மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கிழக்கு முழுவதும் ஏகாதிபத்திய இராணுவத் தாக்குதலின் ஒரு பெரிய விரிவாக்கத்தில், பைடென் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் சனிக்கிழமை காலை ஈரான் மீது மூன்று அலை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை, ஈரான் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத தாக்குதலை உடனடியாக ஆதரித்ததுடன், “இஸ்ரேல் அதன் தற்காப்பு உரிமையின் பாகமாக, ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று குறிப்பிட்டது.
மேலும், இந்த சட்டவிரோத தாக்குதலை ஆதரித்த வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் ப்ளூம்பெர்க்கிற்கு விடுத்த ஒரு அறிக்கையில், இது “இலக்கு வைக்கப்பட்ட மற்றும் பொருத்தமான நடவடிக்கை” என்று அழைத்தார். இந்த சட்டவிரோத போர் நடவடிக்கையை திட்டமிட “ஜனாதிபதியும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவும் கடந்த சில வாரங்களாக இஸ்ரேலியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்” என்று அந்த அதிகாரி புளூம்பேர்க்கிடம் தெரிவித்தார்.
ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதற்குப் பதிலாக, இந்த தாக்குதல்கள் ஈரானின் இராணுவப் பதிலடியை தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இது, மேலும் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும், இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதலான போர் துருப்புக்களை அனுப்புவதோடு, மேலும் பிராந்தியம் முழுவதும் இராணுவக் குவிப்பை மேற்கொள்ளுவதற்கும் பயன்படுத்தப்படலாம்.
இலாம், குஜெஸ்தான் மற்றும் தெஹ்ரான் மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், நாடு முழுவதும் வணிக விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் இராணுவம் உறுதிப்படுத்தியது.
வெள்ளிக்கிழமை இரவு பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை உடனான ஒரு தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்களுடன் சேர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான அக்டோபர் 9 கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி இந்த தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்புக்கு ஆதரவாக அமெரிக்க போர் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மத்திய கிழக்கிற்கு வந்தடைந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் நெதன்யாகு உடனான விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதன் போது, அவர் ஈரான் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் வடக்கு காஸா பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை பட்டினி போடுவது, இடம்பெயர வைப்பது அல்லது நிர்மூலமாக்குவதற்கான இஸ்ரேலின் “தளபதிகளின் திட்டம்” ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தார்.
ஈரான் மீதான இஸ்ரேலிய-அமெரிக்க தாக்குதல் நவம்பர் 5 ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 நாட்களுக்கு முன்னர் நடந்தது. இந்த மாத தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம், பைடென் நிர்வாகம் ஈரானுடனான போரைத் தீவிரப்படுத்த ஒரு “அக்டோபர் சதித்திட்டத்தை” திட்டமிட்டு வருவதாக எச்சரித்திருந்தது.
நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:
அக்டோபரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதன் மூலம், பைடென் நிர்வாகம் கமலா ஹாரிஸின் தேர்தல் வாய்ப்புகளில் செல்வாக்கு செலுத்தி, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்கள் நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முயல்கிறது. இது ஒரு “அக்டோபர் ஆச்சரியத்திற்கு” பதிலாக, மத்திய கிழக்கு எங்கிலும் போரில் அமெரிக்க ஈடுபாட்டை பாரியளவில் விரிவாக்குவதற்கான ஒரு “அக்டோபர் சதி” ஆகும்.
இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலிய தாக்குதலின் பரப்பெல்லை இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், பைடென் நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கு முழுவதும் போரை விரிவாக்க முற்படுகிறது என்பது வெளிப்படை.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது, ரஷ்யா மற்றும் சீனாவில் மேலாதிக்கம் செலுத்தும் முயற்சியின் பாகமாக இருக்கிறது. மேலும், எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் காலனித்துவ மேலாதிக்கத்தை மீண்டும் திணிக்கும் நோக்கத்துடன், ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், மத்திய கிழக்கு முழுவதிலும் அதன் வெறியாட்டத்தை இஸ்ரேல் மேற்கொள்கிறது.
மத்திய கிழக்கு முழுவதிலும் இந்த ஏகாதிபத்திய தாக்குதலின் மிகக் கொடூரமான விளைவாளது, காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை ஆகும். காஸா இனப்படுகொலையின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 42,847 ஆக உள்ளது, 100,544 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் தி லான்செட் இல் வெளியான ஒரு கட்டுரை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும்.
இந்த மாதம், இஸ்ரேல் காஸாவுக்கு அனைத்து வணிக உணவுப் பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது, இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து மிகக் குறைந்த மட்டத்திற்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு இட்டுச் சென்றதுடன், மனித உரிமை அமைப்புகள் பாரிய பஞ்சம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஈரான் மீதான தாக்குதல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அனைவரையும் இலக்கு வைக்கும் சட்டவிரோதப் படுகொலை தாக்குதலைத் தொடர்ந்து வந்துள்ளதுடன், முக்கிய ஈரானிய பிரமுகர்களை இலக்கு வைத்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் இராணுவத் தாக்குதலை பிராந்தியம் முழுவதும் விரிவாக்கி வருகின்றன. அக்டோபர் 16 அன்று, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை ரஃபாவில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது. கடந்த மாதம், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானில் 2,000 பவுண்டு எடையுள்ள 80 குண்டுகளால் இஸ்ரேலிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை மாதம் தெஹ்ரானில் வைத்து இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் அதன் தரைப்படைத் தாக்குதலையும் தினசரி குண்டுவீச்சையும் வெள்ளியன்று லெபனான் மீது தொடர்ந்தது. இதையொட்டி லெபனான் மக்களின் இறப்பு எண்ணிக்கை 2,634 என்று உயர்ந்துள்ளது.