வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்கள் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்காக மாக் கனரக வாகனத் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த அறிக்கை, வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி ஆலையின் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (Volvo Workers Rank-and-File Committee-VWRFC) எழுதியது, இங்கு தொழிலாளர்கள் தற்போது வொல்வோ கனரக வாகன நிறுவனத்திற்கு எதிரான தங்களது வேலைநிறுத்தத்தை நான்காவது வாரமாக தொடர்ந்து வருகின்றனர். இது வொல்வோவின் துணை நிறுவனமான மாக் கனரக வாகன நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு எழுதப்பட்டுள்ளது.

வொல்வோ மற்றும் மாக் தொழிலாளர்கள் VWRFC ஐ volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே:

வேர்ஜீனியாவில் உள்ள நியூ ரிவர் வலி வாகன ஒருங்கிணைப்பு ஆலையின் தொழிலாளர்களான நாங்கள், தற்போது நியாயமான ஊதியங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு முழு சுகாதார பாதுகாப்பு, பல அடுக்கு ஊதியம் மற்றும் சலுகை முறைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் எட்டு மணி நேர வேலை நாளை கடைப்பிடித்தல் ஆகியவற்றுக்காக கோரிக்கை விடுத்து வொல்வோவுக்கு எதிராக மூன்றாவது வாரமாக எங்களது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து வருகிறோம்.

இந்த போராட்டத்தைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம், என்றாலும் எங்களது வேலைநிறுத்தம் ஒரு முக்கிய திருப்புமுனையில் உள்ளது. அதாவது, இது தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுமானால், தோற்கடிக்கப்படும்.

மாக்கில் எங்களது போராட்டத்திற்கு மிகுந்த அனுதாபம் இருப்பதை நாங்கள் அறிவோம். நியூ ரிவர் வலி ஆலையில் தற்போது நடக்கும் இந்த போராட்டம் வொல்வோவிலும் மற்றும் ஒட்டுமொத்த வாகனத் தொழில்துறையிலும் நடந்து வரும் அனைத்து தொடர்ச்சியான போராட்டங்களை இன்னும் வலுப்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஜூன் 26, 2021 அன்று வேர்ஜீனியாவின் டப்ளினில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் (புகைப்பட ஆதாரம்: UAW லோக்கல் 2069 இன் முகநூல் பதிவு)

NRV ஆலையில் கருங்காலிகளால் தயாரிக்கப்படும் வாகன உதிரிப் பாகங்களை கையாள நீங்கள் விரும்பவில்லை என்றாலும், பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் தொழிலாளர்களால் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றே நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்பதை தொழிலாளர்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டோம்.

எதிர்ப்பை திரட்டுவதற்கும், நிறுவனத்தின் வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் UAW எதுவும் செய்யவில்லை. UAW லோக்கல் 677 பதிவிட்ட ஒரு அறிவிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது: “NRV வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், லோக்கல் 2069 இல் உள்ள எங்களது சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆதரவு தேவை.”

எவ்வாறாயினும், இது ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க உதவும் அதேவேளை, கருங்காலிகள் தயாரித்த உதிரி பாகங்களை பயன்படுத்தும் உற்பத்தியை தடுத்து நிறுத்த இது எதையும் முன்மொழியவில்லை. அதற்கு பதிலாக, லோக்கல் 2069 க்கான நிதி சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக மட்டும் இது கூறியது. நன்கொடையளிக்கவும், தியாகம் செய்யவும் நீங்கள் தயாராக இருப்பதை நாங்கள் அறிவோம், ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால், எங்களது சந்தா தொகை மூலம் உருவான 780 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதி UAW இடம் உள்ளது, என்றாலும் இது எங்களுக்கு வாரத்திற்கு வெறும் 275 டாலர் வேலைநிறுத்த ஊதியத்தை வழங்குகிறது.

இதன் சர்வதேச அமைப்பைப் பொறுத்தவரை, எங்களது போராட்டம் பற்றிய செய்திகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. வேலைநிறுத்தம் பற்றிய அறிவிப்பை அதன் முகநூல் பக்கத்தில் கூட பதிவிடவில்லை. டெட்ராய்டிலும் பிற பகுதிகளிலும் உள்ள வாகனத் தொழிலாளர்களிடம் நாங்கள் பேசினோம், ஆனால் நாங்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளது பற்றி அவர்களுக்குத் தெரியாது என அவர்கள் கூறுகிறார்கள்.

அதனால்தான் நாங்கள் உங்களிடம் நேரடியாக முறையிடுகிறோம், அலென்டவுன் மற்றும் ஹேகர்ஸ்டவுன் பகுதிகளிலுள்ள மாக் கனரக வாகன ஆலை தொழிலாளர்கள், பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க தங்களுக்கென சொந்த சாமானிய ஒற்றுமை வேலைநிறுத்த குழுவை அமைக்க வேண்டும்:

1. NRV ஆலையில் தயாரிக்கப்பட்ட வாகன உதிரி பாகங்களை கையாள மறுக்க வேண்டும். மாகுங்கிக்கு தற்போது வரும் வண்டிகள் கருங்காலிகளின் உழைப்பில் உருவானவை. இந்த பாகங்களைப் பயன்படுத்தும் அனைத்து உற்பத்திகளும் இலாபங்களை பெருக்கவும், எங்களது போராட்டங்களை கீழறுக்கவும் வொல்வோவுக்கு உதவுகிறது.

2. கூட்டு வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவை உருவாக்குங்கள். நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், மாகுங்கியிலும் ஹேகர்ஸ்டவுனிலும் நிறுவனம் தொடர்ந்து இலாபமீட்டி வருவது எங்கள் அனைவரையும் பலவீனப்படுத்துகிறது. 2019 வேலைநிறுத்தத்தின் போது, UAW எங்களை வேலை செய்ய வைத்தது. ஹேகர்ஸ்டவுனில் இயந்திர பற்றாக்குறை ஏற்பட்டபோது டப்ளினில் வேலைநிறுத்தத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது, அப்போது எங்களில் பலர் SUB ஊதியம் வழங்கப்படாமல், UAW இன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டோம்.

இது மீண்டும் நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது! தொழிலாளர்களின் சக்தி என்பது நமது ஐக்கியத்தில் உள்ளதே தவிர, பிரிவில் அல்ல!

3. அனைத்து தொழிலாளர்களுக்கும் UAW முழு வேலைநிறுத்த ஊதியத்தை வழங்க வேண்டுமே தவிர, 275 டாலர் வறுமை நிலை ஊதியத்தை அல்ல என்ற நமது கோரிக்கையை எழுப்புங்கள். இது, மாக் ஆலையில் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

UAW என்பது பெரும் வளங்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் சர்வதேச அமைப்பு 80 மில்லியன் டாலர் ஆண்டு ஊதியம் அளவைக் கொண்டு மிகப்பெரிய அதிகாரத்துவத்தால் நியமிக்கப்பட்ட பணியாளர்களுடன் இயங்குகிறது. எங்களுக்கான உண்மையான ஊதியங்களை குறைக்க விரும்பும் புதிய தலைவர் ரே கரி (Ray Curry) உட்பட, இதில் 17 UAW அதிகாரிகள் உள்ளனர், இவர்கள் ஆண்டுக்கு 200,000 டாலருக்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள், மேலும் 450 க்கும் மேற்பட்டவர்கள் 100,000 டாலருக்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். நாங்கள் ஒரு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நிறுவனத்திற்கு நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

எங்கள் நலன்களுக்காக போராட, எங்களுக்காக பொறுப்புள்ள நிறுவனங்கள் தேவை. UAW விரும்புவதை நிறுவனம் எங்களிடம் கூறுவதும், மேலும் அதனை ஏற்றுக்கொள்ள UAW எங்களை நிர்ப்பந்திப்பதுமான ஒரு வழி பாதையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உச்சபட்ச நேரமிதுவே.

நாங்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (VWRFC) அமைத்தோம், ஏனென்றால் இந்த ஒப்பந்தப் போராட்டத்தில் இருமுனை போராட்டத்தை நாங்கள் எதிர்கொள்வதை நாங்கள் அங்கீகரித்தோம். ஒரு முனையில், என்ன விலை கொடுத்தேனும் எங்கள் உழைப்பிலிருந்து பெரும் இலாபத்தை பிழிந்தெடுக்க முனைந்த இரக்கமற்ற சர்வதேச நிறுவனத்தை எதிர்கொண்டோம். மறு முனையில், நிறுவனத்தின் கோரிக்கைகளை எங்கள் மீது திணிக்க முறையாக செயல்பட்ட “எங்கள்” தொழிற்சங்கத்தை நாங்கள் எதிர்கொண்டோம்.

மாக் தொழிலாளர்கள்: எங்களுடன் சேர்ந்து, NRV ஆலை வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்படுவதை உடைக்க உதவுங்கள்! அதற்காக பின்வரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்:

முதலாவதாக, மாக் ஆலைகளில் சாமானிய தொழிலாளர்கள் குழுவை உருவாக்குவதற்கு உதவ volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரண்டாவதாக, எங்கள் போராட்டத்தைப் பற்றி தெரிவிக்க இந்த கடிதத்தை உங்களால் முடிந்த அளவிற்கு ஏராளமான தொழிலாளர்களுக்கு விநியோகியுங்கள், மேலும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள கோரிக்கைகளை தெரியப்படுத்துங்கள்.

தங்கள் உண்மையுள்ள,

வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு

Loading