மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 சீனாவின் வூஹான் கிருமியியல் பயிலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் என்ற பொய் கூற்றை வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட ஓராண்டாக ஊக்குவித்துள்ளது.
“ஓர் ஆய்வக விபத்து அல்லது கசிவு” என்பதே இந்த தொற்றுநோய்க்கான “நம்பத் தகுந்த” விளக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்று, பெப்ரவரி 5 இல் ட்ரம்ப் வெளியுறவுத்துறை நிலைப்பாட்டைத் தழுவி போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்ட போது இந்த பிரச்சாரம் மேலதிக பாய்ச்சலை எட்டியது.
“இந்த தொற்றுநோயின் தோற்றுவாயை இன்னமும் நாம் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கான பதில்கள் சீனாவில் உள்ளன” என்ற தலைப்பில் அந்த தலையங்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கோவிட்-19 ஒரு சீன ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்ட “ஆயுதமயப்படுத்தப்பட்ட” ஒரு வைரஸ் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றை ஒதுக்கி விட வேண்டாம் என்று அது இந்த வைரஸின் தோற்றுவாய்களை ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பின் (WHO) குழுவைக் கேட்டுக் கொண்டது.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் குழுவோ, 'வூஹான் ஆய்வக' தத்துவம் மேலதிக விசாரணைக்கான அதன் ஆதாரபூர்வ அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை —அதாவது, கண்ணியமான விதத்தில் இதுவொரு பொய் என்பதை— துல்லியமாக தெளிவுப்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெளிவாக போஸ்ட் ஐ நெருக்கடிக்குள் தள்ளி உள்ளன. தன்னுடையதைப் போன்ற 'அதிகாரபூர்வ ஆதாரவளங்களை' மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும் என்ற போர்வையில் வழமையாக இணைய தணிக்கையை ஊக்குவிக்கும் இந்த பத்திரிகை, அதுவே அம்பலமாகி, ஒட்டுமொத்த 'அதிகாரபூர்வ' விஞ்ஞான சமூகத்துடனும் அது முரண்படுவதைக் கண்டது.
உலக சுகாதார அமைப்பின் கண்டுபிடிப்புகளுக்கு போஸ்ட் இன் விடையிறுப்பானது, 'வூஹான் ஆய்வகத்தைப் பற்றிய தனது உளவுத்தகவல்களை அமெரிக்கா வெளிப்படுத்த வேண்டும்,” என்ற தலைப்பில் பெப்ரவரி 22 இல் வெளியான ஒரு தலையங்கத்தில் வடிவம் எடுத்தது, அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தோற்றுவாய்களைக் குறித்த அப்பத்திரிகையின் சொந்த வலியுறுத்தல்களை ஆதரிக்க அமெரிக்க அரசாங்கத்தின் மீது சுமையை வைக்கிறது.
போஸ்ட் எழுதுகிறது:
உலக சுகாதார அமைப்பு குழு சமீபத்தில் வூஹானுக்கான அதன் ஆரம்ப விசாரணை பயணத்தை முடித்து வந்த போது, ஆய்வகக் கசிவு சம்பவம் பெரிதும் சாத்தியமில்லை என்று அக்குழுவின் தலைவர் கூறினார். இருப்பினும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் பெப்ரவரி 9 இல் கூறுகையில், பைடென் நிர்வாகம் 'நமது சொந்த உளவுத்துறை சமூகத்தைக் கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பகுப்பாய்வு' செய்து உலக சுகாதார அமைப்பின் 'அறிக்கையை மதிப்பீடு செய்யும்' என்றார். 'முழு வெளிப்படைத்தன்மை' இன் அவசியம் குறித்து திரு. பிரைஸ் வலியுறுத்தினார்.
முழுமையான வெளிப்படைத்தன்மை சீனாவிடமிருந்து மட்டுமல்ல, அமெரிக்காவிடம் இருந்தும் தேவைப்படுகிறது. திரு. பொம்பியோவின் அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உளவுத் தகவல்கள், ஆதாரநபர்கள் மற்றும் அணுகுமுறைகள் என இவை முறையான பாதுகாப்புடன், வெளியிடப்பட வேண்டும். உண்மை முக்கியமானது, அமெரிக்கா எந்தவொரு சம்பந்தப்பட்ட ஆதாரத்தையும் மறைக்கக்கூடாது.
பாரபட்சமற்றதாக தெரியும் இந்த விளக்கம் ஒரு அதிர்ச்சியூட்டும் ஒப்புதலை மறைக்கிறது. இந்த வைரஸ் வெளியிடப்பட்டது என்பதே 'நம்பத்தகுந்த' சூழலாக உள்ளது என்ற அதன் முந்தைய வாதங்களை ஆதரிக்க போஸ்ட் வசம் ஒரு சிறிய ஆதாரமும் இல்லை என்பதை அது மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது.
உண்மையில் இது சாத்தியமானளவுக்கு அந்த பத்திரிகை பின்வாங்குவதற்கு நெருக்கமாக இருந்தாலும், அப்பத்திரிகை அந்த வைரஸ் இயற்கையாக தோற்றியதென உலகெங்கிலும் ஏற்றுக் கொள்வதற்கு நிகராக ட்ரம்பின் சதி தத்துவத்தை முன்நிறுத்துகிறது.
உண்மை என்னவென்றால், போஸ்ட் ஒரு பொய்யில் சிக்கி உள்ளது. அந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற அதன் சொந்த வாதங்களை ஆதரிக்க அது அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஆதாரம் கேட்கின்ற அதேவேளையில், அந்த தொற்றுநோய் சம்பந்தமாக 'வூஹான் ஆய்வக' தத்துவமே ஒரு நம்பகமான விளக்கம் என்ற வாதத்தையும் அது வலியுறுத்துகிறது.
2020 மத்திய பகுதியின் ஆரம்பத்தில், அதிவலது சதி தத்துவவாதிகள் இந்த நோய் மனிதர்களால் உருவாக்கப்பட்டது குறித்த வாதங்களை முதன்முதலில் பரப்பத் தொடங்கிய போது, அவை உலகளவில் உதாசீனப்படுத்தப்பட்டன. “சீன ஆய்வகத்தில் வைரஸ் தயாரிக்கப்பட்டது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா அல்லது ஆதாரம் இருக்கிறதா?” என்று மே மாதம் கேட்கப்பட்ட போது, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான பயிலகத்தின் இயக்குநர் ஆண்டனி ஃபாசி கூறுகையில், “படிப்படியாக காலப்போக்கில் நிகழ்ந்த பரிணாமம் குறித்த ஒவ்வொன்றும் அது இயற்கையாக பரிணமித்து பின்னர் நுண்ணுயிரிகளாக வளர்ந்ததையே பலமாக எடுத்துக்காட்டுவதாக மிகவும் தகுதி வாய்ந்த பரிணாம உயிரியியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்,” என்றார்.
“இந்த கொரோனா வைரஸ் ஒரு சீன ஆய்வகத்தில் தொடங்கியது' என்ற வாதத்தின் உண்மை சரிபார்ப்பை USA Today மார்ச்சில் பிரசுரித்தது. “எங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்த வாதத்தை நாங்கள் பொய்யாக மதிப்பிடுகிறோம். இந்த கொரோனா வைரஸ் இயற்கையில் தோன்றியது என்றும், வேறுவிதமாக அறிவுறுத்துவதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை என்றும் பெருவாரியான விஞ்ஞான ஆதாரங்கள் அறிவுறுத்துகின்றன.”
இத்தகைய திட்டவட்டமான அறிக்கைகள் இருந்தும், “வூஹான் ஆய்வக” சொல்லாடலுக்கு போஸ்ட் மறுவாழ்வளிக்க சென்றது. ஏப்ரல் 14 இல், போஸ்ட் கட்டுரையாளர் ஜோஷ் ரோஜின், கோவிட்-19 ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் பொய் கூற்றுகளுக்கு அப்பத்திரிகையின் ஒப்புதலை அளிக்கும் ஒரு துணை-தலையங்கத்தை எழுதினார்.
“வௌவால் கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்யும் வூஹான் ஆய்வகத்தின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து வெளியுறவுத்துறை இராஜாங்க ஆவணங்கள் எச்சரித்திருந்தன,” என்ற தலைப்பில், ரோஜன் எழுதினார், “இந்த தொற்றுநோய் வூஹான் ஆய்வக விபத்தின் விளைவாக இருக்கலாம் என்பதை ஆதரிக்க இந்த இராஜாங்க ஆவணங்கள் மற்றொரு ஆதாரத் துணுக்கை வழங்குவதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரி என்னிடம் கூறினார்.”
“இப்போதே, அந்த ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கும் பேரேட்டின் ஒரு பக்கம் துப்பாக்கி தோட்டாக்கள் பதிந்துள்ளன, மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை' என்று அந்த மூத்த அதிகாரி குறிப்பிட்டதாக அவர் மேற்கோளிட்டார்.
ரோஜர் குறிப்பிடும் அந்த இராஜாங்க ஆவணம் முழுமையாக ஜூலையில் வெளியிட்ட போது, போஸ்ட் அதுவே பின்வரும் முடிவுக்கு வந்தது, “ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து தான் வைரஸ் வெளியேற காரணம் என்ற கூற்றை அந்த முழுமையான இராஜாங்க ஆவணம் பலப்படுத்தவில்லை.” அந்த இராஜாங்க ஆவணங்கள் மீதான எந்தவொரு வாசிப்பும் ரோஜரின் பொருள்விளக்கம் போன்ற எதையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அதற்கு பதிலாக, தகுதி வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை அந்த ஆய்வகத்தை முழு திறனுடன் செயல்படுத்துவதைத் தடுத்திருந்ததுடன் பெரிதும் பரவும் நோய்களைக் கொண்டு வரக்கூடும் என்பதை அது தெளிவுபடுத்துகிறது.
அந்த இராஜாங்க ஆவணத்தின் வெளியீடு ஒன்றும் போஸ்ட் ஐ அதைரியப்படுத்தி விடவில்லை, அதன் வாதங்களை அது இரட்டிப்பாக்கியதுடன், பெப்ரவரி 5 தலையங்கத்தில் அது உச்சத்தைத் தொட்டது. மக்கள் முன்னால் அதன் பொய்யான வலியுறுத்தல்கள் முழுவதும் அம்பலமானதும், போஸ்ட் ஆல் அதன் சொந்த கூற்றுக்களை நேர்மையாக கணக்கில் கொண்டு வரக் கூட முடியவில்லை, அது பொய்களை விற்றுக் கொண்டிருந்தது என்பதை அதனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக, அந்த பத்திரிகையின் சொந்த குற்றச்சாட்டுக்களை அமெரிக்க அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்பதே அதன் கோரிக்கையாக உள்ளது!
“வூஹான் ஆய்வக' சதித் தத்துவத்தை ஊக்குவித்தமை ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஆழ்ந்த நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. உள்நாட்டில் பெருகி வரும் சமூக எதிர்ப்பை முகங்கொடுத்திருக்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு, எப்பாடுபட்டாவது ஒரு வெளிப்புற எதிரியை உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில் உள்ளது. அதே நேரத்தில் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளது தோல்வியை கோவிட்-19 பெருந்தொற்று தீவிரப்படுத்தி உள்ளதுடன், சீனாவின் வளர்ச்சிக்கு ஒரு இராணுவத் தீர்வுக்கான சாத்தியக்கூறை அதிகரித்து வருகிறது.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு 'வூஹான் ஆய்வக' சதித் தத்துவம் எவ்வளவு அவசியமாக இருந்தாலும், அது ஒரு பிரதான பிரச்சினையை முகங்கொடுக்கிறது—அது அடி முதல் முடி வரை ஒரு அப்பட்டமான பொய் என்பதோடு, அதை ஊக்குவிக்கும் ஒவ்வொருவரையும் களங்கப்படுத்தி வருகிறது.
வழிந்தோடும் இந்த பொய்கள், சதித் தத்துவங்கள் மற்றும் சமூக முறிவுகளின் பெரும்வெள்ளத்தில், ஒரு விசயம் தெளிவாக உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் ஒரு பொய்யான மற்றும் மதிப்பிழந்த பிரச்சாரத்திற்கு உடந்தையாளராக அம்பலப்பட்டு நிற்கிறது. இடதுசாரி அரசியல் எதிர்ப்பைக் குறி வைத்து அவமதிப்பதற்கு உதவியாக பயன்படுத்தப்பட்ட வார்த்தையான 'போலி செய்தி' என்று அது எதை குறிப்பிடுகிறதோ, அவற்றுக்கு மேலே உயர்ந்து நிற்கும் ஒரு 'அதிகாரபூர்வ' ஆதாரவளமாக அது கூறிக் கொள்வது, சின்னாபின்னமாக சிதைந்து தொங்குகிறது.