மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் மூலமாக போயிங் எந்திர வல்லுனர்களால் தரகு மூலம் கொண்டுவரப்பட்ட இரண்டாவது விற்றுத்தள்ளல் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதற்குப் பின்னர், போயிங் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு (BWRFC) ஞாயிறன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது.
IAM தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் போயிங் எந்திரவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதை உடைத்து, போயிங் தொழிலாளர்களுக்குப் பின்னால் ஐக்கியப்பட உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப BWRFC விடுத்த அழைப்புக்கு விடையிறுத்து, வாகனத்துறை தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட பல தொழில்துறைகளைச் சேர்ந்த 175 தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கும் கூடுதலாக, ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்தும் தொழிலாளர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சிறந்த ஊதியம், குடும்பத்துடன் செலவிட அதிக நேரம், குறைந்த மருத்துவக் காப்பீட்டு கட்டணங்கள், ஒரு பாதுகாப்பான மற்றும் உயர்தர ஓய்வூதியத்திற்கான போயிங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சர்வதேச ஐக்கியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஏழாவது வாரமாக இடம்பெற்றுவரும் இந்த வேலைநிறுத்தம், இப்பொழுது வோல் ஸ்ட்ரீட் மற்றும் வெள்ளை மாளிகையால் நெருக்கமாக பின்தொடரப்பட்டு வருகிறது. இந்த வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும், இதனால் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களை அச்சுறுத்தும் என்றும் ஆளும் வர்க்கத்திற்குள் பீதி அதிகரித்து வருகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் WSWS எழுத்தாளர் ரொம் ஹால் இந்த பிரச்சினைகள் குறித்து பேசுகையில், “அனைத்திற்கும் மேலாக, இந்த வாக்களிப்பு பெருநிறுவன அரசியல் ஸ்தாபகத்திற்கு ஒரு அடியாகும். பைடெனின் வெள்ளை மாளிகையானது, இந்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு IAM தொழிற்சங்கத்தை நம்பியிருந்தது. போயிங் நிறுவனம் ஒரு பிரதான பாதுகாப்பு ஒப்பந்ததாரர் ஆகும். வோல் ஸ்ட்ரீட் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாட்டு சந்தைகள், இயற்கை ஆதாரவளங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைக் கைப்பற்ற புதிய போர்களைத் தொடங்கி வருகிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “போயிங் பின்வாங்காது... ஏற்கனவே உலகம் முழுவதும் 17,000 பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தை அடுத்து உடனடியாக இன்னும் கூடுதலான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. வோல் ஸ்ட்ரீட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு தனக்கு இருப்பதால் தன்னால் இதைச் செய்ய முடியும் என்று அது உணர்கிறது.
“வேறு வார்த்தைகளில் இதனை கூறுவதானால், வேலைநிறுத்தமானது தொழிலாள வர்க்கத்திற்கும், இலாபத்திற்காக தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்கின்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு பொதுவான மோதலாக தீவிரமடைந்து வருகிறது” என்று ஹால் மேலும் தெளிவுபடுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், போயிங் சாமானிய தொழிலாளர் குழுவில் (BWRFC) உறுப்பினராக இருக்கின்ற ஒரு தொழிலாளி உரையாற்றினர். பேச்சுவார்த்தைகள் என்றழைக்கப்படுவதைச் சுற்றியுள்ள இரகசியம் குறித்து கருத்துரைத்த அவர், தனது உரையைத் தொடங்கினார். “நிறுவனத்துடன் என்ன கலந்துரையாடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் ஒரு சலுகையை வெளியிடும் வரை எல்லாம் முற்றிலும் அமைதியாக இருக்கும்.
“நம்மில் பெரும்பான்மையானவர்கள் இன்னும் அடித்தளத்தில் உள்ளனர். ஓய்வூதியம் தேடும் நிறைய பேர் நிச்சயமாக உள்ளனர், ஆனால் ஒப்பந்தத்தில் அதை நாங்கள் காணவில்லை. அதைப் பெற முடியும். இருப்பினும், இந்த வேலைநிறுத்தத்தை எவ்வளவு காலம் நடத்த முடியும் என்பதைப் பொறுத்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் போயிங் தொழிலாளி பேசினார். “அமெரிக்காவில் திறமையானவர்கள் வேலை செய்கிறார்கள். ஐரோப்பாவில் திறமையானவர்கள் வேலை செய்கிறார்கள். நிறுவனங்கள் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா அல்லது மத்திய அமெரிக்கா அல்லது ஆசியா அல்லது உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் செல்ல விரும்பினால், அவர்கள் அதை அடிமட்டத்தை நோக்கிய ஒரு பந்தயமாக ஆக்குகிறார்கள்.
“தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும், எங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். நிறுவனங்கள் குறைந்த செலவுள்ள நாடுகளுக்குச் சென்று அனைவரையும் வீழ்த்த முயற்சிக்கின்றன. எனவே, நிர்வாகிகளுக்கு நல்ல வாழ்க்கை உள்ளது, நாங்கள் ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் சிறந்த மருத்துவம், சிறந்த ஓய்வு, சிறந்த தரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியும்” என்று அந்த தொழிலாளி குறிப்பிட்டார்.
போயிங் தொழிலாளரைத் தொடர்ந்து, உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருவருக்கொருவர் இணைப்பதற்கான சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) அடிப்படை கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், சர்வதேச அளவில் தொழிலாளர்களிடம் இருந்து பல கருத்துக்கள் வந்தன. வரும் நாட்களில் அந்த பங்களிப்பு கருத்துக்களின் நீண்ட பதிப்புகளை வெளியிடுவோம்.
கனடா போஸ்டில் பணிபுரியும் கிராமப்புற அஞ்சல் தொழிலாளியும், தபால் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுவின் (கனடா) உறுப்பினருமான டானியல், அந்த தொழில்துறையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டம் குறித்து பேசினார். “கனடா போஸ்ட் சுமார் 55,000 விநியோக முகவர்களைப் பயன்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எங்கள் ஒப்பந்தங்கள் காலாவதியாகவிருந்தபோது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கனேடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW), ஒருதலைப்பட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்த நீட்டிப்புக்கு இணங்கியது.
“இது கோவிட் தொற்றுநோய் முதன்முதலில் உலகை அழித்தபோது இடம்பெற்றது. இப்பொழுது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 96 சதவீத வாக்குகளுக்குப் பிறகு, CUPW அதிகாரத்துவம், எங்கள் கோரிக்கைகளை அமல்படுத்தவும், முதலாளிகள் பின்வாங்குவதைத் தடுக்கவும் வேலைநிறுத்தம் அவசியம் என்று தேசிய நிர்வாகக் குழு தீர்மானித்தால் மட்டுமே வாக்குகள் எண்ணப்படும் என்று கூறுகிறது.
“எங்கள் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் நிர்வாகத்துடனும் ஒரு பெருநிறுவன முத்தரப்பு கூட்டணியில் அணிசேர்ந்துள்ளன என்பதே உண்மை. கோழைத்தனமான தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், IAM மற்றும் CUPW உட்பட, வேலைநிறுத்தத்தை மீறும் சட்டத்தை மீறுவதைப் பற்றி ஒருபோதும் கனவு காண மாட்டார்கள். இது, நாம் இப்போது செய்வது போல, தொழில்துறை எங்கிலும் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை பரந்த அளவில் அணிதிரட்ட வேண்டும்.
ஜேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஒரு பேருந்து ஓட்டுநரான ஆண்டி நிக்லோஸ் சமூகத்தின் பொருளாதார நெம்புகோல்கள் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டு தேவை பற்றி பேசினார். “உங்கள் வேலைநிறுத்தத்திற்கு எங்கள் நிபந்தனையற்ற ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதன் மூலம் நான் பேச விரும்புகிறேன். IAM இன் அதிகாரத்துவத்தினரால் வரையப்பட்டு கையெழுத்திடப்பட்ட பரிதாபகரமான கூட்டு ஒப்பந்தத்தை இரண்டாவது தடவையாக மிகப் பெரிய பெரும்பான்மையால் நீங்கள் நிராகரித்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். ஊதியங்கள், பணி நிலைமைகள் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். நாம் அனைத்து வேலைகளையும் பாதுகாக்க வேண்டும்,” என்று கூறிய அவர், ஜேர்மன் வாகனத் துறையில் 120,000 க்கும் அதிகமான வேலைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைபற்ற குறிப்பிட்டார்.
“சமூகத்தில் உள்ள அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்பவர்கள் தொழிலாளர்கள் ஆவர். பெருநிறுவனங்கள், நிர்வாகம் மற்றும் பெரும் செல்வந்தர்களின் இலாப நலன்களை விட நமது உரிமைகளும் நமது குடும்பங்களின் தேவைகளும் மிக முக்கியமானவையாகும். அதனால் தான் போக்குவரத்து நிறுவனங்களில் சாமானிய தொழிலாளர் குழுவை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம். பணிநீக்கங்கள் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பை போருக்கு எதிரான ஒரு போராட்டத்துடன் இணைக்க உதவும் போராட்ட கட்டமைப்புகள் நமக்குத் தேவை.”
சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட்டும் இக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். “வர்க்கப் போராட்டமானது ஒரு திட்டவட்டமான அரசியல் உள்ளடக்கத்தில், அமெரிக்க வரலாற்றில் மிகவும் நெருக்கடி நிறைந்த தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் எழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்ளும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்குள்ளும் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அவசியமான ஆட்சி வடிவங்கள் பற்றி நீடித்த மோதல் உள்ளது.
“ஒன்று, அமெரிக்க ஆதார வளங்கள் மற்றும் உலகெங்கிலுமான முதலாளித்துவ நாடுகளின் ஆதார வளங்கள் அனைத்தையும் போருக்காக அணிதிரட்டுவது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் நீட்டிப்பு, மற்றும் சீனாவுடன் எப்போதும் அதிகரித்து வரும் மோதல் ஆகியவற்றுடன் இந்த வாரம் நாம் பார்த்ததைப் போல, போர் தீவிரமடைந்து வருகிறது.
“மேலும் வெளிநாடுகளில் நடக்கும் போர்களின் தொடர்ச்சி அமெரிக்காவிலும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் ஆகும். இத்தகைய போர்களுக்கு தொழிலாளர்களை விலை கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதற்கு, அவர்களுடைய மகன்கள் மற்றும் மகள்களின் உயிர்களுடனும், சமூக நலன்புரி அமைப்புமுறையில், தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றின் மீதும் பாரிய தாக்குதலை நடத்த வேண்டியுள்ளது.
“அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர், பாசிசவாத ட்ரம்ப் மற்றும் போர்வெறியர் ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே முற்றிலும் கடுமையான மோதல் இருக்கின்ற போதிலும், இவை அடிப்படையில் தந்திரோபாய பிரச்சினைகள் பற்றியவையாகும். வெளிநாட்டில் போர் மற்றும் உள்நாட்டில் போர் என்று வரும்போது, அவர்கள் இருவரும் முழுமையான உடன்பாட்டில் உள்ளனர்.
“ஆழ்ந்த பொருளாதார துயரத்தையும் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்ற முடிவில்லா பாசாங்குத்தனமான பொய்களையும் சுரண்டிக் கொண்டு, ட்ரம்ப் ஒரு பாசிசவாத இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனைந்து வருகிறார். அதேநேரத்தில், அவர் பெரும் பொய்யின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட முனைந்து வருகிறார். பொருளாதார துயரங்களுக்கான காரணம், அதிக வீட்டுச் செலவுகளுக்கான காரணம், நெரிசலான பள்ளிகள், முதலாளித்துவ வர்க்கம் அல்ல, மாறாக சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் தான் என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.”
ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரையில், அவர்கள் முழுமையான போருக்கு அவசியமான தியாகத்திற்கான கோரிக்கைகளுக்கு எதிரான, தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று வைட் கூறினார்.
“சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்குவது மிகவும் முக்கியமானது, இன்று நாம் செய்வதைப் போலவே மிகப் பெரிய அளவில் இதனைச் செய்ய வேண்டும். அனைத்து எல்லைகளையும் கடந்த தொழிலாளர்களின் தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் எதிர்ப்பை ஒருங்கிணைக்க நாம் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவுபூர்வமான இயக்கத்தை, அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேசக் கட்சியைக் கட்டியெழுப்புவதே தீர்மானகரமான பிரச்சினையாகும்.
“தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தின் கடிவாளத்தை அதன் சொந்தக் கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும், சுரண்டுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், முதலாளித்துவ நிதியியல் செல்வந்த தட்டுக்களில் இருந்து முறைகேடாக ஈட்டப்பட்ட ஆதாயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும், போயிங் போன்ற மிகப்பெரும் தொழில்துறைகளை பொது பயன்பாடுகளாக மாற்ற வேண்டும், அங்கு தொழிலாளர்கள் உற்பத்தியை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனிதத் தேவையின் அடிப்படையில் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்துவார்கள். அவ்விதத்தில் சமூகம் முழுவதையும் மூன்றாம் உலகப் போருக்கோ அல்லது ஒரு தொழிலாளி மற்றொருவரால் படுகொலை செய்யப்படுவதற்காகவோ அல்ல, மாறாக அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களையும் பாரியளவில் மேம்படுத்தவும், சமத்துவமின்மைக்கு முடிவு கட்டவும் முடியும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும்” என்று ஜெர்ரி வைட் கூறினார்.