பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடன் உறவுகளை முறித்துக் கொண்டமை நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் என்பது மட்டுமல்லாமல், ஹீலியின் சொந்த அரசியல் வளர்ச்சியிலும் ஒரு திருப்புமுனை ஆகும். ட்ரொட்ஸ்கிசத்தை, காட்டிக்கொடுத்த சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான அவரது போராட்டம், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டங்களுடைய தொடர்ச்சியைப் பாதுகாத்து, அதன் வருங்கால வளர்ச்சிக்கும் அஸ்திவாரமிட்டது. ஆயினும்கூட, 1963க்குப் பிந்தைய காலம் ஹீலியைப் பொறுத்தவரையில் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியைக் கொண்டிருந்த காலங்களுள் ஒன்றாகும். உண்மையில் 1960 களின் நடுப்பகுதியிலிருந்துதான், ஹீலி, தன்னுடைய சோகம் நிறைந்த சந்தர்ப்பவாதச் சரிவை தொடங்கினார், அது அவரை தவிர்க்கமுடியமலும், இழிவுதரும் வகையிலும், அரசியல் மற்றும் சொந்தவாழ்க்கையில் பேரழிவிற்கு இட்டுச் சென்றது.
இது ஏன், எவ்வாறு நடைபெற்றது என்பதை அறிந்துகொள்வதற்கு, 1963ம் ஆண்டு சோசலிச தொழிலாளர் கட்சி, பப்லோவாத அனைத்துலக செயலகத்தோடு மறுபடியும் ஒன்று சேர்ந்த பின்னர், நான்காம் அகிலம் எதிர்கொண்ட அரசியல் பிரச்சினைகளையும், அதன் தாக்கம் எவ்வாறு சோசலிச தொழிலாளர் கழகத்தின் மீது படர்ந்தது என்பதைப் பற்றியும் ஆய்வு செய்வது இன்றியமையாததாகும்.
அனைத்துலகக் குழுவிடமிருந்து சோசலிசத் தொழிலாளர் கட்சியுடைய முறிவு, ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே, இடது எதிர்ப்பின் பணியை வளர்ப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த, முந்தைய தலைமுறையைச் சேர்ந்திருந்த தலைவர்களை கொண்டிருந்த பகுதி, ட்ரொட்ஸ்கியோடு நெருங்கி ஒத்துழைத்து நான்காம் அகிலத்தை தோற்றுவிக்க பாடுபட்ட குழு, பின்னர் பப்லோவாத திரித்தல்வாதத்துக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கிச் செயலாற்றிய குழு, எந்தக் கொள்கைகளுக்காக அது பல ஆண்டுகளாக தன்னை அடையாளங்காட்டி நின்றதோ அந்தக் குழு, கனனுடைய “பகிரங்கக் கடிதத்தில்” குறிப்பிடப்பட்டிருந்ததை பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் உறுதிப்படுத்தியிருந்ததோ, அதே குழு இறுதியில் அக்கொள்கைகளுக்கு எதிராகவே திரும்பிவிட்டது.
இந்த காட்டிக்கொடுப்பு, ஒரு சில தலைவர்களின் தனிப்பட்ட சீரழிவின் விளைவு அல்ல; இது, போருக்குப்பின் மீண்டும் உறுதிபடுத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு அடிப்படையாக இருந்த வர்க்க உறவுகளில் ஏற்பட்ட ஆழ்ந்த மாறுதல்களைத்தான் பிரதிபலித்தது. வர்க்கப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை திருப்பிவிடவும், ஏகாதிபத்தியம் நம்பியிருந்த குட்டி முதலாளித்துவத்தின் பரந்த தட்டு, சந்தர்ப்பவாதத்தின் புதிய வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த சமூக அடித்தளத்தை கொடுத்திருந்தது. நான்காம் அகிலத்தின் மீது, இந்த சமூக அழுத்தத்தின் அரசியல் வெளிப்பாடுதான், ஏகாதிபத்தியத்தின் முகவர்களான குட்டி முதலாளித்துவத்திற்கு தொழிலாள வர்க்கம் அடிபணியச்செய்யவேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்குத் தேவையான தத்துவார்த்த சூத்திரப்படுத்தலை அபிவிருத்தி செய்தது பப்லோவாத திரித்தல்வாதமாகும்.
மரபு வழியிலான ட்ரொட்ஸ்கிச வேலைதிட்டத்தை இன்னும் பாதுகாக்கவேண்டும் என்று நினைத்தவர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தை கொண்ட, 1963ல் நடந்த மறுஐக்கியம், நான்காம் அகிலத்திற்கு அழிவுதரும் தாக்குதலாகும். அனைத்துலகக் குழுவை கைவிட்டு ஓடிவிட்ட சோசலிச தொழிலாளர் கட்சி பற்றி, ஜேம்ஸ் பி. கனனுடன் பல ஆண்டுகள் ஒத்துழைத்ததில் பெரும் மதிப்புக் கொண்டிருந்த, ஹீலிக்கு தன்னுடைய சீற்றத்தை மறைக்க முடியவில்லை; சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய குழுவிற்கு, 1963 ஜூன் 12ம் தேதி அவர் இறுதியாக எழுதிய கடிதத்தில் இது பிரதிபலிக்கிறது.
“சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஐந்தாம் தேசிய மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளும், பார்வையாளர்களும், உங்கள் குழு எங்கள் மாநாட்டிற்கு சகோதரத்துவ வாழ்த்துக்களை அனுப்பத் தவறியதை ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பாய் கவனித்தனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய தலைமையுடன், பல ஆண்டுகள் பாரிய அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், மார்ச் 1944ல் இங்கிலாந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒன்றுபடுத்தப்பட்ட மாநாட்டிலிருந்து, நீங்கள் முதல் தடவையாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்.
“நம் அமைப்புக்களிடையே நிலவியிருந்த புரட்சிகரப் பிணைப்புக்களின் ஒப்புதல் அடையாளமாகத்தான் கடந்த காலத்தில் உங்களுடைய வாழ்த்துக்கள் ஏற்கப்பட்டன. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமைப்பீட உறுப்பினர்கள் பலர், என்னையும் சேர்த்து உங்கள் கட்சியின் தலைவர்களுடைய எழுத்துக்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் பெற்ற அறிவின் துணைகொண்டுதான் வளர்ந்து வந்தோம். எனவே, எங்களுக்கு நீங்கள் வாழ்த்துக்கள் அனுப்பக்கூடாது என்று கொண்டுள்ள முடிவு, எங்களிடம் உங்களுக்கு இருக்கும் அரசியல் விரோதப்போக்கினைத்தான் காட்டுகின்றது. “(Trotskyism Versus Revisionism [London: New Park Publications, 1974] volf.4, p.159).
சோசலிச தொழிலாளர் கட்சியை அனைத்துலகக் குழுவிலிருந்து முறித்துக்கொள்ளுவதற்காக, “அற்பமான அமைப்புரீதியான மோசடிகளைத்” தூண்டிவிட்டதற்காக கனன் கையாண்டிருந்த வருந்தத்தக்க பங்கையும், ஹீலி குறிப்பிட்டு, பின்னர் வருத்தத்துடன், “நீண்டகால, வீரம் செறிந்த வகையிலான ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்ததிற்குப் பின்னர்... இறுதியில் பப்லோவாத வியாதிக்கு நிபந்தனையற்ற சராணாகதியை” கனன் அடைந்துவிட்டார் என்று முடிக்கிறார். (ibid.,p.160)
சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாத இணைப்பு மாநாடு அமைக்கப்படுவதையொட்டி நிகழ்ந்த மோசடிகளையும், ஏமாற்றுவித்தைகளையும், கடிதம் இதற்குப்பின் கடுமையாகப் பரிசீலனை செய்கிறது. சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் ஓடுகாலிகள் பற்றிய ஹீலியின் இகழ்ச்சி கடிதத்தின் கடைசிப் பத்திகளில்தான் அதன் கடுமையான வெளிப்பாட்டில் தோன்றுகிறது.
“ஆம், ‘குழுவாத சோசலிச தொழிலாளர் கழகம்’ பற்றியெல்லாம் நினைப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடையாது. எங்களுடைய கீழணிகளிலும் தலைமையிலும் உள்ள தோழர்கள் சீர்திருத்தவாதத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் எதிராக, தலைசிறந்த ட்ரொட்ஸ்கிச மரபுவழியில்தான் எப்பொழுதும் போராடி வருகின்றார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் பென் பெல்லா போன்றும், காஸ்ட்ரோ போன்றும், இலங்கை மே தினக்கூட்டம் போன்ற பல்லாயிரக் கணக்கான மக்கள் நிறையும் கூட்டங்களில் பேசவில்லை. எனவே உங்கள் கண்களுக்கு நாங்கள் வெறும் சிறிய ‘அதி இடதுசாரி உயிரினம்’ தான்.
“எங்கள் தோழர்கள் சமீபத்தில் வேலையின்மைக்கு எதிரான பிரச்சாரத்தில் தலைமை ஏற்று 1,300 பேர் அடங்கிய கூட்டத்தில் பேசினர்; ஆனால் இது ஒரு சிறிய செயல்தான். வன்முறையான வேட்டையாடலின் கடும் எதிர்ப்புக்கிடையே எங்கள் தோழர்கள், இளைஞர் இயக்கத்தில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிராக சக்திவாய்ந்த அடிகளைக் கொடுக்கும்போது, உங்கள் செய்தியாளர் T.J. Peters (முன்பு சோசலிச தொழிலாளர் கட்சியின் முன்னனி ஆதரவாளராக இருந்தவர், இப்பொழுது ஓய்வுபெற்ற தாராளக் கொள்கைக்காரர் போல் எழுதுகிறார்), ‘பிரிட்டிஷ் தொழிற் கட்சி’ (British Labour) முன்னுள்ள மாபெரும் எதிர்காலம் பற்றித்தான் பேசுகிறார்.
“பழைய பாணியிலான ‘குறுங்குழுவாதிகளான’ நாங்கள் எங்கள் இயக்கம் எப்பொழுதும் ஒரு பகுதியாக உள்ள நான்காம் அகிலம் ஒன்றுதான் ‘பிரிட்டிஷ் தொழிற் கட்சி’ என்று அழைக்கப்படும் ஊழல் தலைமைக்குச் சரியான மாற்றைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால், பீட்டர்ஸுக்கு எங்களைப்பற்றி நினைக்க நேரம் கிடையாது. உங்களைப் போலவே, அவரும் ஒளியைக் கண்டுவிட்டார்.
“அதற்கு உங்களுக்கு சற்று காலதாமதமாயிற்று. (பழமொழி கூறுவதுபோல், ‘கிறிஸ்துவிடம் தாமதமாக வருபவர்கள், கடினமான வழியில் வருபவர்கள்’.) கிட்டத்தட்ட 12 வருஷங்களுக்கு முன் ஜோர்ஜ் கிளார்க், தன்னுடைய சக்திகளை பப்லோவுடன் இணைத்து, இகழ்வான மூன்றாம் காங்கிரசின் செய்தியை, அப்பொழுது நான்காம் அகிலத்தின் இதழாக இருந்த The Militant இல் வெளியிட்டீர்கள். நீங்கள் அப்பொழுது பப்லோவின் கருத்தை புரியத்தவறி விட்டீர்கள், அதன்பின் நாம் 1953 பிளவைக் கண்டோம். இந்தப் பிளவைப்பற்றி கனன் ஆரவாரத்துடன் வரவேற்று “நாம் இனி ஒருபோதும் பப்லோவாதத்திற்குத் திரும்பமாட்டோம்” என்ற சொற்களை உதிர்த்தார். சமீபகாலம் வரை அவர் உண்மையிலேயே பிடிவாதமாக பப்லோவாதத்திற்கு மாறாதவராகத்தான் இருந்தார். ஆனால், கடைசியில், நீங்கள் இப்பொழுது அதைச் செய்ய முடிந்துவிட்டது. உங்களுக்கு இப்பொழுது எல்லா இடங்களிலும், பிடெல் காஸ்ட்ரோவிலிருந்து, பிலிப் குணவர்த்தனாவிலிருந்து பப்லோ வரையிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
“நாங்கள் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம், இதில் எங்கள் மாநாடு ஒருமனதாகத்தான் இருக்கிறது, உங்கள் தலைமையின் பெரும்பான்மை இறுதியில் முற்றிலும் மதிப்பற்று மிகப்பிற்போக்கான சக்திகளுக்கு இத்தகைய அவமானகரமான சரணாகதி அடைந்திருக்கும்போது, எங்கள் அமைப்பு இதற்கு எதிராக உறுதியாகக் கொண்டுள்ள நிலைப்பாட்டில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம்.” (ibid.,pp. 163-64).
பிளவை உடனடியாகத் தொடர்ந்து, சோசலிச தொழிலாளர் கழகம் மாபெரும் பொறுப்பை எடுத்திருந்த அனைத்துலகக் குழுவை காப்பதற்கு ஹீலி முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்காவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சியின் சிறுபான்மையினரிடம் இவர் கொண்டிருந்த ஒத்துழைப்பு தொடர்ந்து, அதுதான் 1964ல் நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழு நிறுவப்படுவதற்கும், 1966ல் Workers League உருவாவதற்கும் முக்கிய காரணியாக இருந்தது. மேலும் வரலாற்றில் முதல்தடவையாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக்கூறிக்கொள்ளும் ஒரு கட்சி முதலாளித்துவ அரசாங்கத்தில் சேருவதற்காக பப்லோவாத லங்கா சமசமாஜக் கட்சி, திருமதி பண்டாரநாயகாவின் கூட்டணி அரசாங்கத்தில் பங்குபெற வாக்களித்த மாநாட்டிற்காக இலங்கைக்கு 1964 ஜூன் மாதம் ஹீலி சென்றிருந்தமை, பின்னர் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக வளர்ச்சியடைவதற்கு ஆரம்ப அடித்தளம் இட்டது.
தேசியவாதத்தின் அச்சாணி
ஆனால் நாளடைவில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பணி தேசியவாதத்தின் அச்சாணிக்கு மாறத் தொடங்கியது. இந்த வளர்ச்சி, 1963க்கு பின்னர் பெருமளவிற்கு, அனைத்துலகக் குழு எதிர் கொண்ட மாபெரும் புறநிலைரீதியான பிரச்சினைகளின் வெளிப்பாட்டினால் தோன்றியதாகும். மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தவேண்டியதாயிற்று. அநேகமாக நான்காம் அகிலத்தின் அனைத்துப் பகுதிகளுமே, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு சரணடைந்து விட்டன. சோசலிச தொழிலாளர் கழகமும், அரசியல் ரீதியாக பலமற்றிருந்த லம்பேர்ட்டின் French Parti Communiste Internationaliste (PCI) மட்டுமே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் செயலாற்றக்கூடிய பகுதியாக தொடர்ந்து இருந்தபோது, அந்த நெருக்கடியான காலகட்டத்தில், அனைத்துலகக் குழு தப்பி உயிர்வாழ்வதற்கே, பிரிட்டிஷ் பகுதியின் அனுபவங்கள், இருப்புக்கள் இவற்றைத்தான் பெரிதும் நம்பியிருந்தன. இந்தச் சூழ்நிலையில்,1959ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கணிசமான வெற்றிகளை அடைந்திருந்த சோசலிச தொழிலாளர் கழகத்தின் விரிவாக்கமாகத்தான் அனைத்துலகக் குழு செயல்பட்டது போன்ற தோற்றம் தவிர்க்க முடியாமல் இருந்தது.
சோசலிச தொழிலாளர் கழகம், தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டது. 1959ல் அது ஆரம்பிக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே, தொழிற் கட்சியின் வலதுசாரித் தலைவரான Hugh Gaitskell இதற்குப் பதிலளிக்கும் வகையில் இதன் போக்கிற்கு ஆதரவு தருபவர்களை தங்கள் கட்சியிலிருந்து தடைசெய்து வெளியேற்றவும் செய்தார். ஹீலி இந்தத் தாக்குதலை மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடினார்; தொழிற் கட்சிக்குள் புரட்சிகரப் போக்கின் 12 ஆண்டுகால பணிக்கு கிடைத்த தடையையும், வெளியேற்றுதலையும் பற்றி சிறிதளவேனும் வருத்தத்தை ஒருமுறைகூட அவர் வெளியே கூறியதில்லை. தொழிற்கட்சியின் அரசியல், சமூக தள அமைப்பை அவர் வெறுத்து, அக்கட்சியை சந்தர்ப்பவாத சகதிக்குட்டை என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததுடன், உண்மையிலேயே சுயாதீனமாய் பணிபுரியும் வாய்ப்பை வரவேற்றார். ஆனால் அவருக்கு, அதிகாரபூர்வமான தடைகள், வெளியேற்றங்கள் ஆகிய செயல்களை அப்படியே விட்டுவிடும் விருப்பமும் கிடையாது. எப்பொழுதும் ஊக்கத்தன்மையுடன் விளங்கும் ஹீலி, விரைவில் வேறு ஒரு முறையில் தொழிற் கட்சியினரை தாக்குவதற்கு வழிகண்டார். மாக்மில்லனுடைய அரசாங்கத்தின் பிற்போக்கு கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தைப் பெரிதும் குறைத்ததால், இளைஞரிடையே அரசியல் போர்க்குணத்தின் வளர்ச்சியை தூண்டியதால், தொழிற்கட்சியின் இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்டுகளிடையே தனது சக்திகளை வளர்க்க சோசலிச தொழிலாளர் கழகம் தயாராயிற்று. 1963ம் ஆண்டிற்குள் சோசலிச தொழிலாளர் கழகம் தன்னுடைய உறுப்பினர் குழாமிற்குள், இளம் சோசலிஸ்ட்டுகளின், தேசிய தலைமையில் பெரும்பாலோரையும், Keep Left என்ற அதன் இதழுடைய ஆசிரியர் குழுவையும் தன்பக்கம் ஈர்த்துவிட்டது.
இதற்குப் பதில்தரும் வகையில், மீண்டும் தொழிற்கட்சி இரக்கமற்ற முறையில் அமைப்புரீதியான தாக்குதலை நடத்தியது. Keep Left தடைசெய்யப்பட்டதுடன், இளம் சோசலிஸ்டுகள் இயக்கமும், மீண்டும் தொழிற்கட்சி ஒப்புதல் அளிக்கும் வரை, ஒரு ஆண்டு காலத்திற்கு கலைக்கப்பட்டுவிட்டது. தங்கள் அலுவலகத்திலிருந்து ட்ரொட்ஸ்கிச இளைய தலைவர்களை வெளியேற்றுவதற்கு போக்குவரத்து இல்லத்திற்குப் போலீஸ் வரவழைக்கப்பட்டது. இந்தப் புதிய தாக்குதல் அலைக்கு விடையிறுக்கும் வகையில், ஹீலி ஒரு தைரியமான எதிர்தாக்குதலை நடத்த முடிவெடுத்தார்: அதிகாரத்துவத்தின் தாக்குதலுக்கு தலைதாழ்த்தி நிற்பதற்குப் பதிலாக, இளம் சோசலிஸ்டுகள், சோசலிச தொழிலாளர் கழகத்தின் இளைஞர் பிரிவாகச் செயல்படும் என்றும் Keep Left அதன் அதிகாரபூர்வமான இதழாகச் செயல்படுமென்றும் அறிவித்துவிட்டார்.
இளம் சோசலிஸ்ட்டுகளுக்குள் பெற்ற இந்த வெற்றி முக்கியமான சாதனையாகும். ஹீலியின் தலைமையில் நடந்த உறுதியான போராட்டத்தின் விளைவாக, சோசலிச தொழிலாளர் கழகம் காரியாளர்கள் படை, ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஈர்க்கப்பட்ட இந்த இளைய படையினரின் பெருமளவு எண்ணிக்கை வரவினால் ஊக்கம் பெற்றது. பல ஆண்டுகளில் முதல்தடவையாக, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு உறுப்பினர்களும் ஆதார வசதிகளும், குறிப்பிடத்தக்க வகையில் விரிவாயின. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தங்கள் நிதிக்கு முதல்முறையாக கணிசமான அன்பளிப்பைப் பெற்ற 1963ம் ஆண்டு வரைக்கும் பெரும் அளவிலான நிதியைப் பெற்றதில்லை என்று ஹீலி பின்னர் நினைவுகூர்ந்தார்: அந்த ஆண்டுதான் இதுவரை எவரும் கேட்டிராத தொகையான 9,000 பவுன்களை ஓர் ஆதரவாளர் தான் வாரிசு உரிமையில் பெற்றிருந்த பணத்திலிருந்து கட்சிக்கு அன்பளிப்புக் கொடுத்தார். இயக்கத்தை துளைத்துக் கொண்டிருந்த கடன்களைத் தீர்ப்பதற்கு ஹீலி இந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்!
ஆனால், பல ஆண்டுகளாகச் சேகரித்திருந்த கடன்களைத் தீர்க்கும் சாதாரண பணியைவிடக் கூடுதலான பேரவா நிறைந்த திட்டங்களைத்தான் ஹீலி கொண்டிருந்தார். 1964ல், ஐந்து ஆண்டுகளுக்குள், உலகிலேயே முதன்முதலாக ட்ரொட்ஸ்கிச நாளிதழைக் கொண்டுவரவேண்டும் என்ற இலக்கை சோசலிச தொழிலாளர் கழகம் எய்தவேண்டும் என்று திட்டமிட்டார். அப்படிப்பட்ட செய்தித்தாள், பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையே வியத்தகுமுறையில் உறவை மாற்றிவிடும் என்றும், எல்லாக்காலத்திலும் அதன் “பிரச்சாரவாத” இருப்பை முடிவுகட்டும் மற்றும் தனிமைப்படல் என்ற நிலை முடிந்துவிடும் என்றும், சோசலிச தொழிலாளர் கழகத்தை பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் பரந்த மக்களின் புரட்சிக் கட்சியாக மாற்றிவிடும் என்றும் ஹீலி நம்பிக்கை கொண்டுவிட்டார்.
பிரிட்டனில், சோசலிச தொழிலாளர் கழகம் பெற்ற சிறந்த ஆதாயங்களைக் கண்டு, ஹீலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததற்கு அனைத்து உரிமையும் கொண்டிருந்தார். குட்டி முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் சகதிக்குள் நான்காம் அகிலத்தை கலைத்துவிட்டு, அதன் உறுப்பினர்களை ஸ்ராலினிசத்திற்கும் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் தலைவர்களாக மாற்ற பப்லோவாதிகள் முயற்சிகள் கொண்டிருந்தபோது, ஹீலி சோசலிச தொழிலாளர் கழகத்துடைய ஆதாயங்களில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் போராட்டத்தின் நிரூபணம் என்று சரியாகக் கணித்தார். பப்லோவாத கலைப்பாளர்கள், அவர் நான்காம் அகிலத்தினுடைய வேலைதிட்டங்களைக் கைவிட மறுத்ததால், ஹீலியை “அதிதீவிர குறுங்குழுவாதம்” என்று கண்டனத்திற்கு உட்படுத்தியிருந்தபோது, சோசலிச தொழிலாளர் கழகம் தொழிலாள வர்க்கத்திடையேயும், இளைஞரிடையேயும் தன் செல்வாக்கை உறுதியாகப் பெருக்கிக் கொண்டிருந்தது.
சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம்
பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்குள், சோசலிச தொழிலாளர் கழகம் கொண்ட அரசியல் முன்னேற்றங்கள், சர்வதேசரீதியான பப்லோவாத காட்டிக்கொடுப்புக்கு தக்க, முடிவான பதில் தாக்குதலை பிரதிபலித்தது என்ற நம்பிக்கையை ஹீலி தீவிரமாகக் கொண்டிருந்தார். ஆனால், 1963ம் ஆண்டுப் பிளவு, அனைத்துலகக் குழுவிற்குள்ளும், அதன் பிரிட்டிஷ் பிரிவிற்குள்ளும் சந்தர்ப்பவாத பிரச்சினையை தீர்த்துவிட்டது என்ற நம்பிக்கை, அதற்கெதிரான போராட்டம் பிரிட்டனுக்குள்ளாவது நடைமுறை அளவில் கட்சி அமைப்பதின் மூலம் நடத்தப்படமுடியும் என்று கருதிய அவருடைய அணுகுமுறை, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு தேசியவாத நோக்குநிலைக்குள் பின்வாங்கிவிடும் அபாயத்தையும் கொண்டிருந்தது. பழைய சர்வதேச தொழிலாளர் கழகம் (Workers International League) தொழிலாள வர்க்கத்தில் நடைமுறைச் செயற்பாட்டிற்கும் சர்வதேச புரட்சிகர மார்க்சிசத்தின் வேலைதிட்டத்திற்கும் இடையிலான உறவில் இதேபோன்ற தவறான மதிப்பீட்டில்தான் நடந்துகொண்டது என்பதை ஹீலி நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். இது பெறக்கூடிய உயர்ந்த நடைமுறைச் செயல்கள், வெற்றிகள் இவற்றின் மூலம் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்ற காரணம் காட்டி, இதையொட்டி பிரிட்டனில் மற்ற ட்ரொட்ஸ்கிசப் போக்குகளுடன் ஒன்று சேரவேண்டும் என்ற நான்காம் அகிலத்தின் வேண்டுகோளை, ஹீலி உள்ளடங்கலான அதன் தலைவர்கள் ஆரம்பத்தில் இகழ்வுடன் புறக்கணித்தனர்.
சோசலிச தொழிலாளர் கழகம், பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திற்குள் எத்தனை முக்கியமான முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும், அனைத்துலகக் குழு மற்றும் இதன் பிரிட்டிஷ் பகுதி இவற்றின் வருங்காலம், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கெதிரான சர்வதேச போராட்டம் ஆழப்படுத்தப்படுவதையும், அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதையும் தேவையாகக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் சீரழிவு எதையாயினும் விளக்கிக் காட்டியதெனில், “பாட்டாளி வர்க்க நோக்குநிலையோ” அல்லது அமைப்பு ரீதியான முறிவோ, அவற்றின் மூலம் திரித்தல்வாதத்துடன் அனைத்தையும் தீர்த்துக்கொண்டுவிடமுடியாது என்பதாகும். சந்தர்ப்பவாதம் செல்வாக்கு கொண்டு இருப்பது, ஆழ்ந்த சமூக வேர்களையுடைய ஒரு வரலாற்று இயல்நிகழ்ச்சியாகும்; மற்றும் அதனால்தான் அதற்கு எதிரான போராட்டம் அத்தகைய ஒரு நீண்ட மற்றும் கடினமான போராட்டமாகும். திரித்தல்வாத போக்கிற்கு எதிரான போராட்டத்தில், நீண்டகால வரலாற்றையுடைய மார்க்சிசப் போக்குகளிடையேகூட, மிகப்பெரிய வர்க்க அழுத்தங்கள் அரசியலளவில் புதிய சந்தர்ப்பவாத வெடிப்புக்களாக வெளிப்படும்போது, அவற்றிற்கு எதிராக உறுதியுடன் நிற்பதற்கான உத்தரவாதம் இல்லை. உண்மையில், ஒரு கட்சித்தலைவர், தன் கட்சி கட்டுமானம் (Party Structure)) சமூக சக்திகளின் அழுத்தத்தால் தோன்றும் சந்தர்ப்பவாதம் உட்புகமுடியாத தடையாக உள்ளது என்ற நம்பிக்கையில் இருந்தால், அவர் தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளார்.
எனவே, சோசலிச தொழிலாளர் கழகம் 1963 மறுஐக்கியத்தின் போதும், அதன்பின்னர் இலங்கையின் துன்பியலையும் அடுத்து எதிர்கொண்ட மத்தியபணி, நான்காம் அகிலத்தை, ஹான்சன்-மண்டேல் இணைந்த செயற்குழுவின், குட்டிமுதலாளித்துவத்தின் திரித்தல் வாதத்திலிருந்து தனியாகப் பிரித்துக்காட்டக்கூடிய அனைத்துலகக் குழுவின் வேலைத் திட்டங்கள், முன்னோக்குகள் இவற்றை வளர்த்து, அரசியல் கோட்பாடுகளின் பிரச்சினைகளை தெளிவாக்குவதாகும். இதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, புரட்சிக் கட்சியின் உறுப்பினர்களுக்குள் எந்த வகையில் மாற்று வர்க்க சக்திகளின் அழுத்தம் தத்துவார்த்த மற்றும் அரசியல் வடிவங்களில் வெளிப்படுகிறது என்பது பற்றிய தொடர்ந்த ஆய்வு தேவையாகும். இத்தகைய அடிப்படையில்தான், மார்க்சிச கட்சி மற்றும் அதன் தலைமை இரண்டிற்குள் இருக்கும் தட்டுக்களில், ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ முகவாண்மைகளுக்கு ஏற்றவாறு, மீண்டும் மீண்டும் மாற்றி அமைத்துக்கொள்ளும் போக்கை எதிர்த்துப் போராடமுடியும்.
ஆனால், சோசலிச தொழிலாளர் கழக தலைமைக்குள், அதன் சர்வதேச அரசியல் வழியை வலுப்படுத்துவதைவிட பிரிட்டிஷ் பகுதியின் சடரீதியான வளர்ச்சியை வலுப்படுத்துவதுதான் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கு துணைநிற்கும் முன் நிபந்தனையாகும் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாக வளரலாயிற்று; இதிலிருந்து சோசலிச தொழிலாளர் கழகத்திற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையே அதிகரித்த அளவில் தேசியவாத கருத்துரு உறவு பற்றிய தவறான சிந்தனைகள் உருவாயின. பிரிட்டனில், சோசலிச தொழிலாளர் கழகத்துடைய நடைமுறை அரசியல் வெற்றிகள், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் கூடுதலான வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவை என்ற அமைப்பு பற்றிய கருத்துருவின் கூடுதலான நம்பிக்கையில் சோசலிச தொழிலாளர் கழகம் நடக்க முற்பட்டது.
1966ல், இக்கருத்து, Problems of the Fourth International என்ற நூலில் தெளிவாகப் பிரதிபலித்தது:
“சோசலிச தொழிலாளர் கழகம் இப்பொழுது மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளது: அது, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச்செல்வதற்காக பரந்த புரட்சிக் கட்சியை அமைத்திடல் என்பதாகும். இவ்வாறு செய்தால், அது அனைத்து நாடுகளிலும் அதே மாதிரியிலான கட்சிகளை வளர்ப்பதற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.” (p.5)
இந்தவகையான சூத்திரப்படுத்தல், உலகக் கட்சியை அதன் தேசிய பகுதிகளின் வெறும் கூட்டலாகக் குறைத்து, ஐக்கியப்பட்ட அகிலத்தில் மார்க்சிச ஒத்துழைப்பிற்குப் பதிலாக ஒரு தேசிய குழுவின் வெற்றி ஒரு நாட்டில் ஏற்படுவதை மற்ற நாடுகளின் தேசிய குழுக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் என்ற கருத்தை வைத்தது, அது அனைத்துலகக் குழுவின் மார்க்சிசவாதிகளுக்கும், ஐக்கிய செயலகத்திலிருந்த குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையே நிலவும் சாதகமற்ற சக்திகளின் உறவிற்கு சர்வதேச அளவில் விட்டுக்கொடுப்பதைப் பிரதிபலிக்கிறது. மேலும், சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளேயே ஆபத்துநிறைந்த தேசியவாதப் போக்குகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பது போலவும் ஆயிற்று. பிரிட்டனில் அதிகாரம் கைப்பற்றப்படுவதின் துணைவிளைவாகத்தான் நான்காம் அகிலத்தின் வளர்ச்சி அமையும் என்ற கருத்து தவறானது ஆகும். இது, ஒருபுறம் ஏகாதிபத்தியத்தின் உலக நெருக்கடி, சர்வதேச வர்க்கப் போராட்டம் மற்றும் பிரிட்டனில் அவற்றின் குறிப்பான வெளிப்பாட்டிற்கும் இடையிலான இயங்கியல் ரீதியான எதிரெதிர் செயல்விளைவுகளை (Dialectical Interaction) நிராகரிக்கிறது; மறுபுறம், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் பகுதியாகத்தான் எந்த நாட்டிலும் மார்க்சிச அமைப்பு இயங்கமுடியும் என்பதையும் மறுக்கிறது.
பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை, பிரிட்டனின் தேசிய அச்சாணியான அரசியல் நடைமுறைப் பணிக்கு மாற்றுதல் என்று வளர்ந்த அழுத்தம், Problems of the Fourth International என்ற நூலில், ஹீலியால் முன்வைக்கப்பட்ட சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவின் வேர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விளக்கத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. அதில் சோசலிசத் தொழிலாளர் கட்சி மார்க்சிசத்தை காட்டிக் கொடுத்தது பற்றி அவர் பின்வரும் விளக்கத்தைக் கொடுக்கிறார்:
“இந்தக் கேள்விக்கு விடை, அமெரிக்காவில் சோசலிசத் தொழிலாளர் கட்சி செயல்பட்ட செழிப்புக்காலம் மற்றும் குளிர்யுத்த கடினமான நிலைமைகளிலும் இல்லை, சிறப்பாக 1949 இலிருந்து இவை ஒரு பாத்திரம் வகுத்த போதிலும், ஆரம்பகால ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தோற்றத்தில்தான் அது உள்ளது.
“இதன் நிறுவனரான ட்ரொட்ஸ்கி, புரட்சிக்கு முந்தைய சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும் பெற்றிருந்ததோடு, புரட்சியினுடைய அனுபவம், இவர் தலைமை வகித்து அமைத்திருந்த செம்படையின் அனுபவம், லெனினுக்குப் பிந்தைய சீரழிவின் அனுபவம், ஸ்ராலினின் தலைமையில் சோவியத் அதிகாரத்துவம் பற்றிய அனுபவம் அனைத்தையும் கொண்டவர் ஆவார்.
“அமெரிக்காவிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் வந்த இவருடைய ஆதரவாளர்கள், 1919ல் மூன்றாம் அகிலம் நிறுவப்பட்டதற்குப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவர்களாவர். அவர்களுடைய வளர்ச்சி, முதல் உலகப் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கம் அடைந்த தோல்விகளினாலும், ஸ்ராலினிசத்தின் வளர்ச்சியினாலும் உருவாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் நிகழ்ந்தது.
“இதுதான் திட்டவட்டமாக கனன்-ட்ரொட்ஸ்கி இணைவின் பலவீனமான தன்மையாக இருந்தது.
“ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மேதாவித்தனம், சோவியத் ஒன்றியத்தின் முழு அனுபவத்திலிருந்து, அதன் வெற்றி மற்றும் சீரழிவு இரண்டிலிருந்தும் பெருகியது ஆகும்.
“மறுபுறத்திலோ, கனனுடைய அரசியல்கள் முக்கியமாக சோவியத் ஒன்றியத்தின் சீரழிவுக்காலம், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் தோல்வியடைந்த காலகட்டத்திலிருந்து விளைந்தவை.” (Problems of the fourth International, pp.14-15)
சோசலிச தொழிலாளர் கட்சியுடைய சீரழிவிற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த விளக்கம், நான்காம் அகிலத்திற்குள் உருவாகிய திரித்தல்வாத வளர்ச்சி, ஸ்ராலினிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஏற்பட்ட போருக்குப் பிந்தைய உடன்பாட்டின் சிக்கலான தன்மையினால் தோன்றிய முதலாளித்துவத்தின் மறு ஸ்திரத்தன்மையின் புறநிலை சமூக காரணங்களில் வேர் ஊன்றியிருந்தது என்று 1961 லிருந்து 1963 வரை முன்னெடுக்கப்பட்ட மார்க்சிச ஆய்வுகளுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. செப்டம்பர் 1963ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அளித்த தன்னுடைய அறிக்கையில் சரியான முறையில் கிளீப் சுலோற்றர் சுட்டிக் காட்டியுள்ளதுபோல், “பப்லோவாதம் ஒரு சில தனிநபர்களின் மனச்சிதைவின் விளைவு அல்ல, இதற்குப் பல நாடுகளிலும் பிரதிபலிப்பு கிடைத்துள்ளது.” (Trotskyism Versus Revisionism, vol. 4, p.190). ஆனால், ஹீலியுடைய புதிய விளக்கமோ பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின், தோற்றங்கள் மற்றும் சமூக முக்கியத்துவம் பற்றிய ஆய்வில், இந்த அடிப்படை சடவாத கட்டமைப்பை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. சோசலிச தொழிலாளர் கட்சியுடைய நெருக்கடிக்கு மூலகாரணம், போருக்குப் பிந்தைய பொருளாதார செழுமையை (சர்வதேச வர்க்க உறவுகளில் அதன் பெரிய தாக்கம் உட்பட) முற்றிலும் அபத்தமான முறையில் நிராகரித்துவிட்டதுடன், கனனுக்கும், ட்ரொட்ஸ்கிக்கும் இருந்த அரசியலுறவு பற்றி, அகநிலைச் சார்பு அடிப்படையில் மதிப்பீடு செய்ததையும் தவிர, சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவிற்கும் திரித்தல்வாதத்தின் வளர்ச்சிக்கும், அநேகமாக நான்காம் அகிலத்தின் “புரட்சிகரமற்ற” மூலம் (“Non revolutionary” origins) என்று கூறப்படுபவைதான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
1938ல் ட்ரொட்ஸ்கி அகிலத்தை நிறுவ எடுத்த முடிவை, ஒரு புதிய அகிலம் வெற்றிகரமான புரட்சியின் அடிப்படையில்தான் வெளிப்படும் என்ற காரணத்தைக்காட்டி எதிர்த்த மத்தியவாதப் போக்குகள் அனைத்திற்கும் இன்றளவுவரை நவீனப்படுத்தப்பட்ட தத்துவார்த்த பாதுகாப்பை, ஹீலி அறிந்தோ அறியாமலோ கொடுத்திருந்தார். சோலிச புரட்சியின் சர்வதேச வேலைதிட்டத்தை பாதுகாத்த மற்றும் விரிவுபடுத்திய மார்க்சிஸ்டுகளின் தத்துவார்த்த ரீதியான செயல்களின் வரலாற்று முக்கியத்துவத்தை இந்த விளக்கம் இழிவுபடுத்தியுள்ளது. 1920 களிலும், 1930 களிலும், ஸ்ராலினிசத்தின் இயல்பை தத்துவார்த்த அளவில் அறிந்துகொள்ள நீண்டகாலம் போராடி தன்னை உறுதிபடுத்திக்கொண்ட மார்க்சிசத்தின் புரட்சிகரத் தன்மையை இது மறுக்கிறது; அத்துடன் தீவிரமான அரசியல் பிற்போக்கான காலத்தில், அக்டோபர் புரட்சி வேலைத்திட்டங்களுடைய மரபியத்தை மார்க்சிசம் பாதுகாத்தது என்ற அதன் மிகப்பெரிய சாதனை என்பதையும் இது மறுக்கிறது. புரட்சிகர நடவடிக்கைகளை, அதன் பல வடிவமைப்புக்களில் ஒன்றுக்கு மட்டும் - வெற்றிகரமான புரட்சிக்கு மத்தியில் மார்க்சிஸ்டுகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறைச் செயலுக்கு ஹீலி குறைத்து விடுகிறார். ஒருவர் இந்த அடிப்படையில், 1848ல் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் மட்டுமே நடைமுறை அனுபவத்தைக் கொண்டிருந்த மார்க்சின் வாழ்க்கைப் படைப்பு கூட, “புரட்சிகரமற்ற’’ தன்மையாக இருந்தது என்று உறுதியாகக் கூறிவிடமுடியும்.
1953க்கு முந்தைய நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றையும் கேள்விக்கு உட்படுத்தியதின் விளைவாக, சோசலிச தொழிலாளர் கழக காரியாளர்கள் தேசியவாத வழிமுறையில் வளர்வதற்கு செழித்த வாய்ப்புக்களை ஹீலி கொடுத்துவிட்டிருந்தார். உண்மையில், 1940க்குப் பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சி நான்காம் அகிலத்திற்கு ஆற்றிய மிக முக்கியமான பங்களிப்புக்களைக்கூட மறுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்படவில்லை. ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்குப் பின்னர் “ஹீலி ஒருவர்தான் உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதியாக வெளிப்பட்டார்” என்று ஷீலா ரோறன்ஸ், அவருடைய ஹீலி பற்றிய அறியாமை மிகுந்த இரங்கற் குறிப்பில் எழுதுகிறார் என்றால், சோசலிச தொழிலாளர் கழகத்தில் படர்ந்திருந்த தேசியவாத பார்வைக்குத்தான் இவ் அம்மையார் குரல் கொடுக்கிறார்.
“ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மேதைத்தன்மைக்கு” “முற்றிலும் சோவியத் ஒன்றியத்தின் அனுபவங்களினால்” விளைந்தவை என்று ஹீலி குறிப்பிடுவது, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றையும், புறநிலையான வரலாற்று வழியில் வளர்ந்த மார்க்சிசத்தையும் பொய்மைப்படுத்தி விடுகிறது. ஒருதலைப் பட்சமாக, நடைமுறை அரசியல் செயலை அதன் வெற்றிகளுக்காக பெருமைப்படுத்துவதுடன், அது “பிரச்சாரவாதிகள்” என்று முத்திரையிடப்பட்டோர் மீதும் இழிவான போக்கை வளர்க்க பயன்படுகிறது. இந்த பிந்தைய சொல், அருவமான கோட்பாடுகளை ஸ்தூலமான நிலைமைகளோடு ஒன்றிணைக்க தெரியாதவர்களை மட்டும் குறிக்காமல், சோசலிச தொழிலாளர் கழகத்துடைய வேலைத்திட்ட நேர்மையைக் காக்கவேண்டும் என்று கருதியவரையும், “கட்சியைக் கட்டுதல்” என்ற பெயரில் ஹீலி முன்மொழிந்த நடைமுறை முன்முயற்சிகளின் அரசியல் அடக்கத்தை விமர்சன முறையில் மதிப்பீட்டிற்கு உட்படுத்திய முதுபெரும் ட்ரொட்ஸ்கிசவாதிகளையும் குறித்தது. இவ்வாறு, சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளேயான அரசியல் வாழ்வு, 1960களின் நடுப்பகுதியிலிருந்து, தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள் காலகட்டத்தில் தங்களுடைய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்பினால் பீதியுற்றதாய்க் கூறப்படும் “பழைய பிரச்சாரவாதிகளை” எதிர்த்த வெறித்தனமான போராட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது மற்றும் அதனால் சோசலிச தொழிலாளர் கழகத்தின் வெற்றி மற்றும் வளர்ச்சி மிக அதிகமாய் அடையாளம் காணப்பட்டிருந்த இளம் செயல்வீரர்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது.