மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் சூடான், சோமாலியா மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத பிரிந்து சென்றுள்ள சோமாலிலாந்து அதிகாரிகளுடன் காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பாரிய அளவில் வெளியேற்றுவது மற்றும் அந்த நாடுகளுக்கு அவர்களை வலுக் கட்டாயமாக குடியமர்த்துவது குறித்து கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் முதலில் வெள்ளியன்று அசோசியேடட் பிரஸ் ஆல் அறிவிக்கப்பட்டு, பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியில் தனித்தனியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடந்து கொண்டிருக்கும் கலந்துரையாடல்கள், ஐரோப்பாவின் யூதர்களை ஆபிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரைக்கு சற்று தொலைவில் இருக்கும் அப்போதைய பிரெஞ்சு தீவு காலனியான மடகஸ்காரில் குடியமர்த்துவதற்கான நாஜி ஜேர்மனியின் அதிகாரிகளின் முன்மொழிவான “மடகாஸ்கர் திட்டத்தை” பிரதிபலிக்கின்றன. இந்தத் திட்டம், நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் யூதர்களை வெறுமனே நாடு கடத்துவதற்குப் பதிலாக, பெருமளவில் அழிப்பதை மேற்கொண்ட யூத இனப்படுகொலைக்கு ஒரு முக்கிய மாற்றுப் படியைக் குறித்தது.
மனித மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் சோமாலியா உலகின் மிகக் குறைந்த தரவரிசைகளில் உள்ள ஒரு நாடாகும். பரந்தளவிலான வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான அணுகல் இல்லாமை ஆகியவை சோமாலியாவில் நிலவுகின்றன. சூடான் பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போரை அனுபவித்து வருகிறது. இந்த நாட்டில், இனப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் பெருமளவிலான இடம்பெயர்வு ஆகியவற்றால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
“சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து என்று அழைக்கப்படும் சோமாலியாவில் இருந்து பிரிந்து சென்ற பகுதியுடனான தொடர்புகள், காஸாவை இன ரீதியாக சுத்திகரிக்கும் ட்ரம்பின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டுள்ள உறுதியை பிரதிபலிக்கின்றன” என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது, இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் “மிகப் பெரிய குடியேற்றத் துறையை” உருவாக்கி வருவதாகக் கூறினார்.
கடந்த பிப்ரவரியில், ட்ரம்ப் காஸாவை இனரீதியாக சுத்திகரித்து அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்தை அறிவித்தார். “நாங்கள் காஸாவைப் பெறப் போகிறோம், நாங்கள் அதை வாங்க வேண்டியதில்லை. வாங்குவதற்கு எதுவும் இல்லை. காஸா இருக்கும். ... நாங்கள் காஸாவை வைத்திருப்போம். ... “ என்று ட்ரம்ப் பிப்ரவரி 11 அன்று கூறினார்.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு காஸா திட்டத்தை அறிமுகப்படுத்திய சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தனித்தனி முயற்சிகள் கடந்த மாதம் தொடங்கியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டது. மேலும் இந்த கலந்துரையாடல்களை இஸ்ரேல் முதன்மையாக வழிநடத்துகிறது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஒரு முக்கியமான இராஜதந்திர விவகாரம் குறித்து கலந்துரையாட பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு சூடானிய அதிகாரிகள், பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்வது குறித்து இராணுவம் தலைமையிலான அரசாங்கத்தை ட்ரம்ப் நிர்வாகம் அணுகியுள்ளதை உறுதிப்படுத்தினர். அவர்களில் ஒருவர், ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே இராணுவ உதவி வழங்குவதன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தியதாக கூறினார்.
காஸா மக்களை இடம்பெயரச் செய்யும் ட்ரம்பின் திட்டம், ஆயுத மோதல்களின் போது அப்பாவி மக்களை பலவந்தமாக இடமாற்றம் செய்வதற்கான நான்காவது ஜெனீவா மாநாட்டின் கீழ் உள்ள தடையை அப்பட்டமாக மீறும் செயலாகும். பாலஸ்தீனியர்களின் நிலத்தைத் திருடுவதற்கான அவரது திட்டம், அமெரிக்காவால் உறுதிப்படுத்தப்பட்ட 1970 ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தை மீறுகிறது. இது “ஒரு நாட்டின் பிரதேசமானது, அச்சுறுத்தல் அல்லது பலாத்காரத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக மற்றொரு நாடு கையகப்படுத்தும் பொருளாக இருக்கக்கூடாது” என்று கூறுகிறது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஜாக்கியோ அசோசியேட்டட் பிரஸ் அறிக்கைக்கு பின்வருமாறு பதிலளித்தார்:
மக்களை கட்டாயமாக இடம்பெயர வைத்தல் அல்லது எந்த வகையான இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லும் அல்லது வழிவகுக்கும் எந்தவொரு திட்டமும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்பதால் நாங்கள் இதனை வெளிப்படையாக எதிர்க்கிறோம்.
கடந்த வார இறுதியில், நிதியமைச்சர் ஸ்மோட்ரிச், காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை “தன்னார்வமாக” குடியேற்றுவதற்கான நிர்வாகத்தை இஸ்ரேலிய அரசாங்கம் உருவாக்கி வருவதாகக் கூறினார். “நாங்கள் ஒரு புலம்பெயர்வு நிர்வாகத்தை ஸ்தாபித்து வருகிறோம், பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு மந்திரியின் தலைமையின் கீழ் இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
காஸா மீதான இனச் சுத்திகரிப்புக்கான ட்ரம்பின் முன்மொழிவை வழிமொழிந்த அவர், “நாளொன்றுக்கு 5,000ம் பேரை நாம் அகற்றினால், அதற்கு ஓராண்டே ஆகும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். மேலும், “யார் எந்த நாட்டிற்குச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், அவர்களை இடம் மாற்றுவது சிக்கலானது. இது வரலாற்று மாற்றத்திற்கான சாத்தியமாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காஸா இனச்சுத்திகரிப்பிற்கான தற்போதைய தயாரிப்புகள், இஸ்ரேல் காஸாவிற்குள் அதன் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை முற்றுகையிட்டுள்ள நிலையில் இடம் பெறுகின்றன. இந்த நடவடிக்கை, காஸா மக்களை பட்டினி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அல்லது பஞ்சத்தின் மூலம் அவர்களை இடம்பெயர நிர்பந்திப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 13 நாட்களாக, காஸாவிற்குள் உணவோ அல்லது தண்ணீரோ கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு உணவுப் பாதுகாப்பின்மையும் பட்டினியும் பரவி வருகின்றன.
காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம், அதன் குடிமக்களில் 80 சதவீதம் பேர் உணவு ஆதாரங்களுக்கான அணுகலை இழந்துவிட்டதாகவும், 90 சதவீத மக்கள் சுத்தமான தண்ணீருக்கான நம்பகமான அணுகல் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தது. காஸாவில் எஞ்சியிருக்கும் வெதுப்பகங்களில் கால் பகுதி பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளன, மற்றவை மூடப்படும் விளிம்பில் உள்ளன. 150,000 மக்கள் தீராத நோயால் அல்லது யுத்தக் காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவப் பொருட்களில் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (OCHA) செய்தித் தொடர்பாளர் ஓல்கா செரெவ்கோ, அல் ஜசீராவிடம் கூறுகையில், “விநியோகங்கள் தீர்ந்து போகின்றன என்ற அச்சம், எச்சரிக்கை மற்றும் கவலை” காஸாவில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
“தண்ணீர் மற்றும் சுகாதார நிலைமை ஏற்கனவே மோசமாக இருக்கிறது, பல மாதங்களாக சண்டையின் போது பெரும்பாலான வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார். இஸ்ரேல் காஸாவிற்கு மின்சாரத்தை துண்டித்ததால் “சுமார் 600,000 மக்களுக்கு குடிநீர் கிடைப்பது குறைந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிராந்தியம் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் (COI) பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்க உரிமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியது. இஸ்ரேல் இனப்படுகொலை செயல்களில் ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா குழு அதிகாரப்பூர்வமாகவும் முறையாகவும் வலியுறுத்துவது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச விசாரணை ஆணையம் பின்வருமாறு அறிவித்தது:
ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலை மாநாட்டால் வரையறுக்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களின் வகைகளில் ஒன்றான பிறப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை விதிப்பதன் மூலம், இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்கத் திறனை குறிப்பிடத்தக்களவு அழித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கை பின்வருமாறு விளக்கியது:
காஸா முழுவதும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார வசதிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதில், மகப்பேறு மருத்துவமனைகள், மருத்துவமனைகளின் மகப்பேறு வார்டுகள் மற்றும் காஸாவின் முக்கிய செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் ஆகியவை உள்டங்குகின்றன.
காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கும் மற்றும் பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு நிர்மூலமாக்குவதற்குமான இஸ்ரேலின் திட்டங்களுக்கு பெருகிவரும் ஆதாரங்கள், இந்த வாரம் கைது செய்யப்பட்டு, காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக நாடு கடத்தப்படுவதை முகங்கொடுத்து வரும் கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் மஹ்மூத் கலீல் உட்பட, காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முனைவின் குற்றத்தன்மையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.