இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இஸ்ரேல் காஸாவில் குழந்தைகளை கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வருகிறது என்றும், “பதிவான எந்தவொரு போரிலும் இது மிகப்பெரியது” என்றும் ஐ.நா மனித உரிமைகள் நிபுணர் கிறிஸ் சிடோட்டி புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. ஆணைக்குழுவின் தலைவரும் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான நவநீதம் பிள்ளையுடன் சேர்ந்து, சிடோட்டி, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசத்தில் சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இந்தக் குழு, காஸாவில் நடந்துவரும் போரை விசாரிக்கும் அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும்.
சிடோட்டி மற்றும் பிள்ளை ஆகியோர் ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்த அறிக்கையை கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர்களின் அறிக்கை, பாலஸ்தீனியர்களை “நிர்மூலமாக்குவதாக” இஸ்ரேலை குற்றஞ்சாட்டியதுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒத்துழைப்பையும் நிறுத்துவது என்பது அனைத்து அரசுகளின் கடமையாகும் என்று மீண்டும் வலியுறுத்தியது.
கடந்த ஜூலை மாதம், சர்வதேச நீதிமன்றம் (ICJ) பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும், அதை செயல்படுத்துவதை நிறுத்துமாறும் அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட்டது.
ICJ இன் தீர்ப்பும், விசாரணைக் குழுவின் அறிக்கைகளும், இஸ்ரேலுக்குத் “தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள உரிமை” உண்டு என்ற அடிப்படையில் காஸா மீதான இனப்படுகொலைக்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவையும், நியாயப்படுத்தலையும் சுக்குநூறாக கிழித்தெறிகின்றன.
யதார்த்தத்தில், சர்வதேச நீதிமன்றமும் விசாரணை ஆணையமும், இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள மக்களுக்கு எதிராக “தன்னைத் தற்காத்துக் கொள்ள” எந்த உரிமையும் இல்லை என்பதை கண்டறிந்தது. ஆனால், மற்ற நாடுகள் இஸ்ரேலுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதமளிப்பதன் மூலமாக அதன் ஆக்கிரமிப்பை செயல்படுத்த எந்த உரிமையும் இல்லை என்பதையும் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
காஸா இனப்படுகொலையில் பொதிந்துள்ள சர்வதேச சட்டத்தின் முழுமையான முறிவுக்கு அப்பட்டமான கண்டனத்தை சிடோட்டி தெரிவித்திருந்தார். மேலும், அவர் “எங்களது அறிக்கைகள், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கடந்த 13 மாதங்களில் பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் — இவற்றில் எதுவுமே ஒரேயொரு குழந்தையைக் கொல்வதைக் கூட தடுக்கவில்லை” என்று அறிவித்தார். “இந்த அனைத்து நடவடிக்கைகளாலும் ஒரு குழந்தை கூட இறப்பதை தடுக்கவில்லை. இதுதான் இன்று ஒட்டுமொத்த ஐக்கிய நாடுகள் அமைப்புமுறையும் எதிர்கொண்டுள்ள யதார்த்தமாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்கள் மீதான இனப்படுகொலையின் தாக்கம் குறித்து சிடோட்டி ஒரு சுருக்கமான சுருக்கத்தை வழங்கினார். “கடந்த வார நிலவரப்படி, காஸாவில் கொல்லப்பட்ட 13,319 சிறுவர்களில் 786 பேர் ஒரு வயதுக்குட்பட்டவர்கள்” ஆவர்.
“இந்தக் குழந்தைகள் பயங்கரவாதிகள் அல்ல,” என்று சிடோட்டி பின்வருமாறு வலியுறுத்திக் கூறினார்:
ஆயிரமாயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், அதில் காயமுற்றவர்கள், இடிபாடுகளுக்கு அடியில் சிக்குண்டவர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. பதிவாகிய நவீன போரில் எந்தவொரு மோதலிலும் குழந்தைகளின் உறுப்புகள் துண்டிக்கப்படுவது மிகப் பெரிய விடயம் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள், உடன்பிறப்புகள், அத்தைகள், மாமாக்கள், தாத்தா பாட்டி, உறவினர்களை இழந்த குழந்தைகள் இப்போது 13 மாதங்களாக கடுமையான உணவுப் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர். இது, இப்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு என்று விவரிக்கப்படும் ஒரு சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது.
அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 12 மாதங்களில் குழந்தைகள் அனுபவித்த துன்பத்தை, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பெரும் தாக்கத்தை சுமக்காமல் கடந்து செல்ல முடியாது. ஆனால் கைகள் அல்லது கால்கள் அல்லது இரண்டையும் இழந்த குழந்தைகளுக்கு இது நிச்சயமாக உடல் ரீதியாக பொருந்தும், நாங்கள் அவர்களை சந்தித்திருக்கிறோம். நாங்கள் அவர்களை மருத்துவமனைகளில் சந்தித்தோம், அவர்களை நேர்காணல் செய்தோம். இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விளைவு...
நவநீதம் பிள்ளை தெரிவித்த தனது கருத்துக்களில், “இஸ்ரேலில் மேற்கொண்டுவரும் காஸா ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர சாதகமான நடவடிக்கைகளை எடுப்பது ஒவ்வொரு நாட்டினதும் பொறுப்பு, சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் கடமை” என்று அறிவித்தார்.
ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட நிலைப்பாடு அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, “ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் இனப்படுகொலை உடன்படிக்கை ஆகிய இரண்டின் கீழும் அரசுகளுக்கு நேர்மறையான கடமைகள் உள்ளன. இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதில் ஈடுபடவில்லை அல்லது அதனைச் செய்ய தயாராக இல்லை என்பதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அரசுகள், இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும்.
“இஸ்ரேலுக்கு அத்தகைய பரிமாற்றம் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு அரசும், பரிமாற்றம் அல்லது வர்த்தகத்திற்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன, சட்டவிரோத ஆக்கிரமிப்பை பராமரிக்க அல்லது போர்க்குற்றங்கள் அல்லது இனப்படுகொலைக்கு பங்களிக்கவில்லை என்று அரசு திருப்தி அடையும் வரை, அதன் பரிமாற்றம் அல்லது வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்” என்று அது அறிவித்தது.
அரசுகளின் சட்டப்பூர்வ கடமைகள் குறித்து நவநீதம் பிள்ளையிடம் கேட்டபோது, “பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இந்த இரண்டு நாடுகளையும் நடத்தும் விதத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும். நீங்கள் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எனவே ஒருவர் ஆக்கிரமிப்பாளர், மற்றவர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர். சர்வதேச சட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்புடன் ஒத்துழைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுடன் போர் தொடங்கியது என்ற ஏகாதிபத்திய சக்திகளின் கூற்றுக்களை நிராகரித்த நவநீதம் பிள்ளை, “வரலாறு அக்டோபர் ஏழாம் தேதியுடன் தொடங்கவில்லை, வரலாற்று ரீதியாக நடந்த மாபெரும் மீறல்களை நாங்கள் மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளோம். அது ஆக்கிரமிப்பு.”
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்ற கமிஷனின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்கப்பட்டபோது, சிடோட்டி ஒரு திட்டவட்டமான பதிலை அளித்தார்: “நாங்கள் அதை ஒரு ஆக்கிரமிப்பு என்று வரையறுத்துள்ளோம். சர்வதேச நீதிமன்றமும் அப்படித்தான் வரையறுத்துள்ளது. இது, இப்போது சர்வதேச அமைப்பில் மிகவும் அதிகாரம் வாய்ந்த நீதித்துறை அமைப்பால் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். ICJ யை விட உயர்ந்த அதிகாரம் எதுவும் இல்லை. இது தொடர்பாக உயர்ந்த கருத்தைப் பெறவோ அல்லது மாற்று கருத்தைப் பெறவோ வேறு எங்கும் செல்ல முடியாது.”
“ஆகவே சர்வதேச அமைப்பில் மிகவும் அதிகாரம் வாய்ந்த அமைப்பின் கருத்தால் எங்கள் கருத்து மாற்றப்பட்டுள்ளது, மேலும் அரசுகள், தனித்தனியாகவும் கூட்டாகவும், ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கும், குடியேற்றங்களைப் பராமரிப்பதற்கும், புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கும், உதவவோ அல்லது பங்களிக்கவோ கூடாது என்ற பொறுப்பைக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் கூறியது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் கவலையை திட்டவட்டமாக வலியுறுத்தினாலும், அவை காஸா இனப்படுகொலையில் இஸ்ரேல் உடனான அவற்றின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியே வருகின்றன. இந்த மாதம், மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட போரில் நேரடியாக பங்கேற்க அமெரிக்கா 100 போர்ப் படைகளை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.
காஸாவில் இனப்படுகொலை தொடர்கிறது, அது வேகமெடுத்து வருகிறது. செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் இஸ்ரேல் ஏழு தனித்தனி சமீபத்திய “பெரும் படுகொலைச் சம்பவங்களில்” 343 பேரைக் கொன்றுள்ளதாக அறிவித்தது. “அக்டோபர் 24 அன்று, ஜபாலியா அகதிகள் முகாமில் பதினொரு அடுக்குகளைக் கொண்ட ஒரு குடியிருப்புத் தொகுதி தாக்கப்பட்டதில் 150 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “அக்டோபர் 29 அன்று, பெய்ட் லஹியாவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது இடிபாடுகளுக்குள் சிக்குண்டு காணாமல் போயினர்” என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் மேலும் தெரிவித்தது.