இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நவம்பர் 14 நடக்கவுள்ள நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு திரும்புவதற்கு எதிராக சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தலையிடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, தலைநகர் கொழும்பு, வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மத்திய தோட்டப் பகுதியில் நுவரெலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் அபிவிருத்திகள் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் தலையீட்டை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன. தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் இந்த தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நமது சோசலிச முன்னோக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறும், அதன் அடிப்படையில், ஏகாதிபத்திய மற்றும் வணிக சார்பு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)/.தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்துக்கு எதிராக வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராகுமாறும் நாம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
உலகளவில் பேரழிவுகரமான அணு ஆயுத அச்சுறுத்தல் இன்று இருப்பதைப் போல் இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரையும், லெபனானில் அதன் படையெடுப்பையும் ஆதரிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அது, ஈரானுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட, மத்திய கிழக்கு பூராவும் ஒரு பரந்த போராக விரிவடைய அச்சுறுத்துகிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான அமெரிக்க தயாரிப்புகளும் தீவிரமடைந்து, அணுஆயுத சக்திகள் மோதிக்கொள்ளும் ஒரு உலகளாவிய போரில் மனிதகுலத்தை மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகளால் நடத்தப்படும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ முறைமைக்கு முடிவுகட்டுவதற்கு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப தேர்தலில் தலையிடுகிறது.
உலகப் போருக்கான உந்து சக்தியாக இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியே ஆகும். இது பாசிச வாய்வீச்சாளர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் எளிதாகிவிடாது, மாறாக மோசமாகிவிடும். குறிப்பாக அவர், அமெரிக்கா அதன் உலக மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்கு குறுக்கே நிற்கும் பிரதான அச்சுறுத்தலாக ஆளும் வட்டாரங்களில் கருதப்படும் சீனாவை குறிவைப்பார்,
செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல் வெற்றிக்காக ட்ரம்பை உடனடியாக வாழ்த்தியுள்ளார். அவரது செய்தி, அவரது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றும் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க-இந்தியா போர் உந்துதலில் இலங்கையை ஒருங்கிணைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும், ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளும் பெருகிவரும் உலகளாவிய போரின் ஆபத்து குறித்து முற்றிலும் மௌனம் காத்து, அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தங்கள் ஆதரவைக் காட்டி, தொழிலாள வர்க்கத்தை இருட்டில் வைத்துள்ளன.
பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீது ஆழமாக வேரூன்றியிருக்கும் மக்கள் விரோதத்தை ஜே.வி.பி./தே.ம.ச. இழிந்த முறையில் சுரண்டிக் கொள்வதுடன் அதன் போலியான தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுவிடும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு வாரங்களே ஆன நிலையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத, இனவாத அரசியல் ஆகியவை விரைவாக வெளிப்பட்டு வருகின்றன.
பெருவணிகத்தின் உத்தரவின் பேரில் உலக மூலதனத்துடன் இணைந்து செயல்படும் திசாநாயக்க அரசாங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முந்தைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது.
திஸாநாயக்க, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரசாங்கத்தின் முதன்மை வரவு செலவுத் திட்ட மீதியை அடுத்த ஆண்டு நான்கு மடங்கு உயர்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு உறுதியளித்துள்ளார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் 2028க்குள் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில் வரிகளை அதிகரித்து, தனியார்மயமாக்கல் மூலம் அரச வேலைகளைக் குறைத்து, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட பொதுச் சேவைகளுக்கான மானியங்களை மேலும் குறைக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவாரத்தைகளுக்கு மத்தியில் திசாநாயக்க அரசாங்கம், உழைக்கும் மக்களின் எரியும் தேவைகளைப் பூர்த்தி செய்ய 'பணம் இல்லை' என்று மீண்டும் மீண்டும் அறிவித்தது. 1.4 மில்லியன் அரச ஊழியர்களுக்கு முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 25 சதவீத சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வணிகச் சார்பு நிகழ்ச்சி நிரல் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும் என்பதை உணர்ந்து, அரசாங்கம் ஏற்கனவே உள்ள அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாக அது தேர்தலில் கொடுத்த வாக்குறுதியைக் கைவிட்டுவிட்டது. குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அப்படியே பேணுகின்றது.
திசாநாயக்கவின் வலது கையான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, “வேலைநிறுத்தங்கள் கட்ந்த கால விடயங்களாக்கப்படும்” எனக் கூறி, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளையும் சட்டவிரோதமாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றிய தெளிவான சமிக்ஞையை கொடுத்தார். இந்தக் கருத்துக்கள், ஜே.வி.பி.யின் தொழிலாள வர்க்க விரோத, பாசிசத் தன்மை பற்றிய தெளிவான எச்சரிக்கையாகும். அது ஒருபோதும் சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக மாவோவாதம் (சீன ஸ்ராலினிசம்), காஸ்ட்ரோவாதம் மற்றும் பிற்போக்கு சிங்கள தேசபக்தியின் குட்டி முதலாளித்துவ தீவிர கலவையில் நிறுவப்பட்டது. .
ஜே.வி.பி./தே.ம.ச. நவம்பர் 14 தேர்தலில் பாராளுமன்றத்தை அதன் உறுப்பினர்களால் நிரப்புமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இதனால் அவர்கள் ஒரு 'பலமான அரசாங்கத்தை' அமைக்க முடியும். அதன் நோக்கம் தெளிவானது: அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஒன்றுவிடாமல் செயல்படுத்துவதும் அதற்கு எதிராக எழும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் தவிர்க்க முடியாத எதிர்ப்பை பொலிஸ்-அரசு அடக்குமுறை மூலம் கொடூரமாக ஒடுக்குவதும் ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த தாங்க முடியாத சமூக நிலைமைகள் மீதான 2022 வெகுஜன எழுச்சியால் பீதியடைந்துள்ள ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும், சிக்கன நடவடிக்கை திட்ட நிரலை முன்னெடுக்க ஜே.வி.பி./தே.ம.ச. பக்கம் திரும்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பொருளாதார அச்சுறுத்தலைக் கண்டித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, தோற்கடிக்கப்பட்ட பின்னர், புதிய ஜனாதிபதி மீது தனது 'நம்பிக்கையை' விரைவாக அறிவித்தார்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் விசுவாசமான எதிர்கட்சியாக இணைந்து பணியாற்றுவதற்கு அனைத்து விதமான முதலாளித்துவக் கட்சிகளும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதில், முந்தைய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), முந்தைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் ஊடக பெருச்சாளிகள் தலைமையிலான சிங்கள இனவாதிகளின் கலவையான மவ்பிம ஜனதா கட்சி/சர்வஜன கட்சி, ஆகியவையும் இதில் அடங்கும்.
அதேபோன்று, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் திசாநாயக்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. உழைக்கும் மக்கள் ஜே.வி.பி.யின் வெறித்தனமான தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத வரலாற்றை நன்கு அறிந்த தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கிலும், பெருந்தோட்ட மாவட்டங்களிலும் திசாநாயக்கவின் வாக்குகள் வெறும் 10 வீதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்த நிலையிலும் தமிழ் கட்சிகள் அவருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
போலி-இடது முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (மு.சோ.க.) திசாநாயக்கவின் தெரிவு 'மக்களின் எதிர்பார்ப்புகளின்' பிரதிபலிப்பு என்று பாராட்டியதுடன் வரவிருக்கும் அரசாங்கத்தை இடதுபக்கம் செல்ல நெருக்க முடியும் என்ற போலி மாயையை ஊக்குவித்துள்ளது. தனது பரந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, மக்கள் போராட்டக் முன்னணி என்பதை அமைத்து, தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்ற முன்னிலை சோசலிச கட்சியானது 'எதிர்க்கட்சியை மாற்று' என்று முழங்கிவருகிறது. வேறுவிதமாகக் கூறினால், பாராளுமன்றத்தில் திசாநாயக்க அரசாங்கத்திற்கு சிறந்த முறையில் அழுத்தம் கொடுக்க முன்னிலை சோசலிச கட்சி / மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாகும்.
மீண்டும் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலின் கட்டமைப்பிற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அடிபணிய வைக்கவே முன்னிலை சோசலிசக் கட்சி முயல்கிறது. 2022 இல், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்றபோது, பாராளுமன்றக் கட்சிகளின் 'இடைக்கால அரசாங்கம்' ஒன்றை அமைத்து அவசர சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற மாயையை ஊக்குவிக்க தொழிற்சங்கங்களுடன் முன்னிலை சோசலிசக் கட்சி வேலை செய்தது. பாராளுமன்ற சூழ்ச்சிகளின் விளைவாக, விக்கிரமசிங்க பதவியில் அமர்த்தப்பட்டதோடு சமூக சீரழிவு கட்டவிழத்து விடப்பட்டது.
2022 ஜூலையில், வெகுஜன எழுச்சிக்கு மத்தியில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கை குழுக்களின் விரிவாக்க வலைப்பின்னலை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டுக்கான பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி தொடங்கியது. அத்தகைய மாநாட்டுக்கான அடித்தளமாக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பது இன்று மிகவும் அவசரமானதாகும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் அது நம்பியிருக்கின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறை உட்பட முதலாளித்துவ அரசு எந்திரத்திற்கு எதிராக, தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்டவர்களும் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்கவும், அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராட ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் புறநகர் பகுதிகளிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது:
* சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை முழுவதுமாக நிராகரி!
* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்!
* தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தேசியமயமாக்கு!
* தனியார்மயமாக்கலுக்கு இலக்கான அனைத்து அரசு நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
* கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களை வழங்கு!
* உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்காக! அனைத்து வகையான வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரி!
* ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!
* நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்திடு!
இந்தக் கோரிக்கைகளுக்கான பிரச்சாரமும் தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடும் சோசலிச வழிகளில் சமுதாயத்தை மறுசீரமைக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை நோக்கி முன்நகர்த்தப்பட வேண்டும். இலங்கையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை அமைப்பதை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
எமது சோசலிச வேலைத்திட்டத்திற்கான நனவான வாக்களிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறு நாங்கள் உங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, வரவிருக்கும் புரட்சிகர வர்க்கப் போர்களில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதற்குத் தேவையான வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி/வட்ஸ்அப்: +94773562327
மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk
மேலும் படிக்க
- இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யார்?
- சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
- போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது
- இலங்கை அரசாங்கம் 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துவதை எதிர்த்திடு!
