மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மக்களிடையே இந்த வைரஸ் பாரியளவில் பரவ அனுமதிப்பதன் மூலம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை எட்டுவதைத் தவிர, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களிடம் ஒருபோதும் வேறெந்த திட்டமும் இருக்கவில்லை என்பதைப் பொறுத்த வரையில், தடுப்பூசியின் உற்பத்தி, ஒரு 'மந்திரக் கோல்' போல, இந்த பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்ற கருத்துருவின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது.
2020 இன் தொடக்கத்தில் இந்த நெருக்கடி தொடங்கியதில் இருந்தே, அப்போது ஜனாதிபதி பதவியில் ட்ரம்ப் இருந்த நிலையில், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அறிவுறுத்திய தொற்றுநோய் நிபுணர்கள் மற்றும் நுண்கிருமியியல் வல்லுனர்களின் பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை பெருநிறுவன நிதியியல் உயரடுக்கு எதிர்த்தது. இறைச்சிப் பதப்படுத்தல் துறை மற்றும் வாகனத்துறை போன்ற ஆலைகளில் Sars-CoV-2 இன் வேகமான பரவலை எதிர்கொண்ட தொழிலாளர்களின் அழுத்தத்தின் கீழ் மட்டுமே, வாஷிங்டனும் பிற மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களும் தற்காலிகமாக சமூக முடக்கம் மற்றும் சமூக இடைவெளிக்கான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டன. ஆனால், மார்ச் 2020 இல் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை (CARES Act) காங்கிரஸ் சபை நிறைவேற்றிய உடனேயே, ஊடகங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கின.
'நோயை விட குணப்படுத்துவது மோசமாக இருந்து விடக் கூடாது' என்ற நயவஞ்சகமான கோஷத்தால், அதாவது கோவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதற்காக பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தனிநபர் செல்வவளத்தை விலையாக கொடுக்கக் கூடாது என்பதால் கட்டளையிடப்பட்டு, வணிகங்கள் காலத்திற்கு முன்கூட்டியே திறந்து விடப்பட்டன. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இளம் குழந்தைகளுக்கு இந்த வைரஸைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக வாதிட்டு, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அழைப்புகள், பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடுவது மற்றும் 'வழமைக்குத் திரும்புவதற்கான' கோரிக்கையோடு, அனைத்து சக்திகளின் குரலும் போர்க்குரலாக ஒலித்தது.
2020 இன் இரண்டாம் பாதி முழுவதும் இறப்பு எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் அதிகரித்துக் கொண்டிருந்த போது, தடுப்பூசிகளின் உற்பத்தி அமெரிக்காவில் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் என்று பொதுமக்களுக்கு மறுஉத்தரவாதம் வழங்கப்பட்டது.
2020 இன் பிற்பகுதியில் ஃபைசர் மற்றும் மாடர்னாவின் செயல்திறன் மிக்க தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்ட போது, பொது சுகாதார நடவடிக்கைகள் இனித் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சர்வரோக நிவாரணி வந்துவிட்டதாக உலகெங்கிலும் வரவேற்கப்பட்டது.
'Operation Warp Speed' கோவிட்-19 தடுப்பூசி திட்டம் குறித்த அவரின் நவம்பர் 13, 2020 பத்திரிகையாளர் கூட்டத்தில், ட்ரம்ப் அறிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைத் தூக்கியெறிய அவர் ஓர் ஆட்சிக்கவிழ்ப்புச் சதிக்குத் தயாரிப்பு செய்துக் கொண்டிருந்த அதேவேளையில், “இந்த நிர்வாகம் எந்த சூழ்நிலையிலும் போகாது—ஒரு பொது முடக்கத்துக்குப் போகாது,” என்றார்.
ஜனவரி 6, 2021 கிளர்ச்சி தோல்வியுற்றது, சரியாக அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பைடென் பதவியேற்றார். ஆனால் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் தோல்வி கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கவில்லை. 'மந்திரக் கோல்' மூலோபாயம் தொடர்ந்தது மட்டுமல்ல; பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடுவதற்கும் மற்றும் இளம் குழந்தைகளைப் பள்ளிகளுக்குத் திரும்ப அனுப்புவதற்குமான முனைவும் தீவிரப்படுத்தப்பட்டது. கோவிட்-19 க்கு இளம் குழந்தைகளிடையே எதிர்ப்பு சக்தி இல்லை என்பதற்கும், வைரஸ் பரவலுக்குப் பள்ளிகள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்பதற்குமான அனைத்து ஆதாரமும் உதறி விடப்பட்டன.
வைரஸ் பரவலைத் தடுக்க, முக்கிய பொது சுகாதார நடவடிக்கையான முகக்கவசங்கள் அணிவதும் கூட கைவிடப்பட்டது. கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதற்கு முக்கிய பொறுப்பான அரசு ஆணையம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), கண்ணுக்குப் புலனாகா சிறிய காற்றுவழி பரவும் வைரஸ் நுண்துகளாக SARS-CoV-2 காற்றுத்துளிகளாக பரவும் என்பதை ஒப்புக் கொள்ளவதைத் தாமதப்படுத்தியது. 2021 மே மாத மத்தியில், ஒரு புதிய மற்றும் பேரழிவுகரமான நோய்தொற்று அதிகரிப்பு தொடங்கிய போதும், பைடென் நிர்வாகம் கட்டாயம் முகக்கவசம் அணிவதை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் இரண்டாலும் மற்றும் நிதிய-பெருநிறுவன நலன்களாலும் அறிவுறுத்தப்படும் தடுப்பூசி மட்டுமே போதுமானது மூலோபாயம் மூன்று மோசமான காரணங்களுக்காக கட்டளையிடப்படுகிறது.
முதலாவதாக, பெருநிறுவன இலாபங்ககளுடன் மோதும் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளை அவசியமற்றதாக ஆக்குதவன் மூலம் அது முற்றிலுமாக பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் பொருளாதார நலன்களுக்கு ஒத்துப் போகிறது.
இரண்டாவதாக, அது முக்கியமாக ஒரு தேசிய தீர்வாக உள்ளது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதான புவிசார் மூலோபாய எதிர்விரோதிகள் தொடர்பாக அதன் நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இறுதியில் இதைப் பயன்படுத்த முடியும்.
மூன்றாவதாக, இந்த பெருந்தொற்றுக்குப் பரந்த விதத்தில் ஒருங்கிணைந்த சமூக விடையிறுப்பு அவசியமில்லை என்ற எளிமையான ஒரு நடைமுறைவாத தனிப்பட்ட அணுகுமுறையாக உள்ளது.
தடுப்பூசிகள் மீதான முழுமையான முக்கியத்துவம் மட்டுமே இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடாது என்று பொது சுகாதார வட்டார விஞ்ஞானிகளும் நிபுணர்களும் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர். SARS-CoV-2 ஐ எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தான் என்றாலும், அவற்றின் இறுதி செயல்திறன் என்பது தேசிய பொது சுகாதார மூலோபாய கட்டமைப்புக்குள் அல்ல, இந்த வைரஸை அகற்றும் மற்றும் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கம் கொண்ட ஓர் உலகளாவிய பொது சுகாதார மூலோபாய கட்டமைப்புக்குள் அவற்றைப் பயன்படுத்துவதைச் சார்ந்துள்ளது. அத்தகைய மூலோபாயம் இல்லையென்றால், தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவலைக் குறைப்பதை விட மேலதிகமாக வேலை செய்து, தற்போதைய தடுப்பூசிகள் வழங்கும் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பையே விஞ்சி புதிய வகை வைரஸ்கள் உருவாகும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
இத்தகைய எச்சரிக்கைகள் புதிய ஓமிக்ரோன் வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் துயரகரமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் தொற்றக்கூடியது என்பதற்குக் கூடுதலாக ஓமிக்ரோன் அசல் திரிபில் இருந்து கூடுதலாக பரிணமித்துள்ளது, அதாவது தற்போதைய தடுப்பூசிகளின் வீரியம் இதனிடத்தில் குறைவாகவே இருக்கும். பைனான்சியல் டைம்ஸ், செவ்வாய்கிழமை காலை, மாடர்னாவின் தலைமை செயலதிகாரி ஸ்டீபன் பன்செல் உடனான ஒரு பேட்டியைப் பிரசுரித்தது, அதில் அவர், “[செயல்திறன்] ஒரே மாதிரியாக கொண்ட எந்த உலகமும் இல்லை என்று நினைக்கிறேன்… டெல்டா [வகையிலும்] இவ்வாறு தான் இருந்தது,” என்று எச்சரித்தார்.
தடுப்பூசியின் வீரியத்தில் 'இது சடரீதியான குறைவு ஏற்படுமென நினைக்கிறேன்,” “நான் பேசிய விஞ்ஞானிகள் அனைவரும்… 'இது நல்ல விதத்தில் இருக்காது' என்றே கூறுகிறார்கள்,” என்பதையும் பன்செல் சேர்த்துக் கொண்டார். “இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் இந்தளவுக்கு பெரிதும் உருமாறிய ஒரு வகை உருவாகுமென விஞ்ஞானிகளே எதிர்பார்த்திருக்கவில்லை,” என்றவர் டைம்ஸிற்குக் கூறினார்.
அதாவது, பெருந்தொற்று முழுமையாக மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கும் அபாயத்தை ஓமிக்ரோன் வகை உயர்த்துகிறது. அது ஓமிக்ரோன் வகை இல்லையென்றாலும், வேறொன்றாக இருக்கும்.
இந்த பெருந்தொற்றுக்கு —ஏனைய பிரதான முதலாளித்துவ நாடுகளுடன் சேர்ந்து—அமெரிக்காவின் தேசியவாத கொள்கையின் பேரழிவுகரமான விளைவுகளை ஓமிக்ரோன் வகையின் வெளிப்பாடு அம்பலப்படுத்தி உள்ளது. பன்செல் அவரின் பைனான்சியல் டைம்ஸிற்கான பேட்டியில், உலகளவில் தடுப்பூசி வினியோகிக்க மாடர்னா போதுமான வேலைகளைச் செய்யவில்லை என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலளிக்கையில் ஒரு வெளிப்படையான கருத்தை வெளியிட்டார். “இது பெரும்பாலும் பணக்கார நாடுகளின் ஒரு கொள்கை முடிவாகும்,” என்றார். “அமெரிக்காவில், வேறு வழியில்லை எங்கள் உற்பத்தியில் 60 சதவீதத்தை அமெரிக்க அரசுக்குக் கொடுக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்,” என்றார்.
இவ்வாறு தனியொரு நாட்டின் தடுப்பூசி 'அமெரிக்க கோட்டையரண்' மூலோபாயம் இப்போது, இந்த பெருந்தொற்று ஓர் உலகளாவிய நெருக்கடி இதை உலகளவிலேயே தீர்க்க முடியும் என்ற உண்மையை எதிர்கொண்டுள்ளது. மக்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள தென்னாபிரிக்காவில் தோன்றியதாக தெரியும் ஒரு புதிய திரிபின் பரிணாமம், உலகெங்கிலும் வேகமாக பரவி உள்ளது.
அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட, மக்களின் ஒரு கணிசமான பகுதியினர் தடுப்பூசியை எதிர்ப்பதை ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க மக்களில் 60 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த பெருந்தொற்றின் தற்போதைய மையமாக விளைங்கும் மிச்சிகனில் மக்களில் 55 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பெரும் பிரிவுகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பதற்குப் பின்தங்கிய நிலை மற்றும் அறியாமை மீது பழி போடுவது போதுமானளவுக்கு எளிதானது தான், ஆனால் மிகவும் உதவிகரமாக இருக்காது. இந்த பெருந்தொற்று அமெரிக்காவுக்குள் ஆழ்ந்த மற்றும் பலமான கலாச்சார பிரச்சினைகளைத் தொந்தரவூட்டும் விதத்தில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பொதுமக்களுக்குக் கல்வியூட்ட முயற்சிப்பதில் இருந்து விலகி அரசும் ஊடகங்களும் இடைவிடாமல் பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பி, விஞ்ஞான புரிதலை ஒடுக்கும் போது சமூக கல்விக்கான பணி பலவீனமாகி விடுகிறது.
ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளியான போதும் கூட, அரசாங்கம் உடனடியாக அந்த ஆபத்துக்களைக் குறைத்துக் காட்ட முனைந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்று வெற்று மறுஉத்தரவாதங்களை வழங்க பைடென் பத்திரிகைகளுக்கு முன் சென்றார். இந்த புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள எந்தவிதமான பொது முடக்கத்தையோ அல்லது எந்தவிதமான பிற பொது சுகாதார நடவடிக்கைகளையோ செயல்படுத்துவதை அவர் வெளிப்படையாக நிராகரித்தார். எல்லாவற்றையும் விட முக்கியமாக வோல் ஸ்ட்ரீட்டுக்கான மற்றும் கிறிஸ்துமஸ் விற்பனை காலத்திற்கான பாதைக்குக் குறுக்கே எதுவும் அனுமதிக்கப்பட போவதில்லை!
இந்த பெருந்தொற்றுக்கான விடையிறுப்பு, இரண்டாண்டுகளாக, ஆளும் வர்க்க நலன்களுக்கு அடிபணிய செய்யப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான உயிர்கள் இலாபத்திற்கான பலிபீடத்தில் பலி கொடுக்கப்பட்டுள்ளன.
இதனால் தான் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் முற்றிலும் ஒரு மருத்துவப் பிரச்சினை இல்லை. அதே போல அரசாங்கங்களின் நடவடிக்கைகள் அவை பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதால், ஒரு வித்தியாசமான கொள்கையை ஏற்க இது அரசாங்கங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்ளும் விஷயமும் இல்லை.
இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கும், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உலகளவில் அகற்றுவதற்கான மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை விட சாத்தியமான மூலோபாயம் எதுவும் இல்லை என்பதை இந்த ஓமிக்ரோன் வகை தெளிவுபடுத்துகிறது. பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மூடுவது, அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவது, பாரியளவில் பரிசோதனைகள் மற்றும் நோயின் தடம் அறிதல், நோய்தொற்று ஏற்பட்டவர்களைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல் என இதற்கு பொது சுகாதார நடவடிக்கையின் மொத்த வழிவகைகளுடன் சேர்ந்து உலகளவில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம் தேவைப்படுகிறது மற்றும் இன்றியமையாததாகிறது.
ஆனால் இந்த மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய சமூக இயக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. இந்த வைரஸிற்கான விடையிறுப்பு ஆளும் வர்க்கத்தின் கரங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற ஆலைகளை முடவும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நிறுத்தவும், ஒவ்வொரு வேலையிடத்திலும் தொழிற்சாலையிலும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், சாமானிய தொழிலாளர் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். வேலையிடங்கள் திறக்கப்பட்டிருக்கும் இடங்களில், இந்த பாதுகாப்புக் குழுக்களே நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றகரமான கொள்கைகளுக்கு எதிராக ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த பெருந்தொற்றின் இயல்பைக் குறித்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியூட்டுவது அவசியமாகிறது. உலக சோசலிச வலைத்தளம் தொடங்கி உள்ள உலகளாவிய தொழிலாளர் விசாரணை, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தலையீடு செய்ய சமூக மற்றும் அரசியல் தூண்டுதலை வழங்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.
ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பது மற்றும் உலகம் முழுவதும் அது வேகமாக பரவுவதானது, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தின் அடிப்படையில் அக்டோபர் 24, 2021 இல் WSWS அதன் இணையவழி கருத்தரங்களில் முன்னெடுத்த மூலோபாயத்தின் மற்றும் இந்த விசாரணையின் அவசரத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.
- கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் Sars-CoV-2 இன் இலக்கு தனிநபர்கள் அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறி வைக்கிறது. அந்த வைரஸ் பரவும் விதம் பாரிய நோய்தொற்று ஏற்படுவதை நோக்கி உள்ளது. Sars-CoV-2 பில்லியன் கணக்கானவர்களைத் தாக்க உயிரியல்ரீதியில் பரிணமித்துள்ளது, அவ்விதம் செயல்படுகையில் அது மில்லியன் கணக்கானவர்களை கொல்கிறது.
- எனவே, ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதை இலக்காகக் கொண்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயமே ஒரே பயனுள்ள மூலோபாயமாகும். இந்த பெருந்தொற்றுக்குப் பயனுள்ள ஒரு தேசிய தீர்வு எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலமும் — அனைத்து இனங்களும், இனவழிகளும் மற்றும் அனைத்து தேசியத்தை சார்ந்தவர்களும் — சுயநலமின்றி ஓர் உண்மையான பரந்த உலகளாவிய கூட்டு முயற்சியின் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இதிலிருந்து கடந்து செல்ல வேண்டும்.
- இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் பின்பற்றும் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். சமூகக் கொள்கையின் கேள்விக்கிடமற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டியதை, அதாவது மனித உயிர்களின் பாதுகாப்பை, பெருநிறுவன இலாப நலன்கள் மற்றும் தனியார் செல்வக் குவிப்புக்கு அடிபணிய செய்வதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
- உலகளவில் அகற்றுவதை நோக்கி வழிநடத்தப்படும் ஒரு மூலோபாயத்திற்கான தீர்க்கமான திருப்பத்தைக் கொண்டு வரும் முன்முயற்சி, மில்லியன் கணக்கான மக்களின் சமூகரீதியில் நனவான இயக்கத்திலிருந்து வர வேண்டும்.
- இந்த உலகளாவிய இயக்கம் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சியை உள்ளீர்த்திருக்க வேண்டும். விஞ்ஞானிகள் பலர் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் உயிரையே கூட ஆபத்தில் வைத்து உழைக்கிறார்கள் என்கின்ற நிலையில், விஞ்ஞானிகளை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்த வைரஸை உலகளவில் அகற்றுவதற்குச் சமூகத்தின் மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்திற்கும் விஞ்ஞான சமூகத்திற்கும் இடையே நெருக்கமான கூட்டுழைப்பு தேவைப்படுகிறது.
இந்த விசாரணைப் பணிக்காக ஆதரவைக் கட்டமைக்குமாறும் அதன் கண்டுபிடிப்புகளை முடிந்த வரை பரந்தளவில் பரப்புமாறும் நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த விசாரணைப் பணியை முன்னெடுப்பதில் தகவல்கள் மற்றும் தொழில்ரீதியான உதவிகளை வழங்குமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் செயலூக்கமாக உள்ள அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.