பிரான்சின் தீவிர வலதுசாரி அரசாங்கமானது இராணுவவாத சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை உத்தரவு ஆணை மூலம் திணிக்க அச்சுறுத்துகிறது

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் உத்தரவு ஆணை மூலமாக பிரெஞ்சு அரசின் 2025 வரவு-செலவுத் திட்டத்தைத் திணிக்க அச்சுறுத்தி வருகிறார். வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், பாரியளவில் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களைத் திணித்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கை பிரெஞ்சு ஜனநாயகத்தின் விரைவான சிதைவை வெளிப்படுத்துகிறது, ஏனெனில் மக்களால் பரவலாக நிராகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கம் தொடர்ந்து தொழிலாளர்களைச் சுரண்டுவதையே இது காட்டுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், திங்கள், ஜூன் 10, 2024. [AP Photo/Ludovic Marin]

வரவுசெலவுத் திட்டமானது வர்க்க நலன்களின் அப்பட்டமான வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இது சமூக உதவியாக 40 பில்லியன் டாலர்கள் மற்றும் தொழிலாள வர்க்க குடும்பங்களை இலக்கு வைத்த 5 பில்லியன் டாலர்கள் உட்பட வரி அதிகரிப்புகளில் இருந்து 20 பில்லியன் யூரோக்கள் உட்பட 60 பில்லியன் யூரோ வெட்டுக்களை வழங்குகிறது. அதேநேரத்தில், ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய போரில் நேட்டோவின் ஈடுபாட்டின் பாகமாக மக்ரோனால் திணிக்கப்பட்ட கூடுதல் இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட பத்து பில்லியன்களை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த வரவு-செலவு திட்டக்கணக்கு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு 91% பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பையும், உக்ரேனில் சண்டையிட துருப்புகளை அனுப்புவதற்கான அவரது அழைப்புகளையும் அதேயளவுக்கு பாரியளவில் நிராகரித்ததையும் புறக்கணிக்கிறது.

மக்ரோனின் அச்சுறுத்தல்கள், நாடாளுமன்றத்தில் மரீன் லு பென்னின் அதிவலது தேசிய பேரணியின் மறைமுக ஆதரவுடன் ஆதரிக்கப்பட்ட அவரது சிறுபான்மை அரசாங்கத்தின் எதேச்சதிகார இயல்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அவை ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணியின் (NFP) பாத்திரத்தையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றன. பிந்தையவரின் பிரதிநிதிகள் தேசிய நாடாளுமன்றத்தில் வரவு-செலவு திட்டக்கணக்கின் சில விதிகளைத் திருத்தி எழுத முன்மொழிந்து வருகின்றனர், இந்த ஆதரவு அதிவலதுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக சேவையாற்றும் என்று கூறி, இந்த கோடைகால தேர்தல்களில் மக்ரோனின் வேட்பாளர்களை பொறுப்பற்ற முறையில் ஆதரித்திருந்தனர். இப்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் திருத்தங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர், அதேவேளையில் மக்ரோன் நாடாளுமன்ற நிகழ்முறையை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பதற்கு தயாரிப்பு செய்து வருகிறார்.

இராணுவ தீவிரப்படுத்தலையும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களையும் நிறுத்தக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். பிரான்சில் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும், NFP மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற இராணுவ தீவிரப்பாடு மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மிகப்பெரும் எதிர்ப்பை அணித்திரட்டுவது அவசியமாகும்.

கடந்த வாரம், மக்ரோன் உடனான அமைச்சரவை சந்திப்பின் போது, பிரதம மந்திரி மிஷேல் பார்னியே, தற்போது டிசம்பரில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல், உத்தரவு ஆணை மூலமாக வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசியலமைப்பின் ஷரத்து 49.3 ஐ பயன்படுத்த கோரிக்கை விடுத்து அனுமதி பெற்றதாக செய்திகள் கூறுகின்றன.

அப்பொழுதில் இருந்து, அரசாங்கம் இந்த அரசியல் வெடிப்புத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை குறைத்துக் காட்ட முயன்றது. “பிரதமரின் நோக்கம் மாறவில்லை. இது விவாதத்திற்கு இடமளிப்பதும், நாடாளுமன்றத்திற்கு மரியாதை அளிப்பதும் ஆகும்” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் பிரெஜன் கூறினார். இது மக்ரோனின் மூலோபாயத்தை பிரதிபலிக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த எதிர்ப்பு குறித்த அவரது அச்சத்தையே பிரதிபலிக்கிறது.

வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் தொடக்கத்தில் கூட, 58% சதவீத பிரெஞ்சு மக்கள் பிரிவினர் 49-3 சட்டவிதியின் பயன்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாக BFMTV-Elabe கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியது. பிரெஞ்சு அரசியலமைப்பின் இந்த ஜனநாயக விரோத சட்டவிதி, சட்டமன்றம் புதிய தேர்தல்களை கட்டாயப்படுத்த அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்காவிட்டால், வாக்கெடுப்பு இல்லாமல் வரவுசெலவுத் திட்டத்தை ஏற்க சட்டமன்றத்தை கட்டாயப்படுத்த அனுமதிக்கிறது.

மற்றொரு சாத்தியக்கூறு, அரசாங்க அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் சட்டமன்றம் செய்துள்ள எந்த மாற்றங்களையும் அகற்றுவதற்கு வரவுசெலவுத் திட்டத்தை மீண்டும் எழுதுமாறு செனட்டைக் கேட்பதாகும். ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பான செனட், பார்னியே அரசாங்கத்தின் பாகமாக இருக்கும் வலதுசாரி குடியரசுக் கட்சியால் (Les Républicains – LR) மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது, இருப்பினும் அது இப்போது கடந்த தசாப்தத்தில் அது சரிந்து சட்டமன்றத்தில் ஒரு எஞ்சிய பகுதியாக மாறியுள்ளது. மக்ரோன் மற்றும் வங்கிகள் கோரும் வழிவகைகளில் செனட் ஒரு வலதுசாரி வரவு-செலவு திட்டத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு விடயங்களிலும், ஆளும் வர்க்கம் வாழ்க்கைத் தரங்களைக் குறைக்கவும் இராணுவ-பொலிஸ் ஆட்சியை நிறுவவும் தீர்மானகரமாக உள்ளது. சுற்றுக்கு விடப்படும் திட்டங்களில் பின்வருவன அடங்குகின்றன: ஜூலை வரை பணவீக்க ஓய்வூதிய சரிசெய்தல்களை அகற்றுதல்; மின்சாரம், மருந்துகள் மற்றும் துணை மருத்துவ காப்பீடு ஆகியவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்பு; 4,000 ஆசிரியர் பதவிகள் அகற்றப்பட வேண்டும்; ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு குறைப்பு; மற்றும் பிராந்திய சமூக நலத் திட்டங்களுக்கான உள்நாட்டு நிதியங்கள் குறைக்கப்பட வேண்டும். செலவினங்களில் உண்மையான அதிகரிப்பிலிருந்து பயனடையும் ஒரே துறைகள் உள்துறை அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகள் அமைச்சகம் மட்டுமே, முறையே 8% மற்றும் 7% சதவீதமாகும்.

மக்ரோனுக்குப் பின்னால் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, மாறாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதியியல் பிரபுத்துவத்தில் பிரெஞ்சு அரசுக்கு பிரதான கடன் வழங்குபவர்களும் நிற்கின்றனர். ஃபிட்ச் மற்றும் மூடிஸ் தரம் நிர்ணயிக்கும் முகமைகள் இரண்டுமே பிரெஞ்சு அரசு வரவு-செலவு திட்டக்கணக்கு போதுமான அளவு செலவினங்களை ஆழமாக வெட்டவில்லை என்றோ அல்லது பிரான்சின் அரசியல் நிலைமை ஸ்திரமற்றது என்றோ முடிவுக்கு வந்தால், அவை பிரான்சின் கடன் தரத்தை குறைத்து, உலக நிதியச் சந்தைகளில் அதன் கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்று சமிக்ஞை செய்துள்ளன.

“நாடாளுமன்ற விவாதம் மற்றும் தர நிர்ணய முகமைகள் மீது கவனம் திரும்பும்” என்று பிரெஞ்சு அஞ்சல் வங்கியின் பகுப்பாய்வாளர்கள் எழுதினர், ஃபிட்ச் பிரெஞ்சு கடன் மீதான அதன் கண்ணோட்டத்தை நிலையானதில் இருந்து எதிர்மறைக்கு குறைத்தது, இருப்பினும் அது மதிப்பீட்டை AA- க்கு மாற்றவில்லை.

மலைப்பூட்டும் வகையில் 3.23 ட்ரில்லியன் யூரோக்கள் இறையாண்மை கடனுடன், அல்லது பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 112 சதவீதத்துடன் பிரெஞ்சு அரசு யதார்த்தத்தில் திவாலாகி உள்ளது. இதேபோல், அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தாலிக்கு 140 சதவீதமாகவும், ஸ்பெயினுக்கு 105 சதவீதமாகவும், அமெரிக்காவில் 122 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் ஒரு ஒட்டுமொத்த சகாப்தத்தில் பேரழிவுகரமான தவறான நிர்வாகத்தின் மூலமாக திரட்டப்பட்ட இந்தக் கடனை தொழிலாளர்கள் செலுத்த முடியாது. செல்வந்த முதலீட்டாளர்களுக்கு பாரிய அரசு நிதியுதவி பெறும் வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகள், செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பில் பொறிவு, மற்றும் பொதுச் செலவுகள் பாரியளவில் போருக்கு திருப்பிவிடப்பட்டமை ஆகியவை இதற்கான காரணங்களாகும். இவை அனைத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு பேரழிவுகரமான சரிவுக்கு சமாந்தரமாக நடந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில், பிரெஞ்சு அரசுரிமைக் கடன் மும்மடங்காகியுள்ளது, அதேவேளையில் வெறும் 500 பிரெஞ்சு செல்வந்தர்களின் செல்வவளம் பத்து மடங்கு பெருகி 1.2 ட்ரில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளன. 2008 இல், 2010 களின் போதும் மற்றும் 2020 இல் பிணையெடுப்புகளின் ஒரு அலையில் ஐரோப்பிய மத்திய வங்கி பொது நிதிகளில் இருந்து ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கடனாக வழங்கிய நிலையில், தனியார் செல்வவளத்தின் இந்த அதிகரிப்பு பெருவாரியாக நிதியியல் ஊகவணிகத்தால் உந்தப்பட்டது. பிரெஞ்சு அரசு திவாலாகி உள்ளது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் தொழில்துறை கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளது, பிரெஞ்சுக்காரரான பேர்னார்ட் ஆர்னோ (நிகர மதிப்பு 190 பில்லியன் யூரோக்கள்) உலகின் செல்வந்தராக அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

இந்த காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவ செலவின அதிகரிப்புகளுக்குள் மூழ்கடித்தன, மேலும் உக்ரேனை நொறுக்கவும் மற்றும் நூறாயிரக் கணக்கான உக்ரேனியர்களைக் கொல்லவும் செய்துள்ள ரஷ்யாவுடனான அமெரிக்க தலைமையிலான போரிலும் மூழ்கடித்தன. காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை வாஷிங்டன் ஆதரித்த நிலையிலும் கூட, இந்தாண்டு தொடக்கத்தில் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் முன்மொழிவு, முதலாளித்துவ வர்க்கத்தின் தற்கொலைக்கு ஒப்பான பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. பிரான்சை திவாலாக்கிய பின்னர், மக்ரோன் உலகளாவிய அணுஆயுத போருக்கான பாதையைத் திறக்கும் ஒரு நடவடிக்கையை முன்மொழிந்து கொண்டிருந்தார்.

பிரான்சின் வரவு-செலவுத் திட்ட நெருக்கடி இதைத்தான் காட்டுகிறது: செல்வந்தர்களையோ, அல்லது பூமியை அழிக்க அச்சுறுத்தும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவவாதத்தையோ சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

தொழிலாள வர்க்கத்திற்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வெடிப்பார்ந்த போராட்டம் கொதித்துக் கொண்டிருக்கிறது, இந்த வரவு-செலவு திட்டத்தின் தன்மை நன்கு புரிந்து கொள்ளப்படுகின்ற நிலையில் இது தீவிரமடையும். இந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய போர் மற்றும் போலிஸ் ஒடுக்குமுறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ஐரோப்பிய ஒன்றியப் பிணையெடுப்பு நிதிகளைப் பறிமுதல் செய்வதன் மூலமாகவும் அவற்றைப் பெற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்களை தேசியமயமாக்குவதன் மூலமாகவும் மக்களின் சமூக தேவைகளுக்கு நிதியாதாரம் வழங்கப்பட வேண்டும்.

அதுபோன்றவொரு வேலைத்திட்டத்திற்காக மெலோன்சோன், அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI), புதிய மக்கள் முன்னணி (NFP) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் இணைந்து தொழிலாள வர்க்கம் போராட முடியாது. அவைகள் கடந்த ஆண்டு ஓய்வூதியங்களுக்கான போராட்டத்தின் குரல்வளையை நெரித்தன, மக்ரோன் அவரது வெட்டுக்களைத் திணித்த பின்னர் வேலைநிறுத்தங்களை வெறுமனே முடிவுக்குக் கொண்டு வந்தன. கடந்த ஜூலை தேர்தல்களில், மக்ரோனைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுவதற்காக தங்களின் சொந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதன் மூலமாக, தேசிய பேரணிக் (RN) கட்சி அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு, அவர்கள் மக்ரோனுடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கினர். மக்ரோனுடன் நாடாளுமன்ற இயந்திரத்திற்குள் சூழ்ச்சிக்கையாளுவதை நோக்கி முற்றிலும் நோக்குநிலை கொண்ட அவர்கள், போருக்கு எதிரான மற்றும் பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதற்கான தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு, புதிய மக்கள் முன்னணி (NFP) மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான அமைப்புகளில், சாமானிய தொழிலாளர்களின் பெரும் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. இப்போராட்டத்தில், பிரான்சு தொழிலாளர்களின் சிறந்த கூட்டாளிகள் உலகளாவிய தொழிலாளர்களே ஆவர். எனினும், இத்தகைய போராட்டத்திற்கான அடிப்படை முன்நிபந்தனையானது, இந்நெருக்கடிக்கு எளிய, பகுதித் சீர்திருத்த தீர்வு இல்லை என்பதை தெளிவான புரிதலாகும். தொழிலாள வர்க்கப் பாதுகாப்பு, அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI) முன்மொழியும் தேசிய மக்கள் புரட்சியை அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றும் சர்வதேச சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை வேண்டுகிறது.

Loading