பெல்ஜியத்தின் கென்டில் வொல்வோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெல்ஜியத்தின் கென்டில் உள்ள வோல்வோ கார் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை இரண்டாவது நாளாக தங்கள் திடீர் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். அமெரிக்காவில் வேர்ஜீனியாவில் வோல்வோ டிரக் தொழிலாளர்கள் இன்று UAW தொழிற்சங்கத்திற்கும் வோல்வோ நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு புதிய ஒப்பந்தத்தில் வாக்களிக்கவுள்ள நேரத்தில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

கென்ட் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை ஷிப்டுடன் தொடங்கியது, அப்போது தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே தமது ஷிப்டை தொடங்கினர். இவ் வேலைநிறுத்தம் மதியம் மற்றும் மாலை ஷிப்டுகளில் தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை காலை, தொழிலாளர்கள் பேஸ்புக்கில் வேலைநிறுத்த நடவடிக்கை குறிப்பிட்ட அளவில் நாள் ஷிப்டுக்கு தொடர்ந்ததாக தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தின் காரணமாக வியாழக்கிழமை ஒரு வாகனம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

வொல்வோ கார் தொழிலாளர்கள் கென்டில் ஆலைக்கு வெளியே கூடுகிறார்கள்

நிறுவன நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு எதிரான போராட்டத்தில் கென்ட் வேலைநிறுத்தம் ஒரு திடீர் வேலைநிறுத்த நடவடிக்கையாக உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது 6,500 தொழிலாளர்களில் 6,000 பேர் வாரத்திற்கு 2.5 மணிநேரம் கூடுதலாக 37.5 முதல் 40 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். நிறுவனம் இந்த வாரம் ஊழியர்களுக்கு இந் நேரமாற்றத்தை அறிவித்து நோட்டீஸ் அனுப்பிய பின்னர் வேலைநிறுத்தம் தொடங்கியது.

கோடை விடுமுறைகள் முடிவடையும் வரை வேலை வாரத்தின் அதிகரிப்பு குறித்த மேலதிக விவாதங்களை தாமதப்படுத்துவதாக நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து நேற்று மாலை சில பணிகள் ஓரளவு மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வேலை நேரத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எந்த நோக்கமும் இல்லை என்றும் 40 மணி நேர வாரம் 'விவாதத்திற்கு இல்லை' என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

வொல்வோ நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்குமான ஒப்பந்தத்தை கண்டிக்கவும், தொழிற்சங்கத்தின் மீதான தங்கள் விரோதத்தை வெளிப்படுத்தவும் வொல்வோ கார் தொழிலாளர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தினர், இது நிறுவன நிர்வாகத்தினால் பரவலாகக் கையாளப்படுகிறது. வேலை வாரத்தின் நீட்டிப்பு குறித்து தொழிலாளர்களிடையே வாக்களிப்பு நடாத்த தொழிற்சங்கம் எந்தவொரு நடவடிக்கையும் செய்யவில்லை.

லோரென்சோ பி (Lorenzo B) எழுதினார்: “நிறுத்த வேண்டாம், வேலைநிறுத்தம் செய்யும் சகாக்களே! எமது போராட்டமா அல்லது வணிகமா என்று தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது.”

வேலை வாரத்தை நீடிப்பது குறித்த விவாதங்களை தாமதப்படுத்துவதற்கான நிர்வாகத்தின் உறுதிமொழியைப் பற்றி லோரென்சோ மேலும் கூறினார்: “இந்த நிலமையானது விடுமுறைக்கு முன்னர் தங்கள் கார்களை உருவாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே. விடுமுறைக்குப் பின்னர் வொல்வோ எதுவும் நடக்காதது போல் தங்கள் திட்டத்தைத் தொடரப் போகிறது… வேலை நேரங்களுக்கு மாற்றம் என்பது பேச்சுவார்த்தைக்கு மாறான நிலை என்று தெளிவாகக் கூறுகிறது. அந்த நிலைதான் நிறைய பேர்களுக்கு பிரச்சினை. போக்குவரத்து நெரிசல். எமக்குள்ள மிச்சமீதமான நேரம். எங்கள் வாழ்க்கை துணைகளுக்கு இரண்டாவது கார் தேவை. குழந்தைகளை பகல்நேர பராமரிப்புக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்கள். இதனால் நாம் அனைவரும் விட்டுக் கொடுக்க வேண்டுமே, ஆனால் நிறுவனம் எந்த இழப்பீடும் இல்லை என்கிறது. இது அப்பட்டமான அவதூறு.”

' 37 ஆண்டுகளாக வொல்வோவில் பணிபுரிந்து வரும் ஹேர்பிரான்ட் எழுதினார். 'தொழிற்சங்க பிரதிநிதிகள் நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள்.அவர்களுக்கு எரிபொருள் அட்டைகளுடன் கூடிய நிறுவன கார்களுடன் ஆடம்பரமாக வாழ்வதுடன், சுவீடன் மற்றும் சீனாவுடனான ஐரோப்பிய சந்திப்புகளுக்கு இலவசமாக விமானத்தில் பயணிக்கிறார்கள். இவர்கள் தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யமாட்டார்கள்.”

கீர்ட் எழுதினார்: “அன்று 40 மணி நேர வாரத்திற்கு எதிராக எங்கள் பெற்றோர் வெற்றிகரமாக போராடினார்கள். தொழிற்சங்கங்கள் அதற்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும், இல்லையெனில் [வொல்வோ நிர்வாகத்தால்] அதை செயல்படுத்த முடியாது. அதற்கு ஒப்புக்கொண்ட துரோகிகளுக்கு அவர்கள் ஏதாவது வாக்குறுதி அளித்திருக்கலாம். ”

தொழிலாளர்களின் வாழ்க்கையில் 40 மணி நேர வேலை மாற்றத்தின் தாக்கத்தை பெக்கி (Peggy) விவரித்தார்: “மாறா ஊதியத்திற்காக அதிக நேரம்வேலை செய்வது, எமது குழந்தைகளுடன் குறைந்த நேரம் செலவிடுவது இதனால் குடும்ப வாழ்க்கை பூஜ்ஜியமாகின்றது, அதிக நேரம் வேலை செய்வதால் தொழிலாளர்கள் குறுகிய காலத்திற்குள் நோய்வாய்ப்படுவார்கள், இன்னும் அதிக பணிச்சுமை உருவாக்கப்படும். பாதிப்படைவோர் அதிகமானவர்கள் இருப்பார்கள். உடல்நலக்குறைவு, விபத்துக்கள் மற்றும் வயதான தொழிலாளர்கள் தமது வீட்டில் இருப்பார்கள். வெல்டிங் தொழிற்சாலையில் சிலர் ஏற்கனவே 6 மணிமுதல் 7 மணிவரை வேலை செய்கிறார்கள்… இவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் செய்வார்களா? இதற்காக தனி பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.”

மரியோ எழுதினார்: “வோல்வோ கார்களின் தொழிற்சங்கத்தினால் எமக்கு எந்த பயனும் இல்லை. ஊழியர்களிற்கு உதவுவதற்கு பதிலாக, அவர்கள் எம்மிடம் இருந்து மறைந்து நிற்கிறார்கள். ”

மற்றொரு தொழிலாளி வொல்வோ கென்ட் தொழிலாளர்களுக்காக ஒரு பேஸ்புக் பக்கத்தில் எழுதினார்: “இது சிறிது நேரம் காற்றில் உள்ளது. வொல்வோவில் 40 மணி நேர வேலை வாரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பல வாரங்களாக சில கதைகள் வந்துள்ளன ... இந்த வாரம் அவர்கள் அதை ஒரு முட்டாள்தனமான வீடியோ மற்றும் ஒரு சிறு புத்தகத்துடன் வெளியிட்டனர். இதற்காக எம்மில் இருந்து யாரும் செல்லபோவதுல்லை. கூடுதலான நேரம் வேலை செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?…

'நிறைய இளைஞர்கள் வேலையில் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்வதை நான் அறிகிறேன் ஏனெனில் அவர்கள் வெள்ளிக்கிழமையை இழக்கிறார்கள்! நான் இளையவள் அல்ல, ஆனால் எனது நண்பர்களையோ அல்லது குடும்பத்தினரையோ சந்திப்பதற்காக வெள்ளிக்கிழமை வேலை செய்ய விரும்பவில்லை. பழைய சக தொழிலாளர்களுக்கும் இது கடினமானது. இனி இந்த முறையில் வேலை செய்ய பெரும்பாலானோருக்கு முடியாது ...

'30 ஆண்டுகளாக வொல்வோவில் பணிபுரிந்து வரும் ஒரு பழைய சக ஊழியர் என்னிடம் சொன்னார், இது அவரது வாழ்க்கையில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மாற்றம் ... அவர்கள் இதற்கு முன்பு இதனை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்கள், அதிலிருந்து விடுபட மக்களும் போராட வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் தொழிலாளர்களின் கருத்தைக் கூட கேட்காமல்…? ஆனால் அப்படி செய்ய முடியாது, தேவைப்படும்போது எமது குடும்பத்திற்காக நாம் மேலதிக நேர வேலையை தீர்மானிக்கலாம்`.

“தொழிலாளர்கள் இப்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எனக்கு ஆச்சரியமில்லை. இது உண்மையில் நம் தொண்டையில் இருந்து கீழே நகர்த்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் நாம் வாக்களிப்பதையிட்டு வோல்வோ நிறுவனம் அச்சமடைகிறது. தொழிலாளர்கள் இதற்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ”

வேர்ஜீனியாவில் நடந்து வரும் வேலைநிறுத்தம் குறித்து வொல்வோ கார்கள் மற்றும் வோல்வோ டிரக்ஸ் தொழிலாளர்களுடன் பேச உலக சோசலிச வலைத் தள அறிக்கை குழு கென்டிற்குப் பயணம் செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் சமீபத்திய வேலைநிறுத்தம் வெடித்தது. வேர்ஜீனியாவில் போராட்டத்திற்கு கென்ட் தொழிலாளர்கள் மத்தியில் பரவலான ஆதரவு உள்ளது.

தங்கள் போராட்டத்தை மேலும் தொடர, வோல்வோ கென்ட் தொழிலாளர்கள் அமெரிக்காவில் தமது சக தொழிலாளர் போராட்டத்திலிருந்து படிப்பினைகளை எடுக்க வேண்டும், அவர்கள் நிறுவன சார்பு UAW தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதீனமாக சாமானிய குழுவை அமைத்தனர். அத்தகைய குழு, தொழிலாளர்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் சார்பு தொழிற்சங்கத்திலிருந்து சுயாதீனமாக, வொல்வோ தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்க அனுமதிக்கும், இது அமெரிக்காவில் உள்ள சக தொழிலாளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடும்.

அத்தகைய முயற்சியில் கென்டில் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கு WSWS எல்லா உதவிகளையும் வழங்கும். அத்தகைய குழுவை உருவாக்க ஆர்வமுள்ள தொழிலாளர்களை கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி நேரடியாக எங்களை தொடர்பு கொள்ள அழைக்கிறோம்.

Loading