மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐரோப்பிய அரசாங்கங்களின் குற்றகரமான செயலற்ற தன்மை, கொரோனா வைரஸின் மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட மற்றும் ஓரளவு தடுப்பூசி எதிர்ப்புள்ள ஓமிக்ரோன் மாறுபாட்டை கண்டம் முழுவதும் பரவ அனுமதித்துள்ளது. இன்றுவரை, ஜேர்மன் அரசாங்கம் இந்த அச்சுறுத்தும் பேரழிவைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது.
கடந்த புதன்கிழமை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், “ஜனவரி நடுப்பகுதியில்” ஓமிக்ரோன் கண்டத்தின் முதன்மை ஆதிக்க வகை மாறுபாடாக உருவெடுக்கும் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர், டிசம்பர் 16 முதல் 19 தேதிகளுக்கு இடையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் 1,533 ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. இதன் பொருள், 28 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை பதிவாகியுள்ள 4,691 மொத்த ஓமிக்ரோன் நோய்தொற்றுக்களில் மூன்றில் ஒரு பங்கு நோய்தொற்றுக்கள் கடந்த சில நாட்களில் தான் பரவியுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் சுமார் 2.5 மில்லியன் மக்களை நோய்தொற்று பாதிப்புக்குள்ளாக்கி, 25,000 பேரை பலிகொண்டதான வெடித்துப் பரவிய டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோனின் அதிவேக பரவல் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஜேர்மன் தற்போது மேற்கு ஐரோப்பாவில் மிக அதிக கோவிட்-19 இறப்புக்களைக் கொண்டுள்ளது, அதாவது ஒவ்வொரு நாளும் 370 க்கும் மேற்பட்ட மக்கள் அதனால் இறக்கின்றனர், மேலும் மருத்துவமனைகள் முற்றிலும் அவற்றின் வரம்பை மீறிவிட்டன.
ராபர்ட் கோச் நிறுவனத்தின் (RKI, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான ஜேர்மன் நிறுவனம்) கருத்துப்படி, மெக்லென்பேர்க்-மேற்கு பொமரேனியா மாநிலத்தைத் தவிர ஜேர்மனியின் அனைத்து மாநிலங்களிலும் ஓமிக்ரோன் மாறுபாடு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. மொத்த நோய்தொற்றுக்களில் ஓமிக்ரோன் நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ பங்கு ஏற்கனவே ஆறு மடங்கு அதிகரித்துள்ளது, டிசம்பர் முதல் வாரத்தில் 0.1 இல் இருந்து 0.6 சதவீதமாக அதிகரித்தது, மேலும் இப்போது அது பல மடங்கு அதிகமாக இருக்கும். நேர்மறை PCR பரிசோதனைகளில் 1.3 சதவீதம் மட்டுமே மாறுபாட்டை அடையாளம் காணத் தேவையான மரபணு வரிசைமுறைக்கு உட்படுவதால் உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இன்னும் அதிகமாக இருக்கும்.
அனைத்து தீவிர மருத்துவர்களும் விஞ்ஞானிகளும், ஓமிக்ரோன் மாறுபாட்டின் தடையற்ற பரவலானது, பூமியில் தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் நிகழ்ந்ததை விஞ்சும் அளவிற்கு பாரிய மரணங்களைத் தூண்டும் என்று எச்சரிக்கின்றனர்.
நோய் தடுப்பு குறித்த ஆய்வுக்கான ஜேர்மன் சங்கத்தின் பொதுச் செயலர் கார்ஸ்டன் வாட்ஸ்ல், “பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு என்பது சுமார் 75 சதவீத அளவிற்கே இருக்கும்” என்று Augsburger Allgemeine இல் எச்சரித்துள்ளார். மேலும், டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் “அதிக பாதிபில்லாதது” எனக் கருத முடியாது என்று வாட்ஸ்ல் வலியுறுத்தினார். வெள்ளிக்கிழமை, பிரிட்டிஷ் இம்பீரியல் கல்லூரியின் ஒரு ஆய்வு, பரவலாக காணப்படும் இந்தக் கூற்றுக்கு “எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கண்டறிந்தது.
தேசிய வார இதழான Zeit “முன்நிகழ்ந்திராத நோய்தொற்று அலையின் சக்தி” பற்றி பேசுகிறது, வரைபடத்தில் அதன் வளர்ச்சி வளைவு “சுவரை” போன்று செங்குத்து வடிவில் இருப்பதாகக் கூறுகிறது. ஜேர்மன் மருத்துவமனை சங்கம் “இதுவரை நாம் அனுபவித்ததைத் தாண்டி ஏதேனும் நிகழக்கூடிய” சூழ்நிலை உருவாவதற்கும், மேலும் “தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தற்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விகிதம் கணிசமாகக் குறைவதற்கு முன்னதாகவே” அது நிகழ்வதற்கும் அச்சுறுத்துவது குறித்து அஞ்சுகிறது. ஏற்கனவே, தகன மையங்கள் கூடுதல் வேலைநேரங்களுடன் இயங்குகின்றன, மேலும் இராணுவம் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளைச் சேர்க்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளைத் தேடி விமானத்தில் சுற்றுகிறது.
இத்தகைய பேரழிவுகர வளர்ச்சி ஒருபுறமிருக்க, ஜேர்மன் அரசாங்கம், பொதுமக்கள் உயிரைக் காக்கும் பூட்டுதல்கள் எதுவும் இருக்காது, அதிலும் ஓரளவு பூட்டுதல்கள் கூட இருக்காது என்பதை வலியுறுத்தும், அதன் கொலைகார பாரிய நோய்தொற்று கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. குடும்பங்கள் பாரம்பரியமாக ஒன்று கூடுவதான கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களுக்கு சற்று முன்னதாக, என்ன விலை கொடுத்தேனும் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு அதிகபட்ச இலாபத்தை ஈட்டித் தருவதற்காக குழந்தைகள் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கும், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளுக்கும் தொடர்ந்து செல்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, Bericht aus Berlin செய்தி ஊடகத்திடம் பேசுகையில், சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த புதிய மத்திய சுகாதார அமைச்சர் Karl Lauterbach, “கிறிஸ்மஸூக்கு முன்னர் நெதர்லாந்தில் நடைமுறையிலுள்ள பூட்டுதல்கள் போல நமக்கு இங்கே இருக்காது” என்று கூறினார். மேலும், இழிவான வலதுசாரி Bild தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், கிறிஸ்துமஸூக்கு பின்னர் கூட “கடுமையான பூட்டுதல்கள்” இருக்காது, அல்லது “கிறிஸ்துமஸ் கால பூட்டுதல்கள்” அல்லது “பிராந்திய ரீதியாக வரையறுக்கப்பட்ட பூட்டுதல்கள்” என எதுவும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, Lauterbach இன் கருத்துப்படி, மக்கள் “சமீபமாக ஜனவரி தொடக்கத்தில்” உச்சபட்ச நோய்தொற்று விகிதங்களை எதிர்கொள்ள “தயாராக இருக்க வேண்டும்.”
“ஓமிக்ரோன் இங்கு இருக்கிறது, மேலும் அது எங்கும் பரவும்” என்றும், இந்த வளர்ச்சியை “இனி நிறுத்த முடியாது” என்றும் அவர் அறிவித்தார்.
நேற்று நடைபெற்ற மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் உச்சிமாநாடு பூட்டுதல்களை முழுமையாக நிராகரித்தது. அதன் தீர்மானம், தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியோ, அல்லது குழந்தை பராமரிப்பு மையங்களை முன்கூட்டியே மூடுவது பற்றியோ திட்டமிடவில்லை. பசுமைக் கட்சியைச் சேர்ந்த துணை சான்சிலரும் மற்றும் பொருளாதார அமைச்சருமான ராபர்ட் ஹேபெக் திங்கட்கிழமை, அதேபோல் “பள்ளிகள், பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பாதிக்கும்” வகையிலான எந்த பூட்டுதலையும் நிராகரித்தார்.
அந்த தீர்மானம், மனமகிழ் மன்றங்களும் (clubs), இசை நடன அரங்குகளும் (discos) தற்காலிகமாக மூடப்படும் என்றாலும், உணவங்கள் திறந்திருக்கும் என்று கூறுகிறது. மேலும், கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியாத தனியார் குடும்பங்களைப் பொறுத்தவரை, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவிர்த்து, “தடுப்பூசி போடப்பட்ட அல்லது நோய்தொற்றிலிருந்து மீட்கப்பட்ட அதிகபட்சம் 10 நபர்களுக்கு இடையிலான” தொடர்பு கட்டுப்பாடு டிசம்பர் 28 முதல் பொருந்தும் என்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், RKI அதே நாளில் அதன் தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான “மூலோபாய திருத்தங்களை” வெளியிட்டது, அதன்படி “அதிகபட்ச தொடர்பு குறைப்பையும்” மற்றும் “அதிகபட்ச தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும்” “உடனடியாகத் தொடங்க” கோருகிறது. டெர் ஸ்பீகல் செய்தியிதழ் மற்றும் பில்ட் இன் கருத்துப்படி, சுகாதார அமைச்சர் Lauterbach உம் SPD சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் உம், அரசாங்கத்துடன் “ஒருங்கிணைக்கப்படாத” இந்தக் கோரிக்கைகளுக்கு “கோபமாக” பதிலிறுத்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தங்கள் குற்றகரமான செயல்களின் கொடிய விளைவுகளை நன்கு அறிந்துள்ளன. தீவிர விஞ்ஞானிகள் மற்றும் அரசு சார்பு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதான புதிய கூட்டணி அரசாங்கத்தால் குறிப்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, சமாளிக்க வேண்டிய “பெரிய சவால்கள்” பற்றியும் மற்றும் தொற்றுநோய் சூழ்நிலையின் ஒரு “புதிய பரிமாணம்” பற்றியும் பேசும் ஒரு அறிக்கையை ஞாயிறன்று வெளியிட்டது.
19 விஞ்ஞானிகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது:
ஜேர்மனியில் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவல் இந்த வகையில் மேலும் தொடர்ந்தால், மக்கள் தொகையில் தொடர்புடைய பகுதியினர் ஒரே நேரத்தில் நோய்வாய்ப்பட்டு/ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள். இது நமது நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிற்கும் மற்றும் ஒட்டுமொத்த முக்கியமான உள்கட்டமைப்பிற்கும் தீவிர அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், குழந்தைகளையும் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டியது போன்ற பிற தேவைகளின் காரணமாக, குறிப்பாக உழைக்கும் மக்களிடையே மேலதிக இணை விளைவுகளும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் ஜேர்மனியில் காணப்படாத ஒரு பேரழிவுகர சூழ்நிலையை சித்தரிக்கும் ஒரு படத்தை செய்தியிதழ் வெளியிட்டுள்ளது:
வேகமாக அதிகரித்து வரும் நிகழ்வு விகிதங்கள் ஜேர்மனியின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு அதிக ஆபத்தை முன்வைக்கின்றன. இதில், மருத்துவமனைகள், காவல்துறை, தீயணைப்புத்துறைகள், மீட்பு சேவைகள், தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தொடர்புடைய தளவாடங்கள் சார்ந்த துறைகள் அடங்கும். எனவே, நமது நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு விரிவான மற்றும் உடனடி முன்னேற்பாடுகள் தேவை.
மருத்துவமனைகளில் ஏற்கனவே நிலவும் அதிர்ச்சியூட்டும் சூழ்நிலை ஓமிக்ரோனால் இன்னும் மோசமடையும் என்பது பற்றி செய்தியிதழ் இவ்வாறு தெரிவிக்கிறது:
ஒரே நேரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிப்பதன் விளைவாக மருத்துவமனைகள் கணிசமாக நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது (…). அனைத்து மருத்துவமனைகளும் அவசர சிகிச்சைகள் மற்றும் அவசரத் தலையீடுகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தினாலும் கூட, அனைத்து நோயாளிகளுக்கும் தரமான போதுமான கவனிப்பை இனி வழங்க முடியாது. மருத்துவத்துறை முழுவதும் எதிர்பார்க்கப்படும் அதிக சுமை காரணமாக மூலோபாய நோயாளி பரிமாற்றமும் பிராந்திய நிவாரணத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இனி வழங்க முடியாது.
ஓமிக்ரோன் மாறுபாட்டின் வெடிப்பார்ந்த பரவல் மற்றும் அரசாங்கங்களின் இலாப நோக்கம் கொண்ட தொற்றுநோய்க் கொள்கைகள் இரண்டும் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்கை உறுதிப்படுத்துகின்றன. தொற்றுநோய் முற்றிலும் மருத்துவப் பிரச்சினை அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட கொள்கைகளின் விளைவானது, மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்வுக்கு மேலாக ஒரு குறுகிய நிதிய உயரடுக்கின் இலாபத்தையும் நிதி சந்தைகளின் ஸ்திரத்தன்மையையும் முன்னிலைப்படுத்துகிறது. புதிய ஜேர்மன் அரசாங்கம், சில நாட்களுக்கு கூட பள்ளிகளையும் வணிகங்களையும் மூட மறுப்பதை, தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுக்கான ஒரு அழைப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஊதிய இழப்பீடு வழங்கி பொருளாதாரத்தை அத்தியாவசிய கூறுகளாக குறைக்கும் ஒரு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம் அவசியமாகும். தொற்றுநோய் காலத்தில் இலாபமீட்டுபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திலிருந்து நிதியளித்து, கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான பணியைத் தொடர்வதில், பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்கள் ஆகியவற்றை மூடுவதை, பாரிய பரிசோதனை, முறையான தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற விரிவான நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
ஜேர்னியில் பாதுகாப்பான கல்விக்கான சாமானிய கல்வியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் வலையமைப்பு, இந்த முன்னோக்கைப் பற்றி விவாதிப்பதையும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைப்பதையும் முன்னிட்டு, அதன் அடுத்த இணையவழி கூட்டத்தை இன்றிரவு 8.00 மணிக்கு (CET) நடத்தவுள்ளது.
மேலும் படிக்க
- ஜேர்மனியின் கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்வுக் குழுவுக்கு இராணுவ ஜெனரல் தலைமை தாங்குகிறார்
- பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவது “மிகப்பெரிய பேரழிவாக” இருக்கும் என சீன ஆய்வு எச்சரிக்கிறது
- ஓமிக்ரோன் வைரஸ் ஐரோப்பாவில் "ஒரு சில மாதங்களில்" அதிகமாக மேலோங்குமென ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கிறது