இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, பெப்ரவரி 17 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்தார். பாராளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதன் முடிவுகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
திசாநாயக்க தனது இரண்டரை மணிநேர உரையில் பின்வருமாறு கூறினார்: “வெகுஜனப் போராட்டங்களிலும் கடந்த ஆண்டு தேர்தல்களிலும் மக்கள் தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போல பொருளாதார உரிமைகளும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். இதுதான் இந்த வரவு-செலவுத் திட்டத்தின் சித்தாந்தம் ஆகும்.”
இந்த வரவு-செலவுத் திட்டத்தை ”மக்கள் சார்ந்தது“ என பாராட்டும் இலங்கை ஊடகங்களால் மீண்டும் உச்சரிக்கப்பட்ட இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை ஆகும்.
முதலாவதாக, இந்த வரவு செலவுத் திட்டத்துக்கும் மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளையும் அதன் 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக் கடனுக்காக அது விதித்துள்ள கொடூரமான சிக்கன நிபந்தனைகளையுமே இந்த வரவு-செலவுத் திட்டம் பின்பற்றுகின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் உக்ரேன் போரின் தாக்கத்தின் கீழ், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அதன் வெளிநாட்டு நாணய இருப்புக்களை இழந்தபோது, இராஜபக்ஷ அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என 2022 ஏப்ரலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், 2023 மார்ச்சில் இருந்து சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக் குழுத் தலைவரான பீட்டர் ப்ரூயர், கடந்த நவம்பர் மாதத்தில் தெளிவாகக் கூறியது போல், கடனின் அடுத்த தவணை கொடுப்பனவானது 'திட்ட நோக்கங்களுடன் இசைவான வகையில் 2025 வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தல்', கடன் மறுசீரமைப்பில் 'போதுமான முன்னேற்றம்' ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.
இரண்டாவது, திசாநாயக்கவும் அவரது மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தியும் (ஜே.வி.பி./தே.ம.ச.), அரசியல் ஸ்தாபனத்தின் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரானவையாகக் காட்டிக்கொண்டும், சர்வதேச நாணய நிதியத்துடன் மறு பேச்சுவார்த்தை நடத்துவோம் என வாக்குறுதி கொடுத்துமே ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் வென்றன. அதே நேரம், ஜே.வி.பி./தே.ம.ச. இலங்கை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் எனவும் தொழிலாள வர்க்கத்தின் சகல எதிர்ப்புக்களையும் நசுக்கும் எனவும் ஆளும் வர்க்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது.
திசாநாயக்கவின் வரவுசெலவுத் திட்டத்தின் உண்மையான ”சித்தாந்தம்” சர்வதேச மூலதனத்தின் சார்பில் சகல உழைக்கும் மக்களின் வேலைகள், சமூக நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது இன்னும் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுப்பதே ஆகும்.
திசாநாயக்கவின் முழுமையான வரவு-செலவுத் திட்ட செலவு 7 ரில்லியன் ரூபாவுக்கும் மேலாக இருப்பதோடு அதன் கடன்வாங்கும் அளவு 4 பில்லியன் ரூபாவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதன் 4 ரில்லியன் ரூபா வருமானத்தை விட இந்த ஆண்டு அதன் வருமானம் பல்வேறு வரி அதிகரிப்புகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் ஊடாக 4.96 ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியமானது அரசாங்கத்தை 2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதமாக இருந்த முதன்மை வரவு-செலவுத் திட்ட கையிருப்பை, 2025 இல் 2.3 சதவீதமாக உயர்த்துமாறும், 2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.8 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்குமாறும் கோரியுள்ளது.
இந்த இலக்குகளை அடைவதற்கு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 10 சதவீதமாக உள்ள அரச வருமானத்தை 2025 இல் 15 சதவீதமாக அதிகரிக்கும் அதே வேளை, செலவுகளை வெட்டியும் அரச துறையின் அளவைக் குறைக்கவும் வேண்டும். திசாநாயக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை 6.7 சதவீதமாக ஏற்கனவே குறைத்துள்ளதாக கூறுகின்றார்.
இந்த புள்ளியை ஒரு வெற்றியாகக் காட்டிய திசாநாயக்க, “2028 இல் இருந்து கடன் சேவை செலுத்துதலில் படிப்படியான அதிகரிப்பை அடையும் நிலையில்” இலங்கை இப்போது வைத்துள்ளதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதையே சர்வதேச நாணய நிதியமும் சர்வதே கடன் முதலைகளும் கோருகின்றன.
திட்டமிடப்பட்டுள்ள இந்த அரச செலவீன வெட்டுக்களை அடைவதற்கு, திசாநாயக்க ஒரு தொகை கொடூரமான சமூக வெட்டு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதவதற்கும் வணிகமயப்படுத்துவதற்கும் ஒரு உரிமை நிறுவனத்தை (holding company) ஸ்தாபிப்பதோடு இந்த அரச நிறுவனங்களுக்கான அரச மானியங்களையும் இலட்சக் காணக்கான தொழில்களையும் வெட்டித்தள்ளும் வகையில் ஒரு பொது தனியார் பங்காண்மை மசோதாவையும் அறிமுகம் செய்யும்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பெரு வணிகங்களின் அமைப்பான இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ, 550,000 அரசாங்கத் தொழில்களை அழித்து, தற்போதுள்ள 1.3 மில்லியன் தொழிற்படையை 750,000 பேராக குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடந்த டிசம்பரில் கூறினார். அரசாங்கம் “வினைத்திறனை” அதிகரிப்பதற்காக, ”போட்டி சம்பள” முறைமையை அறிமுகப்படுத்தவும் உள்ளது. அரசாங்கத்தின் “தைரியமான முன்மொழிவுகளை” வரவேற்பதாகக் கூறிய இலங்கை வர்த்தக சம்மேளனம், திசாநாயக்கவின் வரவு-செலவுத் திட்ட உரைக்கு பதிலறுத்தது.
திங்களன்று வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே கூட, நிதியமைச்சானது 5 சதவீமாக இருந்த நிலையான வைப்புக்கான பிடித்து வைத்துக்கொள்ளும் வரியை (withholding taxe) 10 சதவீதமாக இரட்டிப்பாக்குவதாகவும், மதுபான உற்பத்திகள் மற்றும் சிகரட், அதே போல் ஏனைய புகையிலை உற்பத்திகள் மற்றும் மதுபான வகைகள் மீதான நுகர்வுக் கட்டுப்பாட்டு வரியை 6 சதவீதத்தால் அதிகரிப்பதாகவும் அறிவித்தது. நிலையான வைப்புக் கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்யை நம்பியுள்ள ஓய்வூதியதாரர்களை இந்த பிடித்து வைத்துக்கொள்ளும் வரி மோசமாக பாதித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட இறக்குமதி வாகனங்கள் மீதான சுங்க வரியும் தற்போதய 300 சதவீதத்தில் இருந்து 400 மற்றும் 600 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை எரிபொருள், பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது முன்னர் விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுதி சேர் வரி மறறும் உணவுப் பொருட்கள் உட்பட 64 அத்தியவசியப் பொருட்கள் மீதான விஷேட பண்ட வரிக்கும் மேலகாக விதிக்கப்பட்டுள்ளன.
பெரு வணிகங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் இருந்து தனிமைப்படுவதை தவிர்க்கத் தீர்மானித்த திசாநாயக்க, இலங்கையின் கூட்டுத்தாபன வரி விகிதத்தை 15 மற்றும் 30 சதவீதத்துக்கும் இடையில் பேணிக்கொண்டுள்ளதோடு செல்வங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான எந்தவொரு புதிய வரிகளையும் முன்மொழியவில்லை. அரசாங்கம், பெருவணிகங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த உதவிகளில் பின்வருவன அடங்கும்: ஏற்றுமதியை-இலக்காக கொண்டுள்ள தொழிற்துறை வலயங்களை அதிகமாக அமைத்தல், அரசுக்குச் சொந்தமான “பாவனையற்ற” நிலங்களை வர்த்தகங்களுக்காக குத்தகைக்கு கொடுத்தல்; அரச சேவைகளை டிஜிடல்மயமாக்குவதற்கான முதலீடு; துறைமுகம், விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீதி உட்கட்டமைப்புகளில் புதிய முதலீடு, தனியாருக்குச் சொந்தமான தொழிற்துறை வலயங்கள் மற்றும் முதலீடுகளைப் பாதுகாக்க சட்டங்களை உருவாக்குதல்.
தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மற்றும் தேவைகள் என்று வரும் போது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வேறுபட்ட பாதையை எடுத்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக அரச துறை தொழிலாளர்கள் அடிப்படை சம்பள அதிகரிப்பை பெறவில்லை என்பதை திசாநாயக்க ஏற்றுக்கொண்ட போதும், அரச ஊழியர்களுக்கான மாதாந்த அடிப்படைச் சம்பளத்தில், பணவீக்க அளவை விட குறைந்த -சுமார் 24,250 ரூபாயில் இருந்து 40,000 வரை- அதிகரிக்க முன்மொழிந்துள்ளார். ஏனைய அரச துறைசார் தொழிலாளர்களுக்கும் வீதப்படியான ஊதிய உயர்வு பிரேரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரூபா 15,750 சம்பள அதிகரிப்பில், ஏற்கனவே உள்ள சுமார் 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும் அடங்கும். ஆக, உண்மையான தேறிய சம்பள அதிகரிப்பு 8,250 ரூபா மட்டுமே. 2025 ஏப்ரலின் பின்னரே ஆரம்பிக்கப்படவுள்ள, அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு கட்டங் கட்டமாகவே அதிகரிக்கப்படவுள்ள இந்த மிகச் சிறிய அதிகரிப்பு, 2022 இல் இருந்து 55 சதவீதத்தால் அதிகரித்த உத்தியோகபுர்வ தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு மிகத் தொலைவில் உள்ளது.
”ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்பு” என முன்னைய அரசாங்கம் மற்றும் தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகத்தால் புகழப்பட்ட அஸ்வெசும நலத் திட்டம, கடந்த மூன்று ஆண்டுகளில் வறுமைக்குள் தள்ளப்பட்ட மில்லியன் கணக்காண மக்களின் துயரத்தை போக்க எதுவும் செய்யவில்லை.
ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் என்ற இரு சமூக குழுக்களுக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவு முறையே 8,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபா ஆகவும் மற்றும் 15,000 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மே மாதத்தில் புதுப்பிக்கப்படவுள்ள போதிலும், இதைப் பெறப்போகின்றவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அஸ்வெசும திட்டத்திற்கான வரவு-செலவுத் திட்ட மொத்த ஒதுக்கீடு 160 பில்லியன் ரூபாய்களே அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 0.5 சதவீதமே ஆகும்.
இது இலங்கை சனத் தொகையில் 25 சதவீதம் அதாவது 5.5 மில்லியன் பேர் வறுமைக்குள் வீழ்ந்துள்ள நிலையில் நடக்கின்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில், 55.7 சதவீமானோர் அல்லது 12.3 மில்லியன் இலங்கையர்கள் பல்பரிமாண வறுமைக்குள் வாழ்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளது.
திசாநாயக்கவின் வரவ-செலவுத் திட்டம் கல்விக்காக ரூபா 271 பில்லியன் மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 29 பில்லியன் ரூபா அதிகரிப்பே ஆகும். அதே நேரம், வருடாந்த பொதுச் சுகாதாரத்திற்கான செலவு பாரியளவில் வெட்டப்பட்டு, கடந்த ஆண்டுத் தொகையான 410 பில்லியன் ரூபாயில் இருந்து 383 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் தனியார் முதலீடு ஊக்குவிப்படுவதால் இந்த இரு துறைகளும் ஆபத்தான நிலையில் உள்ளன. மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதமான கல்விக்கான இலங்கையின் ஒதுக்கீடு, உலகில் மிகக் குறைந்தளவான செலவுகளில் ஒன்றாகும். இந்த வரவு செலவுத் திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதந்த நிதி உதவியை 5,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாவாக சிறு உயர்வை முன்மொழிந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கான நிதி உதவியை இரு மடங்காக்க கோரியுள்ளனர்.
இந்த வரவு-செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையுடன் ஒருங்கிணைவதாக கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த வரவு-செலவுத் திட்டம் “நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் ஒப்படைப்பதாக உள்ளது” என வஞ்சத்தனமாக பிரகடனம் செய்தார். கடந்த ஆண்டு தேர்தலின் போது, திசாநாயக்கவைப் போலவே சஜித் பிரேமதாசவும் சர்வதேச நாணய நிதியத்துடன் வேலை செய்யவும் வேலைத் திட்டத்தைப் பற்றி “மறு பேச்சுவார்த்தை” நடத்தவும் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி போன்ற ஏனைய எதிர்க்கட்சிகள், தாம் தொடங்கிவைத்த அதே சர்வதேச நாணய நிதிய பாதையையே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் பின்பற்றுவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.
ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்கள், இந்த வரவு-செலவுத் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கும் அதே வேளை, ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பணவீக்கத்துக்குப் பொருந்தாத சம்பள அதிகரிப்பு பற்றி முறைப்பாடு செய்துள்ளன. எவ்வாறாயினும், இந்த அமைப்புகள், கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தவும் தடுப்பதற்குமான தமது முயற்சிகளில் ஒன்றிணைந்தனர். இந்தக் காட்டிக்கொடுப்புகளே ஜே.வி.பி./தே.ம.ச. அதிகாரத்திற்கு வரவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார கட்டளைகளை அமுல்படுத்துவதை தொடர்வதற்கும் வழி அமைத்தன.
ஜே.வி.பி./தே.ம.ச. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி அமுல்படுத்துவதும் அதன் விளைவாக இலட்சக் கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மீதான திட்டமிட்டத் தாக்குதல்களும் தொழிலாளர் போராட்டங்களின் பாரிய வெடிப்புக்கு களம் அமைத்துக்கொண்டிருக்கின்றன.
தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். இதற்கு சகல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து பிரிந்து தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத் தளங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல கிராமப்புறத் தொழிலாளர்களும் தமது நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசியம் ஆகும்.
தொழிலாளர்களின் போராட்டங்களை சர்வதேச அளவில் ஒன்றிணைக்கப் போராடுகின்ற தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணியுடன் இந்த நடவடிக்கைக் குழுக்கள் இணைக்கப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, இந்த சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும் சோசலிசக் கொள்கைகளை அழுல்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும் போராடுவதற்கு, இந்த நடவடிக்கை குழுக்களில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசலிசத்துக்குமான மாநாட்டை கூட்டுமாறு அழைப்புவிடுக்கின்றது.
மேலும் படிக்க
- இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்
- இலங்கை பராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது
- இலங்கைத் தொழிலாளர்கள் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென ஏன் கோர வேண்டும்?
- இலங்கையில் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான IYSSE விரிவுரைக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தடை விதித்ததை கண்டனம் செய்!