மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (Institute for Health Metrics and Evaluation - IHME) ஒரு அதிர்ச்சியூட்டும் மதிப்பிடு, அடுத்த மூன்று மாதங்களில் மூன்று பில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்களை உலகம் எதிர்கொள்ளும் என்று முன்கணித்துள்ளது, அதிலும் அவற்றில் பெரும்பாலானவை அதிகபட்ச தொற்றும் தன்மை கொண்ட ஓமிக்ரோன் மாறுபாட்டால் உருவானவையாக இருக்கும் என்கிறது.
ஜனவரி மாதத்தில் உலகளவில் ஒரு நாளைக்கு 35 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்படுவார்கள், அதேவேளை அமெரிக்காவில் ஒரு நாளைக்கு உச்சபட்சமாக 1 மில்லியன் பேருக்கு இந்நோய்தொற்று ஏற்படும் என்று IHME முன்கணித்துள்ளது.
மொத்த நோய்தொற்றுக்களில் அமெரிக்காவின் பங்கு 140 மில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, இது ஜனவரி 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்த புள்ளிவிபரங்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள் தொற்றுநோய் விவகாரம் பற்றி திட்டமிட்டு பொய் சொல்லி வருகின்றன என்பதை அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு உணர்த்தும் கடுமையான எச்சரிக்கையாகும். நோய் மற்றும் இறப்புக்கான விலை கொடுப்பு என்னவாக இருந்தாலும், நிதிச் சந்தைகளின் ஏற்றத்தை பராமரிக்கும் வேண்டுமென்ற முயற்சியில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.
அத்தகைய புள்ளிவிபரங்கள் பற்றி ஊடகங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டிருந்தால் –IHME இன் கணிப்புகள் பெருமளவில் மூடிமறைக்கப்பட்டது– பைடென் நிர்வாகமும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் சக நிர்வாகங்களும் இத்தகைய பாரிய மற்றும் கொடிய ஆபத்தை எதிர்கொள்ள அவர்கள் என்ன செய்ய நோக்கம் கொண்டுள்ளார்கள் என்று கேட்கப்படும். என்றாலும், அவர்கள் எதையும் செய்ய நினைக்கவில்லை.
IHME மதிப்பீடு என்பது, SARS-CoV-2 இன் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவும் தன்மையின் அபரிமிதமான அதிகரிப்பு வேகத்தை அடிப்படையாகக் கொண்ட முன்கணிப்பு ஆகும், இதில் நிகழும் இனப்பெருக்க விகிதம் டெல்டா மாறுபாட்டை விட இரு மடங்காகும், அதிலும் சீனாவின் வூஹானில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட அசல் “கடுமையான” வைரஸின் தொற்றும் விகிதத்தை விட பல மடங்கு அதிகமாகும்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சுகாதார அளவீடுகள் விஞ்ஞானத்தின் பேராசிரியரும் IHME இன் இயக்குநருமான டாக்டர் கிறிஸ்தோபர் முர்ரே, இப்போதிருந்து மார்ச் இறுதிக்குள்ளாக உலகம் “தொற்றுநோய்களின் பிரம்மாண்ட அலைகளை” எதிர்கொள்ளும் என்று ஒரு செய்தியாளர்கள் சுருக்கக் கூட்டத்தில் கூறினார்.
முன்கணிக்கப்பட்டுள்ள 3 பில்லியன் நோய்தொற்றுக்கள் என்பது “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட நோய்தொற்றுக்களின் அதே எண்ணிக்கையை குறிப்பதாகும், எனவே நாம் சுருக்கப்பட்ட பரிமாற்ற சுழற்சியைக் கொண்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் சுருக்கக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, வெறும் மூன்று வாரங்களுக்கு முன்பு, அதாவது நவம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோவிட்-19 நோய்தொற்றுக்களில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் உருவான நோய்தொற்றுக்களின் விகிதம் 0.1 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து வாராந்திர புள்ளிவிபரங்கள் டிசம்பர் 4 இல் 0.6 சதவீதமாகவும், டிசம்பர் 11 இல் 12.6 சதவீதமாகவும், மற்றும் டிசம்பர் 18 இல் 73.2 சதவீதமாகவும் உயர்ந்தன, அதாவது ஒவ்வொரு வாரமும் ஆறு மடங்கு அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
சதவீத விகிதம் குறிப்பிடத்தக்கது, என்றாலும் ஒட்டுமொத்த நோய்தொற்று பரவலும் குறிப்பிடத்தக்கதே. ஓமிக்ரோன் 0.1 சதவீத பரவல் விகிதத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நோய்தொற்றுக்களை உருவாக்கியது. அதுவே 73.2 சதவீதமாக உச்சம் கண்டு மிகப்பெரிய எண்ணிக்கையில் நோய்தொற்றுக்களை உருவாக்கியது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உருவான மொத்த புதிய நோய்தொற்றுக்கள் ஒவ்வொரு நாளும் 200,000 அளவிற்கு அதிகரித்திருந்தன.
கடந்த குளிர்காலத்தின் போதான எழுச்சி ஜனவரி 2021 இல் நாளொன்றுக்கு 250,000 நோய்தொற்றுக்கள் வரை அதிகரிக்கச் செய்தது. ஆனால், ஜனவரி 2022 இல் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 400,000 ஆக இருக்கும், அதே நேரத்தில் உண்மையான எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று IHME முன்கணிக்கிறது.
ஓமிக்ரோன் “இலேசான தன்மையானது” என்று பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டதன் பொருள், டெல்டா மாறுபாட்டை விட அது சற்று குறைந்த ஆபத்தானது என்று ஆரம்பத் தரவுகள் தெரிவித்தாலும், அது முடிவானது அல்ல. என்றாலும், ஓமிக்ரோனின் பரவும் தன்மையை வைத்துப் பார்த்தால், அதனால் ஏற்படும் மருத்துவமனை சேர்ப்புக்கள் மற்றும் இறப்புக்கள் இரண்டின் தாக்கமும் மிகப்பெரியளவில் இருக்கலாம்.
டெல்டாவை விட ஓமிக்ரோனால் மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படும் விகிதம் கணிசமாகக் குறைவாக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் எண்ணிக்கையானது, ஏற்கனவே முறிவின் விளிம்பில் இருக்கும் அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மிக விரைவாக மூழ்கடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதன்கிழமை வெள்ளை மாளிகை சுருக்கக் கூட்டத்தில், CDC இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கியும், மற்றும் தலைமை சுகாதார ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபவுசியும், நோய்தொற்றுக்களின் விரைவான அதிகரிப்பைக் காட்டும் புள்ளிவிபரங்களில் நல்லவிதமான எண்ணிக்கைகளை முன்வைக்க முயன்றனர், அதேவேளை அரசாங்க விஞ்ஞானிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் இருதரப்பும் உத்தியோகபூர்வமானதாக அடிக்கடி குறிப்பிடும் IHME இன் கணிப்புகள் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை, மேலும் அவர்களிடம் எதுவும் கேட்கப்படவும் இல்லை.
ஸ்காட்லாந்து மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து வந்த ஆராய்ச்சி முடிவுகள், டெல்டாவுடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரோன் காரணமான மருத்துவமனை சேர்ப்பு விகிதம் குறைவானது எனக் காட்டுவது “நல்ல செய்தி” என்று ஃபவுசி கூறினார். இருப்பினும், IHME மாதிரியானது, ஸ்காட்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா தரவுகளை ஏற்கனவே உள்ளடக்கியுள்ளது என்று டாக்டர் முர்ரே கூறினார்.
ஓமிக்ரோனின் மிக அதிகமான பரவும் தன்மையின் அச்சுறுத்தும் தாக்கங்களை அவர் ஒப்புக்கொண்டதுடன், “உங்களுக்கு நோயின் தீவிரத்தன்மை குறைவாக இருந்தாலும், தனிப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், உங்களிடம் உள்ள ஏராளமான நோய்தொற்றுக்கள் அதன் தீவிரம் குறைவாக இருப்பதன் விளைவை உண்மையில் தவிர்க்கலாம்” என்று கூறுகிறார்.
வாலென்ஸ்கி, ஃபவுசி மற்றும் வெள்ளை மாளிகை கோவிட்-19 நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி ஜியண்ட்ஸ் ஆகிய அனைவரும், ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாயன்று அவரது தேசிய தொலைக்காட்சி உரையில் வழங்கிய மனநிறைவான செய்திக்கு வலுவூட்ட முயன்றனர். அதாவது, தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஓமிக்ரோனால் எந்த ஆபத்தும் இல்லை, எனவே இந்த மக்கள் விடுமுறை காலத்தில் திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவும் குடும்பங்களை சந்திக்கவும் முன்னேறலாம் என்ற பைடெனின் கூற்றுக்களை அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.
தடுப்பூசிகளைத் தவிர்ப்பதற்கான SARS-CoV-2 இன் திறனை ஓமிக்ரோன் பெரிதும் அதிகரித்துள்ளது, மேலும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே –அமெரிக்க வயது வந்தவர்களில் வெறும் 20 சதவீதத்தினர் மட்டுமே அதை பெற்றுள்ளனர்– அவர்களது உடலில் புதிய மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ள பாதுகாப்பை வழங்கும் போதுமான நோயெதிர்ப்பிகள் (antibodies) உள்ளன.
சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் நெருக்கடிகள் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகள் இருப்பதுடன், மிகப் பொதுவாக அமெரிக்க சமூகம் முழுவதுமாக ஓமிக்ரோன் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறியுள்ளது. சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தரவுகளை NBC News பகுப்பாய்வு செய்ததன்படி, அமெரிக்காவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படும் வீதம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 21 வரையிலான காலத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஓமிக்ரோன் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பான டெல்டா மாறுபாட்டின் நீண்ட கால தாக்கத்தை முதன்மையாக நிரூபிக்கிறது.
டெட்ராய்ட் பெருநகரப் பகுதியில் உள்ள பியூமொன்ட் சுகாதார அமைப்பு மற்றும் ஹென்றி ஃபோர்டு சுகாதார அமைப்பு போன்ற இரண்டு பெரிய மருத்துவமனைக் குழுக்கள், நூற்றுக்கணக்கான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவமனை ஊழியர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டிய ஒரு உடனடி நெருக்கடியை எதிர்கொள்வதாக செவ்வாயன்று அவை எச்சரித்தன. ஹென்றி ஃபோர்ட், அதன் 1,500 படுக்கைகளில் வெறும் 75 மட்டுமே காலியாக இருப்பதாகக் கூறியுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் இடையே சுமார் 1,000 கோவிட்-19 நோயாளிகள் இருந்தனர், அநேகமாக அனைவரும் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர், இன்னும் அங்கு ஓமிக்ரோன் பாதிப்பு இல்லை.
ஹென்றி ஃபோர்ட் சுகாதார அமைப்பின் அவசர மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஜோன் டெலெடா, மாநிலம் முழுவதுமான அவசர சிகிச்சைப் பிரிவுகள் ‘நிலையற்ற இயக்க நிலைமைகளை’ எதிர்கொண்டு வருகின்றன என்றும், “ஓமிக்ரோன் நமக்கு என்ன விளைவிக்கப் போகிறது என்பதும் எங்களுக்குத் தெரியாது” என்றும் டெட்ராய்ட் நியூஸூக்கு தெரிவித்தார். மேலும், “ஹென்றி ஃபோர்ட்டில் உள்ளது மட்டுமல்லாது, மிச்சிகன் மாநிலம் முழுவதுமான நமது சுகாதார அமைப்பின் உள்கட்டமைப்பு முறிவின் விளிம்பில் உள்ளது” என்றும் கூறினார்.
மருத்துவ மையத்தின் முக்கியமான பராமரிப்புத் துறையின் துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான டாக்டர் அபிஜித் துக்கல் இன் கருத்துப்படி, ஓஹியோவில் உள்ள கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளில் ஓமிக்ரோன் நோயாளிகள் தற்போது பாதியளவாக உள்ளனர். மேலும், “பெரும்பாலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் (ICUs) மற்றும் அவசர சிகிச்சை அறைகளும் 100 முதல் 120 சதவீதத்திற்கு அதிகமான திறனில் இயங்குவது இப்போது இடைவிடாது தொடர்கிறது” என்றும், வடகிழக்கு ஓஹியோவில் “அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால் நோயாளிகளை இடம் மாற்ற முடியாதளவிற்கு ஒரு முழுமையான பிராந்திய முடக்கம்” ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இரு ஆசிரியர் சங்கங்களின் ஆதரவுடன் அனைத்துப் பள்ளிகளையும் திறந்து வைக்கும் பைடென் நிர்வாகத்தின் உறுதிப்பாடு ஒருபுறமிருக்க, ஓமிக்ரோனின் தாக்கமானது மாவட்டங்களை நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 18 அன்று, நாட்டின் மிகப்பெரிய பள்ளி மாவட்டங்களில் ஒன்றான, வாஷிங்டன் டி.சி. இன் மேரிலாந்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் ஜோர்ஜ் கவுண்டி பள்ளி மாவட்டம், குறைந்தபட்சம் ஜனவரி 18 வரை அதன் 136,000 மாணவர்களை தொலைதூர வகுப்புகளுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.