மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போர் தொடுக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பைடென் அரசானது “மோதல் அதிகரிப்பை” விரும்பவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தாலும், நெதன்யாகு எடுக்கும் எந்த முடிவுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது. காஸா மற்றும் லெபனான் மீது வீசப்பட்ட பெரும்பாலான குண்டுகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு, பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் இஸ்ரேலுக்கு இலவசமாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகலுக்குப் பின் பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை சந்திக்கவிருக்கும் நெதன்யாகுவுக்கு, இந்தத் தருணம் இஸ்ரேலிய ஆளும் தரப்பின் நீண்டகால, இரக்கமற்ற நோக்கத்தை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது: அதாவது போர் மூலம் ஈரானின் ஆட்சியை தூக்கியெறிவது ஆகும். சென்ற வார இறுதியில் ஃபைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தபடி, “ஈரான் ஆட்சியை கவிழ்க்க இஸ்ரேல் முயற்சிக்கும் சாத்தியத்தை முழுமையாக தள்ளிவிட முடியாது.” அண்மையில் நெதன்யாகு, “ஈரான் இறுதியாக விடுதலை அடையும்போது - அந்தத் தருணம் மக்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் வரும் - அனைத்தும் மாறுபட்டிருக்கும்” என்று கூறியதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியது.
அமெரிக்க ஆளும் தரப்பின் ட்ரம்ப் பிரிவினர் இத்தகைய போருக்கு தமது முழு ஆதரவை அளித்துள்ளனர். ட்ரம்ப்பின் மருமகனும் முன்னாள் மத்திய கிழக்கு ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், ஈரான் ஆட்சியை தூக்கியெறிய இஸ்ரேலும் அமெரிக்காவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எக்ஸ் சமூக ஊடகத்தில் விரிவான பதிவொன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “ஈரான் இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது. இந்த அபாயத்தை ஒழிக்க கிடைத்துள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தாமல் விடுவது பொறுப்பற்ற செயலாகும்.”
ஆளும் தரப்பின் மற்ற பிரிவினர் மோசமடையும் சூழ்நிலை குறித்து அக்கறை வெளியிட்டிருந்தாலும், இஸ்ரேலின் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு என்ற அவர்களது நிலைப்பாட்டின் அடிப்படையில், அவர்களும் ஈரானுடனான மோதலை நோக்கியே நகர்கின்றனர். ஈரான் ஆட்சியை தூக்கியெறிவது எப்படி என்பதில் ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்புக்கும் இடையே சில தந்திரோபாய வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறுவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஈரான் ஆட்சியை அகற்றுவது, அமெரிக்க மேலாதிக்க கொள்கைக்கு ஒரு புவிசார் அரசியல் நோக்கமாக இருப்பதோடு, அதன் முக்கிய போட்டியாளரான சீனாவுடனான பொருளாதார மற்றும் இராணுவ மோதலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைகிறது. அமெரிக்க ஆளும் தரப்பின் அனைத்துப் பிரிவினரும் இஸ்ரேலுக்கு நிபந்தனையின்றி முழு ஆதரவு அளிக்கின்றனர். காரணம், வளமிக்க மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்துவதும், ஈரானிய தலைமையின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும், சீனாவுடனான மோதலில் தங்களது வலிமையையும் தந்திரோபாய வசதிகளையும் பெருமளவில் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
ஈரானிய எரிபொருள் வளங்களின் (ஹைட்ரோகார்பன்) முக்கியத்துவம்
ஈரான் ஒரு பெரிய நாடு, ஸ்பெயின், உக்ரேன் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் மொத்த நிலப்பரப்பிற்கு இணையானது. இங்கு 89 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 2003-ல் அமெரிக்கா படையெடுத்த அண்டை நாடான ஈராக்குடன் ஒப்பிடுகையில், ஈரானில் சுமார் நான்கு மடங்கு அதிக மக்கள்தொகையும், மிகவும் நவீனமான படைப்பலமும் பொருளாதாரமும் உள்ளன.
ஈரான் நீண்டகாலமாக அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதன் எண்ணெய்த் துறை மீதான பிரிட்டிஷ் மேலாதிக்கம், 1953-ல் எண்ணெய்த் துறையின் தேசியமயமாக்கலைத் தடுக்க CIA-MI6 மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பின்னர் அமெரிக்க ஆதரவுடன் ஷா நடத்திய பல தசாப்த கால கொடுங்கோல் ஆட்சி ஆகியவை இதில் அடங்கும்.
ஈரானின் செல்வச்செழிப்பு பெரும்பாலும் அதன் எண்ணெய் வளத்திலிருந்தே வருகிறது என்பது பொதுவான அறிவாக இருக்கிறது. ஈரான் தினமும் 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்கிறது, இது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். ஆனால், ஈரானின் எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கக்கூடிய திறன் பற்றி பெரும்பாலானோருக்கு தெளிவான புரிதல் இல்லை. வணிக ரீதியாக சாத்தியமான எண்ணெய் கையிருப்பில் உலகில் மூன்று நாடுகள் மட்டுமே (சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈராக்) ஈரானை விட முன்னிலையில் உள்ளன. அதுமட்டுமின்றி, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும் ஈரான் கொண்டுள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இன்றும் உலகப் பொருளாதாரத்தின் எரிசக்தி ஆற்றலின் அடித்தளமாக நிலைத்துள்ளன. புதிய மாற்று எரிசக்தி ஆற்றல் மூலங்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முதலாளித்துவத்தின் கீழ் “எரிசக்தி ஆற்றல் மாற்றம் (energy transition)” என்பது இன்னமும் முழுமையற்ற, முரண்பாடுகள் நிறைந்த ஒரு செயல்பாடாகவே உள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் முக்கிய கனிம வளங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா செய்யும் முதலீடுகளின் முதன்மை நோக்கம் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதல்ல. மாறாக, இத்துறையில் முன்னணியில் உள்ள சீனாவை எதிர்கொண்டு, தங்களின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதே ஆகும். உலகின் எரிசக்தி ஆற்றல் தேவையில் 57% எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்தும், 27% நிலக்கரியிலிருந்தும் கிடைக்கிறது. சூரிய சக்தியின் பங்களிப்பு வெறும் 1% மட்டுமே, இது இதுவரை இல்லாத அளவில் அதிகமாகும்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டால், இவற்றின் பெரும் அளவிலான, குறைந்த விலை கொண்ட இருப்புக்களைக் கொண்ட நாடுகள் புவிசார் அரசியலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் ஆகியவை உலகின் மிகப்பெரிய மலிவு எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஒவ்வொரு நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய குறிவைப்பாக இருந்துள்ளன. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது, தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் போரின் விளிம்பில் உள்ளது.
இதற்கும் மேலாக, இந்த நாடுகள் ஒவ்வொன்றும் - பொருளாதாரத் தடைகளால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதன் விளைவாக - ஒப்பீட்டளவில் பின்தங்கிய எண்ணெய்த் தொழில்துறையைக் கொண்டுள்ளன. உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய நிதி மற்றும் முன்னேறிய தொழில்நுட்பம் இவற்றிற்குக் கிடைக்கவில்லை. ஈராக்கின் நிலைமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அமெரிக்காவின் கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள் அங்கு உற்பத்தியை பெருமளவில் உயர்த்தின. நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்களாக இருந்த உற்பத்தி, இன்று சுமார் 5 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.
ஏகாதிபத்திய மூலோபாயத்தில் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்திப் பெருக்கத்தின் பங்கு
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் தற்போதைய தாக்குதல் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால், உலகச் சந்தைகளில் அதன் விளைவு மிகவும் கடுமையாக இருந்திருக்கும். சமீப நாட்களில், எண்ணெய் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளன. உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு இதுவாகும். எனினும், உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் இந்த விலை உயர்வின் தாக்கத்தைக் குறைத்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், நீரியல் பிளவாக்கம் (hydraulic fracturing) எனும் தொழில்நுட்பம் மூலம் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திப் பெருக்கத்தை அமெரிக்கா கண்டுள்ளது. இம்முறை அமெரிக்காவின் தினசரி உற்பத்தியை சுமார் 5 மில்லியன் பீப்பாய்களிலிருந்து (mb / d) 13 மில்லியனுக்கும் பீப்பாய்களிற்கு (mb / d) மேல் உயர்த்தியது. இது உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 15 சதவீதமாகும். மேலும், இக்காலகட்டத்தில் உலகளவில் எண்ணெய் விநியோக வளர்ச்சிக்கான ஒரே முக்கிய ஆதாரமாகவும் இது திகழ்கிறது.
[குறிப்பு: நீரியல் பிளவாக்கம் (hydraulic fracturing)
நீரியல் பிளவாக்கம், பொதுவாக பிளவுப்படுத்தல் என அழைக்கப்படுகிறது. இது நிலத்தடி பாறை அமைப்புகளிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இச்செயல்முறையில் உயர் அழுத்தத் திரவக் கலவையை - பொதுவாக நீர், மணல் மற்றும் வேதிப்பொருட்கள் - பாறைக்குள் செலுத்துவது அடங்கும். இந்த அழுத்தம் பாறையில் விரிசல்களை ஏற்படுத்தி, சிக்கியுள்ள எண்ணெய் அல்லது எரிவாயு ஒரு கிணற்றுக்குப் பாய்ந்து சேகரிக்கப்பட வழிவகுக்கிறது.]
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் இன்று முற்றிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது. 1990களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் ஈராக் மீதான படையெடுப்பைத் திட்டமிட்டபோது இருந்த நிலைமை இப்போது இல்லை. நீரியல் பிளவாக்கம் எனும் தொழில்நுட்பம் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளைக் கட்டுப்படுத்த முடிந்ததால், உலகச் சந்தையில் லிபியா, ரஷ்யா மற்றும் ஈரானின் எண்ணெய் இழப்பை அமெரிக்கா சமாளிக்க முடிந்தது. இதனால் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் இந்த நாடுகளை நெருக்கடிக்குள்ளாக்கவும், அவற்றின் ஆட்சிகளைக் கவிழ்க்கத் திட்டமிடவும் முடிந்தது. (லிபியாவின் விஷயத்தில், இது ஒரு “வெற்றிகரமான” திட்டமாகக் கருதப்பட்டது, ஆனால் அது நிரந்தர உள்நாட்டுப் போர் சூழலுக்கு வழிவகுத்தது.)
எனினும், அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்திப் பெருக்கம் நிரந்தரமானதல்ல. மிக உயர்ந்த மதிப்பீடுகளின்படி கூட, இது வெறும் பத்தாண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு இது வேகமாக சரிவடையும்.
1916 இல் லெனினால் எழுதப்பட்ட நூலான ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம் என்ற அவரது விமர்சனரீதியான படைப்பில், லெனின், ஏகாதிபத்தியம் அதன் தற்போதைய தேவைகளுக்கு ஒரு படி மேலே இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
முதலாளித்துவம் மேலும் வளர்ச்சியடையும்போது, மூலப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது, போட்டி மிகவும் கடுமையாகிறது, உலகெங்கிலும் மூலப்பொருட்களுக்கான வேட்டை தீவிரமடைகிறது, காலனிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் மிகவும் மூர்க்கமான மோதல்களாக உருவெடுக்கின்றன.
இதற்கு மேலும், வளங்களும் குறைந்து வருகின்றன என்பதையும், அவை குறையும்போது இந்த “வெறிகொண்ட வேட்டை” மேலும் தீவிரமடைகிறது என்பதையும் சேர்க்கலாம்.
உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் எதிர்கால இருப்புகள் எங்கே உள்ளன? அமெரிக்காவின் நீரியல் பிளவாக்கம் போன்ற சில மூலங்கள் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவே முக்கிய ஆதாரங்களாக நிலைத்திருக்கின்றன. குறிப்பாக, ஈரான், ரஷ்யா, ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் எதிர்காலத்தின் முக்கிய எரிபொருள் களஞ்சியங்களாக திகழ்கின்றன.
சீனா மற்றும் அமெரிக்கா
சீனாவின் வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார மோதலே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய இயக்கு சக்தி என்பதை வலியுறுத்துவது அவசியம். மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் “அரங்கில் ஓர் இடத்தை” சீன முதலாளித்துவத்திற்கு வழங்குவதை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அடிப்படையிலேயே எதிர்க்கின்றனர்.
பல தசாப்தங்களாக, உலகின் பெரும் நிறுவனங்களுக்கான மலிவான பொருட்களின் உற்பத்தி தளமாக சீனா இருந்தது. ஆனால் அதன் உள்நாட்டு முன்னேற்றம் - குறிப்பாக கல்வி மற்றும் நவீன உற்பத்தி நுட்பங்களில் - காரணமாக, சீனா இப்போது உள்நாட்டுக் கட்டுப்பாட்டிலான தொழில்துறைகளை உருவாக்கியுள்ளது. இவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
வாகனத் துறையில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க வாகனங்களை விட மேம்பட்டதும் விலை குறைவானதுமான சீன மின்சார வாகனங்கள் வேகமாக முன்னேறியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஏற்றுமதிகளில் சிறு பங்கு வகித்த சீனாவின் வாகன ஏற்றுமதிகள், இப்போது அவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
“தடையற்ற வணிகம்” என்ற முந்தைய பேச்சுக்களை முற்றிலும் கைவிட்ட அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், எப்படியாவது உலகப் பொருளாதாரத்தில் சீன நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைத் தடுக்க முயல்கின்றன. தனது சொந்த பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் தீவிரமடையும் நிலையில், சீனாவின் பொருளாதார எழுச்சியை தடுக்க அமெரிக்கா தனது மேலாதிக்க இராணுவ மற்றும் நிதிப் பலத்தைப் பயன்படுத்த முனைகிறது.
எண்ணெய், கனிமங்கள் போன்ற புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த வளங்களைக் கட்டுப்படுத்துவதன் பிரதான நோக்கம் வெறும் இலாபம் ஈட்டுவது மட்டுமல்ல. மாறாக, இந்த அத்தியாவசிய எரிசக்தி மற்றும் வளங்களை மற்ற நாடுகள் அணுகுவதைத் தடுப்பதன் மூலம் அவற்றின் மீது நெருக்கடியை ஏற்படுத்துவதாகும்.
சீனாவைப் பொறுத்தவரை, உலகின் முக்கிய கனிமச் சுத்திகரிப்பு ஆலைகளின் பெரும்பகுதி அந்நாட்டிற்குள்ளேயே அமைந்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களுக்குப் பெரும் தடையாக உள்ளது. எனினும், முக்கியக் கனிமங்கள் மற்றும் மின்கலன்களில் சீனாவுக்கு ஓரளவு முன்னுரிமை இருந்தாலும், குறைந்தபட்சம் அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் அமெரிக்கா கையோங்கி உள்ளது.
சீனாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா எவ்வாறு வெல்ல முடியும் என்பது குறித்த ராண்ட் (RAND) ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது: அதாவது ”அமெரிக்காவுடனான மோதலில் சீனா கடுமையான தட்டுப்பாட்டிற்கு உள்ளாகக்கூடிய ஒரு துறை எண்ணெய் விநியோகமாகும். சீனா தனது எண்ணெய்த் தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மேலும், வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே போதுமான அவசரகால கையிருப்பைக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.” உண்மையில், மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் சீனா இவ்வளவு விரைவாக முன்னிலை வகிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த மோசமான பலவீனத்தை அதன் ஆளும் தரப்பினர் நன்கு உணர்ந்திருந்ததே ஆகும்.
சீனாவின் எண்ணெய் இறக்குமதி முழுவதும் கிட்டத்தட்ட மத்திய கிழக்கிலிருந்தே வருகிறது. அமெரிக்காவின் நீரியல் பிளவாக்கம் (Hydraulic fracturing) தொழில்நுட்ப முன்னேற்றத்தால், இந்த எண்ணெய் இனி அங்கு செல்வதில்லை. மாறாக, சவுதி அரேபியா, ஈரான், ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் எண்ணெயை கிழக்கு நோக்கி சீனாவிற்கு அனுப்புகின்றன. சீனா தினமும் 11.4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்த அளவு உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக சீனாவை நிலைநிறுத்துகிறது. குறிப்பாக, ஈரானிய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடாகவும் சீனா திகழ்கிறது.
எண்ணெயும் மூன்றாம் உலகப் போரும்
புவிசார் அரசியல் நிலைமையை முழுமையாக ஆராயும்போது:
- தற்போதைய நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் மீது அமெரிக்கா, மற்ற எந்த நாட்டையும் விட அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.
- இருப்பினும், இந்த மேலாதிக்க நிலையானது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரையிலான மட்டுப்படுத்தப்பட்ட காலகட்டத்திற்கே நீடிக்கும். அதன் பின்னர், நீரியல் பிளவாக்கமானது (Hydraulic fracturing) படிப்படியான தேய்வால் இந்தக் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
- பொருளாதார அச்சுறுத்தலை உணரும் அமெரிக்கா, தைவானை மையப்படுத்தி சீனாவுடன் இராணுவ மோதலுக்குத் திட்டமிடுகிறது.
- எண்ணெய் விஷயத்தில், சீனாவானது மூலோபாய ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது, ஏனெனில் அது மத்திய கிழக்கிலிருந்து நாள்தோறும் பெருமளவில் எண்ணெய் இறக்குமதியை சார்ந்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி கூட்டாளி சீனாவே ஆகும்.
- நீண்டகால அடிப்படையில், உலகின் எஞ்சியுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் முதன்மை ஆதாரங்களாக மத்திய கிழக்கும் ரஷ்யாவும் திகழும். இதுவரை சுரண்டப்படாத எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளின் மிகப்பெரிய தனி ஆதாரங்களில் ஒன்றாக ஈரான் விளங்குகிறது.
இந்த அம்சங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கையில், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அமெரிக்காவையும் அதன் பங்காளிகளையும் பெரிதும் கவர்கின்றன என்பது வெளிப்படையாகிறது. போர் குறித்த முடிவெடுப்பில் பல்வேறு காரணிகள் பரிசீலிக்கப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய இயற்கை வள நாடுகளே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மை இலக்குகளாக இருப்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல.
ஈரான் “விரைவில் விடுதலை பெறும்” என்ற நெதன்யாகுவின் அச்சுறுத்தல்கள், அமெரிக்காவின் தாக்குதல் நாயாகச் செயல்படும் இஸ்ரேலுக்கு, மத்திய கிழக்கை மறுசீரமைக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை பிரதிபலிக்கின்றன. இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்திற்கு அதன் சொந்த தனித்துவமான நலன்கள் இருந்தாலும், இஸ்ரேலின் போர் இயந்திரம் இறுதியில் அமெரிக்காவின் நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் புவிசார் மூலோபாய நலன்களால் இயக்கப்படுகிறது.
இதுதான் மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் பிரதிநிதிகளுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் அடிப்படையில் உள்ள கடுமையான புவிசார் மூலோபாய தர்க்கமாகும். சீனாவுடன் ஒரு சாத்தியமான போருக்குத் தயாராகும் நிலையில், அமெரிக்கா இந்த முக்கியமான பிராந்தியத்தில் தனது பிடியை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் முயல்கிறது.
அப்பிராந்தியத்தில் இஸ்ரேலின் கொடூரமான செயல்களாலும், அமெரிக்காவின் இரத்தம் தோய்ந்த, வஞ்சகமான பங்காலும் வெறுப்படைந்தவர்கள், இந்தப் போர் வெறும் “கொள்கை தேர்வு” அல்ல என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். முதலாளித்துவம், எந்த விலை கொடுத்தாவது இலாபம் ஈட்டும் தனது தேசியவாத நோக்கத்தில், பில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை அச்சுறுத்தும் ஒரு மோதலை நோக்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இழுத்துச் செல்கிறது. இது எவ்வளவு அறிவுக்குப் புறம்பானதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது தீவிரமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிச் சுழலில் இருந்து வெளியேற வேறு வழியைக் காணவில்லை.