இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
முன்னாள் ரியர் அட்மிரல் மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகரவின் ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து சட்டமா அதிபர் தப்புல டி லிவரேயின் கட்டளையின் கீழ், இலங்கை பொலிஸ், முஸ்லிம் அரசியல் தலைவர் அசாத் சாலியை செவ்வாய் அன்று கைது செய்துள்ளது. சாலி, நாட்டின் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சாலி, அண்மையில் ஆற்றியிருந்த உரையில், தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) போன்றவற்றின் கீழ், அவர் குற்றம் செய்தார் என்பதற்கான “நம்பத்தகுந்த தகவல்” இருப்பதாகக் கூறி, அவரை கைது செய்யுமாறு டி.லிவரே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு “அறிவுறுத்தியுள்ளார்”.
1979ல் இயற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், 1983 இல் தொடங்கிய கொழும்பின் இரத்தக்களரி இனவாத யுத்தத்துடன் ஆரம்பித்து பிரிவினைவாத தழிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் குழுக்களுடன் தொடர்புபட்டவர்களாக கூறப்படுகின்ற தனிநபர்களைத் தடுத்து வைப்பதற்கும் கைது செய்வதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அரசியல் எதிரிகள் மற்றும் போர்க்குணமுள்ள தொழிலாளர்களை அடக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தால் இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பொலிசாரால் பலவந்தமாக எடுக்கப்பட்ட வாக்குமூலத்தை குற்றவாளிக்கு எதிரான சான்றாகப் பயன்படுத்தப்பட முடியும்.
1990 ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.சி.சி.பி.ஆர். ஆனது “வெறுப்பான பேச்சு”க்களைத் கட்டுப்படுத்தும் போர்வையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், பௌத்தத்தை அவதுாறு செய்தல் மற்றும் முஸ்லிம் அதிதீவிரவாதத்தை உபதேசித்தமை என குற்றஞ்சாட்டி, தனிநபர்களை வேட்டையாடுவதற்குப் இது பயன்படுத்தப்படுகிறது.
சாலி, தேசிய ஐக்கிய கூட்டணிக்கு தலைமை தாங்குவதோடு முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேல் மாகாண ஆளுனராகவும் இருந்தார். அவர் முஸ்லிம் சரியா சட்டத்தையும் குரானையும் மாற்ற முடியாது மற்றும் தனது சமூகம் இந்தச் சட்டங்களுக்கு மட்டுமே மரியாதை வழங்கும் என அறிவித்ததாக கூறப்பட்டே கைது செய்யப்பட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சியானது சாலியின் அரசியலுக்கோ அல்லது தேசிய ஐக்கிய கூட்டணியின் இஸ்லாமிய வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு அளிக்காத அதே வேளை, அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்றது. இது இராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் வீரோத பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும். சாலி மீதான சட்ட நடவடிக்கையானது, அனைத்து அரசியல் விமர்சகர்களுக்கும் ஒரு எச்சரிக்கையும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தலும் ஆகும். வீரசேகர கடந்த வாரம், “நாங்கள் அவரை கைது செய்து, விசாரித்து அவசியமான சட்ட நடவடிக்கை எடுப்போம்” என ஊடகங்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்தே சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய கைதைத் தொடர்ந்து, சாலிக்கு எதிராக மேலதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்த முஸ்லிம் தலைவர், மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இரண்டு சுற்றுலா விடுதிகள் மீது 2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தமாகவும் வீசாரிக்கப்படுகின்றார், என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். சார்பு இஸ்லாமியவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 270 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஏனைய 500 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் சமூகத்தை வேட்டையாடுவதற்காக அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற எதிர்க் கட்சிகளும் பற்றிக்கொண்டன. இது முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டதுடன் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொழும்பின் சிக்கன நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் பயன்படுத்தப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆதரவுடன், கோடாபய இராஜபக்ஷ சிங்கள-பௌத்த பேரினவாத குழுக்கள் மற்றும் இராணுவத்திடம் இருந்தும் ஆதரவினைத் திரட்டி, ஒரு “உறுதியான மற்றும் ஸ்திரமான அரசாங்கத்தை” ஸ்தாபிப்பதாக வாக்குறுதி கொடுத்து இலங்கை ஜானதிபதி பதவியை வென்றார்.
அரசாங்கம் “மத்ரஸாக்களையும் (இஸ்லாமிய பாடசாலை) புர்காவையும் தடை செய்வதற்கு” நடவடிக்கை எடுக்கும் என மார்ச் 11 அன்று வீரசேகர பாராளுமன்றில் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள், இலங்கையில் “மீளெழுகின்ற இஸ்லாமிய அதிதீவிரவாத நடவக்கைகளைத் தடுப்பதற்கானதாகும்” என அவர் கூறிக்கொண்டார். பின்னர் வீரசேகர, “புர்கா எமது தேசிய பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது” என ஊடக மாநாட்டில் தெரிவித்ததோடு இதை சட்டவிரேதமாக்கும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றிலும் கைச்சாத்திடடார்.
அமைச்சரவைப் பேச்சாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் முன்மொழிவானது இந்த வார அமைச்சர்கள் கூட்டத்தில் வராது” எனத் தெரிவித்தார். வெளிநாட்டு அமைச்சும், இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்ததுடன், இது கலந்துரையாடலில் இருக்கும் “வெறுமனே ஒரு முன்மொழிவுதான்” என விளக்கினார்.
அமைச்சரவை பேச்சாளரின் கருத்தானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள முஸ்லிம் நாடுகிளிடம் இருந்து ஆதரவை வெல்வதற்கு முயற்சிப்பதன் காரணமாக, இத் தருணத்தில் இந்தப் பிரச்சினையை மூடிமறைக்க விரும்புகின்ற கொழும்பின் தந்திரமான நகர்வாகவே தோன்றுகிறது. அடுத்த செவ்வாய் அன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தின் போது நடந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாகவும் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாகவும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளினால் ஊக்குவிக்கப்பட்ட தீர்மானம் கலந்துரையாடப்படுகின்றது.
பல போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்தய சக்திகளுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவது பற்றி கொஞ்சமும் கவலையே கிடையாது. சீனாவிக்கு எதிராக தனது புகோள-மூலோபாய மற்றும் இராணுவ தயாரிப்புக்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற வாஷிங்டன், கொழும்பு ஆட்சியை சீனாவிடம் இருந்து தூர விலகியிருக்க நெருக்குவதற்காக இந்தத் தீர்மானத்தை பயன்படுத்துகின்றது.
கடந்த வெள்ளி அன்று, ஜனாதிபதி இராஜபக்ஷ, “வன்முறையான அதிதீவிரவாத சிந்தாந்தத்தை கொண்டிருப்பவர்களை” “புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு” என்று கூறப்படுகின்ற, மற்றும் தெளிவாக முஸ்லிம்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட, புதிய பிரிவுகளை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு சேர்த்து, வரத்தமானியில் வெளியிட்டார்.
இந்த சரத்துக்களின் கீழ், “சரணடைகின்ற அல்லது ஒன்றில் பேசப்பட்ட அல்லது வாசிப்பதற்கு உட்கருதப்பட்ட சொற்கள் மூலம் அல்லது சைகைகள் மூலம் அல்லது புலப்படத்தக்க பிரதிநிதித்துவங்கள் மூலம் அல்லது வேறு வகையாக, வெவ்வேறு சமுதாயத்தினரிடையே அல்லது இன அல்லது மதத் தொகுதியினரிடையே வன்முறையான அல்லது இன அல்லது மத அல்லது இனவாத அமைதியின்மை செயல்கள் புரியப்படுதலை அல்லது தீய எண்ண அல்லது பகைமை உணர்ச்சிகளை விளைவிக்கின்ற அல்லது விளைவிப்பதற்கு உட்கருதுகின்ற ஆளொருவராகவுள்ளாரென்ற சந்தேகத்தின் பேரில்” ஒருவரை தடுத்து வைக்க முடியும்.
உண்மையில், இந்தத் தெளிவற்ற மற்றும் பாரதூரமான விதிமுறைகளின் கீழ் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட முடியும். இந்தப் புதிய நடவடிக்கைகள் “தீவிரவாத சித்தாந்தத்தில்” குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரையும், புனர்வாழ்வு ஆணைக்குழுத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள புனர்வாழ்வு மையம் என்று அழைக்கப்படுகின்ற இடத்துக்கு 18 மாதங்கள் வரை அனுப்புமாறு கட்டளையிடுவதற்கு நீதவானுக்கு அனுமதியளிக்கின்றது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் இனவாத, பாரபட்ச பண்பானது ஒரு பாசிச பௌத்த குழுவான பொது பல சேனா சம்பந்தமான அதன் அணுகுமுறையில் வெளிப்படுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான சமீபத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது, ஏனைய விடயங்களுக்கு மத்தியில், மத அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக பொது பல சேனாவை தடைசெய்ய பரிந்துரைத்தது.
எவ்வாறாயினும் மார்ச் 8 அன்று, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவரும் கல்வி அமைச்சருமான ஜி.எல். பீரிஸ், பொதுபல சேனாவை தடை செய்வதற்கான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் “அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ஊடகங்களுக்கு தெரிவித்தார். பொது பல சேனா, அதிதீவிர வலது அமைப்புக்களில் ஒன்றாகும். இது, இராஜபக்ஷ ஜனாதிபதியாகுவதற்கு பிரச்சாரம் மேற்கொண்டதோடு அவருடைய அரசாங்கத்தை ஆதரிக்கின்றது.
அதிகரிக்கின்ற வெளிநாட்டுக் கடன் மற்றும் ஏற்றுமதி வருமான வீழ்ச்சியுடன் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கம், தொழில் மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் தாக்குதலுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற தொழிலாள வர்க்க எதிர்ப்புகளை திசை திருப்பவும் மற்றும் பலவீனமாக்கவும் இனவாத மற்றும் மத குழப்பங்களை திட்டமிட்டு ஊக்குவிக்கின்றது.
இலங்கை ஆளும் அடுக்குகள் 1948 இல் தேசிய சுதந்திரம் என அழைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் நெருக்கடியை முகங்கொடுக்கும் போதெல்லாம் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க நாட்டின் சிறுபான்மையினருக்கு, பிரதானமாக தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட பாரபட்சங்களை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஊடகங்கள், அண்மையில், சுவிற்சர்லாந்தில் புர்கா தடை செய்யப்பட்டதையும் பிரான்ஸ் மற்றும் ஆரம்பத்தில், பெல்ஜியத்தில் இதே போன்ற நடவடிக்கைகளை பற்றியும் செய்திகளை பிரசுரித்து அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தமை புதுமையானதல்ல. இருப்பினும், இந்த தடைகள் பாசிச சக்திகளால் ஊக்குவிக்கப்பட்டதைக் குறிப்பிட தவறின.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, சாலியின் கருத்துக்களை கண்டித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் விஜித ஹேரத், இது ஒரு திசை திருப்பல் எனத் தெரிவித்ததோடு “புர்கா தடை செய்தல் தொடர்பாக சமூகங்கள், சமய மற்றும் அரசியல் தலைவர்களுடன் பேசுவதற்கு” அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார். பிற்போக்கு சிங்கள இனவாத .அரசியலில் மூழ்கியுள்ள இந்தக் கட்சிகள், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அல்லது ஜனாதிபதி சர்வதிகாரத்தை நோக்கிய அவருடைய நகர்வுகளுடன் எந்த முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.