இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை "மக்களின் எதிர்பார்ப்புகளின்" வெளிப்பாடு என போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி பாராட்டியுள்ளது.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டதை 'மக்களின் எதிர்பார்ப்புகளின்' வெளிப்பாடு என போலி இடது மு.சோ.க. பாராட்டுகிறது என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கு வெளியிடுகின்றோம்.

இது, போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை விளங்கிக் கொள்வதற்கு மிகவும் முக்கியமான கட்டுரையாகும். கடந்த மூன்று மாதங்களாக, முன்னிலை சோசலிசக் கட்சி சர்வதேச நாணய நிதிய சார்பு ஜே.வி.பி./தே.ம.ச. வலதுசாரி ஆட்சியைப் பாதுகாத்து மேலும் வலது பக்கம் நகர்ந்துள்ளது. திசாநாயக்க அரசாங்கத்தை எதிர்ப்பக்கத்திலிருந்து பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறியுள்ள முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், இது 'மக்களின் எதிர்பார்ப்பை' வெளிப்படுத்தும் ஒரு 'முற்போக்கான' ஆட்சி என்ற தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

இந்த சந்தர்ப்பவாத அமைப்பின் அரசியலை பகுப்பாய்வு செய்யும் மேலும் பல கட்டுரைகளை விரைவில் வெளியிடுவோம்.

சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தை பற்றி போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மாயைகளை விதைக்கிறது.

செப்டம்பர் 24 அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம், இலங்கையின் ஜனாதிபதியாக ஜே.வி.பி./தே.ம.ச. தலைவரான அனுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதை பாராட்டினார். அதை 'மக்களின் எதிர்பார்ப்புகளின்' வெளிப்பாடு என்று அழைத்தார். அவர், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை வெகுஜனங்கள் மீது சுமத்துவதில் உறுதியாக உள்ள, வரவிருக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அரசாங்கத்தை இடதுபக்கம் திருப்பலாம் என்ற பொய்யை ஊக்குவித்தார்.

மு.சோ.க. பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்

சில நிபந்தனைகளின் கீழ் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்னிலை சோசலிசக் கட்சி தயாராக இருக்கும் என்றும் குணரட்னம் மேலும் கூறினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் வாஷிங்டனின் பிரதான பிராந்திய நட்பு நாடான இந்தியாவுடன் ஜே.வி.பி. ஏற்படுத்திக் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ மூலோபாயத் தாக்குதலில் இலங்கையை இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்கும் அவர்களின் திட்டங்கள் பற்றி முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் ஒரு வார்த்தை கூட மூச்சுவிடவில்லை.

ஜே.வி.பி. தமிழர்-விரோத சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போன ஒரு கட்சியாக இருந்தாலும், குணரட்னம் அதனை 'மதச்சார்பற்ற' அரணாக முன்னிறுத்த முனைகின்றார்.

2019 ஆம் ஆண்டு முந்தைய ஜனாதிபதித் தேர்தலில் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க, பாரம்பரிய ஆளும் கட்சிகள் மற்றும் அவற்றில் மேலாதிக்கம் செலுத்திய சில ஊழல் குடும்பங்கள் மீதான பரந்த வெகுஜனங்களின் கோபத்தை சுரண்டிக்கொண்டே ஆட்சிக்கு வந்தார்.

அவரது வெற்றிக்கான இரண்டாவது முக்கிய காரணம், இலங்கையின் பெருவணிகம், இராணுவ பாதுகாப்பு ஸ்தாபனம் மற்றும் வாஷிங்டன், புதுடெல்லி ஆகியவை ஜே.வி.பி.யை உறுதியாக அரவணைத்துக் கொண்டதுதான்.

பாரிய எதிர்ப்பு மற்றும் கசப்பான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை திணித்ததன் காரணமாக வெகுஜன அதிருப்திக்கு உள்ளாகி, தனது ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான பிரச்சாரத்தில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தை தகர்த்தெறியும் என்று கூறித்திரிந்தாலும், தேர்தல் முடிந்த கையோடு 180 பாகை கரணமடித்தார். ஜே.வி.பி., 'தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையில் இலங்கையை வழிநடத்தும்' என்று அவர் தனது நம்பிக்கையை அறிவித்ததுடன் திசாநாயக்கவை 'எனது ஜனாதிபதி' என்று வர்ணித்து அரவணைத்தார்.

தன் பங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திசாநாயக்கவிற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பி, 'இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை முன்னேற்றுவதற்கு' அவர்கள் இணைந்து பணியாற்றுவதைப் பற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

1960 களில் மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை கலவையாகக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கமாக ஜே.வி.பி.யின் தோற்றத்தை சுட்டிக்காட்டிய இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்கள், செப்டம்பர் 21 இலங்கையின் தேர்தலின் முடிவை வரவேற்று, திசாநாயக்கவை 'இடதுசாரி' என்றும் 'சோசலிஸ்ட்' என்றும் அல்லது “மார்க்சிஸ்ட்” ஜனாதிபதி என்றும் கூட வர்ணித்து தலைப்புச் செய்திகளுடன் வரவேற்றுள்ளன.

இத்தகைய நிலைமைகளின் கீழ், எந்தவொரு உண்மையான சோசலிச கட்சியின் முதல் பணி, அரசாங்கத்தின் வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு தன்மை பற்றியும் அதற்கு எதிராக போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக தயார்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கூர்மையான எச்சரிக்கையை விடுப்பதாகும்.

முன்னிலை சோசலிஸ்ட் கட்சி இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இலங்கை முதலாளித்துவத்தை கட்டியெழுப்புவதற்கான ஜே.வி.பி.யின் வலதுசாரி வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வாஷிங்டனுக்கான அதன் விசுவாசப் பிரகடனங்கள், தமிழர் விரோத பேரினவாதத்தை ஊக்குவிப்பதில் அதன் இழிந்த சரித்திரம் மற்றும் பல தசாப்தங்களாக தன்னை இலங்கை முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திற்குள் ஒருங்கிணைத்துக்கொள்வற்கான அதன் முயற்சிகள் பற்றி மூடி மறைத்து, ஜே.வி.பி./தே.ம.ச. சம்பந்தமாக மாயைகளைப் பரப்புவதற்கு வேலை செய்துகொண்டிருக்கின்றது

ஜே.வி.பி. தலைமையின் ஒரு பகுதியினருக்குள், குறிப்பாக அதன் இளைஞர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு, மதிப்பழந்த வலதுசாரி அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு காரணமாகவும் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாதப் போருக்கு அதன் உற்சாகமான ஆதரவினாலும் அதிகளவில் மதிப்பிழந்துவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த அத்தகைய பகுதியினராலேயே 2012இல் முன்னிலை சோசலிசக் கட்சி உருவாக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மத்தியதர வர்க்க தேசியவாத அமைப்பாக ஜே.வி.பி.யின் தோற்றத்திற்கு உண்மையாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கு கடும் விரோதமாக உள்ளது. உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு, தேசிய மற்றும் முதலாளித்துவ அடிப்படையில் தேர்தல் அரசியல் என்ற வரம்புக்குள் பதிலளிக்க முடியும் எனக் கூறிக்கொண்டு, மக்கள் போராட்டக் கூட்டணி என்ற கூட்டமைப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது.

ஜே.வி.பி., முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் 2022 வெகுஜன எழுச்சி

குணரட்னம், முன்னிலை சோசலிசக் கட்சி செய்தியாளர் மாநாட்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய 2022 இல் பல மாதங்கள் தொடர்ந்த வெகுஜன எழுச்சி, 'ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்பார்ப்புகளுடன்' முடிவடைந்ததோடு, திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி.யும் ஆட்சிக்கு வந்துள்ள 'இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் அந்த எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்தார்.

இது ஒரு பயங்கரமான திரிபுபடுத்தலாகும். புதிய அரசாங்கம் மக்களின் 'எதிர்பார்ப்புகளின்' அவதாரம் அல்ல. மாறாக அந்த எதிர்பார்ப்புகளை விரக்தியடையச் செய்வதற்கும் நசுக்குவதற்கும் இலங்கை மற்றும் உலகளாவிய மூலதனத்தின் ஆதரவுடன் அதிகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் ஆகும்.

அரசியல் ஸ்தாபனத்தில் ஏனையவற்றைப் போலவே ஜே.வி.பி.யும், உழைக்கும் மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை சுமத்தும் நிபந்தனையுடன் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்கு மாற்றீடு எதுவும் இல்லை என்று அறிவித்தது. நூற்றுக்கணக்கான அரச நிறுவனங்களை விற்றுத்தள்ளுவது, இலட்சக் கணக்கான அரசாங்க தொழில்களை அகற்றுவது மற்றும் பிற்போக்கு கட்டண அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புகள் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்த வாக்குறுதியளித்துள்ளது.

2022 வெகுஜன எழுச்சிக்கு ஜே.வி.பி. எதிராக இருந்தது. விண்ணைத் தொடும் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். வெகுஜனங்களின் 'எதிர்பார்ப்புகள்' சிதைக்கப்படுவதையும், முதலாளித்துவ ஆட்சி மறுசீரமைக்கப்படுவதையும், ஒரு கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டம் தொடங்கப்படுவதையும் உறுதி செய்வதில் ஜே.வி.பி. ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, முதலாளித்துவ ஆட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் ஜே.வி.பி.யின் அடிப்படை அக்கறையாக இருந்தது. 7 ஏப்ரல் 2022 அன்று பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, தீவு முழுவதும் வெகுஜன எழுச்சி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், 'நாட்டில் எழுந்துள்ள பெரும் அராஜகம்' குறித்து கவலை தெரிவித்தார். 'இந்த நாட்டின் நிலைமையைக் கட்டுப்படுத்த வழி தேடவும், அமைதியான நிலைக்கு கொண்டு வரவும், நம் நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், பொருளாதாரத்தில் நெருக்கடியைத் தீர்க்கவும், “அவர் தனது சக வலதுசாரி முதலாளித்துவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றுமாறு” வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியில், ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆனால், கீழ்மட்ட தொழிலாளர்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடனும், அந்த வெகுஜன இயக்கம் முதலாளித்துவ அரசியலின் முழு கட்டமைப்பிற்கும், அதன் பாராளுமன்றம் மற்றும் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கும், தொழிலாள வர்க்கம் சவாலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனேயே அந்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

புறநிலையாக, முழு முதலாளித்துவ ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், (பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்) '225 பேரும் வேண்டாம்' என்ற கோஷங்களை மக்கள் எழுப்பிய நிலையில், 2022 எழுச்சியானது ஒரு மகத்தான புரட்சிகர ஆற்றலைக் கொண்டிருந்தது, ஆனால், அதற்கு ஒரு சோசலிச-சர்வதேச வேலைத்திட்டம் இருக்கவில்லை. அத்துடன் இறுதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் சில எதிர்க்கட்சிகளை அல்லது அனைத்து எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு “இடைக்கால” முதலாளித்துவ அரசாங்கத்திற்கான அழைப்பை ஊக்குவித்த முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட அனைத்து சக்திகளதும் கூட்டு முயற்சிகளின் மூலம், இந்த வெகுஜன எழுச்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது. அது, இலங்கை முதலாளித்துவமும் அதன் அரசும் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவும், முறைகேடாகப் பெறப்பட்ட ஆளும் வர்க்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகாப் போராடுவதற்கு ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறும் தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மநாட்டை கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுத்தது.

வெகுஜன எழுச்சி வளர்ச்சியடைந்த நிலையில், இராஜபக்ஷ நீக்கப்பட்ட பின், 'ஒரு கூட்டணியாக, இடைக்கால ஆட்சியாக, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதாக, அல்லது நாங்கள் (தே.ம.ச.) கண்காணிப்பாளர்களாக வெளியில் இருக்கின்ற ஆட்சியாக இருந்தாலும் சரி', ஆளும் வர்க்கம் தனது ஆட்சியை நிலைப்படுத்த எந்த 'பொறிமுறையை' வகுத்தாலும், தனது கட்சி அதை ஆதரிக்கும் என்று திசாநாயக்க உறுதியளித்தார். அவரது வார்த்தைக்கு உண்மையாக, இராஜபக்ஷவுக்குப் பதிலாக அமெரிக்க சார்பு கைக்கூலியான விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதிலும், அவரது அரசாங்கத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை சுமத்துவதிலும், பாராளுமன்றத்தில் பிரதான முதலாளித்துவ எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஜே.வி.பி. இணைந்துகொண்டது,

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு வெடித்த போது, ​​ஜே.வி.பி. அதை நசுக்க வேலை செய்தது. வேலைநிறுத்தங்களை அனுமதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டபோது, ​​அதனை மட்டுப்படுத்தவும் தனிமைப்படுத்தவும் வேலை செய்தது. 2024 இல், தேர்தல்கள் நெருங்கி வந்த போது, ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்வரை தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் வேலை நிறுத்த நடவடிக்கைக்கு விரோதமானவையாக இன்னும் வெளிப்படையாக மாறின. இவை அனைத்திலும், ஒரு தவறான, துணைப் பாத்திரத்தை ஆற்றிய முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிலாளர் வேலை நிறுத்த நடவடிக்கைகளை தனிமைப்படுத்தப்பட்ட கூட்டு பேரம் பேசும் போராட்டங்களாக மட்டுப்படுத்த வேலை செய்ததுடன், பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை -சர்வதேச நாணய நிதியத்தின் “மறுசீரமைப்பிற்கு” எதிராக நேரடியாக தலைதூக்கிய பல போராட்டங்களை- தொழிலாள வர்க்க அரசியல் எதிர் தாக்குதலாக ஒன்றிணைக்கும் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

2023 ஒக்டோபர் 19 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, (இடதுபுறத்தில் இருந்து) அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மெத்யூ ஹின்சன், தூதுவர் ஜூலி சங், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத். [படம்: X/Twitter @anuradisanayake] [Photo: X/Twitter @anuradisanayake]

பூகோள முதலாளித்துவ வீழ்ச்சியில் வேரூன்றிய ஒரு புரட்சிகர நெருக்கடிக்கு மத்தியில் முதலாளித்துவ அரசை நிர்வகிப்பதற்கான நேரடிப் பொறுப்பை ஜே.வி.பி. இப்போது ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், சமூகச் செலவினங்களை அதிகரிப்பது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கொழும்பு அரசாங்கத்தின் உடன்படிக்கையை 'மீண்டும் பேரம் பேசுவது' பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் திசாநாயக்க கூறிய பொய்களில் மாயைகளை வலுப்படுத்த முன்னிலை சோசலிசக் கட்சி வேலை செய்கிறது.

அவர்களின் வெற்றி 2022 எழுச்சியின் 'எதிர்பார்ப்புகளை' வெளிப்படுத்துகிறது என்ற அவரது கூற்றுக்கள் மூலம் ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் திசாநாயக்கவுக்கும் 'முற்போக்கான சாயலை' கொடுக்க முயற்சித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குணரட்னம், 'மக்களின் எதிர்பார்ப்புகள்” “தே.ம.ச. முன்வைத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் வேலைத் திட்டத்தையும்” கடந்து செல்கிறது… அதனால் அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பாரிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம்,” எனப் பிரகடனம் செய்தார்.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதை இலக்காகக் கொண்ட இவை அனைத்தும், 'மக்கள் எதிர்பார்ப்புகளை' நிறைவேற்றுவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற அபாயகரமான மாயையை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உண்மை என்னவென்றால், தொழிலாள வர்க்கம் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடனும் அது அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்ட நிரலுடனும் கடுமையான மோதலுக்கு தள்ளப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, “சட்டம் மற்றும் ஒழுங்கை” நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் மூலம், திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச.யும், விக்கிரமசிங்க மற்றும் அவரது முன்னோடிகளின் கீழ் இயற்றப்பட்ட ஜனநாயக விரோத சட்டங்களை மக்களின் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கு பயன்படுத்த தயாராக உள்ளனர்.

ஜே.வி.பி.யின் தேர்தல் வெற்றிக்கு குணரட்ணத்தின் சாதகமான பதிலைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அழைத்தால் முன்னிலை சோசலிசக் கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கு குணரத்தினம், 'சர்வதேச நாணய நிதியத்தை நிராகரிக்கும் பயணத்தில்” முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்தால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்னிலை சோசலிசக் கட்சித் தயாராக உள்ளது என்றார். இது, இலங்கையின் கடன்களைத் திருப்பிச் செலுத்த இலகு நிபந்தனைகளைப் பெறுவதற்கு, கொழும்பானது சர்வதேச நாணய நிதியத்தை விட கடன் வழங்கும் நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற மாயையை அடிப்படையாகக் கொண்ட, “எக்ஸிட் ஐ.எம்.எஃப்” (exit-IMF -சர்வதேச நாணய நிதியத்தை விட்டு வெளியேறு) என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் போலிக் கொள்கையை குறிப்பதாகும்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் “எக்ஸிட் ஐ.எம்.எஃப்.” திட்டமானது, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மற்றும் அதன் முன்னோடியான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் அதே விளைவுக்கே இட்டுச் சென்று, அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் செலவில் வாங்கிய பெரும் கடன்களுக்கு உழைக்கும் மக்களை விலைகொடுக்கச் செய்யும்.

ஜே.வி.பி./தே.ம.ச.யின் தமிழர்-விரோத இனவாதத்தை முன்னிலை சோசலிசக் கட்சி மூடி மறைக்கின்றது

முன்னிலை சோசலிசக் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பின் மற்றொரு அம்சத்தைப் பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.

ஜே.வி.பி.க்கு இனவாதத்தைத் தூண்டிவிடுவதில் நீண்ட மற்றும் இரத்தக்களரியான பதிவு உள்ளது. உழைக்கும் மக்களின் எதிர்ப்பு பெருகும்போது அது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தமிழர்-விரோத பேரினவாதத்தை கிளப்பிவிட முற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த மாத தொடக்கத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கின் மிகப்பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது, தே.ம.ச. அரசாங்கம் அமையவேண்டும் என்ற தெற்கில் சிங்கள பெரும்பான்மையினரின் விருப்பத்தைத் தடுக்க வேண்டாம் என்று தமிழர்களை எச்சரித்த திசாநாயக்க, தெற்கில் மக்கள் மாற்றத்திற்காக அணிவகுத்து நிற்கும் போது நீங்கள் மாற்றத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தால், தெற்கு மக்களின் மத்தியில் எத்தகைய மனநிலை தோன்றும்” என பிரகடனம் செய்தார்.

குணரத்னம், ஜே.வி.பி.யின் சிங்கள இனவாதம் பிரதிநிதித்துவப்படுத்தும் அச்சுறுத்தல் குறித்து தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் எச்சரிப்பதற்குப் பதிலாக, ஜே.வி.பி./தே.ம.ச.யை மதச்சார்பின்மை ஆதரவாளர்களாகவும் ஒளிரும் வண்ணங்களிலும் சித்தரிப்பதன் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்திருந்த சக்திகளின் வலதுசாரி கருத்துக்களைப் பற்றிக் கொண்டார்.

தன்னுடன் இணைந்த சிங்கள-பௌத்த இனவாத வலதுசாரி குழுக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கையை 'மதச்சார்பற்ற நாடாக' மாற்ற விரும்புவதாக ஜே.வி.பி./தே.ம.ச. மீது குற்றம் சாட்டின. இந்த 'சேறடிப்பை' கண்டனம் செய்த குணரட்ணம், மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தைப் பாராட்டியதோடு மேலும் ஜே.வி.பி./தே.ம.ச. அதை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளது என்று பரிந்துரைத்தார். இவற்றில், ஐக்கிய மக்கள் சக்தியின் தாக்குதல்களுக்கு ஜே.வி.பி. எவ்வாறு பதிலளித்தது மற்றும் அதன் தமிழர்-விரோத பேரினவாதத்தின் நீண்ட வரலாறு பற்றிய எந்த கலந்துரையாடலும் திட்டமிட்டு கைவிடப்பட்டுள்ளன.

ஜே.வி.பி./தே.ம.ச., மதத்தையும் அரசையும் பிரிப்பதை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பு ஒழுங்கில் பௌத்தத்திற்கு உன்னத இடம் கொடுக்கப்பட்டுள்ளதையும் சிங்கள ஆதிக்க முதலாளித்துவ ஒற்றையாட்சி அரசுக்குமான அதன் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

தேர்தலுக்கு முன்னதாக அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கூட்டத்தில் பேசிய சிரேஷ்ட ஜே.வி.பி./தே.ம.ச. தலைவரும் இப்போது அமைச்சரவை அமைச்சருமான விஜித ஹேரத், திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் பௌத்தத்தின் சிறப்புரிமை நிலையை நிலைநிறுத்தும் என்று அறிவித்தார். “எமது அரசியலமைப்பின் 9வது சரத்து... ‘இலங்கைக் குடியரசு பௌத்தத்திற்கு முதன்மையான இடத்தை அளிக்கும்,' எந்த வகையிலும் இது மாற்றப்படாது” எனக் கூறுகிறது என ஹேரத் பிரகடனம் செய்தார்.

மேலும் முன் சென்ற ஹேரத், “இரண்டாவது விடயம்: நாங்கள் நாட்டின் ஒற்றையாட்சி, பிரதேச ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக மகத்தான தியாகங்களைச் செய்த ஒரு அரசியல் இயக்கம். எனவே, நேற்றும், இன்றும், நாளையும் எங்களின் நிலைப்பாடு அப்படியே உள்ளது. ஒற்றையாட்சியை பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்” என பிரகடனம் செய்தார்.

தொழிலாள வர்க்கம் புதிய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் கடுமையான மோதலுக்கு வரும்போது, முன்னிலை சோசலிசக் கட்சி 2022 எழுச்சியில் செய்த அதே துரோக பாத்திரத்தை வகித்து, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுக்கும், என சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்கிறது.

முன்னிலை சோசலிசக் கட்சிக்கும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஊக்குவிப்பதற்கும் முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கு எதிராக, செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தள (WSWS) முன்னோக்கு ஒன்றில் விளக்கியது போல், “வரவிருக்கும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவும், போருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக, சமூக சமத்துவத்துக்கான -அதாவது புரட்சிகர சோசலிசத்துக்கான- போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், தொழிலாள வர்க்கத்தை, அதன் பின்னால் கிராமப்புற மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அபிவிருத்தி செய்யும்.'