மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, காஸாவில் தொடர்ச்சியாக குண்டுவீச்சுக்களை மேற்கொண்டு இஸ்ரேல் 400 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை படுகொலை செய்துள்ளது. இதன் மூலம், மீதமுள்ள பாலஸ்தீனீய மக்களை திட்டமிட்டு அழித்தொழிப்பது அல்லது அங்கிருந்து இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இனப்படுகொலையின் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் தொடக்கியுள்ளது.
காஸா பத்திரிகை அலுவலகத்தின்படி, 61,700 பேர்களை படுகொலை செய்தும், 18 மாதங்களாக நீடித்துவரும் காஸா மீதான இனப்படுகொலையின் மிகக் கொடிய நாட்களில் ஒன்றாக, கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற படுகொலை இருந்தது. இது, மேலும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தரைமட்டமாக்கியுள்ளது. காஸாவிற்குள் உணவு, நீர், எரிசக்தி மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் மீதான முழுமையான தடைக்கு மத்தியில் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல்கள் “ஒரு ஆரம்பம் மட்டுமே” என்று அறிவித்துள்ள இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு, மேலும் இந்த தாக்குதலைத் தொடரப்போவதாக சூளுரைத்துள்ளார்.
இந்தக் குண்டுவீச்சு தாக்குதல், ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அமெரிக்க குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று, இந்த தாக்குதல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதாவது, இந்தப் படுகொலை ட்ரம்ப்-நெதன்யாகுவின் கூட்டு நடவடிக்கையில் இடம்பெற்றதாகும்.
வெள்ளை மாளிகையைப் பொறுத்த வரையில், காஸா இனப்படுகொலையின் விரிவாக்கம் யேமன் மீதான அமெரிக்கத் தாக்குதலுடன் நேரடித் தொடர்பில் காணப்படுகிறது. கடந்த செவ்வாயன்று, நான்காவது நாளாக யேமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து யேமன் மீது இடம்பெற்றுவரும் தாக்குதலில், கடந்த செவ்வாயன்று நடந்த தாக்குதல் மிகப்பெரியதாகும். மேலும், இது ஈரானையும், ஈரானையும் தாண்டி சீனாவையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
திங்களன்று இஸ்ரேலிய குண்டுவீச்சு குறித்து கேட்கப்பட்டபோது, வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் கரோலின் லெவிட் பின்வருமாறு அறிவித்தார்:
ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள் மற்றும் ஈரான் —இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவை அச்சுறுத்த முனையும் அனைவரும்— ஆகியவை ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அனைத்து நரகமும் அவர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தப் படுகொலை குறித்த ஊடகச் செய்திகள், இதனை “போர்நிறுத்தம்” அல்லது “பேச்சுவார்த்தைகள்” என்று கூறப்படும் உள்ளடக்கத்திற்குள் முன்வைத்து வெளிவந்தன. இந்த வார்த்தைகள் அர்த்தமற்றவையாகும். காஸா இனப்படுகொலையை இஸ்ரேல் தொடங்கியதற்குப் பிந்தைய 528 நாட்களில், ஊடகங்களில் “போர்நிறுத்தங்கள்” என்று சித்தரிக்கப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையின் வேகத்தில் உள்ள மாறுபாடுகள், அடுத்த படுகொலைக்கான தயாரிப்பில் துருப்புக்களை சுழற்சி முறையில் நிறுத்துவதற்கும், வெடிகுண்டு கையிருப்புகளை நிரப்பிக் கொள்வதற்கும் வாய்ப்புகளாக மட்டுமே இருந்து வருகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
காஸாவில் பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதும் மற்றும் காஸாவின் மதிப்புமிக்க கடல்முகப்பு நிலத்தை இணைப்பதுமே ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள அதன் ஆதரவு ஆட்சியின் கூறப்பட்ட, வெளிப்படையான நோக்கமாகும்.
2 மில்லியன் மக்களை வெளியேற்றுவது தர்க்க ரீதியாக சாத்தியமற்றது என்று நிரூபிக்கக்கூடிய நிலைமைகளின் கீழ், பாலஸ்தீனிய மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பதே இதன் உள்ளார்ந்த இலக்காகும்.
பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அல்லது நிர்மூலமாக்குவதற்கான இந்த இனப்படுகொலைத் திட்டமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான பூகோள அளவிலான திட்டத்தின் ஒரு பாகமாக, நேரடி ஏகாதிபத்திய கட்டுப்பாட்டின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்கும் திட்டத்தின் அச்சாணியை உருவாக்குகிறது.
கடந்த பிப்ரவரியில், காஸா இனப்படுகொலைக்கான செயல்பாட்டுத் திட்டத்தை கோடிட்டுக் காட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “காஸாவில் வசிக்கும் 1.8 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இறுதியில் குடியற்றப்படும் பல்வேறு பிரதேசங்களை உருவாக்க இதர நாடுகளுக்கு” அழைப்பு விடுத்தார்.
“காஸா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். … அதை நாங்கள் சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று ட்ரம்ப் கூறினார்.
அதே மாதத்தின் பிற்பகுதியில், காஸா மக்கள் மீதான திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு என்பது “பல தசாப்தங்களாகவும் நூற்றாண்டுகளாகவும் நடந்த விஷயங்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு” மட்டுமே இடம்பெற்றது என்று அவர் கூறியிருந்தார்.
ட்ரம்ப் அவரது இனச் சுத்திகரிப்பு திட்டங்களுக்கான முன்னுதாரணங்களாக “பல தசாப்தங்களாக நடந்து வந்துள்ள விடயங்களை” பற்றி குறிப்பிடுகையில், யூத இனப்படுகொலையை அர்த்தப்படுத்தினார் என்பதை இஸ்ரேலின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்தின.
கடந்த வாரம், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸ், ஆகியவை, பாலஸ்தீனிய மக்களை கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு இடம்பெயரச் செய்வதற்காக சூடான் மற்றும் சோமாலியாவுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியிட்டன. இந்தத் திட்டம் 1940 இல் நாஜி தலைவர்களால் உருவாக்கப்பட்ட “மடகஸ்கார் திட்டத்திற்கு” வேண்டுமென்றே அஞ்சலி செலுத்துவதாகும். இது ஜேர்மனியில் இருந்த யூதர்களை ஆப்பிரிக்காவிலிருக்கும் தீவுக்கு வெளியேற்றுவதை கற்பனை செய்தது.
எவ்வாறிருப்பினும், இந்தத் திட்டம், நாஜி தலைவர்கள் எதை “யூத பிரச்சினைக்கான இறுதி தீர்வு” என்று அழைத்தார்களோ, அது ஐரோப்பாவின் யூதர்களை திட்டமிட்டு நிர்மூலமாக்குவதற்கான ஒரு முன்னுரையாக மட்டுமே இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், யூத இனப்படுகொலை நவீன வரலாற்றில் மிகப்பெரிய குற்றமாக நினைவுகூரப்பட்டது. “ஜனநாயக” அரசாங்கங்களின் தலைவர்கள், இதுபோன்ற குற்றங்களை சாத்தியமற்றதாக்கும் சர்வதேச சட்டத்தின் ஒரு கட்டமைப்பைப் பின்பற்றுவதற்கு அப்போது சூளுரைத்தனர்.
ஆனால், முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும், எங்கும் நிறைந்துபோயுள்ள நெருக்கடியின் சூழ்நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை நடத்துவதிலும் சரி மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதிலும் ஒடுக்குவதிலும் சரி, அதன் வர்க்க ஆட்சியின் மிருகத்தனத்தை கட்டுப்படுத்தும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிட்டுள்ளது.
உள்நாட்டில் ஒரு “சர்வாதிகாரியாக” ஆட்சி செய்வேன் என்ற ட்ரம்ப்பின் கூற்றுக்கும், காலனித்துவம், நாடுகள் இணைப்பு, இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலைக் கொள்கையை வெளிப்படையாக வலியுறுத்துவதற்கும் இடையே ஆழமான தொடர்புகள் உள்ளது. ரஷ்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பான “ஏகாதிபத்தியம்” என்பதில் விளக்கியது போல, நிதிய தன்னலக்குழுவின் கட்டுப்பாடற்ற சர்வாதிகாரம், அதேநேரம் வெளியுறவுக் கொள்கையின் துறையில் வரம்பற்ற காலனித்துவ காட்டுமிராண்டித்தனத்தை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், உள்நாட்டில் சர்வாதிகாரத்தைத் திணிப்பதோ அல்லது இனப்படுகொலைக் கொள்கையோ வெறுமனே ட்ரம்பின் தலையில் இருந்து எழவில்லை. மாறாக, அமெரிக்காவின் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சார்பாக ஆட்சி செய்யும் இரண்டு அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் கொள்கைகளையே ட்ரம்ப் முன்னெடுத்து வருகிறார். வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளர், அவருக்கு முன்பிருந்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனின் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட கொள்கைகளை, அவற்றின் தர்க்கரீதியான முடிவுகளுக்கு கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம், காஸா இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளித்ததற்கு எதிராக கல்லூரி வளாகங்களில் நடந்த அமைதியான போராட்டங்களை பைடென் “யூத எதிர்ப்புவாதம்” மற்றும் “சட்டத்திற்கு எதிரான” போராட்டம் என்று சித்தரித்தார்.
“கருத்து வேறுபாடு ஒருபோதும் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடாது” என்று பைடென் அறிவித்தார். பைடெனின் கண்காணிப்பின் கீழ், பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தாக்கினர், பெருந்திரளான கைதுகளை மேற்கொண்டனர் மற்றும் பலவந்தமாக போராட்டங்களைக் கலைத்தனர். அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது:
“பொது ஒழுங்கு” மற்றும் “பொருளாதார ஸ்திரப்பாட்டை” பாதுகாக்கிறோம் என்ற சாக்குபோக்கின் கீழ், போராட்டங்களுக்கு தடை விதிப்பது என்பது நவீன வரலாறு நெடுகிலும் சர்வாதிகார ஆட்சிகளின் ஒரு அடையாளமாக இருந்து வந்துள்ளது.
கடந்த வாரம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரான மஹ்மூத் கலீலை, அமெரிக்க அரசாங்கத்தால் இழைக்கப்படும் குற்றங்களை எதிர்க்கும் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமையைப் பயன்படுத்தியதற்காக கைது செய்து நாடு கடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார். அந்நிய எதிரிகள் சட்டத்தை செயல்படுத்துவதன் மூலமும், அவரது நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்புகளுக்குக் கட்டுப்படாது என்ற அறிவிப்பதன் மூலமும் ட்ரம்ப் சர்வாதிகாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளார்.
டிசம்பர் 2023 இல், உலக சோசலிச வலைத் தளம் காஸா இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் ஆதரவின் தாக்கங்களை பின்வருமாறு விளக்கியது:
வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் மற்றும் பெருகிவரும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்புக்கு இடையே, பைடென் நிர்வாகம் பாரிய படுகொலை மூலம் கிளர்ச்சி செய்யும் நகர்ப்புறங்களை கையாள்வதற்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க முயன்று வருகிறது. உள்நாட்டு அரசியல் நெருக்கடியை சர்வாதிகாரத்தின் மூலம் தீர்க்க விரும்பும் அமெரிக்க தன்னலக்குழுவின் பிரிவுகளுக்கு, காஸா இனப்படுகொலை ஒரு சோதனைக் களமாக பார்க்கப்படுகிறது.
ஓராண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ட்ரம்ப் நிர்வாகம் இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர பாடுபட்டு வருகிறது. ட்ரம்ப் பேசும் அமெரிக்க நிதியியல் தன்னலக்குழுக்கள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் கவனிப்பு மற்றும் மருத்துவ உதவித் துறைகளைக் கலைப்பது, நூறாயிரக் கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, பொதுக் கல்வியை அழிப்பது, மற்றும் உழைக்கும் மக்களின் குடும்பங்களின் சமூக நிலைமைகளுக்கு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு வர்த்தகப் போரைத் தொடுப்பது என அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது ஒரு நேரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் அதன் நடவடிக்கைகள் பாரிய எதிர்ப்புக்கு இட்டுச் செல்லும் என்று முழுமையாக நம்புகிறது. ஆதலால், ட்ரம்ப் நிர்வாகம் காஸாவில் உருவாக்கப்பட்ட முன்னுதாரணங்களை காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் பயன்படுத்த முயற்சிக்கும்.
வரவிருக்கும் நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில், ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கில் அதன் போரைப் பாரியளவில் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே, ஈரான் மீது முழு அளவிலான அமெரிக்கத் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருபவர்களும் உள்ளனர். இது, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் இலக்காக இருந்து வருகிறது.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, தொழிலாள வர்க்கம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது போரை நடத்தும் அதன் அரசாங்கத்திற்கு நிதியளித்து வருகிறது. அதன் வேறுபாடுகள் காஸா இனப்படுகொலையில் அல்ல, மாறாக ரஷ்யாவிற்கு எதிரான போர் தொடர்பான வெளியுறவுக் கொள்கையின் பிரச்சினைகளில் மையமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மேற்கொண்டுவரும் படுகொலையை எந்த முக்கிய ஜனநாயகக் கட்சியினரும் கண்டிக்கவில்லை. மேலும் நேர்மையற்ற மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைத்த பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள், இனப்படுகொலையில் ஒரு அங்கமாக இருக்கும் பரந்த ஏகாதிபத்தியப் போரை முழுமையாக ஆதரிக்கின்றனர்.
வருங்காலத்தில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பையும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்திலிருந்து பிரிப்பது அல்லது ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்வது என்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்.
அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான ட்ரம்பின் முயற்சிகளையும், பாலஸ்தீன மக்களை நிர்மூலமாக்குவதற்கான அவரது முனைவையும் தடுத்து நிறுத்தும் சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். மார்க்சிசத்தின் தத்துவார்த்த வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதே மத்திய பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) இந்தப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன.