிப்பதன் மூலம், அமெரிக்க அரசாங்கம் எப்போதாவது இதுபோன்ற குற்றங்களைச் செய்திருந்தால், “நம்முடைய சொந்த உதடுகளுக்கு ஒரு விஷக் கிண்ணத்தை” வைப்பதாக ஜாக்சன் கூறினார். “பிளிங்கன் கசப்பான கிண்ணத்தை அதன் கடைசி சொட்டு வரை விழுங்கியுள்ளார்.
பிளிங்கன், பைடென் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் போர் குற்றவாளிகள். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக சமூக காட்டுமிராண்டித்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் வெளிப்படையாக தழுவிக் கொண்டுள்ள அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுக்காகவும் பேசுகின்றனர். இந்த மாதம் வெளிவந்த கருத்துக்களில், பசுமைக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரான ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேயர்பொக் (Annalena Baerbock), பொதுமக்கள் மீதான தாக்குதல்களை வெளிப்படையாக பாதுகாத்தார். மேலும் அவர் பின்வருமாறு கூறினார்:
ஹமாஸ் பயங்கரவாதிகள் மக்களுக்குப் பின்னால், பள்ளிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்போது, நாம் மிகவும் கடினமான நீரில் சிக்கிக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்குவதில்லை. அதனால்தான், பயங்கரவாதிகள் இந்த அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்தினால், சிவிலியன் தளங்கள் அவற்றின் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை இழக்க நேரிடும் என்பதை நான் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெளிவுபடுத்தினேன். இதைத்தான் ஜேர்மனி குறிக்கிறது - இஸ்ரேலின் பாதுகாப்பைப்பற்றி குறிப்பிடும்போது இதைத்தான் நாம் குறிக்கிறோம்.
இந்தப் பிரகடனம், அதன் சொந்த வழியில், “காஸாவின் ‘ஏழைப்’ பெண்கள் ... ஹமாஸ் கொலைகாரர்களின் தாய்மார்கள், சகோதரிகள் அல்லது மனைவிகள் அனைவரும் ஆயுதமேந்திய எதிர்ப்பில் ஈடுபடுபவர்களுடன் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக எய்லாண்ட் கூறி வருவதை மீண்டும் கூறுவதாகும். ஏகாதிபத்திய சக்திகள் அப்பாவி மக்களை அழித்தொழிப்பதில் நியாயமான விளையாட்டு என்று அறிவித்து வருகின்றன.
உலகெங்கிலும், ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய உலகப் போர் தொடங்கி விட்டதாக கூறி வருகின்றன. Foreign Affairs இதழின் இந்த மாத பதிப்பின் முதன்மைக் கட்டுரை பின்வருமாறு அறிவிக்கிறது:
மட்டுப்படுத்தப்பட்ட யுத்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது; விரிவான மோதல்களின் ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளது. உண்மையில், இன்று உலகம் பார்த்துக் கொண்டிருப்பது கடந்த காலத்தில் கோட்பாட்டாளர்கள் “மொத்த போர்” என்று அழைத்ததற்கு ஒத்ததாகும், இதில் போரிடுபவர்கள் பரந்த ஆதார வளங்களைப் பெறுகிறார்கள், அவர்களின் சமூகங்களை அணிதிரட்டுகிறார்கள், மற்ற அனைத்து அரசு நடவடிக்கைகளையும் விட போர்முறைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், பரந்த அளவிலான இலக்குகளைத் தாக்குகிறார்கள், மேலும் அவர்களின் பொருளாதாரங்களையும் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் மறுவடிவமைக்கிறார்கள்.
உலகளாவிய போரின் இந்த புதிய சகாப்தம், “பல்வேறு வகையான இலக்குகளைத் தாக்க” நாடுகளை அனுமதிக்கிறது என்று அறிவிப்பது, சர்வதேச சட்டம் இடைநிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள், மருத்துவமனைகள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்தும் நியாயமான விளையாட்டு என்று கூறுவதற்கான பேச்சுவழக்கு வழியாகும். எதிர்காலத்தில் போரை நடத்துவதற்கு “இஸ்ரேலிய மாதிரியே” தரநிலையாக இருக்க வேண்டும்.
சனிக்கிழமை ( அக்டோபர் 19 ), உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் “மீண்டும் எதிர்காலத்திற்கு: இனப்படுகொலை, போர் மற்றும் பாசிசம்” என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை வழங்கினார். “நாம் ‘எதிர்காலத்திற்குத் திரும்பு’ என்று கூறும்போது, போர் நிகழ்வுப்போக்குகள், இனப்படுகொலை நிகழ்வுப்போக்குகள், பாசிசத்தின் நிகழ்வுப்போக்கு ஆகியவை மீண்டும் மேலெழுந்து வருகின்றன” என்று நோர்த் விளக்கினார். அவர் தொடர்ந்தார்:
இனப்படுகொலையின் கொடூரங்கள், பாசிசத்தின் மீளெழுச்சி, போர் அபாயம் என இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தனை பயங்கரங்களும் 20 ஆம் நூற்றாண்டின், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் யதார்த்தங்களாக இருந்தன.
நோர்த் பின்வருமாறு முடித்தார்:
ஆகவே “எதிர்காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று நாம் கூறும்போது, ஒரு எதிர்காலம் இருந்தால், முதலாளித்துவச் விதிகள் பற்றிய மார்க்சியப் பகுப்பாய்வைப் புரிந்துகொள்வதில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் முன்னேறிய பிரிவுகளுக்குள் மீண்டும் வெற்றிபெற வேண்டும்.
காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் பாரிய போராட்டங்களைத் தூண்டியுள்ளது. ஆனால் இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியவாத காட்டுமிராண்டித்தனத்தின் அத்தனை வடிவங்களுக்கும் அடிப்படைக் காரணமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோக்கு அவசியமாகும். காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் மற்றும் அதை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டமாக முன்செல்ல வேண்டும்.