மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
துருக்கியின் அங்காராவில் அமைந்துள்ள பில்கென்ட் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள சமூக ஜனநாயகக் கழகங்களின் அழைப்பின் பேரில் டேவிட் நோர்த் இணையவழியில் விரிவுரைகளை வழங்கினார். இந்த விரிவுரைகள் பிப்ரவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன.
***
டெட்ராய்டிலிருந்து உங்களுடன் பேசுவதற்கான இந்த வாய்ப்பை நான் வரவேற்பதுடன், மேலும் எனக்கு இந்த அழைப்பை விடுத்த சமூக ஜனநாயகக் கழகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டம் ஒரு மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையின் கீழ் நடைபெறுகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம் மிக அருகாமையில் உள்ளது. சில மணிநேரங்களுக்கு முன்பு நியூ யோர்க் டைம்ஸ் இதழில் வெளியான அறிக்கையின்படி:
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் வேகமான குவிப்பு, இந்த வார இறுதியில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளது என்று நிர்வாகம் மற்றும் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது வெள்ளை மாளிகையை, இராஜதந்திரம் அல்லது போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ஆபத்தான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.
வாரக்கணக்கில் தீவிர எச்சரிக்கையுடன் இருந்துவரும் இஸ்ரேலியப் படைகள், ஒரு சாத்தியமான போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றன. மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஆகியவை ஈரான் மீதான திட்டமிடப்பட்ட போரைக் கண்டிக்கின்றன. இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். இது “அமைதிக்கு எதிரான குற்றம்” என்ற வகையின் கீழ் வருகிறது. இதுதான் 1946-45 ஆம் ஆண்டுகளில் நூரம்பேர்க்கில் நடைபெற்ற விசாரணைகளில் நாஜி தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டாகும்.
பாசிச ட்ரம்ப் அரசாங்கம் எந்தவொரு குற்றத்தையும் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. இது ஹிட்லரின் மூன்றாவது பேரரசின் பாணியில் வெளியுறவுக் கொள்கையை நடத்துகிறது.
கடந்த ஆறு வாரங்களில் மட்டும், ட்ரம்ப்பின் ஆட்சி வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அதன் ஜனாதிபதியைக் கடத்தியுள்ளது. கியூபாவிற்கு எண்ணெய் கிடைப்பதைத் தடுத்து, அந்நாட்டு மக்களைப் பட்டினி போடும் நோக்கில் அதன் மீது முற்றுகையை விதித்துள்ளது. காஸா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு இது ஆதரவளித்து வருகிறது.
இந்தப் போர் அடுத்த சில நாட்களுக்குள் அல்லது சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் தொடங்குகிறதோ இல்லையோ, போர் என்பது நிச்சயம் நடக்கும். திடீரென ஒரு இராஜதந்திர முன்னேற்றம் அறிவிக்கப்பட்டாலும் கூட, அது தாக்குதலுக்கான கால அட்டவணையை மாற்றுவதைத் தவிர வேறொன்றையும் செய்யாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை — இந்தப் பூமியைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது — அமைதியான முறையில் சாதிக்க முடியாது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஈரான் மீதான போர் என்பது சீனாவுடன் வரவிருக்கும் மோதலுக்கான அதன் தயாரிப்பில் ஒரு முக்கியமான கட்டமாகும்.
ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் போரை நிறுத்திவிட முடியாது. சர்வதேச தொழிலாளர் வர்க்கம், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திற்கு முன்பிருந்த சூழ்நிலைக்கு நிகரான ஒரு சூழலை இன்று எதிர்கொள்கிறது. ஆனால், இந்த ஒப்பீடு கூட போதுமானதல்ல. ஏனெனில், இன்றைய போரின் விளைவுகள் 87 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட எண்ணிலடங்கா மடங்கு பயங்கரமானதாக இருக்கும். ஒட்டுமொத்த மனித வாழ்க்கையையே அழித்தொழிக்கக்கூடிய ஒரு அணுவாயுத பேரழிவின் உடனடி ஆபத்தை மனிதகுலம் எதிர்கொண்டுள்ளது.
இந்தச் சூழல்தான், 1938-இல் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய வார்த்தைகளுக்கு ஒரு மிகப்பெரிய அவசரத் தன்மையைத் தருகிறது: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், அதுவும் அடுத்த வரலாற்று காலகட்டத்திற்குள் அத்தகைய புரட்சி நிகழாவிட்டால், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரத்திற்கும் ஒரு பேரழிவு அச்சுறுத்தல் ஏற்படும்.”
இன்றைய கூட்டம் ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதற்கு இதுவே காரணம். லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் அவரது பணிகளை மிகக் கவனமாக ஆய்வு செய்யாமல் எவராலும் சோசலிசப் புரட்சியைப் பற்றித் தீவிரமாகப் பேச முடியாது.
ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சில ஆண்டுகள் துருக்கியில் கழிந்தன. அதில் பெரும் பகுதி பியூயுகடா தீவில் கழிந்தது. 1929 மற்றும் 1933-க்கு இடையில், ட்ரொட்ஸ்கி தனது சுயசரிதையான எனது வாழ்க்கை மற்றும் ஈடு இணையற்ற ரஷ்யப் புரட்சியின் வரலாறு ஆகியவற்றை இங்கிருந்துதான் எழுதினார். ஜேர்மனியின் அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்த சிறந்த அரசியல் ஆவணங்களையும் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தவறான கொள்கைகள் ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான பாதையை வகுத்துக் கொடுக்கின்றன என்றும் அவர் இங்கிருந்துதான் எச்சரிக்கை விடுத்தார். இறுதியாக, ஜூலை 1933-இல் பியூயுகடா தீவிலிருந்து அவர் வெளியேறுவதற்குச் சற்று முன்பு, நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அழைப்பையும் ட்ரொட்ஸ்கி இங்கிருந்துதான் விடுத்தார்.
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்படுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் என்ன?
1929 ஜனவரியில், ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவ ஆட்சியால் லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், 1917 அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அரசு அதிகாரத்துவச் சீரழிவுக்கு உள்ளாவதற்கு எதிராக, 1923 அக்டோபரில் தொடங்கப்பட்ட இடது எதிர்ப்பின் போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். ஸ்டாலினிச ஆட்சியின் பொய்கள் ஒருபுறமிருக்க, போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலும், 1918 முதல் 1921 வரை ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு எதிரான போராட்டத்தில் சோவியத் ஆட்சி உயிர் பிழைத்ததிலும் ட்ரொட்ஸ்கியின் பங்கு லெனினுக்கு நிகரானது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.
ட்ரொட்ஸ்கியின் பங்கு குறித்த இந்த மதிப்பீடு பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டது:
போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்த அந்த முன்னோக்கு, 1905 புரட்சிக்குப் பிறகு ட்ரொட்ஸ்கி உருவாக்கிய நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது ஒரு சோசலிசப் புரட்சியின் வடிவத்தை எடுக்கும் என்றும், அதில் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தைத் தூக்கியெறிந்து அதிகாரத்தைத் தன் கைகளில் எடுக்கும் என்றும் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். மேலும், ரஷ்யாவில் நடக்கும் தொழிலாளர் புரட்சி என்பது ஒரு தேசிய நிகழ்வு மட்டுமல்ல, அதன் விதி உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
1917 ஏப்ரலில் லெனின் ரஷ்யாவிற்குத் திரும்பியபோது அவர் ஏற்றுக்கொண்ட முன்னோக்கு இதுவேயாகும். 1914-இல் முதலாவது ஏகாதிபத்திய உலகப் போர் வெடித்ததன் விளைவாக, ரஷ்யாவில் புரட்சியின் வர்க்க இயக்கவியல் குறித்த தனது மதிப்பீட்டை லெனின் மாற்றிக்கொண்டார். பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற போல்ஷிவிக் கட்சியின் நீண்டகால வேலைத்திட்டத்தை அவர் கைவிட்டார். மேலும் ஜாரிச ஆட்சியைத் தூக்கியெறிவதிலிருந்து எழும் பணி தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே தங்கியிருக்கிறது என்று வாதிட்டார்.
உலகப் போரின் போக்கில், இரண்டாம் அகிலம் மற்றும் ரஷ்யாவிலுள்ள அதன் மென்ஷிவிக் ஆதரவாளர்களின் பிற்போக்குத்தனமான பாத்திரம் அம்பலமானது. இதன் மூலம், 1903 முதல் சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாதப் போக்குகளுக்கு எதிராக லெனின் நடத்தி வந்த போராட்டத்தின் சரியான தன்மையை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
இவ்வாறு, போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றமும், லெனினின் தொலைநோக்கு மிக்க கட்சி அமைப்பு ரீதியான கொள்கைகளை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொண்டதும், 1917-க்கு முன்னர் இந்த இரண்டு வரலாற்று நாயகர்களுக்கும் இடையே இருந்த முந்தைய பிரிவு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. ட்ரொட்ஸ்கியும் அவருடைய பல சக-சிந்தனையாளர்களும் போல்ஷிவிக் கட்சியில் இணைந்தனர். செப்டம்பர் 1917-இல் லெனின் எழுதியது போல, ட்ரொட்ஸ்கியை விடச் சிறந்த போல்ஷிவிக் வேறு யாரும் இருக்கவில்லை.
செப்டம்பர்-அக்டோபர் 1917-இல், சோவியத்தின் இராணுவப்-புரட்சிக் குழுவின் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முக்கிய தந்திரோபாயவாதியாகவும், அமைப்பாளராகவும் திகழ்ந்தார்.
1918-ஆம் ஆண்டு வசந்த காலத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட செம் படையின் போர்க்கால ஆணையராகவும் மற்றும் தலைமைத் தளபதியாகவும் ட்ரொட்ஸ்கி நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகளாலும் ஆதரிக்கப்பட்ட எதிர்-புரட்சி சக்திகளுக்கு எதிரான வெற்றியில் ட்ரொட்ஸ்கி மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தார்.
மூன்றாம் அகிலத்தை நிறுவுவதில் லெனினும் ட்ரொட்ஸ்கியும் தீர்க்கமான பங்கை வகித்தனர். மேலும் 1919 மற்றும் 1922-க்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்ற மூன்றாம் அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகளில் அவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தனர். ட்ரொட்ஸ்கி இரண்டாவது மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை எழுதினார். மேலும், இந்த முக்கியமான மாநாடுகளில் பல முக்கியமான உரைகளை ஆற்றினார். இதற்கு நேர்மாறாக, ஸ்டாலின் முதல் நான்கு மாநாடுகளில் ஒன்றில் கூட ஒரு உரையைக்கூட ஆற்றவில்லை.
கம்யூனிஸ்ட் அகிலத்தை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த மற்றும் அதன் முதல் நான்கு மாநாடுகளை வழிநடத்திய அரசியல் மூலோபாயம் என்னவென்றால், அக்டோபர் புரட்சியின் வெற்றியானது உலக சோசலிசப் புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்பதாகும். உண்மையில், ஏப்ரல் 1917-இல் லெனின் ரஷ்யாவிற்குத் திரும்பிய பிறகு போல்ஷிவிக்குகள் பின்பற்றிய கொள்கைகளை வழிநடத்திய மூலோபாயக் கணக்கீடுகள், முதன்முதலாகவும் முக்கியமாகவும் தேசிய நிலைமைகளை விட சர்வதேச நிலைமைகளின் மதிப்பீட்டையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
ஆரம்பத்தில் இடது எதிர்ப்பு இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்த பிரச்சினைகள் பொருளாதாரக் கொள்கைகள், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) அதிகாரத்துவமயமாக்கல் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் நசுக்கப்படுவது ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தன. ஆனால், 1924-இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இன்னும் குறிப்பிடத்தக்க பிளவு உருவானது. லெனினின் மறைவுக்குப் பிறகு, ட்ரொட்ஸ்கி மீதான கன்னைவாதத் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான இந்த பிரச்சாரத்தின் மார்க்சிச விரோதத் தன்மை 1924 டிசம்பரில் ஸ்டாலின் எழுதிய ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது. அதில் அவர், அக்டோபர் புரட்சியின் சர்வதேசவாத மூலோபாயத்திற்கு எதிராக, “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசிய-பேரினவாத வேலைத்திட்டத்தை முதல்முறையாக முன்வைத்தார்.
அக்டோபர் புரட்சியின் வரலாற்றையும், லெனினின் எழுத்துக்களையும் கடுமையாக பொய்மைப்படுத்திய ஸ்டாலின், நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தைக் கண்டனம் செய்தார். மேலும், சோவியத் யூனியனின் உயிர் வாழ்விற்கும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சோசலிசம் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை என்றும், சோசலிச சமூகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான போதுமான தேசிய வளங்கள் ரஷ்யாவிற்குள்ளேயே உள்ளன என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
“தனி ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமற்றது, ஐரோப்பாவின் பல முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து ஐரோப்பிய ஐக்கிய அரசுகளை (பிரிட்டன், ரஷ்யா, ஜேர்மனி) உருவாக்கினால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமாகும், இல்லையெனில் அது சாத்தியமே இல்லை” என்ற ட்ரொட்ஸ்கியின் உறுதியான நிலைப்பாட்டை, ஸ்டாலின் தனது சொந்த வார்த்தைகளால் தாக்கினார்.
ட்ரொட்ஸ்கியின் பின்வரும் கூற்றை ஸ்டாலின் மேலும் மிகுந்த ஆவேசத்துடன் தாக்கினார்:
இதர ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் இருக்கும் வரை, எமது பொருளாதாரத் தனிமைப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில், முதலாளித்துவ உலகத்துடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள நாம் தள்ளப்படுவோம். அதே நேரத்தில், இத்தகைய உடன்படிக்கைகள் எமது பொருளாதாரப் பாதிப்புகளைச் சற்று குறைக்கவும் அல்லது ஓரிரு படிகள் முன்னேறிச் செல்லவும் மட்டுமே உதவும் என்பதை உறுதியாகக் கூற முடியும். ஆனால், ரஷ்யாவில் ஒரு சோசலிசப் பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது, முக்கிய முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற்ற பிறகு மட்டுமே சாத்தியமாகும்.
இந்த வார்த்தைகளை, தனக்கே உரிய நேர்மையற்ற தன்மை, சிடுமூஞ்சித்தனம் மற்றும் நடைமுறைவாதக் குறுகிய பார்வை ஆகியவற்றுடன், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் “இறுதி வீழ்ச்சி” என்று ஸ்டாலின் பிரகடனப்படுத்தினார்.
ஸ்டாலினிச அதிகாரத்துவமானது, ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் மீது தனது தாக்குதலைத் தொடங்கி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை நிராகரித்ததன் விளைவு, 35 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் யூனியனின் “இறுதி வீழ்ச்சியில்” போய் முடிந்தது. சோவியத் யூனியனின் உண்மையான சாதனைகள் மற்றும் சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் அசாதாரண தியாகங்கள், குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது இருந்தபோதிலும், அங்கு சோசலிசம் ஒருபோதும் கட்டி எழுப்பப்படவில்லை. “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற வேலைத்திட்டம் எண்ணற்ற அரசியல் பேரழிவுகளுக்கு வழிவகுத்து. இறுதியில் 1991-இல் சோவியத் யூனியன் கலைக்கப்படுவதில் முடிவடைந்தது.
சோவியத் யூனியனை, சோவியத் அதிகாரத்துவம் தானாகவே முன்வந்து கலைத்த பின்னரும் கூட, பழைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிற்போக்குத்தனமான மிச்ச சொச்சங்களும், போலி-இடது குட்டி-முதலாளித்துவ தீவிரவாதிகளும், தேசியவாதக் குழுக்களும் ஸ்டாலினைத் தங்களது கதாநாயகனாகப் பிரகடனப்படுத்துகின்றனர். போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலிருந்த லெனினின் நெருங்கிய தோழர்களைக் கொலை செய்வதுக்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், 1936 மற்றும் 1940-க்கு இடையில் பல இலட்சக்கணக்கான மார்க்சிசத் தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களைக் கூண்டோடு அழித்த அந்த இரத்தவெறி பிடித்த பயங்கரத்தைத் தூண்டிவிட்ட மனிதருடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸ்டாலினால் பலியானவர்களில் சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு அப்பால் இருந்த சோசலிசத் தலைவர்களும் அடங்குவர். அவர்களில் ஸ்பெயினின் மார்க்சிச ஐக்கியத்திற்கான தொழிலாளர் கட்சியின் (POUM) தலைவர் ஆண்ட்ரூ நின் மற்றும் இறுதியாக ட்ரொட்ஸ்கி ஆகியோரும் அடங்குவர்.
ட்ரொட்ஸ்கியின் மூலோபாயக் கருத்துக்கள் ஒட்டுமொத்த வரலாற்றுப் போக்கினாலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உண்மையில், முதலாளித்துவ அமைப்பு முறையின் உலகளாவிய நெருக்கடி குறித்து ட்ரொட்ஸ்கி செய்த பகுப்பாய்வு இன்றும் அசாதாரணமான அரசியல் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது.
1928-ஆம் ஆண்டில், கஜகஸ்தானின் அல்மா அட்டாவிற்கு நாடுகடத்தப்பட்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரைவுத் திட்டம் குறித்த விரிவான விமர்சனத்தை ட்ரொட்ஸ்கி எழுதினார். அது, தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற வேலைத்திட்டத்தின் தத்துவார்த்த மற்றும் மூலோபாயத் தோல்வியைத் தோலுரித்துக் காட்டிய ஒரு கடுமையான பகுப்பாய்வாகும். அதன் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றில், வரலாற்று சகாப்தம் குறித்த பின்வரும் மதிப்பீட்டை ட்ரொட்ஸ்கி முன்வைத்தார்:
நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் இயங்கும் ஏகாதிபத்திய சகாப்தமாகிய எமது காலத்தில், எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது சொந்த நாட்டின் நிலைமைகள் மற்றும் வளர்ச்சிப் போக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனது வேலைதிட்டத்தை வகுக்க முடியாது. சோவியத் யூனியனின் எல்லைகளுக்குள் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள கட்சிக்கும் இது முற்றிலும் பொருந்தும். 1914 ஆகஸ்ட் 4 அன்று, தேசியத் வேலைத்திட்டங்களுக்கான சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியானது, முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியைக் கொண்ட தற்போதைய சகாப்தத்தின் தன்மைக்கு ஏற்ப ஒரு சர்வதேசத் வேலைத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியும். ஒரு சர்வதேச கம்யூனிச வேலைத்திட்டம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியத் வேலைத்திட்டங்களின் மொத்தத் தொகுப்போ அல்லது அவற்றின் பொதுவான அம்சங்களின் கலவையோ கிடையாது.
சர்வதேச வேலைத்திட்டமானது, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் அமைப்பு முறையின் நிலைமைகள் மற்றும் போக்குகளை அதன் அனைத்துத் தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளுடன், குறிப்பாக அதன் தனித்தனிப் பகுதிகளுக்கு இடையிலான பரஸ்பர பகைமை கலந்த ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் தன்மையுடன், ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்வதிலிருந்து நேரடியாக உருவாக வேண்டும். கடந்த காலத்தை விட தற்போதைய சகாப்தத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது ஒரு உலகளாவிய நோக்குநிலையிலிருந்து மட்டுமே உருவாக வேண்டும். மாறாக, தேசியத்திலிருந்து உலகளாவிய நோக்குநிலை உருவாகக் கூடாது. கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் அனைத்து வகையான தேசிய சோசலிசத்திற்கும் இடையிலான அடிப்படை மற்றும் முதன்மையான வேறுபாடு இங்குதான் உள்ளது.
புக்காரின் தயாரித்து ஸ்டாலினின் ஒப்புதல் பெற்ற அந்த வரைவுத் திட்டம், அதன் தேசியவாத நோக்குநிலையின் விளைவாக, உலக ஏகாதிபத்திய அமைப்பு முறையின் முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியால் ஏற்படப்போகும் வெடிப்புமிக்க தாக்கங்களைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டது. அமெரிக்காவின் பாத்திரத்தைப் பற்றிய துல்லியமான பகுப்பாய்வு இல்லாமல், உலக சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புகளைச் சரியாக வகுக்க முடியாது என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி அழுத்திக் கூறினார். இருப்பினும், இந்த ஆய்விலிருந்து அமெரிக்காவைத் தோற்கடிக்க முடியாது என்ற முடிவை அவர் எடுக்கவில்லை. மாறாக, வியக்கத்தக்க தீர்க்கதரிசனத்துடன் ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்:
துல்லியமாக அமெரிக்காவின் சர்வதேச வலிமையும், அதிலிருந்து எழும் அதன் தவிர்க்க முடியாத விரிவாக்கமும்தான், உலகம் முழுவதிலும் உள்ள வெடிமருந்து கிடங்குகளை அதன் கட்டமைப்பின் அடித்தளத்தில் சேர்க்கத் தூண்டுகிறது. அதாவது, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான அனைத்துக் குரோதங்கள், பழைய ஐரோப்பாவின் வர்க்கப் போராட்டம், காலனித்துவ மக்களின் எழுச்சிகள், மற்றும் அனைத்துப் போர்கள் மற்றும் புரட்சிகள் ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது. இது, ஒருபுறம் வட அமெரிக்க முதலாளித்துவத்தை நவீன யுகத்தின் அடிப்படை எதிர்ப்புரட்சிகர சக்தியாக மாற்றுகிறது. இதனால், உலக உருண்டையின் ஒவ்வொரு மூலையிலும் “ஒழுங்கை” பராமரிப்பதில் அது எப்போதும் அதிக ஆர்வம் காட்டுகிறது. மறுபுறம், இது ஏற்கனவே மேலாதிக்கம் செலுத்தி வரும் மற்றும் இன்னும் விரிவடைந்து வரும் இந்த உலக ஏகாதிபத்திய சக்தியின் உள்ளேயே, ஒரு பிரம்மாண்டமான புரட்சிகர வெடிப்புக்கான களத்தையும் தயார் செய்கிறது.
ட்ரொட்ஸ்கி தொடர்ந்து கூறுகையில்:
நெருக்கடியான காலக்கட்டத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கமானது பொருளாதார வளர்ச்சியின் காலக்கட்டத்தை விட மிகவும் முழுமையாகவும், வெளிப்படையாகவும் மற்றும் இரக்கமற்ற முறையிலும் செயல்படும். ஆசியாவாக இருந்தாலும் சரி, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, அல்லது அமைதி வழியில் நடந்தாலும் சரி அல்லது போர் மூலம் நடந்தாலும் சரி, அமெரிக்கா தனது கஷ்டங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் முதன்மையாக ஐரோப்பாவின் செலவில் (ஐரோப்பாவைப் பலிகடா ஆக்கி) தன்னை விடுவித்துக் கொள்ளவும், அவற்றைக் கடந்து வரவும் முயற்சிக்கும்.
98 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை வியக்கத்தக்க துல்லியத்துடன் விவரிக்கின்றன. கடந்த வாரம் நான் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள்:
ட்ரொட்ஸ்கி ஏகாதிபத்திய மோதல்களை நோக்கிய ஒரு பொதுவான போக்கை மட்டும் முன்னறிவிக்கவில்லை. அவர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் இலட்சியங்களின் புவியியல் வரம்பையும், அவை எவ்வளவு இரக்கமற்ற முறையில் தொடரப்படும் என்பதையும் அசாதாரணமான துல்லியத்துடன் அடையாளம் காட்டினார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ட்ரம்ப் கனடாவின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார், பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதாக மிரட்டுகிறார், வெனிசுவேலா மீது படையெடுக்கிறார், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை விட்டுக் கொடுக்குமாறு கோருகிறார் மற்றும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அழிப்பதாக அச்சுறுத்துகிறார்.
1934-இல், ஜேர்மனிய பாசிசத்தின் எழுச்சி மற்றும் இரண்டாம் உலகப் போர் நெருங்கிக் கொண்டிருந்த சூழலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்த தனது பகுப்பாய்வை ட்ரொட்ஸ்கி மேலும் விரிவுபடுத்தினார்: “உலகம் பங்கீடு செய்யப்பட்டுவிட்டதா? அது மீண்டும் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை அது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைப்பதற்கான’ ஒரு கேள்வியை கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்கா உலகத்தையே “ஒழுங்கமைக்க” வேண்டும். வரலாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புடன் மனிதகுலத்தை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.
இந்தச் சொற்றொடர் —அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பு— என்பது காலாவதியான ஒரு உருவகம் அல்ல. அது நிறைவேறிக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் ரீதியான முன்னறிவிப்பு ஆகும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஹிட்லரே கைதட்டிப் பாராட்டக்கூடிய ஒரு பிற்போக்குத்தனமான வேலைதிட்டத்தின் அடிப்படையில், உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கமைக்க முயல்வதாக அமெரிக்கா அப்பட்டமாகப் பிரகடனப்படுத்துகிறது.
பிப்ரவரி 14 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஆற்றிய உரை, ஏகாதிபத்திய இராணுவவாதம், தேசிய மற்றும் இன பேரினவாதம் மற்றும் சர்வதேசச் சட்டத்தை நிராகரித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பகிரங்கமான பாசிச நியாயப்படுத்துதலாகும்.
இந்த உரை முனிச் நகரில் நிகழ்த்தப்பட்டது என்பது ஒரு முரண்பாடான வரலாற்று நிகழ்வாகும். ஆனால், இந்த உரையை எழுதிய ஆசிரியர்கள், இதனை உணராத அளவுக்கு அறியாமையிலோ அல்லது அதை ஒப்புக்கொள்ள விரும்பாத சிடுமூஞ்சித்தனத்திலோ இருந்திருக்க வேண்டும். முனிச் என்பது 1963-ஆம் ஆண்டிலிருந்து போருக்குப் பிந்தைய பாதுகாப்பு மாநாடுகள் நடைபெறும் நகரம் மட்டுமல்ல. மாறாக, இது அடோல்ஃப் ஹிட்லர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நகரம், நவம்பர் 1923-இல் வைமர் குடியரசை கவிழ்க்க ஹிட்லர் தனது முதல் முயற்சியை மேற்கொண்ட நகரம், நாஜிக் கட்சி தனது ஆரம்பகால மாபெரும் பேரணிகளை நடத்திய நகரம், மற்றும் செப்டம்பர் 1938-இல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் செக்கோஸ்லோவாக்கியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து ஹிட்லரிடம் ஒப்படைத்த நகரமும் இதுவே ஆகும்.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள், நாஜி போர் இயந்திரம் தொடர்ந்து கிழக்கு நோக்கி, அதாவது சோவியத் யூனியனை நோக்கித் திரும்பும் என்றும், தங்கள் பேரரசுகளை அது சிதையாமல் விட்டுவிடும் என்ற நம்பிக்கையிலும், ஒரு ஜனநாயகக் குடியரசை ஒரு பாசிச சர்வாதிகாரியிடம் பலிகொடுக்கத் தயாராக இருந்தன. அனைவரும் அறிந்த வகையில், ஹிட்லருடனான இந்த இரகசியக் கூட்டின் விளைவுகள், மனித வரலாற்றிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய போர், பெரும் இனப்படுகொலை, மற்றும் கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்பை விளைவித்தன.
ரூபியோ பாசிசத்தின் குற்றங்களைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. மாறாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சரைப் பொறுத்தவரை, மூன்றாவது பேரரசின் (நாஜி ஜேர்மனி) வீழ்ச்சி என்பது ஒரு துயரமான வரலாற்றுத் திருப்புமுனையாகும்:
இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, மேற்கத்திய உலகம் விரிவடைந்து கொண்டிருந்தது —அதன் மதபோதகர்கள், யாத்ரீகர்கள், படையினர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அதன் கடற்கரைகளிலிருந்து வெளியேறி சமுத்திரங்களைக் கடந்தனர், புதிய கண்டங்களில் குடியேறினர், உலகம் முழுவதும் பரவியிருந்த பரந்த சாம்ராஜ்யங்களை உருவாக்கினர்.
ஆனால் 1945-இல், கொலம்பஸ் காலத்திற்குப் பிறகு முதன்முறையாக, அது சுருங்கத் தொடங்கியது. ஐரோப்பா சிதைந்து இடிபாடுகளாகக் கிடந்தது. அதன் அரைவாசிப் பகுதி ஒரு இரும்புத் திரைக்குப் பின்னால் வாழ்ந்தது, எஞ்சிய பகுதியும் விரைவில் அதையே பின்பற்றும் போலத் தோன்றியது. பெரும் மேற்கத்திய சாம்ராஜ்யங்கள் இறுதிக்கட்ட வீழ்ச்சியைச் சந்தித்தன. இது கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசப் புரட்சிகளாலும், காலனித்துவ எதிர்ப்பு எழுச்சிகளாலும் வேகப்படுத்தப்பட்டது. இவை உலகத்தையே மாற்றி அமைத்ததுடன், தொடர்ந்துவந்த ஆண்டுகளில் வரைபடத்தின் பெரும் பகுதிகளில் சிவப்பு நிறச் சுத்தியலும் அரிவாளும் படரக் காரணமாயின.
ரூபியோவின் உரையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் “மேற்கத்திய நாகரிகம்” என்பதைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு தனித்துவமான, உயிருள்ள அமைப்பாகக் கருதும் கருத்தாக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. பனிப்போர் குறித்து ரூபியோ பேசுகையில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகால மேற்கத்திய நாகரிகத்தின் தலைவிதியே ஊசலாடிக் கொண்டிருந்தது” என்று பிரகடனப்படுத்துகிறார். “5,000ம் ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றின் பாடங்களை” அவர் துணைக்கு அழைக்கிறார். “மனிதகுல வரலாற்றின் மிகச்சிறந்த நாகரிகத்தைப்” பற்றி அவர் பேசுகிறார்.
இது வரலாறு அல்ல, இது ஒரு புராணக் கட்டுக்கதை. அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு சரியாக எண்ணக் கூடத் தெரியவில்லை. ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் நாம் சுமேரியா மற்றும் எகிப்திய வம்சங்களின் காலத்தை அடைகிறோம் —இந்த நாகரிகங்கள் புவியியல் ரீதியாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவைச் சார்ந்தவை. இவை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பாரம்பரியத்திற்குச் சொந்தமானவை. பண்டைய கிரேக்கர்கள் தங்களை “மேற்கத்தியர்கள்” என்று ஒருபோதும் கருதிக்கொண்டதில்லை. “மேற்கத்திய நாகரிகம்” என்ற கருத்தாக்கமே ஐரோப்பியக் காலனித்துவ விரிவாக்கத்திற்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சந்தேகத்திற்குரிய மற்றும் ஒப்பீட்டளவில் நவீனமான அறிவுசார் கட்டமைப்பாகும்.
ரோமர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிரேக்கத் தத்துவத்தின் பெரும்பகுதி பல நூற்றாண்டுகளாக இலத்தீன் கிறிஸ்தவ உலகத்திடம் இழக்கப்பட்டது. ஐரோப்பா ஒரு அறிவுசார் பின்தங்கிய பிரதேசமாக இருந்தபோது, கிரேக்கச் சிந்தனைகளைப் பாதுகாத்து, மொழிபெயர்த்து, விரிவுபடுத்திய அரபு மற்றும் பாரசீக அறிஞர்களையே அதன் மீட்பு சார்ந்திருந்தது. நவீன அறிவியலின் கணித அடித்தளங்கள் கிழக்கு நாடுகளுக்குக் கடன் பட்டிருக்கின்றன: அல்ஜிப்ரா (Algebra) ஒன்பதாம் நூற்றாண்டு பாக்தாத்தில் உருவானது; தசம எண் முறை (decimal numeral system) இந்தியாவிலிருந்து வந்தது; காகிதம், அச்சு இயந்திரம், திசைகாட்டி மற்றும் வெடிமருந்து ஆகியவை சீனாவிலிருந்து வந்தன. இவை எதையும் ரூபியோ தனது உரையில் ஒப்புக் கொள்ளவில்லை. “மேற்கு” என்பது யாருக்கும் எதற்கும் கடன் படாத ஒரு நாகரிக அதிசயம் போலச் சித்தரிக்கப்படுகிறது.
பிற்போக்குத்தனமாக இருப்பதைப் போலவே அறியாமையும் கொண்ட ரூபியோ ஒரு உண்மையை அறியவில்லை: அமெரிக்கப் புரட்சியானது அதன் தலைவர்களால் மனிதகுலப் பரிணாமத்தின் ஒரு புதிய வளர்ச்சியாகவே பிரகடனப்படுத்தப்பட்டது. மாறாக, அது காலமற்ற, நித்தியமான ஒரு நாகரிகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது பின்தங்கிய மரபுகள் மற்றும் காலாவதியான அரசாங்க முறைகளின் நீட்சியாகவோ கருதப்படவில்லை. புரட்சிகர சிந்தனையாளர் ரொம் பெயின் தனது புகழ்பெற்ற பொது அறிவு என்ற சிறு நூலில் எழுதியது போல: “உலகைப் புதிதாகத் தொடங்கும் அதிகாரம் நம் கையில் உள்ளது.”
ரூபியோவின் உரை எவற்றைத் தவிர்க்கிறது என்பது, அதில் அவர் எவற்றைக் குறிப்பிடுகிறார் என்பதைப் போலவே பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. “ஜனநாயகம்,” “சமத்துவம்,” மற்றும் “மனித உரிமைகள்” ஆகிய வார்த்தைகள் அந்த உரையின் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, உரிமைகள் மசோதா அல்லது அடிமைமுறை ஒழிப்பு, விடுதலைப் பிரகடனம் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும் அதில் இல்லை.
இந்தத் தவிர்ப்புகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை. ஜனநாயகப் புரட்சிகள் உலகளாவிய கொள்கைகளின் அடிப்படையில் உருவானவையே ஒழிய, அவை ரூபியோ முன்வைக்கும் அரசியலுடன் ஒருபோதும் ஒத்துப்போகாதவையாகும். அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்” என்று அறுதியிட்டுக் கூறுகிறது. மனித உரிமைகள் பிரகடனம் “மனிதர்கள் பிறந்து சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் இருக்கிறார்கள்” என்று பறைசாற்றுகிறது. உரிமைகள் மசோதா அரசின் அதிகாரத்திற்கு எதிராகத் தனிமனிதனைப் பாதுகாக்கிறது. ரூபியோவின் இந்த உரையில் அந்த ஆவணங்களைக் குறிப்பிட முடியாது, ஏனெனில் அவற்றின் தர்க்கம் சில முடிவுகளை நோக்கி இட்டுச் செல்கின்றன —அனைத்து மனிதர்களின் சமத்துவம், உரிமைகளின் உலகளாவிய தன்மை, அதிகாரத்தை சட்டத்திற்கு உட்படுத்துதல் போன்றவை அவை— ஆனால், இந்த உரை அந்த உண்மைகளையே நிராகரிக்கிறது.
அறிவொளி இயக்கத்தின் மீதான ரூபியோவின் வெறுப்பு, நாஜிக்களின் வெறுப்பை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது. ஏப்ரல் 1, 1933 அன்று, கோயபல்ஸ் (நாஜி பிரச்சார மந்திரி) இவ்வாறு பிரகடனப்படுத்தினார்: “1789-ஆம் ஆண்டு —பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கம்— இதன் மூலம் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படுகிறது.”
ரூபியோவின் உரை, முதலாளித்துவ சிந்தனையில் ஆழமாக வேரூன்றிய, அறிவொளி காலத்திற்கு எதிரான மற்றும் பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. 1945-ல் ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர்களின் ஆட்சிகளின் வீழ்ச்சியால் இந்த பாசிச சித்தாந்தம் பலவீனமடைந்து பின்னணிக்குத் தள்ளப்பட்டாலும், 1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதிலிருந்து அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
ரூபியோவின் முனிச் உரை என்பது பாசிசத்தை சட்டப்பூர்வமாக்குவதையே குறிக்கிறது. தாராளவாத நவீனத்துவத்தின் நிறுவனங்கள் —சர்வதேசச் சட்டம், பலதரப்பு ஒத்துழைப்பு, சட்ட நெறிமுறைகளால் அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை— தூக்கியெறியப்பட வேண்டிய தடைகளாகக் கருதப்படுகின்றன. அவற்றிற்குப் பதிலாக, இன மற்றும் நிற ரீதியான அடையாளத்தில் வேரூன்றிய, சர்வாதிகார ஆட்சி மற்றும் போரின் மூலம் நிலைநிறுத்தப்படும் ஒரு படிநிலை ஒழுங்குமுறை கொண்டுவரப்பட வேண்டும். இந்த உரையில் கோயபல்ஸ் உற்சாகமாக ஆதரிக்காத விஷயம் என்று எதுவுமே இல்லை.
“கிறிஸ்தவ நாகரிகத்தை” மகிமைப்படுத்தும் வெளியுறவுத்துறை செயலாளரின் முயற்சிகள் வஞ்சகத்தாலும் பாசாங்குத்தனத்தாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. விசாரணை மற்றும் அதன் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்ட முறையான சித்திரவதை, கட்டாய மதமாற்றம் மற்றும் மதவெறியர்கள், யூதர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சூனியக்காரர்களை உயிருடன் எரித்தல் ஆகியவற்றை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
இந்த உரையில் பெருமைப்படுத்தப்படும் “பரந்த பேரரசுகள்,” எண்ணற்ற கொடுமைகளின் மீதே கட்டியமைக்கப்பட்டன. அவற்றில் அட்லாண்டிக் அடிமை வர்த்தகமும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியா திட்டமிட்டுச் சூறையாடப்பட்டதும் அடங்கும். இந்தச் சுரண்டல், உலகின் மிகப் பெரிய செல்வந்தப் பகுதிகளில் ஒன்றைக் காலனித்துவப் பின்நிலமாக மாற்றியதோடு, பல கோடி மக்களைக் கொன்றொழித்த பஞ்சங்களையும் உருவாக்கியது. கொங்கோவில் பெல்ஜிய மன்னர் லியோபோல்டின் சாம்ராஜ்யம் கட்டாய உழைப்பு, உடல் உறுப்புகளைச் சிதைத்தல் மற்றும் மக்கள் தொகையை சுமார் 10 மில்லியன் அளவுக்குக் குறைத்த பாரிய படுகொலைகள் ஆகியவற்றின் மூலம் இறப்பர் எடுப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது போன்ற இன்னும் எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும்.
இங்கே ஒரு முக்கியமான விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம் —இது வரலாற்று ரீதியான இந்தக் குற்றங்கள் குறித்த மார்க்சிசப் பகுப்பாய்வை, ரூபியோவின் கட்டமைப்பிலிருந்தும், அவரது நாகரிகக் புராணக் கட்டுக்கதையை தலைகீழாக மாற்றும் தாராளவாத விமர்சனங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
அடிமை வர்த்தகம், பழங்குடி பூர்வீக மக்களின் அழிப்பு, இந்தியாவைச் சூறையாடியது, கொங்கோவில் மேற்கொண்ட கொடூரங்கள் —இவை அனைத்தும் “மேற்கத்திய நாகரிகம்” என்று அழைக்கப்படும் ஒரு அருவமான கருத்தாக்கத்தால் விளைந்தவை அல்ல. இவை ஒரு கலாச்சாரத்தின் சாரத்திலிருந்தோ அல்லது ஒரு இனத்தின் பாரம்பரியத்திலிருந்தோ வெளிப்பட்டவை அல்ல. இவை வரலாற்று ரீதியாகக் குறிப்பிட்ட ஒரு உற்பத்தி முறையின் விளைவுகளாகும். அதுதான் முதலாளித்துவம். மார்க்ஸ் எழுதியது போல, முதலாளித்துவம் “தலை முதல் கால் வரை, ஒவ்வொரு துளையிலிருந்தும், இரத்தமும் அழுக்கும் சொட்டச் சொட்டப் பிறக்கிறது”.
மூலதனத்தின் ஆரம்பகால திரட்சி என்று அழைக்கப்படுவது —அதாவது விவசாயிகள் வன்முறையாகத் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டது, அடிமை வணிகம், காலனித்துவச் சூறையாடல்— முதலாளித்துவ வளர்ச்சியின் ஏதோ ஒரு தற்செயலான அம்சம் அல்ல. அவை முதலாளித்துவம் உருவாவதற்கான இன்றியமையாத முன்நிபந்தனைகள் ஆகும். மார்க்ஸ் தனது மூலதனம் என்ற நூலில் எழுதியது போல:
அமெரிக்காவில் தங்கம் மற்றும் வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டதும், அங்கிருந்த பூர்வகுடி மக்கள் நிர்மூலமாக்கப்பட்டதும், அடிமைப்படுத்தப்பட்டதும் மற்றும் சுரங்கங்களுக்குள்ளேயே புதைக்கப்பட்டதும், கிழக்கு இந்தியத் தீவுகளைக் கைப்பற்றிச் சூறையாடத் தொடங்கியதும், கருப்பின மக்களை வேட்டையாடும் ஒரு வணிகக் காடாக ஆபிரிக்காவை மாற்றியது ஆகிய அனைத்தும் முதலாளித்துவ உற்பத்தி சகாப்தத்தின் இரத்தக்கறை படிந்த விடியலை அறிவித்தன. இந்த இன்பமயமான நடவடிக்கைகள் யாவும் ஆதி மூலதன திரட்சியின் முதன்மையான உந்துசக்திகளாகும்
முதலாளித்துவ சகாப்தத்தின் வலிமைக்குக் காரணம், காலம் கடந்த ஒரு “மேற்கத்திய நாகரிகம்” தான் என்று கூறுவதன் மூலம், ரூபியோவின் உரை இந்த அருவருப்பான வரலாற்றை மூடி மறைக்கிறது. இந்த மர்மமயாக்கல் பல நோக்கங்களுக்குச் சேவை செய்கிறது:
முதலாவதாக, இது முதலாளித்துவ மேலாதிக்கத்தை ஒரு நித்தியமான இன, இனக்குழு மற்றும் மத சாரத்தின் மலர்ச்சியாக சித்தரிப்பதன் மூலம் அதை இயல்பானதாக்குகிறது. இரண்டாவதாக, இது ஒடுக்குமுறைக்கும் மிகக் கொடூரமான குற்றங்களுக்கும் ஒரு நியாயத்தை வழங்குகிறது. மூன்றாவதாக, இது சமூகத்தின் சமூக-பொருளாதார அடித்தளங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டம் குறித்த ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு மாற்றாக ஒரு போலியான விளக்கத்தை அளிக்கிறது. நாஜி சித்தாந்தவாதிகளின் பிற்போக்குத்தனமான மற்றும் பகுத்தறிவற்ற கற்பனைகள் குறித்து ட்ரொட்ஸ்கி அளித்த விளக்கம், ரூபியோவின் வரலாறு குறித்த இன-இனக்குழு-மதக் கோட்பாட்டிற்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே பொருந்துகிறது. ட்ரொட்ஸ்கி தனது 1934 ஆம் ஆண்டு கட்டுரையான “தேசிய சோசலிசம் என்றால் என்ன?” என்பதில் இவ்வாறு எழுதினார்:
தேசியத்தை வரலாற்றிற்கு மேலான ஒன்றாக உயர்த்துவதற்காக, அதற்கு இனம் என்ற முட்டுக்கொடுக்கப்படுகிறது. வரலாறு என்பது இனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மாறிவரும் சமூக நிலைமைகளுடன் எவ்விதத் தொடர்புமின்றி, இனத்தின் குணாதிசயங்கள் கட்டமைக்கப்படுகின்றன. “பொருளாதார சிந்தனையின்” அடிப்படையை நிராகரித்துவிட்டு, தேசிய சோசலிசம் ஒரு படி கீழே இறங்குகிறது: இது பொருளாதாரப் பொருள்முதல்வாதத்திலிருந்து விலகி, விலங்கியல் பொருள்முதல்வாதத்தை நோக்கித் தஞ்சமடைகிறது.
ரூபியோ வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அதன் மீதான ஒரு தீராத அச்சம் அவருக்குள் ஆழமாகப் பதிந்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டு குறித்த ரூபியோவின் விவரிப்புகள் யாவும் மார்க்சியம் மற்றும் சோசலிசப் புரட்சிக்கு எதிரான போராட்டத்தையே மையமாகக் கொண்டுள்ளன. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மிக மோசமான பிற்போக்குத்தனமான மரபுடன் இந்த நிர்வாகத்தை இணைக்கிறது. ஈரானில் மொசாடெக் (Mossadegh) மற்றும் குவாத்தமாலாவில் அர்பென்ஸ் (Arbenz) ஆகியோரின் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் வியட்நாம் போர் மற்றும் இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா முழுவதும் இராணுவச் சர்வாதிகாரங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு வரை – பனிப்போர் காலத்தின் ஒவ்வொரு கொடூரத்தையும் “கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்திற்கு” எதிராக “மேற்கத்திய நாகரிகத்தின்” பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய அதே மரபுதான் இது. எந்தவொரு நிபந்தனையும் இன்றி இந்த மரபை அவர் மேற்கோள் காட்டுவதன் மூலம், தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ளும் எந்தவொரு இராணுவ மற்றும் இரகசிய நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த இதேபோன்ற விளக்கங்களே பயன்படுத்தப்படும் என்பதை அவரது உரை உணர்த்துகிறது.
இந்த உரையின் மிகவும் அபாயகரமான பகுதிகள், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் தன்னிச்சையான இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதைக் கொண்டாடுகின்றது மற்றும் சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக நிராகரிக்கின்றது. ரூபியோ வெளிப்படையான பெருமையுடன் வன்முறைப் பட்டியலை வாசிக்கிறார்: ஈரான் மீதான குண்டுவீச்சு, வெனிசுவேலாவில் ஒரு அரச தலைவரைக் கடத்தியது ஆகியவை, “எமது குடிமக்களை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் அச்சுறுத்துபவர்கள்” “சர்வதேசச் சட்டம் என்ற அருவமான கருத்தாக்கங்களுக்குப் பின்னால் தங்களை மறைத்துக் கொள்ள” அனுமதிக்க முடியாது என்று அவர் அறிவிக்கிறார். “அதன் அதிகாரத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அமைப்புகளுக்கு வெளியே ஒப்படைக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது கீழ்ப்படுத்தவோ அனுமதிக்காத” மற்றும் “அது செயல்படுவதற்கு முன்பு அனுமதி கேட்கும்” ஒரு கூட்டணிக்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார்.
மற்றொரு பகுதியில் ரூபியோ இவ்வாறு குறிப்பிடுகிறார்: “படைகள் அருவமான கருத்துகளுக்காக போரிடுவதில்லை, படைகள் ஒரு மக்களுக்காகப் போரிடுகின்றன, படைகள் ஒரு தேசத்திற்காகப் போரிடுகின்றன, படைகள் ஒரு வாழ்க்கை முறைக்காகப் போரிடுகின்றன.” ரூபியோவின் இந்தக்கூற்று, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வெறும் இன மற்றும் இனக்குழு பழங்குடிகளாகத் தரம் தாழ்த்துவதற்குச் சமமாகும்.
“அருவமான கருத்துக்களுக்காக படைகள் போரிடுவதில்லை” என்ற (அதாவது கொள்கைகளுக்காகப் போரிடுதல்) ரூபியோவின் வாதத்திற்கு, 1775 மற்றும் 1783-க்கு இடையில் அமெரிக்கர்கள் நடத்திய புரட்சிகர சுதந்திரப் போரை அவர் எவ்வாறு விளக்குவார்? அந்த மக்கள், தோமஸ் ஜெபர்சன் சுதந்திரப் பிரகடனத்தில் வரையறுத்த “சுய-தெளிவான” மற்றும் அருவமான “உண்மைகளின்” அடிப்படையிலேயே அணிதிரட்டப்பட்டனர். 1863-இல் கெட்டிஸ்பேர்க் போர்க்களத்தில், “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டைப்” பாதுகாப்பதற்காகவே யூனியனின் வீரர்கள் போரிட்டு மடிந்தனர் என்று லிங்கன் அறிவித்தார்.
ரூபியோவின் உரைக்கு பதிலளிக்கும் விதமாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ஒருவர் இந்த வாரத் தொடக்கத்தில் எனக்கு இவ்வாறு எழுதினார்: “ஒரு கருத்தியலுக்காக மட்டுமே நடத்தப்பட்ட அந்த உள்நாட்டுப் போரில் அரை மில்லியன் யூனியன் சிப்பாய்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.”
ஜெபர்சன் வலியுறுத்திய “உண்மைகள்”’ மற்றும் லிங்கனால் பாதுகாக்கப்பட்ட “முன்மொழிவு” ஆகியவை ஆழமான வரலாற்று, சமூக மற்றும் ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்ட “அருவமான” கருத்துக்கள் ஆகும். இவை அறிவொளி காலத்தின் பொருள்முதல்வாதத் தத்துவத்தில் வேரூன்றியவை. மேலும் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்றாண்டிலும் உருவான புரட்சிகர இயக்கங்களுக்கு இவைதான் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.
ஜனநாயகச் சிந்தனையின் அருவமான கொள்கைகளை பழித்துரைக்கும் ரூபியோ, பாசிசத்தின் அறிவுக்குப் பொருந்தாத பகுத்தறிவற்ற அருவமானக் கருத்துக்களைப் போற்றிப் புகழ்கிறார்: “மக்கள்,” “தேசம்,” மற்றும் “வாழ்க்கை முறை” ஆகிய இக்கருத்துக்கள் மாயத்தன்மை கொண்டவை. இவை சமூகத்தின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பைப் பற்றிய அறிவியல் பூர்வமான புரிதலுக்கு எவ்விதத்திலும் உதவாது. ரூபியோவின் இந்தப் பாசிச முட்டாள்தனங்கள் அவரது உரையின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கப்பட்டன என்பது, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஜனநாயகக் கொள்கை நிராகரிப்பை, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் பகிர்ந்து கொள்கிறது என்பதையே நிரூபிக்கிறது.
இந்த உரை தற்செயலாக வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் என்பது ஒன்றோடொன்று தொடர்புடைய பொருளாதார மற்றும் சமூக செயல்முறைகளின் விளைவாகும்: 1) அமெரிக்காவின் உலகளாவிய தொழில்துறை மேலாதிக்கத்தின் நீண்டகால வீழ்ச்சி. 2) நிதிமயமாக்கலின் அபாயகரமான வளர்ச்சி. இது உண்மையான பொருளாதாரம், உற்பத்தி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் மீது நிதிச் சந்தைகள், கருவிகள் மற்றும் நிறுவனங்களின் அதீத மேலாதிக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. உற்பத்தி சார்ந்த முதலீடுகள் மூலம் அல்லாமல், கடன் ஆதிக்கம், சொத்து மதிப்பு உயர்வு, கடன் விரிவாக்கம் மற்றும் நிறுவன இணைப்புகள் போன்ற ஊக வணிக நடவடிக்கைகள் மூலமே இலாபங்கள் ஈட்டப்படுகின்றன. 3) புதிதாக எழுந்துள்ள பிரபுத்துவத்தின் —இவர்களை மெகா-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் ஒரு தன்னலக்குழு என்றும் விவரிக்கலாம்— சொத்துக்கள் உற்பத்தியில் இருந்து பெறப்பட்டவை அல்ல. மாறாக, நிதிச் சொத்துக்களின் மேலாண்மை மற்றும் கையாளுதலில் இருந்து உருவானவை. இவர்களது செல்வத்தின் அடிப்படை கற்பனை மூலதனத்தின் பிரம்மாண்டமான விரிவாக்கமாகும். 4) அதிர்ச்சியூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி. அமெரிக்காவில், மக்கள் தொகையில் முதல் 0.1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பானது, அடிமட்டத்திலுள்ள 50 சதவீத மக்களின் மொத்த சொத்து மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
இந்த புறநிலை பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளே முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கும், பாசிசத்தை நோக்கிய நகர்வுக்கும் மற்றும் இராணுவவாதத்தின் வெடிப்புக்கும் அடிப்படையாக அமைகின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் ஒரு நெருக்கடியின் வெளிப்பாடாகும். போர் மூலமாக தனது உலகளாவிய பொருளாதார நிலையின் கடுமையான சீரழிவை திசைதிருப்ப அது முயல்கிறது. தற்போது 38 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள பிரம்மாண்டமான தேசியக் கடன் சுமையை, தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரமான சுரண்டல் மற்றும் வறுமையின் மூலம் திணிக்க அது முயற்சிக்கிறது.
அமெரிக்க அரசியல் ஒழுங்கு கடந்து வந்த தூரத்தை அளவிடுவது கற்பிக்கத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், தனது 1941-ஆம் ஆண்டு வருடாந்திர நாட்டின் நிலை குறித்த உரையில், அமெரிக்கப் போரின் நோக்கங்களை நான்கு உலகளாவிய சுதந்திரங்களாக (அதாவது, “சுருக்கக் கருத்துக்களாக”) வரையறுத்தார். அவை, பேச்சு சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம், வறுமையிலிருந்து சுதந்திரம் மற்றும் பயத்திலிருந்து சுதந்திரம் ஆகியவைகளாகும். இவை “உலகின் எல்லா இடங்களிலும்” இருக்க வேண்டும் என்றார். இவை மேற்கத்திய நாகரிகத்தின் அல்லது கிறிஸ்தவ மக்களின் சலுகைகள் அல்ல. இவை “உலகின் ஒவ்வொரு மனிதரின்” பிறப்புரிமையாக அறிவிக்கப்பட்டன. பாசிசத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக மட்டுமே போரை நியாயப்படுத்த முடியும் என்பதை ரூஸ்வெல்ட் புரிந்து வைத்திருந்தார்.
ரூஸ்வெல்ட்டினால் ரூபியோவின் உரையை ஆற்றியிருக்க முடியாது. ஜனநாயக மற்றும் உலகளாவிய சொற்களில் அமெரிக்க அதிகாரத்தை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாக ரூஸ்வெல்ட் நம்பினார். சோவியத் யூனியனின் இருப்பு மற்றும் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தல் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அந்தக் கட்டாயம் கணிசமான அளவு பேணப்பட்டது. ஆளும் வர்க்கம் இந்தக் கடமையை முற்றிலுமாக கைவிட்டுவிட்ட புள்ளியை ரூபியோவின் உரை குறிக்கிறது. புரட்சிகர ஜனநாயக மரபு நிராகரிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இரத்தம், நம்பிக்கை மற்றும் நாகரிக விதி சார்ந்த எதிர்-புரட்சிகர சித்தாந்தம் முன்வைக்கப்படுகிறது. இந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே ஒரு காலத்தில் ஜனநாயகப் புரட்சிகள் நடத்தப்பட்டன.
ரூபியோவின் உரையில் வெளிப்படும் தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு, ஒரு வர்க்க வெறுப்பை வெளிப்படுத்துகிறது. இது பனிப்போர் காலத்தை விட இன்று மிகவும் தீவிரமாக உள்ளது. ஏனெனில், 20-ஆம் நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகளை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பு முறையின் அதே நெருக்கடி இன்று மீண்டும் திரும்பியுள்ளது.
மூனிச் நகரில் கூடியிருந்த ரூபியோ, ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்க உயரடுக்கினர் எதை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்கிறார்கள் என்றால், அக்டோபர் 25, 1917 அன்று தகர்க்கப்பட்ட அந்த உலகத்தையே ஆகும். அன்றுதான் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சியால் வழிநடத்தப்பட்ட ரஷ்ய தொழிலாள வர்க்கம், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி வரலாற்றின் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. அக்டோபர் புரட்சி என்பது வெறும் ரஷ்யாவில் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு உலக-வரலாற்று பூகம்பமாகும். முதலாளித்துவ அமைப்புமுறை நித்தியமானது அல்ல என்பதையும், ஆளும் வர்க்கம் வெல்ல முடியாதது அல்ல என்பதையும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு புதிய சமூக ஒழுங்கைக் கட்டியெழுப்பத் தொடங்க முடியும் என்பதையும் அக்டோபர் புரட்சி நடைமுறையில் நிரூபித்தது. இது பிரிட்டன், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, சீனா மற்றும் காலனித்துவ உலகம் முழுவதிலும் புரட்சிகர போராட்டங்களின் அலையைத் தூண்டியது. பல நூற்றாண்டுகளாகத் தங்கள் மீதான அடிமைத்தனம் என்பது இயற்கையான ஒழுங்கு என்று நம்ப வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மக்களின் அரசியல் நனவை இது உயர்த்தியது.
துருக்கியில் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு பெற்ற படைகளுக்கு எதிரான முற்போக்கான தேசிய இயக்கத்தின் வெற்றிக்கு அக்டோபர் புரட்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
1920-1921 முதல், சோவியத் ரஷ்யா அங்காரா அரசாங்கத்திற்கு தங்கம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியது. துருக்கிய தேசியவாதிகள் பல முனைகளில் போரிட்டுக் கொண்டிருந்ததால் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது. சோவியத் அரசாங்கத்தின் இந்த முக்கியமான ஆதரவு இல்லையென்றால், துருக்கிய நாட்டின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருக்க மாட்டாது.
நிச்சயமாக, இது அதாதுர்க்கின் (Ataturk) முதலாளித்துவ தேசியவாத ஆட்சி, துருக்கிக்குள் இருந்த கம்யூனிச இயக்கத்தை கொடூரமாக ஒடுக்குவதைத் தடுக்கவில்லை.
அக்டோபர் புரட்சியின் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்திய கருத்தியல் கட்டமைப்பு —அதாவது நாகரிக மேன்மை பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் “பின்தங்கிய” மக்களை ஆளுவதற்கு “முன்னேறிய” நாடுகளுக்கு இருக்கும் தெய்வீக உரிமை— ஆகியவை ஒருபோதும் மீள முடியாத பலத்த அடியைப் பெற்றன.
இதைத்தான் ரூபியோவின் உரை மாற்றியமைக்க முயல்கிறது. 1945-க்குப் பிறகு மேற்கத்திய நாகரிகத்தின் “சுருக்கம்” குறித்து அவர் வருத்தப்படும்போது, அவர் உண்மையில் அக்டோபர் புரட்சியின் விளைவுகளைக் குறித்தே வருந்துகிறார். மேற்கத்திய நாடுகள் “கடந்த தலைமுறையினரின் பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை” நிறுத்த வேண்டும் என்றும், ஆவுஷ்விட்ஸ் மற்றும் ட்ரெப்லிங்கா போன்ற விஷவாயு அறைக் கொலைகளுக்காக மன்னிப்பு கேட்பதை நிறுத்த வேண்டும் என்றும் ரூபியோ கோருகிறார்.
சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தல் தன் மீது விதித்திருந்த தார்மீக மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளிலிருந்து ஆளும் வர்க்கம் விடுபட வேண்டும் என்று ரூபியோ கோருகிறார். நலன்புரி அரசு, ஜனநாயக உரிமைகளுக்கான சலுகைகள், சர்வதேச சட்டத்திற்கான முறையான அர்ப்பணிப்பு ஆகியவை அனைத்தும் கணிசமான அளவில் புரட்சி குறித்த முதலாளித்துவ வர்க்கத்தின் அச்சத்தால் உருவான விளைவுகளே ஆகும். 1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதன் மூலம், இந்த அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாகவும், வழங்கப்பட்ட சலுகைகளைத் திரும்பப் பெறலாம் என்றும் ஆளும் வர்க்கம் முடிவுக்கு வந்தது. ரூபியோவின் மூனிச் உரை என்பது இவற்றை திரும்பப் பெறுதலின் கருத்தியல் வெளிப்பாடாகும். இது ஏகாதிபத்திய இராணுவவாதத்தை பகிரங்கமாகத் தழுவுவதிலும், ஜனநாயக நெறிமுறைகளை நிராகரிப்பதிலும் அதன் தர்க்கரீதியான முடிவை எட்டியுள்ளது.
கம்யூனிச எதிர்ப்பு வார்த்தை ஜாலங்களின் தீவிரம் —2026 இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக— முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை குறித்த ஆழமான பதட்டத்தைக் காட்டுகிறது. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமே அனைத்து ஆளும் வர்க்கங்களிலும் மிகவும் பயந்த வர்க்கம் என்று லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதினார். தொழிலாள வர்க்கம் மீண்டும் ஒரு உண்மையான மார்க்சிய புரட்சிகர வேலைத்திட்டத்தைக் கண்டறியும் என்ற எதிர்பார்ப்பே ஆளும் வர்க்கத்தை பீதியடையச் செய்கிறது. 1930-களுக்குப் பிறகு காணப்படாத அளவிலான சமத்துவமின்மை, ஸ்திரமின்மை மற்றும் புவிசார் அரசியல் மோதல்களை உருவாக்கி வரும் முதலாளித்துவ அமைப்பு முறையின் இந்த புறநிலை நெருக்கடி, அக்டோபர் புரட்சியை உருவாக்கிய அதே புரட்சிகர உத்வேகங்களை மீண்டும் உருவாக்கும் என்பதே அவர்களின் அச்சமாகும்.
லியோன் ட்ரொட்ஸ்கியைப் போல வேறெந்த வரலாற்று ஆளுமையும் ஏகாதிபத்தியவாதிகளை இவ்வளவு அச்சப்படுத்தியதில்லை. 1917-ல் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் தாண்டி அவரது முக்கியத்துவம் நீண்டதாகும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மூலம், அக்டோபர் புரட்சியை வழிநடத்திய மற்றும் இன்றும் அதன் செல்லுபடியாகும் தன்மையைத் தக்கவைத்துள்ள மூலோபாயக் கருத்தாக்கத்தை வழங்கியவர் லியோன் ட்ரொட்ஸ்கி ஆவார். அதாவது, ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் சரி, மிகவும் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளிலும் சரி, ஜனநாயகப் பணிகளை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே முழுமைப்படுத்த முடியும் என்பதே அந்தப் புரிதலாகும். “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்டாலினின் திரிப்புக்கு எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைப் பாதுகாத்தவரே ட்ரொட்ஸ்கி. மேலும், 1938-ல் நான்காம் அகிலத்தை நிறுவியதன் மூலம், 20-ஆம் நூற்றாண்டின் இருண்ட காலத்திலும் உண்மையான மார்க்சியத்தின் தொடர்ச்சியை நிலைநாட்டியவரும் ட்ரொட்ஸ்கியே ஆவார்.
ட்ரொட்ஸ்கியின் பெயரைக் குறிப்பிட்டாலே ஹிட்லரும், சேர்ச்சில் உட்பட அவரது ஏகாதிபத்திய எதிரிகளும் கோபத்துடன் பதிலளிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த உண்மையைக் குறிப்பிட்ட ட்ரொட்ஸ்கி 1939-ல் எழுதினார்: “இந்தக் கனவான்கள் புரட்சி என்ற பிசாசுக்கு ஒரு தனிநபர் பெயரைச் சூட்ட விரும்புகிறார்கள்.” தன் மீது தனிப்பட்ட ரீதியில் காட்டப்படும் இந்த வெறுப்பானது, “தங்களது காட்டுமிராண்டித்தனம் சோசலிச புரட்சியால் வெல்லப்படும்” என்ற அவர்களது அச்சத்தையே பிரதிபலிக்கிறது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.
ட்ரொட்ஸ்கியின் மரபினை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கம் மிகப்பெரிய வளங்களைச் செலவிட்டுள்ளது. 1940 இல் ஸ்டாலின் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது, சோவியத் அதிகாரத்துவத்திற்கு மட்டுமல்ல, உலக முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் சேவை செய்த அரசியல் இனப்படுகொலை தாக்குதலின் —மாஸ்கோ விசாரணைகள், போல்ஷிவிக் தலைவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அழித்தொழித்தல்— உச்சக்கட்டமாகும். ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை பொய்மைப்படுத்துவதும், ட்ரொட்ஸ்கியின் மரபை ஒடுக்குவதும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதக் களஞ்சியத்தில் மையமான இடத்தைப் பிடித்துள்ளன. சோவியத் கலைப்பைத் தொடர்ந்து வந்த “கம்யூனிசத்தின் மரணம்” என்ற கட்டுக்கதை, சோசலிசத்தை ஸ்டாலினிசத்துடன் அடையாளப்படுத்துவதையே நம்பியிருந்தது. அதாவது, அக்டோபர் புரட்சியின் புரட்சிகர வேலைத்திட்டத்தையும், அதைக் காட்டிக் கொடுத்த எதிர்ப்-புரட்சிகர அதிகாரத்துவத்தையும் வேண்டுமென்றே ஒன்றாக இணைத்துக் குழப்புவதாகும்.
ரூபியோவின் உரை ஸ்டாலினிசத்தையும் சோசலிசத்தையும் ஒன்றாக சேர்த்து குழப்புகிறது. மேலும், போருக்குப் பிந்தைய காலத்தின் அதிகாரத்துவ ஆட்சிகளை, அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்தின் மறுப்பாகக் கருதாமல், அதன் செயல்பாட்டு வடிவம் போலவே சித்தரிக்கிறது.
ஏகாதிபத்திய பிரச்சாரகர்கள் ஸ்டாலினிசத்தை சோசலிசத்துடன் அடையாளப்படுத்துவது ஒரு அரசியல் தேவையாகும். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர வேலைத் திட்டத்திற்கும், ஸ்டாலினின் அதிகாரத்துவ கொடுங்கோன்மைக்கும் இடையிலான வேறுபாடு அங்கீகரிக்கப்பட்டால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியானது சோசலிசத்தின் நம்பகத்தன்மை பற்றி எதையும் நிரூபிக்கவில்லை என்று ஆகிவிடும். ட்ரொட்ஸ்கி எதை முன்னரே கணித்தாரோ அதைத்தான் இது நிரூபிக்கிறது: அதாவது, ஸ்டாலினிச அதிகாரத்துவமானது தொழிலாளர் ஜனநாயகத்தை நசுக்குவதன் மூலமும், உலகப் புரட்சியைத் தனது சொந்த தேசிய நலன்களுக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலமும், இறுதியில் தொழிலாளர் அரசை அழித்து முதலாளித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்தும் — இதுதான் துல்லியமாக நடந்தது. ரூபியோ கொண்டாடும் “மேற்கத்திய நாகரிகத்தின் வெற்றி” என்பது ஸ்டாலினிச எதிர்ப்புரட்சியின் வெற்றியாகும் — இது அக்டோபர் புரட்சிக்கு அதிகாரத்துவம் இழைத்த நீண்டகால துரோகத்தின் இறுதிச் செயலாகும். இது ஏகாதிபத்திய சக்திகளின் உற்சாகமான ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது.
இதன் தாக்கங்கள் மிகவும் ஆழமானவை. 20-ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தின் நெருக்கடியானது புரட்சிகர வேலைத்திட்டத்தின் தோல்வியாகக் கருதப்படாமல், மாறாக, அதற்கு இழைக்கப்பட்ட துரோகத்தின் விளைவாகப் புரிந்து கொள்ளப்பட்டால், அந்த வேலைத்திட்டமே —சர்வதேச சோசலிசப் புரட்சியின் வேலைத் திட்டம், தொழிலாளர் அதிகாரம், தனியார் இலாபத்தை விட சமூகத் தேவையின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை திட்டமிட்டு மறுசீரமைத்தல்— அதன் முழு வரலாற்று செல்லுபடியாகும் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது.
ரூபியோவின் இந்த உரையைத் தொழிலாள வர்க்கம் அதன் உண்மையான தன்மையோடு அடையாளம் காண வேண்டும்: அது ஒருதலைப்பட்சமாக இராணுவ வன்முறையைக் கொண்டாடுகிறது, சர்வதேசச் சட்டங்களை நிராகரிக்கிறது, குடியேற்றத்தை நாகரீகத்துக்கு விடுத்த அச்சுறுத்தலாகச் சித்தரிக்கிறது, இழந்த பேரரசுகளுக்காகப் புலம்புகிறது, வரலாற்றுப் பழிகளில் இருந்து தப்பிக்க முயல்கிறது, மற்றும் ஜனநாயகப் புரட்சிகளையும் பாசிசப் பேரழிவையும் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அழிக்கிறது.
ஆனால், எத்தகைய நாகரிக புராணக் கதைகளாலும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை ஆளும் வர்க்கம் எதிர்கொள்கிறது. முதலாளித்துவ அமைப்பு முறையின் புறநிலையான நெருக்கடி —அதாவது மலைக்க வைக்கும் சமத்துவமின்மை, ஏகாதிபத்தியப் போரின் வெடிப்பு, ஜனநாயக நிறுவனங்களின் முறிவு, சுற்றுச்சூழல் அழிவு— தொழிலாளர் வர்க்கத்தைப் போராட்டத்தை நோக்கித் தள்ளுகின்றது. ஒவ்வொரு முக்கிய முதலாளித்துவ நாட்டையும் உலுக்கும் வேலைநிறுத்த அலைகள், பாரிய போராட்டங்கள், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தீவிரமயமாக்கல், ஸ்தாபனக் கட்சிகள் மீதான நம்பிக்கைச் சிதைவு — இவையனைத்தும் முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளிலிருந்தே எழும் ஒரு புரட்சிகர செயல்முறையின் ஆரம்பகால வெளிப்பாடுகளாகும்.
இந்தச் சூழலில்தான், அக்டோபர் புரட்சியின் மரபும் லியோன் ட்ரொட்ஸ்கியின் கோட்பாட்டுப் பாரம்பரியமும் அவற்றின் மிக முக்கியமான சமகால முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்படும் உலக சோசலிச வலைத் தளம், கால் நூற்றாண்டிற்கும் மேலாக உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி குறித்த நிலையான மார்க்சிச ஆய்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களுக்கான அரசியல் திசைவழியையும் வழங்கி வருகிறது. அனைத்து வகையான மனச்சோர்வு மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக, 20-ஆம் நூற்றாண்டின் முக்கியப் பாடத்தை இது வலியுறுத்தி வருகிறது: அதாவது, தொழிலாளர் வர்க்கத்தின் நெருக்கடி என்பது ஒரு புரட்சிகர தலைமையின் நெருக்கடியாகும். அதன் தீர்வுக்கு, நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்தினால் வழிநடத்தப்படும் மற்றும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகரக் கட்சி கட்டியெழுப்பப்படுவது அவசியமாகும்.
ரூபியோவின் முனிச் உரை ஒரு அழிந்து வரும் சமூக ஒழுங்கின் குரலாகும். அது கொண்டாடும் “மேற்கத்திய நாகரிகம்” என்பது காலமற்ற ஒரு தத்துவ சாரம் அல்ல; அது முதலாளித்துவ ஏகாதிபத்தியம் ஆகும். இந்த அமைப்புமுறை, தனது முற்போக்கான திறனை முற்றிலும் இழந்துவிட்டு, இப்போது மனிதகுலத்தை ஒரு காட்டுமிராண்டித்தனத்தால் அச்சுறுத்துகிறது. இதற்கான மாற்று என்பது சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவமோ அல்லது அதிக அறிவார்ந்த ஏகாதிபத்தியமோ அல்ல. இதற்கான மாற்று சோசலிசமே ஆகும் — அதாவது சமூக உரிமை, ஜனநாயகத் திட்டமிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கமைப்பதாகும். இதை நிறைவேற்றுவதற்கான ஆர்வமும் அதிகாரமும் கொண்ட ஒரே வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.
ஏகாதிபத்தியவாதிகள் பயப்படுவது சரியே. அக்டோபர் புரட்சியை உருவாக்கிய முரண்பாடுகள் இன்று மேலும் தீவிரமடைந்துள்ளதால், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. சர்வதேச தொழிலாள வர்க்கம் வரலாற்றின் எந்தக் காலகட்டத்தையும் விட இன்று மிகப்பெரியதாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் மற்றும் அதிக வலிமை கொண்டதாகவும் உள்ளது. உழைக்கும் மக்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பை, சோசலிச மாற்றத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த இயக்கமாக மாற்றுவதற்குத் தேவையான நனவுபூர்வமான அரசியல் தலைமை மட்டுமே தற்போது தேவையாக உள்ளது. அந்தத் தலைமையை உருவாக்குவது — அதாவது ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிளைகளைக் கட்டியெழுப்புவது — எமது சகாப்தத்தின் தீர்க்கமான அரசியல் பணியாகும்.
1930-ஆம் ஆண்டு புயுகாடா தீவில் இருந்தபோது ட்ரொட்ஸ்கி எழுதிய அந்த உத்வேகம் அளிக்கும் வரிகளை மேற்கோள் காட்டி இந்த விரிவுரையை நிறைவு செய்ய என்னை அனுமதியுங்கள்.
தேசிய எல்லைகளுக்குள் ஒரு சோசலிசப் புரட்சியை முழுமையடையச் செய்வது என்பது சிந்திக்க முடியாத ஒன்றாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களில் ஒன்று என்னவென்றால், அது உருவாக்கிய உற்பத்தி சக்திகள் இனி தேசிய அரசு என்ற கட்டமைப்போடு ஒத்துப்போக முடியாது என்பதேயாகும். இதன் விளைவாக ஒருபுறம் ஏகாதிபத்தியப் போர்களும், மறுபுறம் ஐரோப்பாவின் முதலாளித்துவ ஐக்கிய அரசுகள் என்ற கற்பனாவாதமும் உருவாகின்றன. சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, மற்றும் உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறு, சோசலிசப் புரட்சி என்பது அந்தச் சொல்லின் புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது. எமது ஒட்டுமொத்த கிரகத்திலும் புதிய சமூகம் அடையும் இறுதி வெற்றியின் மூலம் மட்டுமே அது முழுமை அடைகிறது.
லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த சோசலிசத்தின் “இறுதி வெற்றிக்காகப்” போராடுவதும் அதை அடைவதும் உங்கள் தலைமுறையின் பொறுப்பும் பெருமையுமாகும் ஆகும்.
