மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
'வூஹான் ஆய்வகத்தில் நோய்வாய்ப்பட்ட பணியாளர்கள் பற்றிய தகவல்கள் கோவிட்-19 இன் தோற்றம் பற்றிய விவாதத்திற்கு எரியூட்டுகின்றது' என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் மே 23 அன்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டதிலிருந்து, அமெரிக்க ஊடக ஸ்தாபனத்தின் அனைத்து விற்பனை நிலையங்களும் அரசியல் மற்றும் உளவுத்துறை அமைப்புகளும் இந்த கூற்றிற்கு மறுஉயிர்ப்பு கொடுக்க முயன்றன. அவர்களே கூட கோவிட்-19 தொற்றுநோய் சீனாவின் வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வந்தது என்பதை ஆறு மாதங்களுக்கு முன்பு பொய் என்று அறிவித்திருந்தனர்.
ஆய்வக குற்றச்சாட்டுகளுக்கு விஞ்ஞான ரீதியான, அடிப்படையான ஒரு உண்மை எதுவும் இல்லை. வூஹான் நுண்ணுயிர் ஆய்வகத்தின் பல ஊழியர்கள் 2019 நவம்பரில் 'பொதுவான பருவகால நோய்களுடன் ஒத்துப்போகும்' அறிகுறிகளுடனான ஒரு நோயுடன் வந்தனர் என்ற கூற்றைத்தான் முழு அமெரிக்க உளவுத்துறை சமூகத்தினரால் ஸ்தாபிக்க முடிந்தது.
மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) முன்வைத்த ஏராளமான ஆதாரங்களை இந்த பொய் மறுக்க முயற்சிக்கிறது. உலக சுகாதார அமைப்பு வைரஸின் தோற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கு 'மிகவும் சாத்தியம் குறைவு' என்று அறிவித்தது. இந்த பொய்களை ஊக்குவிப்பதில், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைப் பற்றி புஷ் நிர்வாகத்தின் ஆதாரமற்ற கூற்றுக்களை விட, இந்த பிரச்சாரத்தினை வடிவமைத்தவர்கள் மற்றும் அதில் இப்போது பங்கேற்பவர்கள் விவாதிக்கக்கூடிய பெரிய மோசடியைச் செய்கிறார்கள்.
ஒரு புவிசார் அரசியல் போட்டியாளரை அரக்கர்களாக்குவதற்கும் வெகுஜனங்களின் உள்நாட்டு சமூக கோபத்தை வெளிப்புறமாக திசை திருப்புவதற்கும் ஒரு பாரிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அரசாங்கம் பொய் சொல்வது இது முதல் முறை அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியம் போருக்கான சாக்குப்போக்குகளை உருவாக்குவதற்கும் அதன் சொந்த குற்றச் செயல்களில் இருந்து திசைதிருப்ப முயற்சிப்பதற்கும் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, 1980களில் 'மஞ்சள் மழை' நிகழ்வை நினைவில் கொள்வது அறிவுறுத்தலானது.
'மஞ்சள் மழை' பிரச்சாரம் 1981 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் செப்டம்பர் 13 அன்று பேர்லின் பத்திரிகைக் கழகத்திற்கு ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் சோவியத் ஒன்றியம் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகியவற்றுக்கு அமெரிக்க ஆதரவான கிளர்ச்சிகளுக்கு எதிராக பயன்படுத்த மைக்கோடாக்சின்களை (mycotoxins) வழங்குவதாக குற்றம் சாட்டினார். மற்றும் ஆப்கானிஸ்தானில் அதே நச்சுகளைப் பயன்படுத்தப்படுவதாக கூறினார். ஹெய்க், 'தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இயற்பியல் சான்றுகளை நாங்கள் இப்போது கண்டுபிடித்துள்ளோம். அவை அசாதாரணமாக அதிக சக்திவாய்ந்த மூன்று மைக்கோடாக்சின்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளன. அதிக நச்சுத்தன்மையுள்ளவை இப்பிராந்தியத்திற்கு பூர்வீகமாக இல்லாத மற்றும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நச்சுப் பொருட்களாகும்' என்று கூறினார்.
இன்றையதைப் போலவே, மிகக் குறைந்த ஆதாரங்களுடன் மட்டுமே பெரும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. மேலும் அவை பரந்த தாக்கங்களைக் கொண்டிருந்தன. மைக்கோடாக்சின்களைப் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன மற்றும் உயிரியல் போரில் ஒரு புதிய பரிமாணத்தை வளர்ப்பதன் மூலம், சோவியத் ஒன்றியம் 1925 ஜெனீவா நெறிமுறை மற்றும் 1972 உயிரியல் மற்றும் நச்சு ஆயுத உடன்பாடு இரண்டையும் மீறுவதாக றேகன் நிர்வாகம் நேரடியாகக் குறிப்பிட்டது. முதலாம் உலகப் போரில் பல்வேறு இரசாயன நச்சுவாயு பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர், போரில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை 1925 உடன்பாடுகள் தடைசெய்தது. மேலும் 1972ம் ஆண்டு உடன்பாடு உயிரியல் மற்றும் நச்சு அடிப்படையிலான ஆயுதங்களின் வளர்ச்சி, உற்பத்தி, கையிருப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை தடைசெய்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சோவியத் ஒன்றியம் பொறுப்பேற்றிருக்க வேண்டியிருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஏகாதிபத்திய போரை நியாயப்படுத்தும் ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஹெய்கின் கூற்றின் தோற்றம் வியட்நாம் போரின் இறுதி வரையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்தியத்தில் இருந்து அரசியல்ரீதியாக சங்கடமான பின்வாங்கல் வரை செல்கின்றது. அமெரிக்கப் படைகள் பின்வாங்கியபோது, CIA லாவோஸ் மலைகளில் ஹ்மாங் பழங்குடியினரின் இரகசிய இராணுவத்தை நிறுவியது. அதற்கு உள்ளூர் தலைவர் ஜெனரல் வாங் போ தலைமை வகித்தார். போ இறுதியில் அமெரிக்காவிற்கு தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, CIA சார்பாக அவர் வழிநடத்திய இராணுவம், சோவியத் ஆதரவு லாவோ மற்றும் வியட்நாமிய அரசாங்கங்களுக்கு எதிராக போராடியது. அந்த மோதல்களில் இருந்து வெளியேறிய அகதிகள் 'மஞ்சள்' இரசாயன ஆயுதங்கள் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து வீசப்பட்டதாக பல்வேறு அதிகாரிகளுக்கு விவரித்தனர்.
அடுத்த பல ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் போரில் பயன்படுத்த மைக்கோடாக்சின்களை உருவாக்கியது என்ற கருதுகோளை உருவாக்க கார்ட்டர் மற்றும் றேகன் நிர்வாகங்கள் இந்த அறிக்கைகளை கைப்பற்றின. றேகனின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு தேசிய புலனாய்வு மதிப்பீடு (தேசிய புலனாய்வு இயக்குனர் உத்தரவிட்ட அறிக்கைகள்), “எல்லா ஆதாரங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கருதுகோள் என்னவென்றால், ட்ரைகோதீசீன் (trichothecene) நச்சுகள் சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டன. அவை லாவோ மற்றும் வியட்நாமியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன அல்லது அதுபற்றிய தொழில்நுட்ப அறிவை கொடுப்பதன் மூலம், லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்பூச்சியாவில் சோவியத் உதவியுடன் அவர்களை ஆயுதம் ஏந்த செய்தது.” எனக் குறிப்பிட்டது.
உண்மையில், ஆதாரங்களை இன்னும் சிறப்பாகப் பொருத்துகின்ற மற்றொரு கருதுகோள் உருவாக்கப்பட்டது. ஹெய்கின் ஆரம்ப பொது அறிக்கைகளுக்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், பிரிட்டிஷ் வேதியியல் மற்றும் உயிரியல் பாதுகாப்பு ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் “மஞ்சள் மழை” மாதிரிகள் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். நச்சு அடிப்படையிலான இரசாயன ஆயுதங்களுக்குப் பதிலாக, இவை முக்கியமாக மகரந்தத்தைக் (pollen) கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். நச்சு விநியோக பொறிமுறையின் ஒரு பகுதியாக மகரந்தத்தை சோவியத் ஒன்றியம் பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறத் தொடங்கியபோது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியரான மத்தேயு எஸ். மெசெல்சன் (Matthew S. Meselson) மகரந்தத்தின் தோற்றத்தை இன்னும் உன்னிப்பாகக் கவனித்து, அதன் சாத்தியமான மூலம் உண்மையில் தேனீக்கள் என உணர்ந்தார்.
அதைப்பற்றி மேலும் விசாரிக்க, ஹார்வர்ட், யேல் மற்றும் ஸ்மித்சோனியன் அமைப்பு ஆகியவற்றிலிருந்து தாவரவியலாளர்கள் மற்றும் மகரந்த வல்லுநர்களை இணைத்து மெசெல்சன் மகரந்தத்தையும் அதில் உள்ளடங்கியிருந்த திரவத்தையும் பகுப்பாய்வு செய்தார். எலக்ட்ரான் ஊடுருவிப்பார்க்கும் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, மெசெல்சனின் சகாவான ஜோன் டபிள்யூ. நோர்விக், இலை மாதிரிகளில் “மஞ்சள் மழை” என்பது, தென்கிழக்கு ஆசிய தேனீக்களால் விடப்பட்ட துளிகளின் வரை வடிவம், அளவு, நிறம், அமைப்பு மற்றும் மகரந்த உள்ளடக்கம் உள்ளிட்ட கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டிருந்தது எனக் கண்டுபிடித்தார்.
மெசெல்சன் இப்பகுதிக்குச் சென்றபோது, உள்ளூர் தேனீக்கள் உண்மையில் ஒரு 'ஏக்கரில் அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் பல நிமிடங்களுக்கு நீடிக்கும் மஞ்சள் நீர்த்துளிகள் - தேனீ மலம்' பொழிவுகளை உருவாக்கும் கூட்டு 'சுத்திகரிப்பு பறப்புகளில்' பங்கேற்கின்றன என்பதைக் கண்டறிந்தபோது 'தேனீ துளிகள்' கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அவை போதுமான உயரத்திலும், வேகமாகவும் பறப்பதால், உண்மையில் அந்த நிகழ்வைக் காண ஒருவர் காத்திருக்காத போது தேனீக்களைப் பார்ப்பது கடினம்.
அமெரிக்கா சேகரித்த உளவுத்துறை மிகவும் சந்தேகத்திற்குரியது என்பதையும், உள்ளூர் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் 'தாக்குதல்கள்' மற்றும் அவர்களுக்கு வந்த 'அறிகுறிகள்' பற்றிய தகவல்களில் மிகவும் முரணாக இருந்தன என்பதையும் மெசெல்சன் மேலும் கண்டுபிடித்தார். மேலும், முன்னர் அறிவிக்கப்பட்ட அறிகுறிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான அதிக அளவு நச்சுகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, அல்லது பரவுவதற்கான வழிமுறைகளின் எந்தவொரு பகுதியும் கண்டறியப்படவில்லை.
செயற்கையாக தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸின் பரிந்துரைக்கு எதிராக உலக சுகாதார அமைப்பின் கண்டுபிடிப்புகள் வெளிவந்தபோது, பைடென் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் இருந்து விட்டுக்கொடுக்காமல் இருந்ததைப் போலவே, மெசெல்சன் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டபோது றேகன் நிர்வாகம் தனது முயற்சியை இரட்டிப்பாகி, ஒரு அறிக்கையை மீண்டும் வெளியிட்டு, “இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற எங்கள் முடிவு தென்கிழக்கு ஆசியா 1984 க்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. உளவுத்துறை அறிக்கைகள் 'சோவியத் பங்கு பற்றிய சான்றுகள் விஞ்ஞான அர்த்தத்தில் ஆதாரமாக இல்லை என்றாலும், புலனாய்வு சமூகம் இந்த நிகழ்வை முழுமையாக நம்பக்கூடியதாகக் கருதுகிறது.' இன்று ஒருவர் 'சோவியத்' என்பதை 'சீனா' என மாற்றி இதே வாதங்களை முன்வைக்க முடியும்.
குறிப்பிடத்தக்க வகையில், றேகன் நிர்வாகம் அந்த நேரத்தில் அமெரிக்க இராணுவம் Agent Orange ஐ பயன்படுத்தியதால் தமது முன்னாள் வியட்நாம் படையினரிடையே அதன் சொந்த பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டது. 1962 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, லாவோஸ் மற்றும் வியட்நாமில் அதன் பயன்பாட்டை அங்கீகரித்தபோது இது களைக்கொல்லி மற்றும் வன அழிப்பு பயன்பாட்டில் இருந்தது. “Operation Ranch Hand” இராணுவ நடவடிக்கையின்போது அந்த நாடுகளின் மக்கள் பட்டினிக்குள்ளாக்கும் முயற்சியில் கிராமப்புற கிராமங்களில் 20 மில்லியன் கலன்கள் தெளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஆபத்தான இரசாயனத்தை தெளித்த படையினர்கள் வீட்டிற்கு வந்து மனநலப் பிரச்சினைகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பின்னரும், அத்துடன் அவர்களது மனைவிகள் கருச்சிதைவு அல்லது பிறப்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளின் பல நிகழ்வுகளுக்கும் பின்னரே இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அமெரிக்க மக்களின் பார்வையில் கொண்டு வரப்பட்டன. 1977 ஆம் ஆண்டில் Agent Orange தொடர்பான ஊனமுற்றோர் கோரிக்கைகளுக்கு முன்னாள் படையினர் தாக்கல் செய்யத் தொடங்கினர். மேலும் ஆயுதத்தின் உற்பத்தி, வியட்நாமில் அதன் பயன்பாடு மற்றும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை 'நிரூபிக்க' முடியாததால் அவர்கள் வழக்கமாக மறுக்கப்பட்டனர். இத்தகைய உணர்வற்றதன்மை இராணுவத்திற்குள் உள்ளிளுக்கப்பட்ட பெரும்பாலான முன்னாள் படையினரிடையே பெரும் சீற்றத்தைத் தூண்டியது.
விரைவான விலை பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களை 20 சதவீதத்தைவிட அதிகமாக உயர்த்திய பெடரல் ரிசர்வ் இனால் தூண்டப்பட்ட தொழில்துறையில் கடுமையான மந்தநிலை ஆகிய இரண்டின் தாக்கத்தின் கீழ், தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட, வர்க்கப் போராட்டத்தின் பரந்த முன்னேற்றங்களுடன் அவர்களின் அமைதியின்மையும் குறுக்கிட்டது. ஹெய்க் இனது ஆரம்ப “மஞ்சள் மழை” உரை, PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மீது றேகன் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மாதத்திற்குப் பின்னரும், அமெரிக்க தொழிலாளர்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமான வாஷிங்டனில் ஒற்றுமை தினத்தன்று கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்ட ஒரு வாரத்திற்குப் பின்னரும் நிகழ்த்தப்பட்டது. நெருக்கடியில் இருந்த அமெரிக்க முதலாளித்துவம் அதன் பாரிய குற்றங்களை மறைக்க அல்லது நியாயப்படுத்த எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டது.
இருப்பினும், மஞ்சள் மழை மற்றும் வூஹான் ஆய்வக பிரச்சாரங்களுக்கு இடையிலான ஒரு பெரிய வேறுபாடு என்னவெனில் அமெரிக்க பதிப்பு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களின் பங்கு ஆகும். 1980 களின் பிற்பகுதியில், 'மஞ்சள் மழை' என்பது ஒரு வெளிப்படையான பொய்யாக மேலும் மேலும் அம்பலப்படுத்தப்பட்டதால், நியூ யோர்க் டைம்ஸ், எடுத்துக்காட்டாக, 'மஞ்சள் மழையில் இன்னும் சிக்கியது' மற்றும் 'மஞ்சள் மழை வீழ்ச்சி' போன்ற தலைப்புகளுடன் பல கட்டுரைகளை வெளியிட்டு, 'முழு விவகாரமும் ஒரு 'படுதோல்வி' என்றும், 'மஞ்சள் மழை தேனீக்களின் மலம்' என்றும் குறிப்பிட்டது.
இப்போது, அமெரிக்க அரசாங்கம் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ள அமெரிக்காவில் மட்டும் 610,000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்ற ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், டைம்ஸ், போஸ்ட் மற்றும் பிற ஒவ்வொரு விற்பனை நிலையங்களும் தங்களை இன்னும் நம்பமுடியாத பொய்யுடன் இணைத்துக் கொள்கின்றன. கடந்த ஆண்டு, அவர்கள் இந்த பொய்யைத்தான் முழுமையாக அம்பலப்படுத்திக் காட்டினர்!