முன்னோக்கு

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாய் இதே தினத்தில், 1940 ஆகஸ்டு 20 அன்று, ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரால் ஒரு பனிக் கோடரி கொண்டு தாக்கப்பட்டார். ட்ரொட்ஸ்கி கடைசியாக நாடுகடத்தப்பட்டிருந்த மெக்சிகோவில் கோயோகானில் இருக்கும் அவரது வீட்டில் இந்தத் தாக்குதல் நடந்தது. அதற்கடுத்த நாள் அந்த மகத்தான புரட்சியாளர் தனது 60 ஆவது வயதில் காயங்களினால் இறந்து போனார்.

1933 இல் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி, 1936-39 இல் ஸ்பானிய புரட்சி தோற்கடிக்கப்பட்டமை, 1936-38 இல் மாஸ்கோ விசாரணைகள் மற்றும் பெரும் பயங்கரம், மற்றும் 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவை உட்பட சர்வதேச அரசியல் பிற்போக்குத்தனம் உச்சகட்டத்தில் இருந்தவொரு சமயத்தில் ட்ரொட்ஸ்கியின் கொலை நிகழ்ந்தேறியது. ட்ரொட்ஸ்கியின் படுகொலை என்பது ஸ்ராலினிச அதிகாரத்துவம் - இது, ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, ஏகாதிபத்தியத்தின் ஒரு அரசியல் முகமையாக இருந்தது - ட்ரொட்ஸ்கி போராடிய மார்க்சிச கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்ட அபாயத்திற்கு அளித்த பதிலிறுப்பாக இருந்தது. ட்ரொஸ்கி உயிருடன் இருந்தவரை, ஸ்ராலின் தனது மிகவும் சமரசமற்ற எதிரியுடன் போட்டி போட வேண்டியதாய் இருந்தது.

நம்பமுடியாத அளவுக்கு அனுகூலமற்ற நிலைமைகள் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் ட்ரொட்ஸ்கி உருவாக்கிய நான்காம் அகிலம் அவரை வீழ்த்திய படுகொலையாளர்களைத் தாண்டி வாழ்ந்து வந்திருக்கிறது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று, சர்வதேச சோசலிசத்தின் வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் தனித்துவமான இடம் விவாதத்திற்கு இடமில்லாததாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் பாதையில் தாக்கம் ஏற்படுத்திய மனிதராக மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கம் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகின்ற நிலையில் அதனை நோக்குநிலைப்படுத்துவதற்கான ஒரு அத்தியாவசிய வழிகாட்டியாக அவரது எழுத்துக்களும் சிந்தனைகளும் செயல்படுகின்ற வகையில், ஒரு உலக வரலாற்று நாயகனாக முன்னிலும் தெளிவாக அவர் தோன்றுகிறார்.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையும் கதியும் 20 ஆம் நூற்றாண்டின் முதல்பாதியின் மிகப்பெரும் நிகழ்வுகளுடன் பிரிக்கவியலாமல் பின்னியிருந்தன. முதலாளித்துவத்தின் கொள்ளைகளுக்கும் முதலாம் உலகப் போரின் படுபயங்கரமான படுகொலைகளுக்கும் எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு பிரம்மாண்டமான மேலெழுச்சியின் உச்சமான ரஷ்யப் புரட்சியில் ட்ரொட்ஸ்கியும் லெனினும் பிரதான தலைவர்களாய் இருந்தனர். இந்தப் புரட்சிக்கான அரசியல் தத்துவமும் கூட 1905 ரஷ்யப் புரட்சியின் மத்தியில் செதுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தினால் வழங்கப்பட்டதாகும். ரஷ்யா போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஜனநாயகக் கடமைகள் ஒரு உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட இயலும் என்று அது விளக்கியது.

1917 அக்டோபர் நிகழ்வுகளால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர்’ அரசை ஒழுங்கமைப்பதிலும் பாதுகாப்பதிலும் ட்ரொட்ஸ்கி ஆறு வருடங்கள் ஒரு அசைக்கமுடியாத பாத்திரத்தை ஆற்றினார். சோவியத் ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான முதல் ஆணையராகவும் (கமிஸார்) செம்படையின் ஸ்தாபகராக மற்றும் தளபதியாகவும் அவர் ஆற்றிய பாத்திரமும் இதில் அடங்கும்.

ரஷ்யப் புரட்சியில் வகித்த பாத்திரத்திற்காக - அது அவருக்கு 38 வயதாக இருக்கும்போது நடந்தது - தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிச இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவராக ட்ரொட்ஸ்கி வரலாற்றில் ஒரு இடத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும். ஆனாலும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் தான் - இதன் உச்சமாக நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது - தன்னுடைய மிக முக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமான அரசியல் பங்களிப்பை தான் ஆற்றியதாக ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதினார்.

ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் எழுந்த மோதலானது இரண்டு தனிநபர்களுக்கு இடையில் தனிநபர் அதிகாரம் குறித்த மோதலால் எழுந்த ஒரு அகநிலையான சண்டை அல்ல, மாறாக அது இரண்டு சமரசப்படவியலாத அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இடையில் நிகழ்த்தப்பட்ட ஒரு அடிப்படையான யுத்தமாகும். ஸ்ராலினாலும், அவர் உருவடிவாய் திகழ்ந்த அதிகாரத்துவ சர்வாதிகாரத்தினாலும் அதிகாரம் வலுப்படுத்திக் கொள்ளப்பட்டதானது ரஷ்ய புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருளாக அமைந்ததல்ல. மாறாக, உலகப் புரட்சியின் தோல்விகளால் தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய ஒரு தொழிலாளர்’அரசின் குறிப்பான நிலைமைகளில் இருந்து அது அபிவிருத்தி கண்டது. ஏழு ஆண்டுகள் நடந்த போர் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவிலான உள்நாட்டுப் போர் இரண்டும் புரட்சியின் சமூக அடித்தளமான தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பிரம்மாண்டமான சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. லெனின் நோய்வாய்ப்பட்டதும் மரணித்ததும் ஸ்ராலின் அதிகாரத்திற்கு எழுந்ததற்கு வழிவகையளித்து விட்டிருந்தது. லெனின் தனது இறுதி ஆண்டில், சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவச் சீரழிவை எதிர்த்துப் போராட இணைந்து நடவடிக்கையில் ஈடுபட ட்ரொட்ஸ்கிக்கு ஒரு அழைப்பை விடுத்திருந்தார்.

தொழிலாளர்களிடமிருந்து அதிகாரத்தை தட்டிப்பறித்து ரஷ்ய புரட்சிக்கும் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலான அத்தியாவசியமான இணைப்பை மறுதலித்த ஒரு பழமைவாத எந்திரத்தின் நலன்களை ஸ்ராலின் எடுத்துவைத்தார். முதன்முதலில் 1924 இல் விவரிக்கப்பட்ட ”தனியொரு நாட்டில் சோசலிச” வேலைத்திட்டமானது ரஷ்யாவின் எல்லைகளுக்கு வெளியிலான புரட்சியில் இருந்து சுயாதீனமாய் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் எட்டப்பட முடியும் என்ற பொய்யான மற்றும் மார்க்சிச-விரோத கூற்றினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் கீழ்ப்படியச் செய்யப்படுவதை அங்கீகரித்ததோடு 1926 இல் பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம் தோல்வி காணும் நிலையையும் 1925-27 இல் சீனப் புரட்சி நசுக்கப்படும் நிலையையும் உருவாக்கிய கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கும் சேவைசெய்தது. “அனைவரும் எப்போதும் புரட்சிக்காக என்றில்லாமல், தனக்கென்றும் கொஞ்சம்” என்பதான மனோநிலை “நிரந்தரப் புரட்சி ஒழிக” என்பதாக மொழியாக்கம் செய்யப்பட்டது என்பதை ட்ரொட்ஸ்கி பின்னாளில் தனது சுயசரிதையில் நினைவுகூர்ந்தார்.

ஸ்ராலினிசத்தின் மீதான தனது விமர்சனத்தில் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த உலக சோசலிசப் புரட்சி தத்துவமானது ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் நடைமுறைவாத சூழ்ச்சித்தந்திரங்களை விடவும் அளவிடமுடியாத அளவு தொலைநோக்கு படைத்ததாக நிரூபணமானது. 1923 இல் அவர் ஸ்தாபித்திருந்த இடது எதிர்ப்பு அணியானது நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில், சோவியத் ஒன்றியத்திற்குள் சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம் என்பது உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியை சார்ந்துள்ளது என்று வலியுறுத்தியது. 1930 இல் எழுதிய ஒரு பத்தியில் (இன்று அது இன்னும் கூடுதல் வலிமையுடன் பொருந்துகிறது) ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

தேசிய எல்லைகளுக்குள்ளாக சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வது என்பது சிந்திக்கமுடியாத ஒன்றாகும். முதலாளித்துவ சமூகம் உருவாக்கிய உற்பத்தி சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்புக்குள் இனியும் சமரசப்படுத்தி வைக்க முடியாததாக இருக்கிறது என்ற உண்மைதான் அதன் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் ஏகாதிபத்திய போர்களும், இன்னொரு பக்கத்தில் முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் குறித்த கற்பனாவாதமும் இதில் இருந்தே பின்தொடர்கின்றன. சோசலிசப் புரட்சியானது தேசியக் களத்தில் தொடங்குகிறது, சர்வதேசக் களத்தில் கட்டவிழ்கிறது, உலகக் களத்தில் நிறைவு பெறுகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக ஆகிறது; நமது ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலும் புதிய சமூகத்தின் இறுதியான வெற்றியில் தான் அது நிறைவு பெறுகிறது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு, சோசலிச சர்வதேசியவாதத்தை மறுதலிக்க, ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கை மழுங்கடிப்பதையும் அவர் போராடி வந்த முன்னோக்கிற்கும் ரஷ்ய புரட்சிக்கே வழிகாட்டியிருந்த முன்னோக்கிற்கும் இடையிலிருந்த தொடர்பினை மறுப்பதையும் நோக்கம் கொண்ட ஒரு வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பிரச்சாரம் அவசியமாக இருந்தது. ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராய் முன்னெப்போதையும் விட வன்முறையான பிரச்சாரம் ஒன்றும் இதனுடன் இணைசேர்த்துக் கொள்ளப்பட்டது.

1927 நவம்பரில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டார், அதனைத் தொடர்ந்து ஒருமாதம் கழித்து இடது எதிர்ப்பின் அத்தனை ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர். 1928 ஜனவரியில் இன்றைய கஜகஸ்தான் மலைகளில் அமைந்திருக்கும் அல்மா அட்டாவிற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அதற்கு ஒரு வருடத்திற்கு பின்னர், 1929 பிப்ரவரியில் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டு, துருக்கியின் பிரிங்கிபோவில் தற்காலிக இருப்பிடத்தில் தங்கினார். ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டு குரோதத்தின் காரணத்தால் “விசா கிடைக்கவியலாத ஒரு கிரகம்” என்று பின்னாளில் அவர் குறிப்பிட்ட ஒரு நிலைக்கு முகம்கொடுத்த ட்ரொட்ஸ்கி, 1933 இல் துருக்கியில் இருந்து பிரான்சுக்கும், 1935 இல் அங்கிருந்து நோர்வேக்கும், பின் இறுதியாக 1937 இல் மெக்சிகோவுக்கும் இடம்பெயரத் தள்ளப்பட்டார்.

ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் அவர் மெக்சிகோவிற்கு வந்தடைந்ததற்கும் இடையிலான எட்டு ஆண்டுகளில், தொழிலாள வர்க்கமானது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களது துரோகங்களால் உருவாக்கப்பட்டிருந்த தோல்விகளின் ஒரு வரிசையை அனுபவித்திருந்தது. 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் வெற்றி கண்டதைத் தொடர்ந்து பிரான்சு மற்றும் ஸ்பெயினில் புரட்சிகர எழுச்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுவது நடந்தேறியது. அங்கே தொழிலாள வர்க்கமானது “மக்கள் முன்னணி” என்ற பதாகையின் கீழ் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஆட்சிக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டது.

ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் - ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த மிகப் பிரம்மாண்டமான பேரழிவு கம்யூனிச அகிலத்தின் நாசகரமான கொள்கைகளால் சாத்தியமாக்கப்பட்டிருந்தது - ஒரு புதிய நான்காம் அகிலத்தை உருவாக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார். தேசிய அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதற்கான ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக மட்டுமே ரஷ்ய புரட்சியின் தேட்டங்கள் பாதுகாக்கப்பட முடியும் என்று அவர் எச்சரித்தார்.

ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்த நான்காம் அகிலத்தின் மீதான அச்சத்தால் மிரண்ட ஸ்ராலின், சோவியத் ஒன்றியத்துக்குள்ளும் சரி சர்வதேச அளவிலும் சரி இன்னும் அதிக மிருகத்தனமான வன்முறையிலும் ஒடுக்குமுறையிலும் இறங்கினார். 1936-38 மாஸ்கோ விசாரணைகள் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான அத்தனை அரசியல் எதிர்ப்பின் மீதும் செலுத்தப்பட்டன என்றாலும், அவற்றின் பிரதான இலக்குகளாக ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்களே ஆகியிருந்தனர். ரஷ்யாவில் புரட்சிகர கலாச்சாரத்தின் ஒரு செறிந்த பாரம்பரியத்தின் விளைபொருளாக இருந்த நூறாயிரக்கணக்கிலான சோசலிஸ்டுகள் ஒரு அரசியல் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆட்சியை பாதுகாக்க பாரிய வன்முறை அவசியமாக இருந்தது என்பதானது ஸ்ராலினின் ஆட்சி ரஷ்ய புரட்சியின் ஒரு தொடர்ச்சியாக இல்லை, மாறாக அதன் சவக்குழி தோண்டுபவராக இருந்தது என்பதன் மறுக்கமுடியாத ஆதாரமாக அமைந்தது. ஸ்ராலினிசத்திற்கும் உண்மையான மார்க்சிசத்திற்கும் இடையில் பிரித்து நிற்பது “வெறுமனே இரத்தத்திலான ஒரு கோடு அல்ல மாறாக முழுமையான ஒரு இரத்த ஆறு ஆகும்” என்று ட்ரொட்ஸ்கி 1937 இல் எழுதினார்.

இந்த பொய் புனைவு விசாரணைகளையும் ஸ்ராலினிசத்தின் அரசியல் குற்றங்களையும் அம்பலப்படுத்த ஒரு துணிச்சலான பிரச்சாரத்தை ட்ரொட்ஸ்கி நடத்தினார். இதற்கான பதிலிறுப்பாக ஸ்ராலினிச GPU (அரசின் இரகசிய போலிஸ்) ட்ரொட்ஸ்கியின் மிக நெருக்கமான ஆதரவாளர்களையும் சக சிந்தனையாளர்களையும் சரீரரீதியாக இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்டு வேலை செய்தது. ஸ்ராலினிச முகவர்களால் கொல்லப்பட்டவர்களில், 1937 ஜூலையில் கொல்லப்பட்ட ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலர்களில் ஒருவரான எர்வின் வொல்ஃப், 1937 செப்டம்பரில் கொல்லப்பட்ட இக்னேஸ் ரேய்ஸ் (இவர் GPUவில் இருந்து வெளியேறி ட்ரொட்ஸ்கிக்கு தன் ஆதரவை அறிவித்தவர்), 1938 பிப்ரவரியில் கொல்லப்பட்ட ட்ரொட்ஸ்கியின் மகனும் நெருக்கமான சகாவுமான லியோன் செடோவ், மற்றும் 1938 ஜூலையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமண்ட் ஆகியோரும் அடங்குவர்.

பிரயத்தனம் செய்து செடோவின் நம்பிக்கையைப் பெற்று அவரது செயலராகப் பணியாற்றி வந்த மார்க் சப்ரோவ்ஸ்கி உள்ளிட்ட, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவி விட்டிருந்த GPUவின் முகவர்களால் தான் இந்தப் படுகொலைகள் சாத்தியமாக முடிந்திருந்தது.

எப்படியாயினும், ட்ரொட்ஸ்கி உயிருடன் இருந்தவரை, ஸ்ராலினிச ஆட்சியானது ஓய்வு கொள்ள முடியவில்லை. விக்டர் செர்ஜ் 1937 இல் எழுதினார்: “வெறுப்பு மற்றும் பயம் என்பதைத் தவிர ஆட்சியின் கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கும் இந்த பைத்தியக்காரத்தனமான நாடுகடத்தல்களுக்கு வேறு எந்த விளக்கமும் இருக்க முடியாது: ஒரு முன்னெச்சரிக்கையாக பதிலீட்டு அணி சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. வயதான மனிதர் மட்டும் தான் எஞ்சியிருக்கிறார்: அந்த வயதான மனிதர் வாழ்கின்ற வரையிலும், வெற்றிகண்ட அதிகாரத்துவத்திற்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.”

இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தான் கிளெமெண்ட் கொலை செய்யப்பட்டிருந்தது உட்பட, அசாதாரண கடின நிலைமைகளுக்கு மத்தியிலும், நான்காம் அகிலமானது தனது ஸ்தாபக காங்கிரசை 1938 செப்டம்பரில் நடத்தியது. ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டிருந்த ஸ்தாபக ஆவணம் எச்சரித்தது: “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான புறநிலை அவசியங்கள் ‘கனிந்து’ இருப்பது மட்டுமல்ல, கொஞ்சம் அழுகல் நாற்றம் அடிக்கவும் கூடத் தொடங்கி விட்டது. ஒரு சோசலிசப் புரட்சி நடக்கவில்லையென்றால், அடுத்து வரும் வரலாற்றுக் காலகட்டத்தில், ஒட்டுமொத்த மனிதகுல கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது. இப்போது பாட்டாளி வர்க்கத்தின், அதாவது பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப்படையின் முறையாகும். மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடியானது புரட்சிகரத் தலைமை நெருக்கடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.”

ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலானது புரட்சிகர எழுச்சிகளின் ஒரு அலையை பற்றவைக்க மீண்டுமொருமுறை அச்சுறுத்தியது. துல்லியமாக இந்தக் காரணத்தினாலேயே உலக ஏகாதிபத்தியமானது, அதன் ஸ்ராலினிச முகவர்களின் மூலமாக, நான்காம் அகிலத்தின் தலைமையை தலைசீவ முனைந்தது. 1938 அக்டோபரில் எழுதிய ஒரு கட்டுரையில் ட்ரொட்ஸ்கி, வரவிருந்த போருக்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது செலுத்தப்பட்ட வன்முறைக்கும் இடையிலிருந்த தொடர்பை தேற்றம்செய்து காட்டினார்:

சென்ற போரின் தொடக்கத்தில், ஜோன் ஜோரெஸ் படுகொலை செய்யப்பட்டார், போரின் முடிவில் கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லுக்செம்பேர்க் கொல்லப்பட்டனர்: போர் வெடிப்பதற்கு முன்பாய் உலக அளவில் சர்வதேசவாதிகளை இல்லாதொழிக்கும் வேலை ஏற்கனவே ஆரம்பமாகி விட்டிருக்கிறது. இனியும் ஒரு ‘மகிழ்ச்சிகரமான விபத்து’ மீது தங்கியிருக்க ஏகாதிபத்தியத்திற்கு அவசியமில்லாது போயிருக்கிறது. ஸ்ராலினிச மாஃபியாவில் புரட்சியாளர்களை திட்டமிட்டு அழித்தொழிப்பதற்காகவே ஒரு ஆயத்த-நிலை சர்வதேச முகமை அதனிடம் இருக்கிறது. ஏகாதிபத்தியமானது தனது ஸ்ராலினிச குண்டர்கள் மூலமாக, போரின் தருணத்தில் அதற்கான மரண அபாயம் எந்த திசையில் இருந்து அச்சுறுத்தவிருக்கிறது என்பதை சமிக்கை காட்டுகிறது. ஏகாதிபத்தியவாதிகள் தவறாகப் புரிந்திருக்கவில்லை.

1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வெடித்ததானது, உலக கருத்து ஐரோப்பாவிலான பேரழிவின் மீது குவிந்திருந்த நிலையில், ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான பிரச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஸ்ராலினிச ஆட்சியால் பார்க்கப்பட்டது. ஸ்ராலினிச பெயிண்டரான டேவிட் அல்பாரோ சிகுரோஸ் தலைமையிலான ஒரு படுகொலை அணியினால் முதலில் 1940 மே 24 அன்று ஒரு படுகொலை முயற்சி நடத்தப்பட்டது.

ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தலியாவும் இந்தத் தாக்குதலில் உயிர்தப்பி விட்டனர், ஆனாலும் இது கடைசி முயற்சியாக இருக்காது என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க புறநிலைத்தன்மையுடன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: ”நான் இந்த உலகில் வாழ்வது விதியின் படி அல்ல மாறாக விதிக்கு ஒரு விலக்காக”. “நாமிருப்பதைப் போன்ற ஒரு பிற்போக்குத்தன சகாப்தத்தில், ஒரு புரட்சியாளன் நீரோட்டத்திற்கு எதிராய் எதிர்நீச்சல் போட நிர்ப்பந்தம் பெறுகிறான். என்னால் இயன்ற அளவு இதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் உலக பிற்போக்குத்தனத்தின் அழுத்தமானது எனது சொந்த வாழ்க்கையின் கதியிலும் எனக்கு நெருக்கமானவர்களின் கதியிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. இதில் எனது கைங்கரியத்தால் நேர்ந்ததாக நான் எதனையும் காணவில்லை; வரலாற்றுச் சூழல்களின் பின்னல்களின் விளைவாகவே இது இருக்கிறது.”

அதன்பின் 1940 ஆகஸ்ட் 20 அன்று, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு ஆதரவாளராக நடித்த ஒரு ஸ்ராலினிச முகவரான மெக்காடர் மூலம் ட்ரொட்ஸ்கி வீழ்த்தப்பட்டார்.

1975 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் பின்னாலிருந்த சூழல்கள் குறித்த ஒரு விசாரணையை தொடக்கியது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் GPU எந்த மட்டத்திற்கு ஊடுருவியிருந்தது என்பதை அந்த விசாரணை அம்பலப்படுத்தியது. இந்த விசாரணை சிப்ரோவ்ஸ்கியின் பாத்திரத்தை மட்டுமல்லாமல், சில்வியா காலன் (அமெரிக்காவின் அப்போதைய ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலரான ஜேம்ஸ் கனனின் ஒரு செயலராக வேலை செய்தவர்); ராபர்ட் ஷெல்டன் ஹார்ட் (முதல் படுகொலை முயற்சி நடந்த இரவு அன்று பாதுகாப்புப் பணியில் இருந்தவர்); மற்றும் ஜோசப் ஹான்சன் (ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அவரது செயலராகவும் பாதுகாவலராகவும் இருந்தவர், அத்துடன் வருங்காலத்தில் SWP இன் அரசியல் சீரழிவின் காலகட்டத்தில் அதன் தலைவராக இருந்தவர்) ஆகியோரது பாத்திரங்களையும் ஆவணப்படுத்தியது.

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையானது SWP யினாலும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து ஓடிய அரசியல் ஓடுகாலிகள் அத்தனை பேரினாலும் கண்டனம் செய்யப்பட்டது. ஆயினும், பின்னாளில் சோவியத் ஒன்றியத்தின் காப்பகங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆவணங்கள், இந்த மிகப் பெரும் அரசியல் குற்றங்களுக்கு தயாரிப்பு செய்வதிலும் அமல்படுத்துவதிலும் உதவிய தனிநபர்கள் குறித்து ICFI கூறிய முடிவுகள் அத்தனையையும் ஊர்ஜிதம் செய்திருக்கின்றன.

மரணத்தின் போது ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களது புரட்சிகர மேலெழுச்சியில் இருந்து எழுந்திருந்த செவ்வியல் மார்க்சிச பாரம்பரியம் ஒன்றின் மகத்தான பிரதிநிதியாக இருந்தார். அவரது படுகொலை சர்வதேச சோசலிச இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரும் அடியைக் கொடுத்தது, என்றபோதிலும் அவர் விட்டுச் சென்ற அரசியல் மற்றும் தத்துவார்த்த பாரம்பரியமானது நான்காம் அகிலத்தின் அபிவிருத்திக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துத் தந்தது. உண்மையில், ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து சோசலிச இயக்கம் முகம் கொடுக்கவிருந்த மையமான அரசியல் பிரச்சினைகளாக எழக் கூடிய கேள்விகளை சிந்தனையில் ஏற்றியிருந்தார்.

நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கையில் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மட்டுமன்றி, ஒரு சோசலிசப் புரட்சியை நடத்த தொழிலாள வர்க்கம் திறனற்றதாக இருந்தது என்ற முடிவுக்கு 1930களின் தோல்விகளில் இருந்து வந்திருந்த குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கிற்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது. சோசலிசத்துக்கான போராட்டத்தை தாங்கள் கைவிட்டதை நியாயப்படுத்துவதற்கு, அவர்கள், சோசலிச தலைமைக்கு துரோகம் செய்தததற்கான பொறுப்பை தொழிலாள வர்க்கத்தின் தலையில் கட்டினர். “தோல்விகளுக்கான காரணம் பாட்டாளி வர்க்கத்தின் சமூகப் பண்புநலன்களிலேயே அமைந்திருக்கிறது என்பதை உண்மை என நாம் ஒப்புக்கொள்வோமேயானால், நவீன சமூகத்தின் நிலை நம்பிக்கையிழந்த ஒன்றாகவே இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாகும்” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார்.

விரக்தியடைந்து சோசலிசத்தை மறுப்பதும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் மீண்டும் மீண்டும் எழுவதை காணக்கூடியதாக இருந்தது. ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கும் மற்றும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கும் ஏற்ற அடிபணிவான பப்லோவாதத்தின் வடிவத்தில் நான்காம் அகிலத்திற்குள்ளும் இவை வெளிப்பாடு கண்டன.

வர்க்கப் போராட்டம் தீவிரப்பட்டதன் மத்தியில், இந்த சக்திகள் கூர்மையாக வலது நோக்கி நகர்ந்து, கிரீஸில் அவர்கள் செய்திருப்பதைப் போல, அரசு அதிகார அங்கியை அணிவதற்கு முன்னிலும் நேரடியாக முனைகின்றன. ட்ரொட்ஸ்கி இருந்திருந்தால் இந்நாளின் சுயநலமான சுய-சிந்தனை பீடித்த உயர்-நடுத்தர-வர்க்க அடுக்குகளை தோலுரிக்க தனது இலக்கியத் திறனையும் அளவிடமுடியாத மதிநுட்பத்தையும் எங்ஙனம் எடுத்தாண்டிருப்பார், சிரிசா மற்றும் பொடேமோஸ் இன் நாற்றமெடுக்கும் அரசியலை எங்ஙனம் அம்பலப்படுத்தியிருப்பார், Slavoj Žižek போன்ற அரைவேக்காட்டு புத்திஜீவிகள் மற்றும் போலி-இடது பிரபலங்களை எங்ஙனம் வறுத்தெடுத்திருப்பார் என்பதை ஒருவர் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.

தலைமையின் தீர்மானகரமான பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி நிகரில்லாத தெளிவுடன் புரிந்து வைத்திருந்தார், வெளிப்படுத்தினார். ரஷ்ய புரட்சியின் சாதகமான சாதனை, மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த தோல்விகள் இரண்டில் இருந்தும் அவர் தேற்றம் செய்த அத்தியாவசிய படிப்பினை என்னவென்றால், சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு, ஆகவே, மனிதகுலம் தப்பிப்பிழைப்பதற்கு, புரட்சிகரத் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு சளைக்காத போராட்டம் அவசியம் என்பதாகும். இந்த அடிப்படை உண்மையானது அவரது மரணத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தப்படுவதானது.

புரட்சிகர தலைமை நெருக்கடியின் மையத்தன்மையின் அர்த்தமாவது அரசியல் போராட்டமே மிகப்பெரும் கடமை என்பதாகும். தனிநபர் சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் தமது அரசியல் பொறுப்புகளில் இருந்து நழுவியர்களை பொறுத்தவரை ட்ரொட்ஸ்கியிடம் ஏளனத்தைத் தவிர எதுவுமிருக்கவில்லை. “பிலிஸ்டைன்கள் தமது தனித்துவத்தை வெற்றிடத்தில் வலைவீசித் தேடட்டும்” என்று நான்காம் அகில ஸ்தாபிப்பை குறித்த ஒரு உரையில் அவர் அறிவித்தார். “ஆம், நமது கட்சி நம் ஒவ்வொருவரையுமே முழுமையாக எடுத்துக் கொள்கிறது தான். ஆனால் பதிலுக்கு அது நம் ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த மகிழ்ச்சியை தருகிறது: ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை கட்டுவதில் பங்குபெறுகிறோம் என்கிறதும், மனிதகுலத்தின் தலைவிதியின் ஒரு துகளை நமது தோளில் சுமக்கிறோம் என்கிறதும், அத்துடன் நமது வாழ்க்கை வீணில் வாழ்ந்து கழிக்கப்படவில்லை என்கிறதுமான நனவு தான் அந்த மகிழ்ச்சி ஆகும்.”

ட்ரொட்ஸ்கியின் நிலைத்து நிற்கும் முக்கியத்துவமானது அவரது வரலாற்று நற்பெயர் மீது தொடுக்கப்படும் இடைவிடாத தாக்குதலில் பிரதிபலிக்கிறது. ஆயினும் இன்று ட்ரொட்ஸ்கியை ஏசுவோர் வெற்றி பெற முடியாது. முதலாளித்துவத்தின் மரண ஓலம் குறித்த ட்ரொட்ஸ்கியின் ஆய்வை வரலாறு சரியென நிரூபணம் செய்திருக்கிறது. அவரது சிந்தனைகளின் சக்தியும் அவர் பிரதிநிதித்துவம் செய்த வரலாற்றுப் பாரம்பரியமும் காலத்தால் அழியாததாக நிலைத்து நிற்கிறது. அவர் ஸ்தாபித்த இயக்கம் மட்டுமே ஒரே உண்மையான உருப்படியான புரட்சிகரப் போக்காக நிரூபணமாகி இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல், ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவது என்ற எந்த அடிப்படையான பணிக்காக ட்ரொட்ஸ்கி போராடினாரோ அதுவே இன்றளவும் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் மையமான பிரச்சினையாக உள்ளது.

இந்த கோட்பாடுகள் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உயிர்வாழ்கின்றன. அவர் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினமானது அவரது நினைவுக்கு இதைப் போன்ற பொருத்தமானதொரு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு தருணமாக மட்டும் இருக்கக் கூடாது, மாறாக சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமாக இந்த நினைவுக்கு மரியாதை செய்வதற்கான ஒரு தருணமாகவும் இருக்க வேண்டும்.

Loading