தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்புச் சதியைத் தொடர்வதில் ட்ரம்பின் அடாவடித்தன அணுகுமுறைகளை ஒலிநாடா அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமை ஒரு மணி நேரம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்று ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டு முதலில் வாஷிங்டன் போஸ்ட்டால் ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக வெளியிடப்பட்ட அதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடென் வெற்றி பெற்றுள்ள ஜோர்ஜியா மாநிலத்தின் ஜனாதிபதி தேர்தல் முடிவைத் தனக்குச் சாதகமாக மாற்ற அம்மாநில தலைமைச் செயலரை மிரட்ட முயன்றார்.

“நான் 11,780 வாக்குகளைக் காண விரும்புகிறேன்,” என்று ஜோர்ஜியா அதிகாரி பிரட் ரஃபென்ஸ்பெர்கரிடம் ட்ரம்ப் கூறினார். இது அம்மாநிலத்தின் 16 தேர்வுக்குழு வாக்குகளை ஜெயித்துள்ள பைடெனின் 11,779 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாகும். ரஃபென்ஸ்பெர்கர் இந்த திட்டத்தை நிராகரித்து, வாக்கு முடிவுகளின்படி நிற்பதாக அவர் அறிவித்தார். இங்கே வாக்கு முடிவுகள் இரண்டு முறை மறுஎண்ணிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணும் எந்திரங்கள் மூலமாக செல்லும் எல்லா வாக்குச்சீட்டுக்களும் கைகளால் எண்ணப்பட்டிருப்பதும் இதில் உள்ளடங்கும்.

அவர்கள் மாநிலத்தில் வாக்கு மோசடி நடவடிக்கைகளைக் குற்றகரமாக மூடிமறைப்பதற்காக கிரிமினல் குற்றவழக்கு தொடுக்கப்படுமென ரஃபென்ஸ்பெர்கர் மற்றும் அவரின் அரசு வழக்குரைஞர் ரெயன் ஜேர்மனை ட்ரம்ப் அச்சுறுத்தினார். சொல்லப்போனால் அவர் நூறாயிரக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அம்மாநிலத்தில் ஜெயித்திருப்பதாகவும், தோல்வி சாத்தியமே இல்லை என்றும் அவர் வாதிட்டார். “ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள், நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்,” என்றவர் அறிவித்தார். “நீங்கள் மறுஎண்ணிக்கை செய்திருப்பதாக கூறுவதில், ம்ம், எதுவும் பிரயோஜனமில்லை, உங்களுக்கு தெரியும்.” ரஃபென்ஸ்பெர்கர் கூறினார்: “நல்லது, திரு. ஜனாதிபதி அவர்களே, உங்களுக்குக் கிடைத்திருக்கும் எண்ணிக்கை விபரங்கள் தவறு என்று நீங்கள் சவால் விடுக்கிறீர்கள்.”

ஃபுல்டன் உள்ளாட்சியின் (அட்லாண்டா) ஒரு பெண் தேர்தல் பணியாளரைக் குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், அடாவடித்தனமான ஒரு குண்டரின் மொழியைப் பயன்படுத்தினார். ஜனநாயகக் கட்சியின் பலம் வாய்ந்த ஒரு பகுதியின் வாக்குச்சீட்டு குவியலை அப்பெண்மணி மூன்று மடங்காக உயர்த்திவிட்டதாக ட்ரம்ப் பிரச்சாரக் குழு பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்த பின்னர், வலதுசாரி சமூக ஊடகங்களில் அப்பெண்மணி கேடுகெட்டவராக காட்டப்பட்டதுடன், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதோடு ட்ரம்ப் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக ரஃபென்ஸ்பெர்கர் மீளவலியுறுத்தியதும், ஜனாதிபதி பின்வருமாறு விடையிறுத்தார்:

“அப்படியானால் இங்கே நாம் என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே? எனக்கு 11,000 வாக்குகள் மட்டுந்தான் தேவை. ஃபெல்லாஸ், எனக்கு 11,000 வாக்குகள் தேவை. எனக்குச் சற்று ஓய்வூ கொடுங்கள். உங்களுக்கு ஏற்கனவே தெரியும், இது ஏற்கனவே ஏராளமாக உள்ளது, அல்லது இப்படியே போக விடலாம் என்றால் அது ஜோர்ஜியா வாக்காளர்களுக்கு நியாயமாக இருக்காது ஏனென்றால் என்ன நடந்தது என்பதை அவர்கள் பார்க்க இருக்கிறார்கள், என்ன நடந்தது என்பதை அவர்கள் பார்க்க இருக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், அந்த பெண் [தேர்தல் பணியாளரின் பெயர்] மற்றும் அவரின் அன்புக்குரிய மகள், மிகவும் அன்புக்குரிய அந்த இளம் பெண், நீங்கள் விரும்பும் எவரொருவரையும் நான் சந்திப்பேன், நிச்சயமாக.”

இது அந்த தேர்தல் பணியாளரின் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், அவருக்கு எதிராகவும் அவர் குழந்தைக்கு எதிராகவும் உடல்ரீதியில் வன்முறைக்கான ஓர் அச்சுறுத்தலுக்குக் குறைவானதில்லை, இது அமெரிக்காவின் ஜனாதிபதியிடம் இருந்து, பரந்த இராணுவ மற்றும் பொலிஸ் எந்திரத்தின் "தலைமை தளபதியிடம்" இருந்து, அதிகரித்தளவில் ஒரு பாசிசவாத இயக்கத்தின் நிறத்தை ஏற்றுள்ள குடியரசுக் கட்சியின் தலைவரிடம் இருந்து வருகிறது.

இந்த தொலைபேசி உரையாடல் ஒலிநாடாவை யார் கசியவிட்டார்கள் என்பது பகிரங்கமாக்கப்படவில்லை. முடிவாக பார்த்தால், அது, ட்ரம்ப் அவரின் வன்முறை அச்சுறுத்தல்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலும், ஜோர்ஜியாவின் அதிகாரிகளாக இருக்கக்கூடும். அதேயளவுக்கு அனேகமாக, அந்த கசிவு இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கு உள்ளிருந்தே கூட வந்திருக்கலாம், அது எல்லா அமெரிக்க தொலைபேசி உரையாடல்களையும் கண்காணிக்கிறது என்பதுடன் முன்னதாக உக்ரேன் ஜனாதிபதி உடனான ட்ரம்பின் தொலைபேசி அழைப்பைக் கசிய விட்டிருந்தது, இது தான் ஓராண்டுக்கு முன்னர் அவர் மீதான பதவிநீக்க குற்றவிசாரணைக்கு இட்டுச் சென்றது.

அது எங்கிருந்து வந்திருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பைத் தூக்கிவீசி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் சூழ்ச்சிக்காக டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கில் இழுக்க —கூடுதலாக தேவைப்படுமானால்— அந்த ஒலிநாடாவே போதுமான ஆதாரமாக உள்ளது. வெள்ளை மாளிகையின் தலைமை தளபதி மார்க் மீடொவ்ஸ் அவரின் சக-சதிகாரராக உள்ளடங்கக்கூடும், இவரும் அந்த அழைப்பில் பங்கெடுத்திருந்தார், ட்ரம்ப் தேர்தல் குழுவின் பல வழக்கறிஞர்கள் மற்றும் உதவியாளர்களும் உள்ளடங்கக்கூடும்.

குடியரசுக் கட்சியின் வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் குற்றத்திற்கு உடந்தையானவர்களாக இணைகிறார்கள். வாக்குச்சீட்டுக்களைப் பெற்று கணக்கிடுவதற்காக ஜனவரி 6 இல் காங்கிரஸ் சபையில் ஒரு கூட்டு அமர்வு தொடங்கும் போது, பல மாநிலங்களில் பதியப்பட்ட தேர்வுக்குழு வாக்குகளைச் சவால்விடுப்பதற்கு ஆதரவளிப்பதாக, ஞாயிற்றுக்கிழமை, பிரதிநிதிகள் சபையின் குறைந்தபட்சம் 140 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.

குடியரசுக் கட்சியின் ஒரு டஜன் செனட்டர்கள், அவர்களும் அதுபோன்றவொரு சவாலை ஆதரிப்பதாக கூறி அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அரசியலமைப்பின் கீழ், எந்தவொரு மாநிலத்தின் தேர்வுக்குழு வாக்குகள் மீதும் சவால் விடுவதற்கு குறைந்தபட்சம் பிரதிநிதிகள் சபையின் ஒரு உறுப்பினர் மற்றும் செனட் சபையின் ஒரு உறுப்பினர் ஆதரிக்க வேண்டும். பின்னர் அவ்விரு அவைகளும் தனித்தனியாக சந்தித்து, அந்த சவால்கள் மீது வாக்கெடுப்பு நடத்தும். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையில் உள்ளனர் என்பதோடு செனட் சபையில் உள்ள பல குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே பைடெனின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதால், இத்தகைய வாக்கெடுப்புகள் தோல்வியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெரிய வித்தியாசத்திற்கு நெருக்கமாக, ஏழு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு தோல்விக்குப் பின்னரும் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார் என்பதும், அவரது சொந்த கட்சியில் பெரும்பான்மையினர் தேர்தலை செல்லாததாக ஆக்கவும் முடிவை மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள் என்பதும் அமெரிக்க வரலாற்றில் முன்நிகழ்ந்திராத ஒன்றாகும்.

தேர்தல் மீது ட்ரம்பின் சவாலை ஆதரிக்கும் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்களும் செனட்டர்களும் வெளியிட்ட அறிக்கைகள் வெளிப்படையாகவே ஓர் எதேச்சதிகார அரசியல் முன்னோக்கைத் தழுவி உள்ளன. சான்றாக, டெக்சாஸ் பிரதிநிதி லூயிஸ் கோமெர்ட் பதிவு செய்த சட்டவழக்கானது, புதன்கிழமை நடக்கவுள்ள காங்கிரஸ் சபை கூட்டு அமர்வில் தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள துணை ஜனாதிபதி பென்ஸிற்கு ஒரு மாநிலத்தின் வெற்றியாளர்களைத் தூக்கி வீசவும், போட்டி வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும், அல்லது அம்மாநிலத்தின் தேர்வுக்குழு வாக்குகளை முற்றிலுமாக நிராகரிக்கும் அதிகாரம் இருப்பதாக அறிவித்தது.

அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள் அசாதாரண மட்டத்தில் நிலவும் இந்த பதட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை வாஷிங்டன் போஸ்டில் வெளியான கடிதமும் வெளிப்படுத்தி காட்டியது, பதவியிலிருக்கும் மொத்தம் பத்து பாதுகாப்புத்துறை செயலர்களும் ட்ரம்பின் மோசடி வாதங்களை நிராகரித்து, புதன்கிழமை காங்கிரஸ் சம்பிரதாயமான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டு, தேர்வுக் குழுவில் பைடெனின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் பெரும்பாலான பகுதி தேர்தலில் எந்தவிதத்தில் தலையிடுவதற்கு எதிராகவும் எச்சரித்து உயர்மட்ட பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை நோக்கி உள்ளது. “தேர்தல் பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்க இராணுவப் படைகளை ஈடுபடுத்தும் முயற்சிகள் நம்மை அபாயகரமான, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான பகுதிக்குக் கொண்டு செல்லும்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “அதுபோன்ற விசயங்களை வழிநடத்தும் அல்லது முன்னெடுக்கும் பொதுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் நமது குடியரசின் மீது அவர்களின் நடவடிக்கைகள் ஏற்படுத்தும் படுபாதக விளைவுகளுக்காக, குற்ற தண்டனைகளை முகங்கொடுக்கும் சாத்தியக்கூறு உள்ளடங்கலாக, கணக்கில் கொண்டு வரப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டது.

அதில் கையெழுத்திட்டிருந்த பத்து பேரில் மார்க் எஸ்பரும் ஒருவர் என்பதைக் கொண்டு பார்த்தால் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் விட மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. மார்க் எஸ்பர், கடந்த மே 25 இல் பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் வெடித்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாடங்களை ஒடுக்க ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவதற்கான ட்ரம்பின் அழைப்பை எதிர்த்தன் பாகமாக, சமீபத்தில் நவம்பரில் ட்ரம்பால் பணியிலிருந்து நீக்கப்பட்டவராவார். ட்ரம்பைப் பதவியில் வைத்திருக்க தேர்தலுக்குப் பிந்தைய ஒரு ஆட்சி சதியை நடத்துவதற்காக —கடந்த கோடையில் ட்ரம்ப் அச்சுறுத்தியவாறு— கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பிரயோகிப்பது மீது வெள்ளை மாளிகையில் வெளிப்படையாகவே விவாதங்கள் நடக்கின்றன.

எஸ்பருக்கு அப்பாற்பட்டு, அதில் கையெழுத்திட்டிருந்தவர்களில் அவருக்கு முன்பிருந்த ஓய்வு பெற்ற தளபதி ஜேம்ஸ் மாட்டீஸ்; ஈராக் போருக்கு சக வடிவமைப்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ஸ்ஃபீல்ட்; அந்த குற்றத்தில் அவர் கூட்டாளியாக இருந்தவரும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு துணை ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னதாக ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யு. புஷ்ஷின் கீழ் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவருமான டிக் செனே ஆகியோரும் உள்ளடங்குவர். ரோபர்ட் கேட்ஸ், வில்லியம் பெர்ரி, லியோன் பனெட்டா, அஷ்டன் கார்டர், சக் ஹெகல் மற்றும் வில்லியம் கோஹென் ஆகியோரும் அவர்களுடன் இணைகின்றனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி, இரண்டு கட்சிகளினது போர் குற்றவாளிகளின் இந்த குழு, அதிகார மாற்றத்தில் இராணுவத் தலையீடுக்கு எதிராக எச்சரிக்கிறது, ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்திய விவகாரங்களைக் கையாள்வதில் பைடெனே பாதுகாப்பான கரம் என்றவர்கள் கருதுவதுடன், பதவியில் இருப்பதற்கான ட்ரம்பின் கூடுதல் முயற்சிகள் முன்பில்லாத விதத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் எதிர்ப்பைப் பெருக்கெடுக்க தூண்டிவிடலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். கொரொனா வைரஸ் தொற்றுநோயால் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கானவர்கள் மரணித்து வருகின்ற இந்த நிலைமைகளின் கீழ், மில்லியன் கணக்கானவர்கள் வேலை வாய்ப்பின்மை, வறுமை மற்றும் வீடற்ற நிலைமையை முகங்கொடுக்கிறார்கள்.

இந்த ஆழமடைந்து வரும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் உயரடுக்கின் செல்வாக்கான பிரிவுகள் முற்றிலும் பெருநிறுவன மற்றும் தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்திலிருந்து இழுக்கப்பட்டுள்ள பைடென், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், மற்றும் அவர்களின் மந்திரிசபை நியமனங்களை, தங்களின் வர்க்க ஆட்சியைப் பேணுவதற்கு மிகவும் நம்பகமான கருவிகளாக கருதுகின்றன.

ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பங்கிற்கு ட்ரம்ப் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்ட சாத்தியமானளவுக்கு அனைத்தும் செய்து வருவதுடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர்களின் 78 வயதான பைடெனை அமெரிக்க அரசியலமைப்பு முற்றிலும் உடைந்து விடாமல் பதவியேற்பு தினத்தின் வெற்றி எல்லையை கடந்து செல்ல உந்தி வருகின்றனர். வெறும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்த தருணத்திலும் கூட, பைடென் வெற்றி பெறுவார் என்பது நிச்சயமின்றி உள்ளது.

ட்ரம்பின் நடவடிக்கைகளும் தொலைபேசி அழைப்பில் அவரின் நடத்தையும் விரக்தியின் வாசத்தைக் கொண்டிருக்கலாம் என்றாலும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல்களோ தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. அவரின் அடியாட்கள் அமெரிக்க மக்கள் வழங்கிய வாக்குகளை "நிராகரிக்கையில்" தலைமை செயலகத்திற்குள் அவர்கள் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில், Proud Boys அமைப்பு போன்ற பாசிசவாத ஆதரவாளர்களை ஜனவரி 6 இல் வாஷிங்டனுக்கு வருமாறு ஜனாதிபதி அழைத்துள்ளார், மேலும் அவர்களுடன் வீதிகளில் இணையவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

உடனடியான விளைவு என்னவாக இருந்தாலும், வெள்ளை மாளிகையில் பைடெனைக் கொண்டு ட்ரம்பைப் பிரதியீடு செய்வது அரசியல் நெருக்கடி முடிந்துவிட்டதைக் குறிக்காது, மாறாக அது புதிய மற்றும் இன்னும் வெடிப்பார்ந்த அத்தியாயத்தின் தொடக்கமாக மட்டுமே இருக்கும். ட்ரம்ப் வழமையான அமெரிக்க அரசியல் விதிமுறைகளுக்கிணங்க காய் நகர்த்தவில்லை, அதிகரித்தளவில் அவரின் தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குடியரசுக் கட்சி, ஓர் ஏதேச்சதிகார பாசிசவாத இயக்கத்தின் கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.

ட்ரம்பின் ஒலிநாடா எதையேனும் உறுதிப்படுத்துகிறது என்றால், அது, வெள்ளை மாளிகையில் இந்த குண்டர் வந்திருப்பதே கூட அமெரிக்க அரசியல் அமைப்பு, அதன் ஆளும் உயரடுக்கு, மற்றும் அதன் அரசியல்-ஊடக ஸ்தாபகம் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் வலதுசாரி பிரச்சாரம் நெடுகிலும் ஜனநாயகக் கட்சி தான் ட்ரம்புக்கு வழி வகுத்து கொடுத்தது. ஜனநாயகக் கட்சி தான் அதன் வலதுசாரி ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் மூலமாக, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மக்களின் எல்லா எதிர்ப்பையும் அதன் பிற்போக்குத்தனமான வெளியுறவுக் கொள்கை திட்டநிரலுக்குப் பின்னால் திசைதிருப்ப முயன்றது. ஜனநாயகக் கட்சி தான் தற்போதைய இந்த அபாயகரமான அரசியல் நெருக்கடி விசயங்கள் மீது அமெரிக்க மக்களின் கண்களைக் கட்டி வைக்க முயன்று வருகிறது.

Loading