மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நவம்பர் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் மாறுபாடு (B.1.1.529), இப்போது அனைத்து ஆறு WHO பிராந்தியங்களை சேர்ந்த 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. WHO இன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலகெங்கிலும் உள்ள அனைத்து நோய்தொற்றுக்களில் 99 சதவீதம் டெல்டா மாறுபாட்டால் உருவானவை என்றாலும், இப்போது “[உலகளவில்] ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக [ஓமிக்ரோன்] மாறக்கூடும்,” என்று விளக்கினார்.
266 மில்லியனுக்கும் அதிகமான ஒட்டுமொத்த நோய்தொற்றுக்கள் மற்றும் 5.27 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களுடன் உலகளவில் நோய்தொற்றுக்களின் எழுச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டெல்டா வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் அதன் உச்சபட்ச எண்ணிக்கையை தொடர்கிறது. நாளாந்த சராசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிலையாக உயர்ந்து கொண்டே வந்து, தற்போது உலகளவில் ஒவ்வொரு நாளும் 600,000 க்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. இறப்புக்கள் ஒரு நாளைக்கு 7,000 என்றளவிற்கு பயங்கரமான விகிதங்களில் தொடர்ந்து நிகழ்கின்றன.
அமெரிக்காவில், இந்த வாரம் ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 50 மில்லியனுக்கு அதிகமாக இருக்கும். வோல்டோமீட்டர் கோவிட் தரவுப் பலகையின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை 810,000 ஐ நெருங்குகிறது. இதற்கிடையில், நாளாந்த கோவிட் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் 150,000 ஐ நெருங்குகிறது. மேலும், நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரி 106,000 க்கும் அதிகமாக இருப்பதுடன், தினசரி இறப்பு விகிதம் தொடர்ந்து மேல்நோக்கி உயர்ந்து, நாளாந்தம் சராசரியாக 1,200 ஐ நெருங்குகிறது.
ஐரோப்பாவில், 88 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் நோய்தொற்றுக்களும் மற்றும் 1.56 மில்லியன் இறப்புக்களும் பதிவாகியுள்ளன. தினசரி சராசரியின் அடிப்படையில், வாராந்திர நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒன்பது வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வந்து இப்போது 400,000 க்கு நெருக்கமாக உள்ளது. இறப்புக்கள் நிலையாக இருப்பதாக அறிகுறிகள் இருந்தாலும், அவையும் வாரத்திற்கு சுமார் 30,000 அல்லது ஒரு நாளைக்கு 4,200 க்கும் அதிகமாக தொடர்ந்து பேரழிவுகரமாக இருந்து வருகிறது.
கிழக்கு ஆசியாவில், இதுவரை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்த நாடுகள் கூட தற்போது நோய்தொற்றுக்களின் மிக மோசமான காலகட்டத்தை எதிர்கொள்கின்றன. தென் கொரியாவில், டிசம்பர் 4 அன்று ஒரே நாளில் உச்சபட்சமாக 5,352 நோய்தொற்றுக்களும், 70 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. அங்கு தொற்றுநோய்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதுடன், இறப்புக்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. மேலும் தெற்கே, வியட்நாமும் தாய்லாந்தும் கூட சமீபத்திய எழுச்சிகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்த அதிகரிப்புகள் ஒருபுறமிருக்க, மிகவும் பிறழ்வடைந்த மற்றும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள ஓமிக்ரோன் மாறுபாட்டால் உருவாகியுள்ள தற்போதைய கவலைகள் மீது தான் உலகம் இப்போது கவனம் குவித்துள்ளது. டெல்டாவின் பாதிப்பு மிக மோசமாக இருந்தாலும், தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோனால் உருவாகியுள்ள நோய்தொற்றுக்களின் நம்பமுடியாத வேகமான பரவல் விகிதம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாறுபாடுடனான ஆரம்ப தொடர்பின்படி பார்த்தால், இது அதன் முந்தைய முன்னோடிகளை விட அதிவேகமாகப் பரவுகிறது.
தென்னாபிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான ஏஞ்சலிக் கோட்ஸியின் கூற்றுப்படி, ஓமிக்ரோனின் கடுமையான மறுஇனப்பெருக்க எண்ணிக்கை (R), 6 க்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் BBC இடம் பேசுகையில், “இந்த வைரஸூம் பரவக்கூடியது என்பது தற்போது எங்களுக்குத் தெரியும். மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதன் R-மதிப்பு 6.3 என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். டெல்டாவின் மதிப்பு 5 க்கு மேல் இருந்தது.
தென்னாபிரிக்காவில் நாளாந்த சராசரி நோய்தொற்றுக்கள் வெறும் 266 ஆக இருந்த காலகட்டமான நவம்பர் 9 இல் விஞ்ஞானிகள் முதன்முதலில் ஓமிக்ரோன் மாறுபாட்டைக் கண்டறிந்ததன் பின்னர், அங்கு நோய்தொற்று விகிதங்கள் 32 மடங்கு உயர்ந்து தற்போது ஒரு நாளைக்கு 8,861 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகின்றன. ஒவ்வொரு மூன்று நாட்களில் நோய்தொற்றுக்கள் இரட்டிப்பாகின்றன. இந்த போக்குடன் சேர்ந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருவதானது, குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் மிகவும் நோய்வாய்ப்படலாம் என்ற பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் பணிபுரியும் பொது சுகாதார மருத்துவ நிபுணர் டாக்டர் வசீலா ஜசாத், ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் குழந்தைகளில் பெரும்பாலானோரின் பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. எனவே, வீடுகளிலுள்ள குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு நிச்சயமாக வயது வந்தோருக்கான தடுப்பூசி விகிதம் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் வெடிப்பின் முக்கிய மையமாகவுள்ள ஷ்வானில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்து சதவீத அளவிற்கு உள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நிகழ்வுகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளது. நான்காவது அலையின் முதல் இரண்டு வாரங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் ஜசாத் விளக்கினார். நாட்டின் மூன்றாவது அலையின் முதல் இரண்டு வாரங்களில், 20 க்கும் குறைவான குழந்தைகளே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பாரிய தொற்றுநோய் அலையை தடுப்பதற்கு உரிய பொது சுகாதார நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா கட்டாய தடுப்பூசிக்கு அழுத்தம் கொடுக்கிறார். நாட்டின் மக்கள்தொகையில் கால் பகுதியினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுகாதார அமைச்சர் ஜோ பாலா, ஓமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், அதன் ‘வீரியம் குறைவானது’ என்று பொதுமக்களுக்கு உறுதியளிப்பதன் மூலம், இந்த முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை கட்டுப்படுத்த முயன்றார்.
உலகளவில் SARS-CoV-2 வகைகளைக் கண்காணிக்கும் GISAID அமைப்பு, இதுவரை 35 நாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் இருப்பை உறுதிப்படுத்தும் வரிசைகளை சமர்ப்பித்துள்ளன என்று குறிப்பிட்டது. தென்னாபிரிக்கா 228 வரிசைகளை சமர்ப்பித்துள்ளது, இது மொத்த சமர்ப்பிப்புக்களில் கிட்டத்தட்ட 80 சதவீதமாகும். மேலும், இங்கிலாந்து 84, கானா 33, அமெரிக்கா 27 மற்றும் போட்ஸ்வானா 23 என வரிசைகளை சமர்ப்பித்துள்ளன. அமெரிக்காவில், 15 மாநிலங்கள் ஓமிக்ரோன் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவித்துள்ளது.
CDC இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி, ஞாயிற்றுக்கிழமை ABC செய்தியில் பேசுகையில், “நம்மிடம் பல டஜன் நோய்தொற்றுக்கள் இருப்பதை நாங்கள் அறிவோம், அவற்றை நாங்கள் நெருக்கமாக கண்காணிக்கிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சாத்தியமான நோய்தொற்றுக்கள் உருவாவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டு வருகிறோம். அதனால் அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார். டெல்டா மாறுபாட்டால் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் பின்னணியில் இந்த அறிக்கை வெளி வருகிறது.
SARS-CoV-2 அமெரிக்காவில் பரவலாக பரவக்கூடிய நோய்தொற்றாக மாறும் என்று வாலென்ஸ்கி வலியுறுத்துவதை வைத்து, மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக தொழிலாள வர்க்கம் பார்க்க வேண்டும். இது, CDC இன் கொள்கை நிதிய தன்னலக்குழுக்களுடன் ஒத்துப்போகும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு உறுதியளிக்கும் ஒரு அரசியல் அறிக்கையாகும். ஓமிக்ரோன் மாறுபாடு, டெல்டா அல்லது எதிர்கால பிற மாறுபாடுகளை விட வித்தியாசமாக கையாளப்படமாட்டாது.
ஐரோப்பாவில், நெதர்லாந்து, ஜேர்மனி, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, டென்மார்க், சுவீடன், லுக்செம்போர்க், அயர்லாந்து, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஐரோப்பிய CDC இன் டிசம்பர் 2, 2021 அச்சுறுத்தல் மதிப்பீட்டு சுருக்க அறிக்கை, 13 ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி நாடுகளால் 70 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் அறிக்கையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதிவேகமாக பரவிய பல நிகழ்வுகள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டதாகும்.
நோர்வேயின் பொது சுகாதார அதிகாரியின் கூற்றுப்படி, சமீபத்தில் நோர்வேயில் நடந்த கிறிஸ்துமஸ் விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட 120 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருந்தனர். “இந்த விருந்து நோய்தொற்றுக்களை அதிகம் பரப்பும் நிகழ்வாக இருந்தது. எங்களது அனுமானத்தின்படி, விருந்தின் போது 120 பங்கேற்பாளர்களில் குறைந்தது பாதிப் பேர் ஓமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது, தென்னாபிரிக்காவிற்கு வெளியே இப்போது மிகப்பெரிய ஓமிக்ரோன் வெடிப்பை உருவாக்குகிறது” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது] என்று டாக்டர் பிரபென் அவிட்ஸ்லேண்ட் கூறினார்.
ஐரோப்பிய CDC அவர்களது சுருக்க அறிக்கையில் பின்வரும் கணிப்பைச் செய்தது: “தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்ட பூர்வாங்கத் தரவுகள், அக்கறை கொள்ளப்பட வேண்டிய டெல்டா மாறுபாட்டை (VOC) விட கணிசமான வளர்ச்சியை இது கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில், அடுத்த சில மாதங்களுக்குள் EU/EEA இல் உள்ள அனைத்து SARS-CoV-2 நோய்தொற்றுக்களில் பாதிக்கும் மேற்பட்டதை ஓமிக்ரோன் VOC ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதை கணிதவியல் மாதிரிகள் குறிப்பிடுகின்றன.”
அவை மேலும், “ஓமிக்ரோன் VOC இன் ஸ்பைக் புரதத்தில் பல பிறழ்வுகள் இருப்பதானது, தொற்று அல்லது தடுப்பூசி மூலம் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பிகளின் நடுநிலையான செயல்பாடு குறைவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. ஓமிக்ரோன் VOC தென்னாபிரிக்காவில் மீண்டும் நோய்தொற்றை அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றும் கூறுகின்றன. தென்னாபிரிக்காவிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் அடிப்படையிலான இந்த அறிக்கை மீண்டும் நோய்தொற்றின் மிக அதிக விகிதத்தைக் காட்டியமை, ஓமிக்ரோன் மாறுபாடு முன்னைய நோய்தொற்றுக்கள் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் என்பதைக் குறிக்கிறது.
ஓமிக்ரோனால் ஏற்படும் நோய்தொற்று டெல்டாவை விட குறைவான, அதே அளவான, அல்லது மிகக் கடுமையான நோய்த் தன்மையை உண்டாக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. WHO இன் தொழில்நுட்ப தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், ஓமிக்ரோனால் ஏற்படும் நோய் தீவிரத்தை புரிந்துகொள்வது இன்னும் தாமதமாகிவிட்டது என்று குறிப்பிட்டார். பொதுவாக, குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் இலேசான அறிகுறிகள் இருக்கும், மேலும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட அல்லது பிற மாறுபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் உள்ள அனுமானங்கள் ஆரம்ப காலத்தில் இந்தக் கேள்விகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளை குழப்பமடையச் செய்யும்.
WHO இன் சுகாதார அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான், தனது சக ஊழியரின் எச்சரிக்கையை எதிரொலித்தார்: “துரதிருஷ்டவசமாக, இது நேரம் எடுக்கும். நோய்தொற்றின் முன்னைய அலைகளிலும் நாம் அதைப் பார்த்தோம். நிகழ்வு விகிதம் அதிகரிக்கும்போது, மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேரக்கையும் மற்றும் இறப்புக்களும் அதிகரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்ல ஓரிரு வாரங்களை இது எடுத்துக்கொள்ளும்.”
வட அமெரிக்காவில், அமெரிக்காவைத் தவிர, மெக்சிகோவும் கனடாவும் புதிய மாறுபாட்டின் நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளன. தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முழுவதும் நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து கணக்கீடுகளின்படி, குறிப்பிட்ட வரிசையில் சம்பவங்களை இணைக்கும் திறனில்லாத பல நாடுகள் ஓமிக்ரோனிலிருந்து பாதுகாப்பதை விட அதிகமாக உள்ளன. இந்த புதிய மாறுபாடு உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது மிகவும் உறுதியாகிறது.
உண்மையில், ஓமிக்ரோனால் உருவான கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், டெல்டா மற்றும் ஓமிக்ரோன் மாறுபாடுகள் ஒன்றுக்கொன்று இடம் மாறி நோய்தொற்றை விளைவிப்பதை விட, ஒரே நேரத்தில் இரு-திரிபு தொற்றுநோயாக பரிணமிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாடும் இந்த முன்னேற்றங்களுக்கு ஒரு தீவிரமான அணுகுமுறையைத் தொடர்கிறது. பல கொள்கை விஞ்ஞானிகள் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தடுப்பூசி-மட்டுமே வழி என்ற உத்தியை நம்புவது குறுகிய பார்வை கொண்டது என்பதுடன், பகுத்தறிவற்றதாகும். இது, மக்களை தடுப்பூசி போடுவதற்கும் மற்றும் சிறந்ததன் மீது நம்பிக்கை வைப்பதற்கும் அழைப்பு விடுப்பதாகும். மேலும், உலகின் மக்களுக்கு இந்த கொடிய மாறுபாடுகளால் அபாயங்கள் இருந்தாலும், பங்குச் சந்தைகள் தடையின்றி இயங்க வேண்டும் என்ற தர்க்கம் தொடர்ந்து உள்ளது.
மேலும் படிக்க
- கோவிட்-19 ஐ எதிர்க்க "தடுப்பூசி மட்டுமே போதும்" மூலோபாயத்தை ஓமிக்ரோன் வகை வைரஸ் அம்பலப்படுத்துகிறது
- ஓமிக்ரோன் வைரஸ் ஐரோப்பாவில் "ஒரு சில மாதங்களில்" அதிகமாக மேலோங்குமென ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கிறது
- தென்னாபிரிக்காவின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியை எதிர்கொள்வதற்கான புதிய நடவடிக்கைகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிராகரிக்கிறது