“உங்கள் உரிமைகளை கோருங்கள்! அவர்கள் எங்கள் செலவில் பில்லியன்களை சம்பாதிக்கிறார்கள்"

பெல்ஜியத்தின் கென்டில் உள்ள வொல்வோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் தங்கள் சகாக்களின் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெல்ஜியத்தின் கென்ட் (Ghent) இல் உள்ள வொல்வோ வாகனத் தொழிலாளர்கள் நான்கு வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வேர்ஜீனியாவின் டப்ளினில் 3,000 க்கும் மேற்பட்ட தமது சகாக்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் நேற்று கென்டில் உள்ள வொல்வோ கார்கள் மற்றும் வொல்வோ டிரக்குகள் ஆலைகளில் தொழிலாளர்களுடன் பேசினர். அவர்கள் உல்ரிச் ரிப்பேர்ட் கென்ட் தொழிலாளர்களுக்கு அழைப்புவிட்ட பகிரங்க கடிதத்தின் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர். ரிப்பேர்ட், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தலைவரும், வரவிருக்கும் ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல்களில் ஒரு SGP இன் வேட்பாளருமாவர்.

அந்த கடிதம், அமெரிக்காவில் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்துவதை உடைக்கவும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தொழிற்சாலைகளிலிருந்து வலுச்சேர்த்தல்களை அணிதிரட்டவும் கோருகிறது. பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை வெல்வதற்கும், கடந்த சில ஆண்டுகளின் ஊதியம் மற்றும் சமூக வெட்டுக்களை மாற்றியமைக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் இதுவே ஒரே வழி.

கென்டில் வொல்வோ 6,500 க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது, அவர்களில் 2,000 பேர் வொல்வோ டிரக்ஸ் ஆலையில் பணியாற்றுகின்றனர். இந்த நகரம் பெல்ஜியத்தின் பிளெமிஷ் பேசும் பகுதியில் அமைந்துள்ளது. WSWS நிருபர்கள் வேலைநிறுத்தத்திற்கு பரவலான ஆதரவைப் பெற்றனர்.

ஸ்டீவன்

வொல்வோ டிரக்ஸைச் சேர்ந்த ஸ்டீவன் கூறினார்: “அவர்களுக்கு எனது ஆதரவு இருக்கிறது. 'நாங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் ஒரு பொதுவான ஒரே அணியை உருவாக்க முயற்சிப்பதுதான். இப்போது சமூக உரிமைகளுக்கு எதிராக உலகளாவிய தொற்றுநோய் உள்ளது. ஊடகங்கள் அடிப்படையில் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் இது மேலும் மேலும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்: உங்கள் முன்னோர்களை திரும்பிப் பார்க்கவும், அவர்கள் எவ்வாறு தங்கள் உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதைப் பார்க்கவும்; இன்று தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராட முயற்சிக்கவும்.'

“அவர்கள் ஒவ்வொரு உரிமைகளுக்காகவும் போராடியதை இளைஞர்கள் மறந்துவிடலாம். அவர்கள் கொண்டிருக்கும் எல்லாவற்றிற்கும், அவர்கள் ஒவ்வொரு நாளும் போராட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” ஸ்டீவன் மேலும் கூறினார். 'இங்கே பெல்ஜியத்தில் ஊதியங்கள், உணவு மற்றும் பிற பொருட்களின் உயரும் செலவுகளுக்கு ஏற்ப இல்லை. அரசியல்வாதிகள் எங்களை அணுகுவது கூட இல்லை. அது முதலாளிகளுக்கு நல்லது.'

இசாக்

ஆலையில் ஐந்து ஆண்டுகளாக வேலைசெய்யும் ஐசாக், 'உங்கள் உரிமைகளை கோருங்கள்!' என்றார். “அவ்வாறு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, எனவே அதைக் கோருங்கள்! அவர்கள் எங்கள் செலவில் பில்லியன்களை சம்பாதிக்கிறார்கள். நிறுவனத்தின் தலைவர்கள் மில்லியன் கணக்கில் பெறுகின்றனர்.'

“இங்கேயும், அவர்கள் ஓய்வூதிய நிதிக்குச் செல்லும் வருடாந்திர போனஸ்களை கணிசமாகக் குறைக்கிறார்கள். இந்த ஆண்டு எனது போனஸ், 1,000 யூரோவிலிருந்து 76 யூரோவாக சரிந்துள்ளது.'

'தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு பெரிய முன்னணியை நாங்கள் உருவாக்க வேண்டும்,' 'மேல்மட்டத்தினருக்கு அல்ல, நீங்கள் ஏதாவது சாதிக்க முடியும்' என்று அவர் கூறினார்.

டலிலா

வோல்வோ டிரக்ஸில் பணிபுரியும் தலிலா கூறினார்: 'உறுதியாக இருங்கள், உங்கள் நம்பிக்கையை வைத்திருங்கள்!' 'உங்கள் வேலைநிறுத்தம் பற்றி நான் அனைவருக்கும் கூறுவேன்!'

பல தொழிலாளர்கள் துண்டுப்பிரசுரத்தைப் பெறும் வரை வேலைநிறுத்தத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை, அல்லது பேஸ்புக்கில் பகிரப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகள் மூலம் மட்டுமே அதைப் பற்றி அறிந்திருந்தனர். தொழிற்சங்கத்திடமிருந்து தாங்கள் இதுபற்றி எதுவும் கேள்விப்படவில்லை என பல தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு சலுகைகள் நிறைந்த ஒப்பந்தங்களை வழங்குவதில் UAW இன் பங்குக்கும் பெல்ஜியத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் பங்குக்கும் இடையே அவர்கள் ஒரு சமாந்திரத்தை வரைந்தனர்.

'இது மிகவும் எளிது, இங்குள்ள தொழிற்சங்த்திற்கு வொல்வோவால் பணம் செலுத்தப்படுகிறது' என வொல்வோ கார் தொழிற்சாலையின் மாரியோ கூறினார். 'அவர்கள் வொல்வோவுடன் ஒத்துழைக்கிறார்கள்', இந்த ஆண்டு, நிறுவனம் தனது வேலை நேரத்தை வாரத்திற்கு 38 முதல் 40 மணி நேரம் வரை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மிக்கேல்

10 ஆண்டுகளாக வோல்வோ கார் இல் வேலைசெய்யும் மிக்கேல், தொழிற்சங்கத்தின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார்: “தேர்தல் நேரம் வரையில் நாங்கள் இங்கு தொழிற்சங்கத்தைக் காண்பதில்லை. ஆனால் மற்றபடி அவை மிகக் குறைவாகவே செயற்படுகின்றன. இது நீண்ட காலத்திற்கு முன்பு இருந்த தொழிற்சங்கமல்ல. அவர்கள் தங்கள் சொந்த நிலைக்காக மட்டுமே இங்கே இருக்கிறார்கள்.'

வொல்வோ வேலைநிறுத்தம் குறித்து அமெரிக்காவில் வாகனத் தொழிலாளர்கள் UAW ஆல் இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர். கென்டில், தொழிற்சங்கம் ஆலைக்குள் உள்ள தொழிலாளர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. 'வொல்வோவுக்குள் எங்களிடம் மூன்று பகுதிகள் உள்ளன, ஆனால் ஒரு ஆலையில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும், மற்றொன்றில் நாங்கள் அதைப் பற்றிக் கூட கேள்விப்படுவதே இல்லை'.

“அவர்கள் [அமெரிக்காவில்] என்ன செய்கிறார்கள் என்பது அவர்கள் செய்ய வேண்டியது. நீங்கள் கருவிகளை கீழே போட்டுவிட்டு உங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.”

டென்னிஸ் (வலது) தனது சக தொழிலாளர்களான நிக்கி மற்றும் கென்னத்துடன்

வேலைநிறுத்தம் செய்யும் சக ஊழியர்களுடன் டென்னிஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். “நாங்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில், ஒரே தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை செய்கிறோம். நாம் அனைவரும் இப்போது ஒரே பக்கத்தில் இருப்பதுதான் சரியானது.'

வேர்ஜீனியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர் பின்வருவனவற்றைச் சொல்ல விரும்பினார்: “தொற்றுநோய்களின் போது நாங்கள் ஒரு பெரிய அணியைப் போல தொழிலாளர்கள் ஒன்றாக இருந்தோம். இப்போது வொல்வோ ஊழியர்கள் எல்லா இடங்களிலும் ஒரே அணியாக ஒன்றிணைவது எங்களுக்கு நல்ல யோசனையாகும்” என்றார்.

'நாங்கள் இது குறித்த கட்டுரையை பேஸ்புக்கில் பார்த்திருக்காவிட்டால், வேலைநிறுத்தம் பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்காது' என்று டென்னிஸ் மேலும் கூறினார். வொல்வோவால் தொழிற்சங்கத்திற்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது என்பது பற்றி 'நாங்கள் பல ஆண்டுகளாக பேசினோம்'. 'நாங்கள் ஷிப்டுகளில் வேலை செய்யும்போது, அவர்கள் பகல்நேர வேலைகளில் ஒரு நல்ல வாழ்க்கையை கொண்டுள்ளனர்.'

அலெக்சாண்டர்

'வொல்வோ தொழிலாளர்களிடம் நான் ஒன்றைக் கூறுவேன்: நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், வெற்றி பெற முடியும்' என அலெக்சாண்டர் கூறினார். 'அங்குள்ள தொழிற்சங்கத்திற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கையில், ஒற்றுமை உங்களை பலப்படுத்தும்.'

Loading