இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை இராணுவத்தால் ஆதரிக்கப்படும் பௌத்த குழுக்கள், வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் காங்கேசன்துறைக்கு அருகில் அமைந்துள்ள தைட்டி கிராமத்தில் ஒரு பௌத்த கோவிலை விரிவுபடுத்த ஆத்திரமூட்டும் வகையில் முயற்சித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாதப் போரின் போது, பிரதேசத்தை ஆக்கிரமித்த இலங்கை இராணுவத்தால், 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 14 தமிழ் குடும்பங்களின் தனியார் நிலங்களில் இந்தக் கோயில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது. முன்னர் ஒரு சிறிய நிலத்தில் இருந்த திஸ்ஸ விஹாரய எனப்படும் இந்த கோயில், இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ நில உரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கை புறக்கணித்து, 2021 ஆம் ஆண்டு அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் இந்த கோயில் விரிவாக்கம் தொடங்கப்பட்டது. 3 ஜூன் 2023 அன்று இந்த விகாரை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அப்போதிருந்து, உள்ளூர் மக்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பெப்ரவரி 6 அன்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோயிலை மீண்டும் விரிவுபடுத்துவதற்காக அதிக நிலங்களை கையகப்படுத்தக் கோரிய கடிதமொன்றை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இந்தக் கடிதம், டிசம்பரில் அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) தலைவரும், தேசிய பொலிஸ் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவருமான சந்திரா நிமல் வாகிஷ்ட என்பவரால் எழுதப்பட்டது. இந்தப் புதிய திட்டம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மேலும் தூண்டிவிட்டது.
2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 26 ஆண்டுகால இனவாதப் போர் இரத்தக்களரியில் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவம் மற்றும் பௌத்த குழுக்களால் வடக்கு மற்றும் கிழக்கில் நிறுவப்பட்ட நூற்றுக்கணக்கான பௌத்த வழிபாட்டுத் தலங்களில் திஸ்ஸ விஹாரையும் ஒன்றாகும். சிங்கள-பௌத்த அரசின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் ஒரு வழிமுறையாக கொழும்பு அரசாங்கங்கள் இந்த இனவாத ஆத்திரமூட்டல்களை ஆதரித்தன.
இராணுவ ஆதரவு பெற்ற பௌத்த குழுக்கள் இனவாத பதட்டங்களை அதிகரிக்க முயலும் அதே வேளை, தமிழ் தேசியவாதக் கட்சிகள், தங்கள் பங்கிற்கு, தமிழர்களிடையே சிங்கள-எதிர்ப்பு பேரினவாதத்தைத் தூண்டுவதற்கு இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அனைத்தும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பெப்ரவரி 9 அன்று, தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். ஸ்ரீதரன், ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அரசாங்கம் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், அதை இடிப்போம் என்று எச்சரித்தார். பெப்ரவரி 11, 12 ஆகிய திகதிகளில், தமிழ் கட்சிகள் பல குழுக்களுடன் சேர்ந்து கோயிலை அகற்றி நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் ஒப்படைக்கக் கோரி, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்ய மல்லாகம் நீதவானிடமிருந்து பொலிசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்த போதிலும், போராட்டக்காரர்கள் அதை மீறினர். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக தமிழ் மேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலத்துக்கு நீதவான் அழைப்பாணை விடுத்தார். அவர் 100,000 ரூபாய் ($US330) பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரலுமான சரத் வீரசேகர, 'வளர்ந்து வரும் நிலைமையைப் பரிசீலிக்குமாறு' முப்படைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதியிடம் கோரினார். கொழும்பில் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை, இந்த 'வெடிக்கும் நிலைமை' குறித்து 'கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது' என்று அவர் அறிவுறுத்தினார். வீரசேகர சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தூண்டிவிடுவதில் பேர்போனவர்.
போர்க் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் டயஸ், தமிழரசுக் கட்சித் தலைவர் ஸ்ரீதரன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரினார். 'அரசாங்கம் [அவர்] வன்முறையை ஊக்குவிப்பதை அலட்சியம் செய்ய முடியாது' என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது 'ஏனைய பிரச்சினைக்காரர்களை ஊக்குவிக்கும்' என்றும் டயஸ் கூறினார்.
இந்த இனவாத பதட்டங்களைத் தூண்டும் முயற்சிகளுக்கு மத்தியில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் உடந்தையும் தெளிவாகத் தெரிகிறது. ஜனவரி 31 அன்று யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்குத் திசாநாயக்க தலைமை தாங்கிய போது, அங்கு இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போதும், வடக்கில் பிரச்சாரம் செய்த திசாநாயக்க, தனது அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தார். ஏனைய தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே, சில ஏக்கர் நிலங்களை உரிமையாளர்களுக்கு திருப்பித் தந்த பிறகு, இந்த வாக்குறுதியையும் அரசாங்கம் கைவிட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, அவை முகாம்கள் மற்றும் விவசாய பண்ணைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
திஸ்ஸ விஹார சம்பந்தமாக அரசாங்கம் இராணுவத்துடன் சூழ்ச்சி செய்துள்ளமை, பௌத்த தத்துவம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் A.M.P.M.B. அதபத்துவினால் வெளிப்படுத்தப்பட்டது. தி மார்னிங் பத்திரிகையின் நிருபருடன் பேசி அவர், இந்தப் பிரச்சினை குறித்து 'முடிவெடுப்பதற்காக' பாதுகாப்புப் படைகள் உட்பட தொடர்புடைய அமைச்சுகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தியதாகத் தெரிவித்தார்.
'கோவிலை பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது' என்று கூறிய அதபத்து, முந்தைய பதிவில் அங்குள்ள நிலம் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது, எனத் தெரிவித்துள்ளார். இராணுவம் கட்டிய பிரதேசத்தில், 'இராணுவம் மற்றும் கடற்படையால் நடத்தப்படும் இரண்டு கோவில்கள் உள்ளன' என அவர் மேலும் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோவிலை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இலங்கையின் பிற்போக்கு அரசியலமைப்பு, பௌத்தத்தை 'முன்னுரிமை' மதமாகவும், சிங்களத்தை அதிகாரப்பூர்வ மொழியாகவும் நிறுவியுள்ளது. ஜே.வி.பி./தே.ம.ச. இந்த இனவாத அரசியலமைப்பைப் பாதுகாக்க மீண்டும் மீண்டும் உறுதிபூண்டுள்ளது.
கோவில் குறித்த அதன் நிலைப்பாடு, திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும் 'இன மற்றும் மதப் பிளவுகளைக் கடந்து “சமத்துவத்தை' நிலைநாட்டுவதற்கும், இனவாத ஆத்திரமூட்டல்களை எதிர்ப்பதற்கும் முன்நிற்பதாக கூறுவது எந்தளவுக்கு போலியானது என்பதை வெளிப்படுத்துகிறது. நவம்பர் 21 அன்று பாராளுமன்றத்தில் தனது கொள்கை அறிக்கையில், 'பிளவுபடுத்தும் இனவாத அரசியல்' அல்லது 'மத தீவிரவாதம் வேரூன்றுவதை' அனுமதிக்காமல் இருக்க அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகளைப் போலவே, ஜே.வி.பி. இனவாதப் போரை முழுமையாக ஆதரித்ததுடன் இராணுவத்தின் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் நியாயப்படுத்தியது. சிங்கள இனவாத அரசியலின் மீது ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி., இராணுவம் மற்றும் பௌத்த நிறுவனங்களின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளைத் திணித்து வருகின்ற திசாநாயக்க அரசாங்கம், உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதலை ஆழப்படுத்தி வருகின்ற நிலையில், சிங்கள-பௌத்த குழுக்களும் தமிழ் கட்சிகளும் பேரினவாத உணர்வுகளைத் தூண்டுவது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த மட்டுமே.
நீண்டகால கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் கட்சிகள், தமிழ் மக்களிடையே பரவலாக நம்பகத்தன்மையை இழந்துள்ளதுடன் கடந்த ஆண்டு தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்தித்தன. நவம்பர் மாதத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பைத் தவிர வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் அவை தோற்றன.
இந்தக் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிரான வெறுப்பு, உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் தவறியதாலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சக்கன நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு கொடுப்பதாலும் மற்றும் கொழும்பு அரசாங்கங்களிடமிருந்து அதிக சலுகைகளைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்ததாலும் ஏற்பட்டதாகும்.
இராணுவம், சிங்கள-பௌத்த இனவாத குழுக்கள் மற்றும் தமிழ் இனவாத கட்சிகளால் வேண்டுமென்றே தூண்டப்படும் இந்த இனவாத பதட்டங்கள், தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு பாரதூரமான எச்சரிக்கையாகும். தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்ப்பதோடு அனைவரினதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் முழு முதலாளித்துவ ஆளும் வர்க்கமும், 2022 ஏப்ரல்-ஜூலையில் இடம்பெற்ற பிரம்மாண்ட வெகுஜன எழுச்சி பற்றிய பீதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எழுச்சி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாடு விட்டு ஓடவும், அவரது அரசாங்கம் கவிழவும் காரணமாகியது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மில்லியன் கணக்கில் அந்தப் போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் பங்கேற்றனர்.
முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், எதிர் பாராளுமன்ற கட்சிகளான ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்வைத்த, இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கான ஒரு முன்மொழிவுக்கு ஆதரவாக, இந்த வெகுஜன இயக்கத்தைத் திசை திருப்பி, அதைக் காட்டிக்கொடுத்தன.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைத்து வகையான விஷமத்தனமான இனவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். உலகம் முழுவதும், ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசாங்கங்களும் தொழிலாளர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதற்காக பேரினவாதம் மற்றும் புலம்பயெர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பைப் பயன்படுத்துகின்றன. இதற்கு பதிலாக, சர்வதேச ஐக்கியமே தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட முழக்கமாக இருக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கை இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. ஆக்கிரமிப்புப் படைகள், தமிழ் மக்களை அடக்குவதற்கு மட்டுமன்றி, இனவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கும் முன்னணியில் உள்ளன.
முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் பேரில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஐக்கியத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே, இனவாத பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதும், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் சாத்தியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிச ஒன்றியத்தின் பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, அனைத்து வேலைத தளங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கிறது. சோசலிச மற்றும் சர்வதேச முன்நோக்கிற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை ஒன்றிணைக்க, இந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்புங்கள்.
மேலும் படிக்க
- இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க ஆதரவு இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரமடைகின்றன
- இலங்கை முதலாளித்துவ பத்திரிகைகள் வளர்ந்து வரும் வெகுஜன வெறுப்பு குறித்து ஜே.வி.பி./தே.ம.ச. அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன
- இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்