முன்னோக்கு

லொஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தும் சோசலிச திட்டமிடலின் அவசியமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

லொஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் பிரிவில் வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025 அன்று வீடுகள் எரிந்துகொண்டிருப்பதை காணலாம் [AP Photo/Mark J. Terrill]

கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் தற்பொழுது கட்டுப்பாட்டை மீறி சீறிக் கொண்டிருக்கும் பல தீப்பிழம்புகள் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பேரழிவைப் பிரதிபலிக்கின்றன. பலத்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகளால் துரிதப்படுத்தப்பட்ட ஏராளமான தனித்தனி தீப்பிழம்புகள், போதுமானதாக அல்லது இல்லாத எதிர் நடவடிக்கைகளை விரைவாக மூழ்கடித்துள்ளதால், சிறிய நகரங்களின் அளவைக் கொண்ட சமூகங்கள், வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பொழுதுபோக்கு துறையின் இருப்பிடமான லொஸ் ஏஞ்சல்ஸ், பிரமைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற நகரமாகும். ஆனால், ஒரு சில நாட்களிலேயே, அந்த பிரமைகளில் பலவும் தீப்பிழம்புகளாக வெடித்துச் சிதறியுள்ளன, இது சமகால அமெரிக்காவில் சமூக உறவுகளின் முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான நிலையையும், காலநிலை மாற்றத்தில் இருந்து நகர்ப்புற திட்டமிடல் மற்றும் அடிப்படை நீர் மேலாண்மை வரையில் எந்தவொரு சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ள முதலாளித்துவத்தின் முற்றிலும் இயலாமையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. வோல்டயரின் கேண்டைட் (Candide) படைப்புக்களுக்கு உத்வேகம் அளித்த 1755 லிஸ்பன் பூகம்பத்தைப் போலவே, லொஸ் ஏஞ்சல்ஸ் தீவிபத்துகளும் வெகுஜன நனவில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

தீயணைப்பு வீரர்கள் —அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு மணி நேரத்திற்கு 16 முதல் 74 சென்டுகள் வரை சம்பாதிக்கும் சுதந்திரமற்ற தண்டனை பெற்ற தொழிலாளர்களாக மதிப்பிடப்படுகிறார்கள்— தீயை அணைக்க தங்கள் உடல்நலத்தையும் உயிரையும் பணயம் வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் போதுமான எண்ணிக்கையிலும், நீரேற்றிகளில் நீர் அழுத்தம் இல்லாமலும் முடக்கப்பட்டுள்ளன.

சுமார் 179,000 குடியிருப்பாளர்கள் இதுவரை தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கான இடங்கள் அரிதாகவே உள்ளன. ஐந்து இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சாம்பலுக்கு இடையில் இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளனர். எண்ணற்ற குடும்பங்கள், அவர்களின் செல்லப்பிராணிகள், வீட்டு உடமைகள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுப் பொருட்களை இழந்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் அப்பகுதியில் பரவி வரும் நச்சுப் புகை மண்டலத்திற்கு உட்படுவர். இது, வரவிருக்கும் ஆண்டுகளில் கணக்கிட முடியாத சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த செவ்வாய்க்கிழமை மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியான பாலிசேட்டில் பரவிய தீ வேகமாக 17,200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து நாசமாக்கியது. இதில் 23,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கடலோர பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறம் முழுவதும் அடங்கும். ஈட்டன் தீ 10,600 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது, இதில் அல்டடேனாவின் பெரும்பாலான பகுதிகளும் அடங்கும். சான் பெர்னாண்டோவின் உறைவிடத்தில் ஏற்பட்ட ஹர்ஸ்ட் தீ 671 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது.

புதன்கிழமை, மேலும் இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டன: லிடியா தீ, 348 ஏக்கர்களை எரித்தது, மற்றும் சன்செட் தீ 43 ஏக்கர்களை எரித்தது. வியாழக்கிழமை, கென்னத் தீ 960 ஏக்கர் பரப்பளவில் வேகமாக பரவியது. பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டனில் ஏற்பட்ட இரண்டு பெரிய தீ விபத்துகள், இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை பூஜ்ஜிய சதவீதத்தில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற தனித்தனி தீ எதுவும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை மற்றும் அவை உள்ளடக்கிய ஏக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சில அறிக்கைகளில், “காட்டுத்தீ” என்று அழைக்கப்பட்டாலும், தீப்பிழம்புகள் நகர்ப்புற பகுதிகளை ஆழமாக அடைந்து, வரலாற்று கட்டிடங்கள், பள்ளிகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் தேவாலயங்களுடன், முழு குடியிருப்பு சுற்றுப்புறங்களை அழித்துள்ளன.

கட்டவிழ்ந்து வரும் இந்த பேரழிவு வெறுமனே ஒரு “இயற்கையான” பேரழிவு அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும். அனைத்து சமூகத் தேவைகளையும் ஏகாதிபத்திய போர் இயந்திரத்திற்கு எரியூட்டுவதற்கு அடிபணிய வைக்கப்படுவது, வோல் ஸ்ட்ரீட்டிற்கான நிதி ஆதாயங்களுடன், மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேலே போர் மற்றும் இலாபங்கள், பகுத்தறிவு நகர்ப்புற திட்டமிடலுக்கு மேலே போர் மற்றும் இலாபங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக போர் மற்றும் இலாபங்களே இருக்கின்றன.

18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பெருநகரப் பகுதியான லொஸ் ஏஞ்சல்ஸ், உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாகும். குறிப்பாக உற்பத்தி மற்றும் வர்த்தகம், பன்மொழிப் புலமை மற்றும் அதன் பணியாளர்களின் சர்வதேச தொடர்புகள் மற்றும் அதன் கலாச்சார உற்பத்தியின் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு ஆலோசனை நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ், உலகின் முதல் 1,000 “உலகளாவிய நகரங்களில்” லொஸ் ஏஞ்சல்ஸை ஏழாவது இடத்தில் தரவரிசைப்படுத்தியது. மேலும், சீன மேம்பாட்டு நிறுவனம் இந்த நகரத்தை உலகில் ஒரு நிதி மையமாக எட்டாவது இடத்தில் தரவரிசைப்படுத்தியது. அத்தகைய நகரத்தில், முன்கணிக்கக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய தீ விபத்துகள் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவது என்பது, முழு உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் மீதான ஒரு குற்றச்சாட்டாகும்.

சுற்றுச்சூழலை கட்டுப்பாடற்ற முறையில் முதலாளித்துவம் சுரண்டி வருவதன் விளைவாக உருவான காலநிலை மாற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி லொஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் ஒரு பாரிய பங்கைக் கொண்டிருந்தது. தெற்கு கலிபோர்னியாவில் நீண்ட வறண்ட பருவங்கள் தீ அபாயத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், கிடைக்கக்கூடிய நீர் விநியோகங்களையும் குறைத்து, எதிர் நடவடிக்கைகளை உருவாக்குவதற்கான சிக்கலான முயற்சிகளையும் ஏற்படுத்தியுள்ளன. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் 1996 முதல் 2021 வரை கலிபோர்னியாவில் எரிந்த பகுதிகளில் 320 சதவீதம் அதிகரிப்பை ஏற்படுத்தியதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இந்தப் பேரழிவிற்கு முழு அரசியல் ஸ்தாபனமும் பொறுப்பாகும். தீயணைப்புத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமை, போதுமான நீர் விநியோகம் இல்லாமை, ஒழுங்கற்ற தன்மை மற்றும் ஆபத்தான கட்டுமான நடைமுறைகள் போன்ற அனைத்திற்கும், பல தசாப்தங்களாக லொஸ் ஏஞ்சல்ஸைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஜனநாயகக் கட்சியே நேரடிப் பொறுப்பாகும். ஜனநாயகக் கட்சி மேயர் கரேன் பாஸ் இன் சமீபத்திய வரவு-செலவுத் திட்ட முன்மொழிவில், தீயணைப்புத் துறைக்கான நிதி 17.6 மில்லியன் டாலர்களாக வெட்டப்பட்டுள்ளது. அதேவேளையில், லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் துறை அதன் வரவு-செலவு திட்டக்கணக்கில் 126 மில்லியன் டாலர் அதிகரிப்பைப் பெற்று, இப்போது அது 2.14 பில்லியன் டாலராக உள்ளது.

இன்னும் ஆழமாகச் சொன்னால், பாதிக்கப்பட்டுவரும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரமானது, பகுத்தறிவு நகர்ப்புற திட்டமிடலுக்கு நேர்மாறானதாக உள்ளது என்று மட்டுமே விவரிக்க முடியும். பல தசாப்தங்களாக, குறுகிய கால இலாப நலன்களுக்கு ஏற்ப, நகரம் சீரற்ற முறையில் விரிவடைந்துள்ளது. இந்த செயல்முறையானது, ஒரு பெரிய கான்கிரீட் பெருநகரத்தை உருவாக்கியுள்ளதுடன், போதுமான போக்குவரத்து உள்கட்டமைப்பு இன்மையால், தினமும் காலையிலும் மாலையிலும் நெரிசல் மிகுந்த நேரத்தில் முழுமையாக நகரம் ஸ்தம்பித்துவிடுகிறது.

பிரபலமற்ற ஏழ்மையான ஸ்கிட் ரோ போன்ற பகுதிகளிலும், தெருக்களை ஒட்டி வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் குவிந்துள்ள வீடற்ற மக்களின் தொகை, பல்லாயிரக்கணக்கிலேதான் மதிப்பிட முடியும். மேலும், செல்வந்தர்களால் வெட்கமின்றி கட்டப்பட்ட மாளிகைகளால் சூழப்பட்ட மலைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் பார்க்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதி பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. வரிகள், வீட்டுவசதி, மருத்துவக் கவனிப்பு மற்றும் அடிப்படைத் பொருட்களின் விலைகளும் இழிபுகழ் பெற்ற முறையில் வானளாவில் உள்ளன.

பாலிசேட்ஸ் தீ அந்தப் பகுதியைத் நாசமாக்கியபோது, ​​கெட்டி வில்லா (Getty Villa) அருங்காட்சியகம் வெளிப்படையாகவும் அதிர்ஷ்டவசமாகவும் காப்பாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அருங்காட்சியகத்தால் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளில், தளத்தில் நீர் சேமிப்பு, வழக்கமான தூரிகைகளை அகற்றும் முயற்சிகள், இரட்டைச் சுவர் கட்டுமானம் மற்றும் அதிநவீன காப்பு நுட்பங்கள் ஆகியவை அடங்கும்.

ஈடுசெய்ய முடியாத பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கலைப்பொருட்களின் தொகுப்பைப் பாதுகாக்க இந்த அருங்காட்சியகம் அசாதாரண முயற்சிகளைச் செய்ததில் குறை சொல்ல முடியாது. ஆனால் ஒருவர் கேட்க வேண்டும்: அத்தகைய நடவடிக்கைகள் இருக்கும்பட்சத்தில், நகரத்தில் உள்ள மற்ற எல்லா வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் அவை ஏன் எடுக்கப்படவில்லை?

உண்மையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அதன் எல்லைகளில் குவிந்துள்ள செல்வத்தை பகுத்தறிவார்ந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால், நகரத்தின் ஒரு கட்டமைப்பும் கூட எரிந்திருக்காது, ஒரு நபர் கூட இறந்திருக்க மாட்டார். ஏனென்றால், முதலில் ஆபத்தான தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், ஒன்றுடன் ஒன்று எதிர் நடவடிக்கைகளின் அடுக்குகளைக் கொண்டு ஆபத்தைத் தணிக்கவும், அதிகரித்த ஆபத்து ஏற்பட்டால் தீர்க்கமாக பதிலளிக்கவும் வளங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

2025 ஆம் ஆண்டில், தீ, வெள்ளம், சூறாவளி, பூகம்பங்கள் மற்றும் கோவிட்-19 போன்ற நோய்களின் வெடிப்புகளால் ஏற்படும் பெரும்பாலான தீங்குகளைத் தடுக்க வளங்களும், அறிவியல் அறிவும் எல்லா இடங்களிலும் உள்ளன. இருப்பினும், அனைத்து வளங்களும் வரம்பற்ற இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கும், எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற கொடூரமான பணக்கார தன்னலக்குழுக்களின் பைகளிலும் செலுத்துப்பட்டு வருவதால், இதுபோன்ற “இயற்கையான” பேரழிவுகள், ஒரு சமூகத்தையே சீரழிக்க முடிகிறது.

ஜனநாயகக் கட்சியினரைப் போலவே சற்றும் குறையாத வகையில் குடியரசுக் கட்சியினரும் இந்தத் தன்னலக்குழுவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், தீ வைப்பவர்களின் ஒரு கும்பலை தீயணைப்பு நிலையத்தை நடத்த அழைப்பதற்குச் சமமாக இருக்கும். ட்ரம்பின் சுற்றுச்சூழல் கொள்கைகள் என்பது, பெருநிறுவனக் கொள்ளை மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முற்றிலுமாக நீக்குவதாகும். இவை, தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகள் மற்றும் பூமியின் எதிர்கால வாழ்க்கையின் மீதான தன்னலக்குழுவின் நலன்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

தடுக்கத்தக்க நோய்கள் மற்றும் முன்கணிக்கத்தக்க நகர்ப்புற பேரழிவுகள் என்பன, காலநிலை மாற்றத்திற்கு ஒரு உலகளாவிய தீர்வு தேவைப்படும் உலகளாவிய பிரச்சினைகள் என்பதைக் காட்டுகின்றன. அதாவது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்க மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அவசியத் தேவைகள் மற்றும் அபிலாஷைகள் தலையாயதாக இருக்கும் வகையில், அனைத்து நகரங்களின் நிர்வாகமும் உள்ளடங்கலாக, அனைத்து அவசியமான போக்குகளையும் தடுத்து நிறுத்துவதற்கும் தலைகீழாக்குவதற்கும் பகுத்தறிவார்ந்த திட்டமிடல், உற்பத்தியின் ஜனநாயக மேற்பார்வை மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியப்படுகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸ் தற்போது நச்சுப் புகையால் மூச்சுத் திணறினாலும், அது ஒரு பிரமாண்டமான மற்றும் அழகான இடமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது. சோசலிச திட்டமிடல், அதன் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி மற்றும் பசிபிக் பெருங்கடலில் கண்கவர் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு சில செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உண்மையிலேயே பூமியில் ஒரு சொர்க்கமாக இருக்க முடியும்.

அதே நேரத்தில் லொஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட தீவிபத்துக்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் என்பன உலகந்தழுவிய பிரச்சினைகள் ஆகும். சமுதாயத்தை எதிர்கொண்டுள்ள அத்தனை அடிப்படைப் பிரச்சினைகளும் பாரிய பிரச்சினைகளாகும். அதற்காக சமூகத் தேவையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவார்ந்த மற்றும் திட்டமிட்ட வழியில் பிரம்மாண்டமான ஆதாரவளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியமாகும்.

தொழில்நுட்பமும் உற்பத்தி சக்தியும் ஏற்கனவே உள்ளன. உலகம் முழுவதும் அதன் மகத்தான முற்போக்கான மற்றும் புரட்சிகர ஆற்றலைக் கட்டவிழ்த்துவிடும் திறன் கொண்ட ஒரு சோசலிசத் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு மட்டுமே பற்றாக்குறையாக உள்ளது.

Loading