13-1. பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதில் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் (SWP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் (ICFI) ஆதரவளிக்க லங்கா சமசமாஜக் கட்சி மறுத்தமை, அதன் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்ததோடு அதன் அரசியல் சீரழிவை பெருமளவில் துரிதப்படுத்தியது. பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு நோக்குநிலை மீது விமர்சனப் பார்வை கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமை அதேவேளை தேசிய சீர்திருத்தவாதக் கொள்கைகளை (இது பாராளுமன்றவாதத்தினதும் தொழிற்சங்கவாதத்தினதும் (Syndicalism) கூட்டிணைவாய் இருந்தது) தான் ஏற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலளித்த, அடித்தளத்திலிருந்த கலைப்புவாத நோக்குநிலைக்கு உறுதியான அனுதாபத்தைக் காட்டியது. பாராளுமன்றம், தொழிற்சங்கம் ஆகிய இரண்டுமே ஒரு புரட்சிகரக் கட்சி தனது முன்னோக்கிற்காகப் போராடுவதற்குப் பயன்படுத்தக் கடமையிருக்கும் குரோதமான களங்களாகும், ஆனால் இந்த இரண்டுமே தொழிலாள வர்க்கத்துக்குள் உள்ள சீர்திருத்தவாத பிரமைகளை ஏற்றுக் கொள்ளும்படி கட்சியின் மீது பலமான அழுத்தங்களை தவிர்க்கவியலாமல் கொண்டுவந்து சேர்க்கின்றன. லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்கள், இன்னமும் வார்த்தையளவில் ட்ரொட்ஸ்கிசத்தை தழுவிக்கொண்டிருந்த போதும், மேலும் மேலும் தமது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் தமது தொழிற்சங்கங்களின் அளவு என்ற விதத்திலேயே தமது வெற்றிகளை அளவிட முயன்றனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதை விட, பாராளுமன்ற கூட்டையும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கோரிக்கைகள் சூழ நடத்தும் வேலை நிறுத்தங்களையுமே சோசலிசத்துக்கான பாதையாகக் கருதினர்.
13-2. லங்கா சம சமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத நோக்குநிலையின் விளைவுகள், தீவில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு பெரும் நெருக்கடியாய் அமைந்த 1953 ஆகஸ்ட் நிகழ்வுகளில் ஏற்கனவே வெளிக் காட்டப்பட்டிருந்தன. 1952 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுதியான வெற்றியை பெற்றது. ஐக்கியப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சி ஆசனங்களை இழந்ததோடு, 1951ல் S.W.R.D.பண்டாரநாயக்கா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஆரவாரமின்றி முதலாவதாக காட்சிக்கு வந்தது. எவ்வாறெனினும், ஒரு ஆண்டுக்குள், கொரிய யுத்தத்தின் முடிவினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் தூண்டிவிடப்பட்ட, தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஒரு அரை-கிளர்ச்சி இயக்கத்தின் தாக்கத்தின் கீழ், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அநேகமாக பொறிவுக்குச் சென்றது. விலைவாசி அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன், லங்கா சம சமாஜக் கட்சி ஆகஸ்ட் 12 அன்று ஒரு நாள் ஹர்த்தாலுக்கு – பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் - அழைப்பு விடுத்தது. இதற்கு மக்களின் பதிலிறுப்பு லங்கா சம சமாஜக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. வேலை நிறுத்தத்தால் கொழும்பு ஸ்தம்பித்ததோடு தெற்கு மற்றும் மேற்கின் கிராமப் புறங்கள் வரை ஆர்ப்பாட்டங்கள் பரவின. பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாரின் வன்முறையை எதிர்த்து நின்று, வீதிகளை அடைத்ததுடன் இரயில் பாதைகளையும் கழற்றினர். பீதியடைந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் யுத்தக் கப்பலொன்றில் கூடியது, அது அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி, இராணுவத்தை வீதிக்கழைத்து, கட்சி அலுவலகங்களையும் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் அச்சகங்களையும் மூடி சீல்வைத்ததோடு ஊரடங்குச் சட்டத்தையும் அமுல் செய்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு அதிகமாகத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களின் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
13-3. அடுத்துவந்த லங்கா சம சமாஜக் கட்சியின் புனைகதைகள், 1953 ஹர்த்தாலை பயன்படுத்தி கட்சியின் புரட்சிகர பண்பை வெளிப்படுத்துவதற்காக இருந்தன. உண்மையில், அந்த வெகுஜன இயக்கத்துக்கு லங்கா சம சமாஜக் கட்சி தலைமையை வழங்கவில்லை. பிரச்சாரத்தை நிறைவேற்றுவதற்கு தொழிற்சாலைகள், புறநகரங்கள் மற்றும் கிராமங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை ஒழுங்கு செய்யவும் அழைப்பு விடுப்பது போன்ற, அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க அது தவறியது. மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஹர்த்தாலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்புவிடுத்ததோடு, தொடர்ந்தும் எதிர்ப்பை முன்னெடுத்தவர்களை அரச வன்முறைக்கு தனியாய் முகங்கொடுக்கவும் தள்ளினர். ஒரு நீண்ட கட்டுரையில், ஹர்த்தாலானது “தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் அடையாளத்தைக் கொண்ட” வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் என கொல்வின் ஆர். டி சில்வா தெரிவித்தார். ஆனால், “ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை இராஜினாமா செய்து புதிய பொதுத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கவே” இப்போது போராட வேண்டும் என அவர் அந்தக் கட்டுரையை முடித்தார். லங்கா சம சமாஜக் கட்சி அதன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு உதவிப் பொருளாக மட்டுமே ஹர்த்தாலை நோக்கியது. இதன் விளைவாக, வெகுஜன எதிர்ப்பு உணர்வை பண்டாரநாயக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்ததோடு, அவர் குறிப்பாக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைமைத்துவமின்மையினால் குழம்பிப்போயிருந்த சிங்கள கிராமப்புற மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது பண்டாரநாயக்கா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தபோது, லங்கா சம சமாஜக் கட்சி அதற்கு ஆதரவளித்தமையினால், பண்டாரநாயக்காவின் அரசியல் வளர்ச்சி மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. ஹர்த்தாலின் வீச்சினால் அதிர்ச்சியடைந்த, இலங்கை ஆளும் தட்டின் கணிசமான பகுதியினர், முதலாளித்துவ ஆட்சியை தூக்கிநிறுத்துவதற்கான ஒரு மாற்று வழிமுறையாக தமது ஆதரவை ஸ்ரீ.ல.சு.க.க்கு வழங்கினர். பண்டாரநாயக்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தார் என்பதோடு அவரது ஸ்ரீ.ல.சு.க. ஹர்த்தாலில் பங்குபெறவும் இல்லை என்றபோதும் ஹர்த்தால் இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு அச்சாணி போன்ற நபராக பண்டாரநாயக்காவை ஆக்கிவிட்டது.
13-4. ஹர்த்தாலின் எழுச்சியுடன், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உடனான “இடது ஐக்கியத்துக்காக” லங்கா சம சமாஜக் கட்சிக்குள் இருந்த ஈர்ப்பு உக்கிரமடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியுடன் ஒரு எதிர்த்துப் போட்டியிடாத தேர்தல் உடன்படிக்கைக்கு செல்லத் தவறியமையே கட்சியின் தோல்விக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியதும், சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் ஸ்ராலினிச அரசாங்கங்களை விமர்சிப்பதை லங்கா சம சமாஜக் கட்சி கைவிட வேண்டும் எனக் கோரியதுமான ஒரு போக்கு 1952 தேர்தலின் பின்னர் தோன்றியது. மூன்றாவது காங்கிரஸில் பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு வழியால் ஊக்குவிக்கப்பட்ட “ஐக்கிய” ஆதரவு உட்குழு, 1953 அக்டோபரில் நடந்த காங்கிரஸில், கட்சி “சோசலிச நாடுகளுடன்” “நிபந்தனையற்ற நேசத்துடன்” நடந்துகொள்ள வேண்டும் எனக் கோரி தீர்மானத் திருத்தமொன்றை முன்வைத்தது. அந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ராலினிச-சார்பு குழு அதில் இருந்து பிரிந்து, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கொண்டது.
13-5. இத்தகைய சூழ்நிலையிலேயே லங்கா சம சமாஜக் கட்சி தலைமை பகிரங்க கடிதத்துக்கு பதிலிறுத்தது. கனனின் கடிதத்தை லங்க சம சமாஜக் கட்சி நிராகரித்ததும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைவதற்கு மறுத்ததும் அரசியல்ரீதியாக குற்றத்தன்மை படைத்ததாய் இருந்தது ஏனென்றால் முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பப்லோவின் திருத்தல்வாதத்தின் ஸ்ராலினிச-சார்பு பண்பைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்,.தவிரவும் அது சற்று முன்னரே தனது சொந்த உறுப்பினர்கள் மத்தியில் பப்லோவாதத்தின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்திருந்தது. ஆனால், பகிரங்க கடிதம் விநியோகிக்கப்பட்ட முறைக்கு சட்ட மரபின் படி ஆட்சேபித்த லங்கா சம சமாஜக் கட்சி, ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவும் மறுத்துவிட்டது. லெஸ்லி குணவர்த்தனாவுக்கு கடிதமெழுதிய கனன், லங்கா சம சமாஜக் கட்சி தனது கட்சிக்குள் இருந்த ஸ்ராலினிச சார்புப் போக்கை வெளியேற்றியதைக் குறிப்பிட்டு, பின்னர் மேலும் சுட்டிக்காட்டியதாவது: “சர்வதேசியவாதிகள் என்ற வகையில், ஏனைய கட்சிகளிலும் , மற்றும் பொதுவாக சர்வதேசிய இயக்கத்திலும் , ஸ்ராலினிச சமரசவாதத்தின் பகிரங்கமான அல்லது மூடிமறைத்த வெளிப்பாடுகளின் விடயத்தில் நாம் ஒரேவகையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கடமைப்பாடு கொண்டிருக்கிறோம்.” [29]
13-6. வெகுஜன அழுத்தத்தின் மூலம் ஸ்ராலினிசக் கட்சிகளை புரட்சிகரப் பாதைக்குள் தள்ள முடியும் என்ற பப்லோவின் கூற்றின் தொலைவீச்சுக் கொண்ட பிரதி விளைவுகளை அடையாளங் கண்டு, லங்கா சம சமாஜக் கட்சியின் மத்திய குழு காலங்கடந்து 1954 ஏப்பிரலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “இந்தக் கருத்து, ஸ்ராலினிசம் சம்பந்தமாக ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடுகளை அடிப்படையில் திருத்துவதை நோக்கி செல்வது மட்டுமன்றி, ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடர்ந்தும் சுயாதீனமாக இருப்பதற்கான அனைத்து நியாயப்படுத்தல்களையும் மறுப்பதுமாகும்,” என அது பிரகடனம் செய்திருந்தது. ஆயினும் நடைமுறையில் லங்கா சம சமாஜக் கட்சி அரசியல் தெளிவுபடுத்தல்களையும் கோட்பாட்டையும் பலியிட்டு சோசலிச தொழிலாளர் கட்சியும் அனைத்துலகக் குழுவும் முகங்கொடுத்த சிரமங்களை மேலும் அதிகரித்து பப்லோவாதிகளுடனான “ஐக்கியத்தை” பேணுவதற்கு சமரசங்களையும் சூழ்ச்சிகளையும் செய்ய முனைந்தது. இறுதியில், லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் பப்லோவாதத்துக்கு அடிபணிந்தனர். 1954ல் அவர்கள் பப்லோவாதிகளின் நான்காவது காங்கிரஸில் பங்குபற்றியதோடு, அதன் மூலம் அதற்கு அங்கீகாரத்தை வழங்கி, அதன் தீர்மானங்களுக்கு சில திருத்தங்களுடன் ஆதரவளித்ததோடு, பப்லோவாத சர்வதேச செயலகத்திலேயே தொடர்ந்தும் இருந்தனர். தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தவிருந்த முற்றிலும் சந்தர்ப்பவாத உறவின் ஆரம்பமாக அது இருந்தது. லங்கா சம சமாஜக் கட்சிக்கு தேசிய அரங்கிலான தனது சீர்திருத்தவாத அரசியலுக்கு நற்சான்றிதழ் போன்று ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொள்ள முடிந்தது, அதேநேரத்தில் சர்வதேச செயலகத்திற்கோ ஆசியாவில் “ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சியை” கொண்டிருப்பதாக பெருமை பாராட்டிக்கொள்ள முடிந்தது. பப்லோவாதத்தை லங்கா சமசமாஜக் கட்சி ஆதரித்தமை, ட்ரொட்கிசத்துக்கும் மற்றும் அதன் மூலம் குறிப்பாக ஆசியாவில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரான ஒரு மோசமான தாக்குதலாக இருந்தது. லங்கா சம சமாஜக் கட்சி அல்லது அதன் ஒரு பகுதியேனும், ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், அது பெருமளவில் அனைத்துலகக் குழுவை பலப்படுத்தி, பிராந்தியம் பூராவும், குறிப்பாக இந்தியாவில் அதன் வேலைகளை முன்னேற்றியிருக்கும் என்பதுடன் மாவோவாதத்தின் பெருந்தீமையான செல்வாக்குக்கு ஒரு சக்திவாய்ந்த முறிப்பு மருந்தாகவும் செயற்பட்டிருக்கும்.
[மூலப்பிரதியில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; Trotskyism Versus Revisionism, பகுதி 2, பக். 89]