திரித்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து, ஹீலி பின்வாங்கியதன் ஆபத்தான தாக்கங்கள் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இவற்றுக்குள்ளேயான அரசியல் பிரச்சினைகளை கையாளும் முறையில் கூர்மையாக வெளிப்பட்டன. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடன் (SWP) முடிவாக ஏற்பட்டுவிட்ட பிளவினால், பப்லோவாத திரித்தல்வாதத்தின் பிரச்சினை தீரவில்லை, தீர்க்கப்பட்டிருக்கவும் முடியாது. மறு ஐக்கியத்தை நிராகரித்த காரணத்தினால் சோசலிச தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டிற்குமே அந்நிய வர்க்க சக்திகள் கொடுக்கும் அழுத்தத்தை எதிர்க்கும் தடுப்புக் காப்பு எதையும் கொடுத்துவிடவில்லை. 1963ம் ஆண்டு பிளவும் படிப்பினைகளும் தொடர்ச்சியாக கற்கப்பட்டு ஆழ்ந்து அறியப்படாத அளவில், அடிப்படையில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை எதிர்நோக்கியிருந்த போதிலும், 1960 களின் நடுப்பகுதிகளில் தோன்றிய மத்தியதர வர்க்கத்தின் அரசியல் தீவிரவாதம், சோசலிச தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டிலும் ஆழ்ந்த விளைவை காட்டியது. சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் French Organisation Communiste Internationaliste - OCI (PCI அவ்வாறு மறுபெயரிடப்பட்டிருந்தது) இரண்டிலுமே குட்டிமுதலாளித்துவ தீவிரவாதத்தின் பெருகி வந்த அழுத்தம் வெவ்வேறு வடிவங்களிலும் என்றாலும் வெளிப்பாட்டை கொண்டிருந்தது.
பப்லோவாதம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அழித்துவிட்டது, நான்காம் அகிலம் “மறுபடியும் கட்டியமைக்கப்பட வேண்டும்” என்று அறிவித்து, மத்தியவாதப் போக்குடைய அமைப்புகளை நோக்கிய திசைதிரும்புதலை நியாயப்படுத்தி, OCI ஓர் அறிக்கையை வெளியிட்ட அதேவேளை, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமைப்பீடத்தில், தெளிவான பப்லோவாத தன்மை நிரம்பிய அரசியல் நிலைப்பாடுகள் வெளிவரலாயின. 1950ல் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு வந்த நாள் முதல் ஹீலியின் மிகநெருக்கமான ஒத்துழைப்பாளராக இருந்த மைக்கல் பண்டா, சர்வதேச முன்னோக்குகளில் மிகுந்த ஒழுங்கற்ற முறையில் மாறுதல்களை கொள்ளத் தொடங்கினார். பண்டாவின், மாவோ சே துங், ஹோ சி மின் மற்றும் அப்தெல் நாசருடனும் கூட இருந்த மோகம் கொண்ட தழுவல்கள் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமையிடத்திற்குள்ளேயே வேதனைச் சிரிப்புக்களையும், புருவங்கள் உயர்த்துதலையும்தான் விளைவித்தன. அதற்கு ஹீலி “சரி, சரி, இப்படித்தான் மைக் இருப்பார்.” என கூறுவார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதிகாரபூர்வ இதழான, நான்காம் அகிலத்தில் தலையங்கம் ஒன்றில் வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணியை போல்ஷிவிக் கட்சியின் மறுபிறவி என்று பண்டா உற்சாகத்துடன் வரவேற்று எழுதியதற்கு OCI எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த அவலப் போக்கைக் குறைக்கும் வகையில் ஹீலி நான்காம் அகிலத்தின் அடுத்த இதழில் முந்தைய தலையங்கம் அதை எழுதிய ஆசிரியரின் கருத்தை தவிர வேறு ஒருவருடைய கருத்தையும் சார்ந்திருக்கவில்லை என்ற விளக்கத்தை அளிக்கும் சிறு குறிப்பு ஒன்றை வெளியிடுமாறு உத்தரவிட்டார்!
சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள் நேர்ந்த அரசியல் நெருக்கடிகள், எப்பொழுது முடியுமோ அவை தனிப்பட்ட பிரச்சினைகளின் வெளிப்பாடு போலவே கையாளப்பட்டன. உதாரணமாக, Newsletter உடைய ஆசிரியராக கிளிப் சுலோட்டர் பதவியேற்பார் என்று பெரும் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில வாரங்களுக்குள்ளேயே அவர் இதைவிட்டு நீங்கி லீட்சிற்குத் திரும்பியபோது அந்தச் செயலின் அரசியல் நோக்கத்தை ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பலவற்றில் எத்தைகைய நியாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டாலும், ஹீலி, சோசலிச தொழிலாளர் கழகத் தலைமை, ஒரு சீரழிந்த குழுவாக, அதாவது புரட்சிகர வேலைதிட்ட அடிப்படையை காட்டிலும், கொள்கையற்ற உடன்பாடு அடிப்படையிலான ஒரு குழுவாகச் சீரழிந்த நிலைமைக்கு தலைமை தாங்கியிருந்தார்.
அனைத்துலகக் குழுவிற்குள்ளும், OCI, சோசலிச தொழிலாளர் கழகம் இவற்றிற்கிடையேயான கருத்து வேறுபாடுகள் எழுத்தளவில்தான் இருந்தன. எப்பொழுதாவதுதான் ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன, இருபுறத்திலும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, ஆனால் இரு பிரிவுகளின் உள்வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. சோசலிச தொழிலாளர் கழகம், OCI மத்தியவாதப் போக்கை மாற்றி எடுத்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியது; OCI, மாவோயிசத்துடன் பண்டா கொண்டிருந்த மோகத்தை குறித்துக்காட்டியது. ஆனால் 1966ல் இருந்து சோசலிச தொழிலாளர் கழகத்திற்கும் OCI இற்கும் இடையே அரசியல் உறவுகள் திடீரென்று 1971 இலையுதிர் காலத்தில் முறியும் வரையிலான காலத்தில் இலக்கற்ற விவாதங்கள் ICFI உடைய சர்வதேச மாநாட்டை ஒழுங்கு செய்யாமலேயே பிரயோசனமற்று நடாத்தப்பட்டன.
பப்லோவாதத்திற்கெதிரான போராட்டம் பிரிட்டிஷ் பிரிவிற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்கும் இடையே மறுபடியும் தொடங்கி, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகம் “வெற்றிகரமான” நடைமுறைச் செயல்களை நடத்திக்கொண்டிருப்பதற்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடுமோ என்ற பயத்தைக் கொடுத்ததால், ஹீலி நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் சோசலிச தொழிலாளர் கழகமும் இவற்றை எதிர்கொண்ட அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதை தவிர்த்தார். அமைப்பு ரீதியான பிரச்சினைகள் என்று வந்துவிட்டால், அதாவது வெறும் மேம்போக்கான வடிவில் ஆழ்ந்த அரசியல் பிரச்சினைகள் தற்செயலான அன்றாட போக்கில் மட்டும் அவற்றின் வெளிப்பாட்டை காணும் நிலையில், ஹீலி கட்சியின் நடைமுறை செயல்பாட்டை மதிப்புக்குறைக்கு உட்படுத்திப் பேசுபவர்களை கருணையற்று நடத்த தயங்கியதே இல்லை. ஆனால் வேலைதிட்டத்தை பற்றிய பிரச்சினைகளில் நேரடியாக மோதுவதை தவிர்க்கவும் விரும்பினார்; உண்மையில், சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளேயே இருக்கும் பிரச்சினைகள் பற்றிய ஆதாரங்களிலிருந்து திசைதிருப்புவதற்குத்தான் எரிமலை போன்ற வெடிப்பு அவரிடமிருந்து அடிக்கடி வந்தது.
மத்தியதர வர்க்கத்திற்கு எதிரான காழ்ப்புணர்வை, “எப்பொழுதும் கட்சியை உடைப்பவர்கள்” என்று குமுறி சுவர் உடையும்படி வெடித்தாலும், வேலைதிட்டத்தின் அடிப்படையில் 1960 களின் பிற்பகுதியில் கட்சிக்குள் நுழைந்திருந்த குட்டிமுதலாளித்துவ மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோருடைய தீவிரவாதத்திற்கு அதிகரித்தளவில் ஹீலி அடிபணிந்தார். அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தவிர்த்ததால், புதிய சக்திகளுக்கு ட்ரொட்ஸ்கிச வரலாறு, முன்னோக்கு ஆகியவற்றில் பயிற்சிபெறமுடியாமல் தடையாக நின்றது மட்டுமல்லாமல்; மேலும் அங்கத்துவத்திற்கு விண்ணப்பித்தவர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல், தரம்பிரித்தல், உள்வாங்கல் மற்றும் நிராகரித்தல் எனும் தடைகளையும் உருவாக்கிவிட்டது. கூடுதலாக நழுவிக் கொண்டிருக்கும் அரசியல் அஸ்திவாரத்தில் கட்சி விரிவடைந்ததால், அதற்குள்ளேயே ஏற்படும் முரண்பாடுகளும் குவியத் தொடங்கின. கட்சிக்குள் அரசியல் விவாதங்களை நடத்தி இவை தீர்க்கப்படமுடியாமல் போன நிலையில், அவை நிறுவன அமைப்புமுறையில் கட்டுப்படுத்த வேண்டியதாயின; இது பின்னர் சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளும் (அதன்பின் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளும்), ஹீலியின் பங்கை அரசியல் தலைவர் என்பதிலிருந்து கட்சியின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஒழுங்குபடுத்தும் முக்கியஸ்தராக, அதாவது ஒரு அமைப்புரீதியான போனபார்ட்டாக மாற்றிவிட்டது.
உண்மையான அரசியல் விவாதங்களின் அடிப்படையில், முக்கியமான வேலைத்திட்டங்களையும், முன்னோக்குகளையும் எதிர்கொள்ள விருப்பமோ, திறனோ இல்லாத நிலையில் பிரச்சினைகளை அமுக்கிவிடவோ அல்லது கொந்தளிப்பிற்கு வராமலோ அவர் அழைக்க விரும்பிய “புதிய நடைமுறைகளை” காலத்தே அபிவிருத்தி செய்வதன் மூலம் தன்னால் சமாளித்துவிடமுடியும் என்று ஹீலி அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தார். இத்தகைய கருத்துக்களில் மிகப்பெரிய திட்டம், தினசரி பத்திரிகை ஒன்று 1969 இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட இருந்ததாகும். ஒரு தினசரி நாளேடு, நான்காம் அகிலத்தை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மற்ற பிரிவுகளில் உள்ள இழிந்த நிலைக்குக் காரணம் என்று அவர் கருதிய “பிரச்சார” இருப்பு என்ற குறுகிய சாபக்கேடான எல்லைகளிலிருந்து, முறித்து வெளிக்கொண்டு வந்துவிடும் என்று அவர் வலியுறுத்தினார். பாரிசில் 1968ம் ஆண்டு மே-ஜூனில் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து ஹீலி கற்றுக்கொண்ட முக்கியமான, ஒரே படிப்பினை, பலமுறை அவரே சளைக்காமல் தெரிவித்தது போல், சோசலிசத் தொழிலாளர் கழகம் “தன்னுடைய பிரிட்டனில் மே-ஜூனுக்கு” ஒரு பத்திரிகை தொடங்குவதின் மூலம் தயாராகவேண்டும் என்பதுதான் போலும்.
தினசரி பத்திரிகை
சோசலிசத் தொழிலாளர் கழகம், மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் இவற்றின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எல்லா அரசியல் பிரச்சினைகளையும் கடப்பதற்கு தன்னுடைய தினசரி பத்திரிகை திட்டத்தில் ஒரு தாயத்தை கண்டு பிடித்துவிட்டோம் என்ற நம்பிக்கையை ஹீலி முற்றிலுமாக கொண்டு விட்டார். இந்த தைரியமான செயலின்மூலம் ஏதோ ஸ்ராலினிசத்தின் பிரச்சினையை கம்யூனிஸ்ட கட்சி உடைய Morning Star போல், ட்ரொட்ஸ்கிச பத்திரிகையை வெளியிடுவதன் மூலம் தீர்க்கப்பட்டு விடமுடியும் என்று இதன்பின் வெறும் வார, இருவார இதழ்களை வெளியிடும் முக்கியத்துவமற்ற “பிரச்சாரக் குழுக்கள்” என்று திரித்தல்வாதப் பிரச்சினையை ஒதுக்கித்தள்ளுவது மட்டுமின்றி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களையும் தகர்க்கமுடியும் என்ற நம்பிக்கையை ஹீலி கொண்டார்.
தினசரி பத்திரிகையை தொடக்கும் திட்டத்தில் தீவிரமானபோது சோசலிசத் தொழிலாளர் கட்சி அதிகபட்சமாக இருநூறு அல்லது முந்நூறு உறுப்பினர்களைத்தான் கொண்டுள்ளது என்றும், முக்கியமான ஆதாயங்களைக் கொண்டிருந்தபோதிலும், சோசலிச தொழிலாளர் கழகத்துடைய செல்வாக்கு தொழிற்சாலைகளுக்குள் மிக மட்டுப்பாடுடையதாக இருந்தது என்பதை ஹீலி அறியாமற் போகவில்லை. கட்சியின் நிதித் தளமும் தொடர்ந்து பலவீனமாகத்தான் இருந்தது. எவ்வாறு இவ்வளவு சிறிய அமைப்பு ஒரு தினசரி நாளேட்டை தொடர்ந்து வெளியிட இயலும்? இதற்கு விடையின் முக்கிய பகுதியாக, அவர் நினைத்ததை விடக் கூடுதலாகவே கருத்தளிக்கும் ஷீலா டோரன்சின் இரங்கற் குறிப்பில் காணமுடியும்:
“ஒரு தினசரி பத்திரிகைக்கு எழுத்தாளர்களும், அதைத் தொடர்ந்து இயக்குவதற்கு தொண்டர்களும் தேவை. 1968ல் பிரான்சில் நிகழ்ந்த மே, ஜூன் நிகழ்வுகள், அதன் தொடர்ச்சி செக்கோஸ்லாவாக்கியாவில் நடந்தது ஆகியவை, அறிவுஜீவிகள், கலைஞர்கள், நாடக ஆசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள் என்று, மத்தியதரவர்க்க, உயர் மத்தியதரவர்க்க பகுதியினரில் பெரும் பகுதிகளை முற்போக்குக் கொள்கைகளுக்கு ஈர்த்தன. இவர்கள் லண்டனில் மத்திய பகுதியிலிருந்த விவாதக் கூடங்களில் கூடி சோசலிசக் கருத்துக்களை பற்றி விவாதித்தனர்.
“இந்த தட்டைப்பற்றி ஹீலி எந்தவிதமான தலைகீழான போலி உயர்வுமனப்பான்மையை கொண்டிருக்கவில்லை; அவரைப் பொறுத்தவரையில், மிருதுத்தன்மையற்ற, அறிவுஜீவி எதிர்ப்பு தொழிலாளர் வாதம் இருந்ததில்லை. மற்றவர்கள் “மேற்கத்திய புரட்சிகர கட்சி” (“West End Revolutionary Party) என்று ஏளனமாக கூறிவந்த போது, இவர் அவர்களையும் கவர்ந்து வெல்லும் திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு, மிகத்திறமையுடைய எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என்று நிரம்பியிருந்த தட்டை கட்சிக்குள் கொண்டுவந்தார். அதற்கு கட்டுப்பட்டு கருத்துக்களை கொள்ள அவர்கள் தொடங்கியதும், அவர்கள் இதன் செய்தித்தாளுக்கு, அதன் பிரச்சாரத்திற்கு மற்றும் அதன் தலைமைக்கும் கூட சக்திமிக்க பங்களிப்பைச் செய்தனர்.”
இந்த அம்மையாரின் இப்பொழுதைய தீவிர, குணப்படுத்தமுடியாத அரசியல் சீரழிந்தநிலையில், இந்த இரண்டு பத்திகளிலும் எத்தகைய சீர்குலைக்கும் குற்றச்சாட்டு ஹீலியின் பால் வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூட டோரன்ஸ் உணரவில்லை. தன்னுடைய செய்தித்தாள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதற்காக, ஹீலி தன்னுடைய கட்சியை எந்த வர்க்கம் ஆதரவு தருகிறது என்பதைக்கூடக் கவலைப்படவில்லை. தினசரி செய்தித்தாளுக்கு வளங்களை பெறுவதற்கு தன்னுடைய கட்சியையே மத்தியதர வர்க்கத்தின், அதுவும் அதில் சிறிதும் உறுதியற்ற பிரிவுகள் பால் திருப்பி விட்டார். மேற்குப்பகுதியின் (West End Bohemia) கட்டற்ற, தீர ஆர்வம் மிகுந்த புதிய உறுப்பினர்கள் தங்களுடைய திறமைகள், உள்ளப்போக்குகள், நரம்புத்தளர்ச்சிகள், கிறுக்குத்தனங்கள் இவற்றை மட்டும் கொண்டு வராமல், தங்களிடத்திலுள்ள ஆழ்ந்த வர்க்க உட்சிந்தனைகளையும், தப்பெண்ணங்களையும்கூட கொண்டுவந்தனர். அவர்கள் கட்சிக்கு “அடிபணிந்தனர்” என்னும் டோரன்ஸின் கூற்றைப் பொறுத்தவரையில், மேற்குப்பகுதியின் புகழ்பெற்றவர்கள் எப்பொழுதுமே ஒரு தனித்த, அழுகிப்போன, பொதுவான கட்சி உறுப்புத்தன்மையில் கரைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலை இயல்பாகவே பெற்றிராத சமூக தட்டைத்தான் கொண்டுவந்தனர் என்பதுதான் உண்மையாகும்.
மேலும், தங்களை “அடிபணிய வைத்துக்கொண்டனர்” என்று கூறும்பொழுது, அது ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத் திட்டத்திற்கு அல்ல, ஹீலியுடைய ஆளுமைக்கு என்றுதான், அதாவது மேற்குப்புற கனவான்கள் அவர்மீது கொண்ட கவர்ச்சிக்குத்தான் அடிபணிந்து, கட்சியின் தயாரிப்பு என்று இலண்டன் அறிவுஜீவித விவாத அரங்குகளில் ஹீலி கலந்துகொண்டதின் நினைவு பற்றிய, திறனாய்வாளர்களாலும் பாராட்டப்பட்ட நாடகத்தை படைத்தனர் என்பது அறியப்படவேண்டும். ஹீலியாக மேடையில் நடிப்பதற்கு மாபெரும் புகழ்பெற்ற சேர் லோரன்ஸ் ஒலிவியே (Sir Laurence Olivier) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய ஆளுமையும் நடந்துகொள்ளும் முறைகளும், எத்தகைய தாக்கத்தை நடிகர்கள், நடிகையர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்மீது கொண்டிருந்தது என்பதை, ஹீலி அறியாதவர் அல்லர்; ஓர் தொழிலாள வர்க்கத்தின் தலைவர் என்ற முறையிலும், கட்சிக்கு விளையக்கூடிய தீமையை கருத்திற்கொள்ளாமல், வெட்கங்கெட்ட தனமாக அதைப் பயன்படுத்தி, அரசியலிலே அனுபவமற்ற, உறுதியற்ற விசுவாசிகளின் கூட்டம் தன்னை புடைசூழ்ந்து வருமாறு அவர் செய்துவிட்டார். இந்த தனிநபர்களில் சிலரை கட்சிக்குள் அனுமதித்தமை கேள்விக்குரிய தீர்ப்பை காட்டிக் கொடுத்துவிட்டது. Roy Basttersby, Vanessa, Corin Redgrave, Alex Michell என்ற பெயர்கள் மட்டும் நன்கு அறியப்பட்டிருந்த சிலரை, அவர் கட்சி தலைமையிடத்திலும் நியமனங்கள் செய்ததும் அரசியலளவில் குற்றஞ்சார்ந்த செயலே ஆகும்.
சோசலிச தொழிலாளர் கட்சினுள் (SWP) குட்டிமுதலாளித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டம் பற்றி ட்ரொட்ஸ்கியால் பெறப்பட்ட பின்வரும் மத்திய படிப்பினைகளில் முக்கியமான ஒன்றை ஹீலி முற்றிலும் புறக்கணித்துவிட்டிருந்தார்:
“வர்க்கப் போராட்டத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களை, பொறுப்பான பதவிகளில் அமர்த்தக்கூடாது. எவ்வளவு திறமையிருந்தாலும், சோசலிசத்தின் மீது பற்று இருந்தாலும்கூட, முதலாளித்துவ தட்டிலிருந்து வரும் இடம்பெயர்ந்து வருவோர், பிறருக்கு கற்பிப்பதற்குமுன், தொழிலாள வர்க்கத்தின் கல்விக்கூடத்தில் முதலில் தாம் கற்கவேண்டும்.”
ஆனால், சோசலிச தொழிலாளர் கழகத்தில் சேருவதற்குமுன்பே, சண்டே டைம்ஸில் வேலைபார்த்துவந்த அலெக்ஸ் மிட்செல், Workers Press ன் ஆசிரியர் குழுவிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டார்! சோசலிச தொழிலாளர் கழகத்தில் சேர்ந்திருந்த ஓராண்டிற்குள்ளேயே, அவர் அரசியல் குழுவிற்குள்ளும் வரவேற்கப்பட்டு இடமளிக்கப்பட்டார்.
இவையெல்லாம், சோசலிச தொழிலாளர் கழகத்தை, பரந்த புரட்சிகர கட்சியாக மாற்றும் நோக்கத்தைக் கொண்ட, “தினசரி பத்திரிகைக்கான போராட்டம்” என்ற பெயரில் ஹீலியால் செய்யப்பட்டன. மாறாக, சோசலிச தொழிலாளர் கழகத்துடைய சமூக அமைப்புமுறையில் ஊழல் மலிவதற்கும், குறிப்பாக Workers Press, News Line என்று மாறியபின்னர் கட்சியின் அரசியல் அழிவிற்கான முக்கிய கருவிகளில் ஒன்றாகவும்தான் இது அமைந்தது.
* * * * *
1960கள் முழுவதும், உலக முதலாளித்துவத்தின் நிதியமைப்பில் பெருகிவந்த உறுதியற்ற தன்மையை, ஆழ்ந்த கவனத்துடன் பார்த்து வந்திருந்த ஹீலி, இது ஒரு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களாக வெடிக்க வழிகோலும் என்று கருதினார். மே-ஜூன் நிகழ்ச்சிகள் இம்முன்னோக்கை நியாயப்படுத்தியதாகவும் அவர் நினைத்தார். பிரிட்டிஷ் உழைக்கும் மக்கள் போராட்டம் விரைவாக வளர்ச்சி பெற்று வருகிறது என்ற நம்பிக்கை, தன்னுடைய நாளேட்டை தொடக்குவதற்கு, ஹீலியே கொடுத்துக் கொண்ட நியாயமாகும். ஹீலி எதிர்பார்த்திருந்த பரந்த மக்கள் இயக்கம், 1970 தேர்தலில் எட்வார்ட் ஹீத் பதவிக்கு வந்து புதிய டோரி அரசாங்கம் தொழிற்சங்க விரோத சட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர்தான் வந்தது. ஆனால் சோசலிச தொழிலாளர் கழகம் இதற்குக் கொடுத்த பதிலோ, கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்திருந்த மத்தியவாத சரிவின் தன்மையின் பாதிப்பிற்கு ஒட்டித்தான் இருந்தது; 1960களில் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றியமைத்துக்கொண்டது, இப்பொழுது டோரி-எதிர்ப்பு இயக்கத்தின் தன்னெழுச்சியான போர்க்குணத்திற்கு அடிபணிந்து முகஸ்துதி செய்தது.
புரட்சிகரமான சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவுகளின் ஆதரவை வெற்றி கொள்வதற்கு பதிலாக, சோசலிச தொழிலாளர் கழகம் ஹீத் அரசாங்கத்திற்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை விரோத உணர்விற்கேற்ப மட்டுமே பொருந்துமாறு, தன்னுடைய கொள்கைகளை நீர்த்துப் போகவிட்டது. இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், “அடிப்படை உரிமைகளை” பாதுகாக்க வேண்டும் மற்றும் புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற அழைப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஹீலி, “சோசலிச தொழிலாளர் கழகத்தை வெகுஜன புரட்சிக் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கை” வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார்.
தொழிலாளர் புரட்சிக் கட்சி
தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நிறுவப்பட்டதற்கான அரசியல் காரணம் எதுவும் எப்போதும் தெளிவாக கொடுக்கப்படவில்லை. அரசியல் சூழ்நிலையின் உள்ளடக்கத்தில் கழகத்திற்கும் (League), கட்சிக்கும் (Party) இடையேயான அடிப்படை வேறுபாடுகள் எதையும் ஹீலி வரையறுக்காததுடன், மார்க்சிச மற்றும் நான்காம் அகில மூலோபாய நிலைப்பாட்டிலிருந்தும், முன்னதைப் பின்னதாக “மாற்றவேண்டியதின்” கட்டாயத்தின் பொருளையும் அவர் விளக்கவில்லை. இது ஒரு வெறும் பெயர் மாற்றம் மட்டும்தான் இல்லை என்றால், அமைப்பின் செயல்முறை, தொழிலாள வர்க்கத்தோடு அதன் உறவை அது எவ்வாறு மாறுதலுக்கு உட்படுத்தும்? இந்தக் கேள்விக்கு, ஹீலி விடைகொடுக்காததுடன் பிரிட்டனின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் முந்தைய நிலைகளிலிருந்து அல்லது அவற்றையொட்டி, இந்தப் புதிய அரசியல் வடிவம் எவ்வாறு தோன்றியது என்று பகுத்து ஆராயவும் இல்லை.
வெளிப்டையாக கூறப்படவில்லையென்றாலும், இந்த மாற்றத்தின் அடிப்படை உள்ளடக்கம், சோசலிச தொழிலாளர் கழகத்தை ஒரு மத்தியவாத அமைப்பாக மாற்றுவது என்பதாகும். சோசலிச தொழிலாளர் கழகத்தை, தொழிலாள வர்க்கத்தின் இயல்பான உடனடி எழுச்சிக்கு ஏற்றவாறு மாறுதலுக்கு உட்படுத்துவதே இதன் நோக்கமாகும். நடைமுறைச் செயற்பாடுகளில், இந்த மாற்றத்தின் முக்கியமான விளைவு, பிரித்தறியாமல் உறுப்பினர் அட்டையை அமைப்பின் தெளிவற்ற நோக்கங்களுக்கு பொதுவாக உடன்பாடு தெரிவிப்பவர்களுக்கு வழங்கும் “பேரளவு ஆட்சேர்ப்புக்கான செயல்முறை” என்ற பெயரில் வழங்குதலை அறிமுகப்படுத்துதல் ஆகும். ட்ரொட்ஸ்கிச வரலாறு, கொள்கைகள், வேலைத்திட்டங்கள் இவற்றில் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட வேண்டிய புரட்சிகர காரியாளர்களுக்கு பதிலாக, வெறும் ஏட்டளவில் ஏராளமான உறுப்பினர் எண்ணிக்கையை திரட்டுதல், பெரிய அமைப்பை ஏற்படுத்துதல் என்பவை கொள்ளப்பட்டன.
“அடிப்படை உரிமைகள் கட்சி” (Basic Rights Party) என புதிய அமைப்பிற்கு பெயரிடலாம் என்ற எண்ணத்தை சிறிது காலம் கொண்டிருந்தபின், கடைசி நேரத்தில் ஹீலி, கழகத்தை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு “தொழிலாளர் புரட்சி கட்சி” என்ற பெயரிட்டு, அனைத்துலகக் குழு, சோசலிச தொழிலாளர் கழகம் இவற்றின் வேலைதிட்டங்களை தெளிவுபடுத்துவதை விடுத்து, அதில் பேரணிகள் அமைப்பதும், வண்ணக் காட்சிகளை தீட்டுவதும்தான் நிறைந்திருந்தன. இம்முயற்சியின் முழுமையான சந்தர்ப்பவாதம், அமைப்பின் நிறுவக மாநாட்டில் நன்கு வெளிப்பட்டது. யார் நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு எடுத்தாலும் பங்குபெறலாம் என்ற பொதுக்கூட்டமாக அது இருந்தது. புதிய கட்சியின், Workers Press பத்திரிகையில் கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வமான உறுப்பினர் எண்ணிக்கை 3,000 என்பது, கட்சியின் தொடக்க நாளன்று நடத்தப்பட்ட அணியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். ஞாயிற்றுக்கிழமை மாலை வந்திருந்த இந்தப் பெரும்பாலான பிரதிநிதிகள், அவர்கள் இருக்கைகளில் திங்கட்கிழமை காலை “நிறுவன மாநாட்டின்” கூட்டம் மறுபடி கூடியபோது இல்லை என்பதை குறிப்பிடத்தேவையில்லை.
தொழிலாளர் புரட்சிக் கட்சி நிறுவப்பட்ட பின்னர், பிரிட்டிஷ் பகுதிக்கும், அனைத்துலகக் குழுவிற்கும் இடையேயுள்ள உறவு அடிப்படையில் மாறியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினுடைய பகுதிகள் இந்த “மாற்றம் பற்றி” Workers Press இன் பக்கங்களில் வெளிவந்ததை பார்த்துத்தான், அதாவது உடன்நிற்கும் பார்வையாளர்களாகத்தான் தெரிந்து கொண்டனர். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் விவகாரங்களை, அனைத்துலகக் குழுவிடம் விவாதிக்க வேண்டும் என்ற தேவையைக்கூட ஹீலி பொருட்படுத்தவில்லை. அனைத்துலகக் குழுவின் திட்டம் பற்றியும், நான்காம் அகிலத்தினுள் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய நீண்ட போராட்டத்தை பற்றியோகூட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வேலைத்திட்டம் அதிகம் குறிப்பிடவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்த பெரும்பான்மையான உறுப்பினர்களை பொறுத்தவரை, ஒரு சர்வதேசிய கட்சியை பற்றிய கருத்து இல்லாமல், ஒரு தேசிய கட்சியில் சேர்ந்திருந்ததாகத்தான் நினைத்தனர். உண்மையில், 1985ல் தெரியவந்தது போல், தொழிலாளர் புரட்சிக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பல உறுப்பினர்களில் கணிசமான அளவினர், இந்த அமைப்பு பிரிட்டிஷ் அல்லாத அரசியல் கட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்டது என தெரிந்திருந்தால், அத்தகவல் முன்கூட்டியே கூறப்பட்டிருந்தால், அவர்கள் கட்சியிலேயே சேர்ந்திருக்க மாட்டார்கள்!
தொழிலாளர் புரட்சிக் கட்சி அமைக்கப்படுவதை ஒட்டிய சற்று முந்தைய காலகட்டத்தில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர்கள் தங்களுடைய மத்தியவாத அரசியலுக்கு, ஒரு நவீன நியாயப்படுத்தலை வழங்கும் தத்துவார்த்த சூத்திரப்படுத்தல்களை அபிவிருந்தி செய்தனர். வேலைத்திட்டம் மீதான சந்தர்ப்பவாத காட்டிக் கொடுத்தலை நியாயப்படுத்தும் வகையில் புத்திசாலித்தன அறிவுபூர்வ முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது; வழக்கம் போலவே, இந்த செயல் வேலைத்திட்டத்திலும் முக்கிய பங்கினை கிளிப் சுலோட்டர்தான் கொண்டிருந்தார். OCI உடன் திடீரென்று 1971 இலையுதிர்காலத்தில் ஏற்பட்ட முறிவு, “வேலைத்திட்டம், கொள்கைகள் பற்றி உடன்பாட்டையும் விட ஆழ்ந்த முறையில், கருத்துவாத வழியிலான சிந்தனைக்கு எதிரான முற்றுமுழுதான மற்றும் கடினமான போராட்டம் அவசியமானது என்பதைத்தான் பிரிட்டனில் புரட்சிக் கட்சியை அமைத்த அனுபவம்” தெளிவுபடுத்துகின்றது என்ற வாதத்தை முன்வைக்க சுலோட்டருக்கு வாய்ப்பைக் கொடுத்தது. (Trotskyism Versus Revisionism, vol.6, New Park, p.83).
மார்க்சிச தத்துவம் தனது வெளிப்பாட்டைக் காணும் ஒரு வேலைத்திட்டம்தான் புரட்சிகரமான கட்சியைக் கட்டும் என்று ட்ரொட்ஸ்கி எப்பொழுதுமே வலியுறுத்தி வந்தார். ஆனால், வேலைத் திட்டத்திற்கு எதிராக தத்துவத்தை நிறுத்திய சுலோட்டரோ, ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தால் உருவாக்கப்பட்ட கட்சிகளின் நிலைத்து நிற்கும் தன்மை, செல்தகைமை இரண்டையும் கேள்விக்கு உட்படுத்தினார். “வெறுமனே ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை, இருக்கும் ட்ரொட்ஸ்கிச சக்திகளை, நெருக்கடியால் உருவாக்கப்பட்ட அரசியல் அபிவிருத்திகளினால் உருவாக்கப்பட்டுள்ள காட்சியின் முன்னே கொண்டு வருவதன் மூலம், அதிகாரத்தை பெறுவதற்கும், சோசலிசம் அமைப்பதற்கும் புரட்சிகரக் கட்சிகளினால் தொழிலாள வர்க்கத்தை இட்டுச் செல்ல இயலுமா?” என அவர் வினா எழுப்பினார். “வர்க்கப் போராட்டத்தின் மாறிவிட்ட யதார்த்தத்திற்குள், இயக்கத்தின் தத்துவத்தையும் கடந்த காலத்து அனைத்து அனுபவங்களையும் மறுத்தலுக்காக, தத்துவத்திற்காக ஒரு நனவான போராட்டம் நடத்தப்படுவது அவசியமானதில்லையா?” (ibid..,p.226)
சோசலிச தொழிலாளர் கழகத்தின் சந்தர்ப்பவாதச் சீரழிவிற்கு ஆதாரமாக இருந்த அரசியல் ஐயுறவாதத்தின், மிகவும் வளர்ச்சியுற்ற வெளிப்பாடாக, இந்த வகையில் சுலோட்டரால் கொடுக்கப்பட்டது. “ட்ரொட்ஸ்கிச வேலைதிட்டத்திற்காக” போராடுவதன் மூலம், “இப்பொழுதுள்ள ட்ரொட்ஸ்கிச சக்திகளான” சோசலிச தொழிலாளர் கழகமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச்செல்ல முடியாதவை என்று பிரிட்டிஷ் பகுதியின் தலைமை முடிவிற்கு வந்துவிட்டது. எனவே வேறுசக்திகளும், வேறுவழிவகைகளும் கண்டுபிடிக்கப்படவேண்டும்; அது, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தோடு தொடர்பற்ற “தத்துவத்திற்கான நனவான போராட்டம்” என்று அழைக்கப்படும் அருவத்தின் உதவியுடன் பெறப்பட வேண்டும், “வர்க்கப் போராட்டத்தின் மாறிவிட்ட யதார்த்தத்தால்” தேவைப்படும் தந்திரோபாயங்களால் எப்படியோ அது உருவாக்கப்படும். போலித்தனமான தத்துவச் சொற்றொடர்களை அகற்றிவிட்டுப் பார்த்தால், பழைய சந்தர்ப்பவாத கருத்துக்கள், 20 ஆண்டுகளுக்குமுன் பப்லோவால் முன்னெடுக்கப்பட்ட பழைய சந்தர்ப்பவாத சூத்திரப்படுத்தல்களைத்தான் சுலோட்டர், வெறுமனே புதுப்பித்துக் கூறுகிறார். இப்பொழுது இந்த தனிச்சிறப்புடைய அளிப்பை சோசலிச தொழிலாளர் கழக - தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கருத்தியல் சீரழிவிற்கு தனது தனித்த பங்களிப்பிற்காக, சுலோட்டர் தற்போது பெருமை எடுத்துக்கொள்ள அக்கறை காட்டவில்லை என்றாலும், இது, பின்னர் ஹீலியை ஊக்குவித்த தடையற்ற சந்தர்ப்பவாதத்திற்கு வழிகாட்டிய பின்னர் “அறிதலுக்கான நடைமுறை” என்ற பெயரையும் கொண்ட, நடைமுறைத் திட்டத்திற்கான ஒளித்தடமாய் சுலோட்டர் பறைசாற்றியதாகும்.