போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையைக் கோரி நடத்தும் பகிரங்க கூட்டத்துக்காக இலங்கையில் IYSSE பிரச்சாரம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உக்ரேனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 வயதான ட்ரொட்ஸ்கிச சோசலிஸ்டான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்துகொள்வதற்கான சர்வதேசப் பிரச்சாரத்திற்கு இலங்கையில் ஆதரவு அதிகரித்து வருகிறது. “போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்! உலகப் போரை எதிர்த்து சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பு!” என்ற தலைப்பில், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினால் (IYSSE) அக்டோபர் 13 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகிரங்க நிகழ்நிலைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்குப் பல தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடும் சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரகர்

இந்தக் கூட்டம் சிங்கள மொழியில் நடத்தப்பட்டு, நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படும். Zoom வழியாகக் கலந்துகொள்வதற்கு இங்கே பதிவு செய்யவும்.

போக்டன், உக்ரேனிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் (YGBL) முன்னணித் தலைவர்களில் ஒருவராவார். 2024 ஏப்ரல் 25 அன்று, இராணுவச் சட்டத்தின் கீழ் “உயர் தேசத்துரோகம்” செய்ததாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், உக்ரேனின் பாசிசத் தன்மையுடைய பாதுகாப்புச் சேவையினால் (SBU) அவர் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்து உலக சோசலிச வலைத் தளத்தில் கட்டுரைகளை எழுதிய “குற்றத்திற்காக”, ஆகஸ்ட் 10 அன்று அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பல்கலைக்கழகங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். பொதுக் கூட்டத்தை அறிவிக்கும் நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும், “பாசிச உக்ரேனிய நீதிமன்றம், போர் எதிர்ப்பாளரும் சோசலிஸ்டுமான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது” என்ற கட்டுரையின் பிரதிகளையும் அவர்கள் விநியோகித்துள்ளனர்.

இந்தப் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் அளித்துவரும் ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு செப்டெம்பர் 27 அன்று ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியது. அவரது சிறைத் தண்டனையானது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்த அந்தத் தீர்மானம் பின்வருமாறு கூறியது: “போக்டனின் விடுதலைக்கான போராட்டம், போரை நிறுத்துவதற்காகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன் தொடர்புபட்டுள்ளது. இத்தகைய ஒற்றுமையின் மூலமாக மட்டுமே ரஷ்யாவிலும் உக்ரேனிலும் இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும்.”

கொழும்பில் ஹுவாவெய் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயதான அஷேன், போக்டனை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டதுடன், ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“இந்த இளைஞர் போருக்கு எதிராகத் துணிச்சலுடன் பேசியதன் காரணமாகவே முறைதவறித் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குச் சம உரிமைகள் இருக்க வேண்டும். எனினும், இந்த உரிமையும் ஊடகச் சுதந்திரமும் உக்ரேனில் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.”

மஹேஷ் ஏக்கநாயக்க

பொலன்னறுவையில் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றும் மஹேஷ் ஏக்கநாயக்க, போக்டனை விடுதலை செய்வதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பது “அத்தியாவசியமானது” என்று தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: “குற்றவியல் போருக்கு எதிராகப் போராடியதன் காரணமாக தோழர் போக்டனுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அதே கொடூரத்தன்மை, போருக்கும் பாசிசத்திற்கும் எதிராக மேலும் மேலும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் எதிராக முதலாளித்துவ நாடுகளின் ஆளும் உயரடுக்கினரால் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒடுக்குமுறை சிறைவாசத்தின் மூலம் மட்டுமல்லாமல், சோசலிஸ்டுகளைத் துன்புறுத்துதல், வலைத்தளங்களைத் தடை செய்தல், மார்க்சிச நூல்களைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.”

உக்ரேனில் நடைபெறும் போர் “உலகை மீண்டும் பங்கிட்டுக் கொள்வதற்கான ஓர் ஏகாதிபத்தியப் போர்” என்ற ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் நிலைப்பாட்டுடன் உடன்படுவதாக தெரிவித்த ஏக்கநாயக்க, இதற்கான தீர்வு “ரஷ்யாவின் பக்கமோ நேட்டோவின் பக்கமோ நிற்பதில் இல்லை. மாறாக, உலகத் தொழிலாள வர்க்கம் முழுவதையும் அவரவர் சொந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைத்து, முதலாளித்துவ முறைமையைத் தூக்கியெறிவதிலேயே உள்ளது” என்றும் அவர் கூறினார்.

மலிந்த குமார

கொழும்பில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணியாற்றும் இளம் தொழிலாளியான மலிந்த குமார, “உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது, அது புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைப் போல வளர்ந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தின் நோக்கம் “தோழர் போக்டனை விடுதலை செய்வது மட்டுமல்ல, அவர் போராடிய அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுமாகும்” என்பது தெளிவாக இருப்பதாக அவர் கூறினார். “உலகம் முழுவதும் போருக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இத்தகைய ஒரு கூட்டம், போக்டன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும் போருக்கும் இடையிலான தொடர்பையும், அணுவாயுதப் போர் வெடிப்பதிலுள்ள உண்மையான ஆபத்தையும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விளக்க முடியும்.

“உக்ரேனில் நடந்துகொண்டிருப்பவை இந்தப் போரின் குற்றவியல் தன்மையை நிரூபிக்கின்றன. இளைஞர்கள் போருக்குள் பலாத்காரமாக தள்ளப்படுகின்றனர். போருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சித்திரவதைக்கும் சிறைவாசத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.”

ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் முன்னெடுக்கும் குற்றவியல் போருக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கும் மலிந்த குமார தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி வி. துவிஷா,, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான போக்டனின் போராட்டம் சரியானது என்று கூறினார். “ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக உள்ளது. உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அனைத்துப் பணிகளையும் தொழிலாளர்களே செய்கின்றனர். இந்தப் போரினால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்களும் ஏழைகளுமே.

“உக்ரேனில் நடந்துகொண்டிருக்கும் போர் தொடர்பாக எங்களிடம் போதிய அறிவும் விழிப்புணர்வும் இல்லை. ஏனெனில், போர் குறித்து போதுமான பொதுக் கலந்துரையாடல் இடம்பெறுவதில்லை” என்று துவிஷா கூறினார்.

உலகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் பிற்போக்கு தேசிய அரசுக் கட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவே போர் என்ற WSWS இன் பகுப்பாய்வுடன் அவர் உடன்பட்டார். “எனவே, சோசலிசத்திற்கான போராட்டம் இல்லாமல், போருக்கு எதிரான போராட்டம் இருக்க முடியாது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவரான தெனெத், போக்டன் “சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைப்பதற்காகவும் போராடினார். அவர் கைது செய்யப்பட்டது பிழையானது; அவர் போரை நிறுத்துவதற்காகப் போராடினார். அவரை விடுதலை செய்வதற்கான போராட்டம் என்பது போரை நிறுத்துவதற்கான போராட்டமாகும். நான் இணையவழிக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நடைபெறும் போர் உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். “எனது குடும்பத்தினரிடம் மேலும் பணம் கேட்க முடியாது. தற்போது படித்துக்கொண்டே வேலை செய்கிறேன்; 12 மணிநேர வேலை நேரத்திற்கு 2,500 ரூபாய் சம்பாதிக்கிறேன். பரீட்சைகள் நெருங்கும்போது மட்டுமே வேலையை நிறுத்துகிறேன்; களனியில் உள்ள ஒரு அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றுகிறேன். கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன.”

மத்திய கிழக்கிலும் உலகம் முழுவதிலும் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும், டொலரின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கும் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் போரை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார். ஆனால், இது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது. “அமெரிக்க மக்களும் போருக்கு எதிராக உள்ளனர்; எங்குமே மக்கள் உயிர்கள் பலியாவதைக் காண விரும்புவதில்லை. தொழிலாளர்களுக்கு வரி விதிப்பதன் மூலமும் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் போருக்கான நிதி திரட்டப்படுகிறது — இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராகும்” என்று அவர் தெரிவித்தார்.

தெனெத், இலங்கையின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் “இலங்கையின் கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் அழிக்கப்பட்டதைக் கண்டிப்பதற்கு மறுத்ததற்காக” அதனைச் சாடினார். “அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நடக்கின்றனர். ஒருவரது சொந்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் மட்டும் ஏகாதிபத்தியத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் உலகளவில் ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர்கள் ஆயுதங்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தினால், ட்ரம்ப் வெறும் வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு போர் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்” என்று அவர் கூறினார்.

அசங்க

வடமேல் மாகாணத்தின் சிலாபத்தைச் சேர்ந்த அசங்க, ஒரு பத்திக் கலைஞர் ஆவார். அவர், “நான் இந்தப் போரை எதிர்க்கிறேன். போக்டன் சிரோட்டியுக் விடுதலை செய்யப்பட வேண்டும். நான் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பேன்” என்று கூறினார். பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் வந்ததைத் தொடர்ந்து பத்திக் தொழில் “சரிவடைந்துவிட்டது. ஒரேயொரு பட்டறையிலிருந்துதான் எனக்கு வேலை கிடைக்கிறது. பெரிய தொழிற்சாலைகளையும் உணவு நிறுவனங்களையும் தேசியமயமாக்குவதற்கான சோசலிச வேலைத்திட்டத்துடன் நான் உடன்படுகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மொரட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி ஆசிரியரான எம். சஞ்சீவ, ஜூம் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

அவர் கூறியதாவது: “ஏகாதிபத்திய நலன்களால் உந்தப்படும் ஒரு போருக்குள் உலகம் நுழைந்துள்ளது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராகத் தீவிரமடையும் பெரும் ஆபத்தை மனிதகுலம் எதிர்கொண்டுள்ள ஒரு தருணம் இதுவாகும். இந்த நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தோழர் போக்டன் சிரோட்டியுக், சட்டவிரோதமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மனிதகுலத்தின் சார்பாகவும், உலகெங்கிலும் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களுக்காகவும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராகப் போராடிய சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் போர் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.”

பேராதனை பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு தாதி, எரிபொருள், மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய இலங்கை போன்ற நாடுகள் போரினால் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்படுவதாக சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களிடம் தெரிவித்தார். “பொருட்களின் விலை அதிகரிப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஈரான் போர் காரணமாக வீதிகளை அமைப்பதற்குத் தேவையான தார் கிடைக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. எங்களுக்கு அருகிலுள்ள ஒரு வீதியின் கட்டுமானம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் நாங்கள் தொடர்ந்து தூசிக்கு உள்ளாகிறோம். உலகளாவிய மோதல் மேலும் தீவிரமடையக்கூடும். ஆனால், மருத்துவமனைகளிலோ, வேலைத்தளங்களிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ இதுகுறித்து எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறுவதில்லை. இது குறித்து நாம் பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: “நான் முன்பு என்னை ஒரு தனிநபராகவே கருதினேன். ஆனால், இந்தக் கலந்துரையாடல் நான் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதி என்பதை உணரச் செய்தது. இந்தப் போரினால் துன்பப்படுகின்ற தொழிலாள வர்க்கம் ஒன்றிணைய வேண்டும். தொழிலாள வர்க்கத்தினருக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தோழர் போக்டன் போருக்கு எதிராகவும், ரஷ்யா மற்றும் உக்ரேனைச் சேர்ந்த தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைப்பதற்காகவும் போராடினார். அந்தக் காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டார்.”

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த 2022 வெகுஜன எழுச்சி குறித்துப் பேசிய அந்தத் தாதி, “2022 இல் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குத் துன்பத்தின் அடிமட்டத்தை எட்டிய பின்னரே எழுச்சியடைந்தனர். அப்போது உக்ரேன் போர் ஆரம்பித்திருந்தது. இப்போது உக்ரேன் போரும், மத்திய கிழக்கில் ஈரானைச் சம்பந்தப்படுத்திய மோதல்களும் தீவிரமடைந்துள்ளன. நாம் இதைவிடவும் மிக மோசமான நிலைமைக்குள் தள்ளப்படலாம். மக்கள் மீண்டும் எழுச்சியடைவார்கள். ஆனால், நீங்கள் கூறியதைப் போல, அதற்கு முன்கூட்டிய தயாரிப்பும் சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டமும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 13 சூம் கூட்டத்தில் பங்கேற்க இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்:

மனுவில் கையெழுத்திடுங்கள்:

Loading